ஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 டிசம்பர் 2019

ஈப்போ கல்லுமலை கோயில் வரலாறு - 3

தமிழ் மலர் - 24.12.2019

கல்லுமலை கோயில் உருவானதே ஒரு பெரிய ஆச்சரியமான நிகழ்ச்சி. கோலாலம்பூரில் பத்துமலை உருவானது போல இதுவும் ஒரு அதிசயமான நிகழ்ச்சி என்று சொல்லலாம். 




1880-ஆம் ஆண்டுகளில் பாரிட் முனுசாமி என்பவர் ஈப்போ வட்டாரத்தில் ஒரு குத்தகையாளர். ஒரு கட்டத்தில் கல்லுமலைக்கு அருகில் கல் உடைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவரிடம் இருபத்தைந்து தொழிலாளர்கள் வேலை செய்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் மாரிமுத்து. நடுத்தர வயது.

ஒருநாள் பொழுது சாயும் நேரத்தில் கல்லுமலையின் குகை பக்கமாகத் தன் மாடுகளை மேய்க்கப் போய் இருக்கிறார். அப்போது ஒரு குரலொளி. மலைப் பகுதியின் குகை ஒன்றில் இருந்து கேட்டு இருக்கிறது. இங்கே வா என்று யாரோ அழைப்பது போன்ற குரல்.

மாரிமுத்து அதிர்ச்சி அடைந்தார். பயந்து போய் திரும்பிப் பார்க்கமல் ஓடி வந்துவிட்டார். பின்னர் தன் நண்பர்களிடம் நடந்ததைச் சொல்லி இருக்கிறார். அவர்களும் நம்பிவில்லை. இருந்தாலும் சில நாட்கள் கழித்து நான்கைந்து பேர் குறிப்பிட்ட அந்தக் குகைக்குள் போய் இருக்கிறார்கள். 




பயங்கரமான இருள். தீப்பந்தங்களை எரியவிட்டு உள்ளே போய் இருக்கிறார்கள். குகையின் ஒரு மூலையில் இருந்து சாம்பிராணி, ஊதுபத்தி வாசனைகள் வந்து இருக்கின்றன. வாசம் எங்கே இருந்து வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்து இருக்கிறார்கள்.

உள்ளே ஒரு கல்லில் முருகன் சாயலில் அமைந்த ஓர் உருவம். கல்லுக்கு கீழே வாசனைப் பொருட்கள் எதுவும் இல்லை. ஆனால் வாசம் மட்டும் வருகிறது. வந்தவர்கள் அசந்து போனார்கள். பின்னர் அந்த இடத்தைச் சுத்தப் படுத்திச் சாமி கும்பிட்டு இருக்கிறார்கள்.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அங்கே சின்னதாய் ஒரு குகைக் குடிசைக் கோயிலை கட்டி இருக்கிறார்கள். அதன் பின்னர் அங்கு வாழ்ந்த மக்கள் எல்லாம் ஒன்றுகூடி ஒரு சின்ன கோயிலையே கட்டி இருக்கிறார்கள். 




இது நடந்தது 1889-ஆம் ஆண்டு. அதாவது 130 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. இப்படித்தான் கல்லுமலை கோயில் உருவனது.

பின்னர் அந்தக் குகைக் கோயில் இந்துக்களின் வழிபாட்டுத் தளமாக மாறியது. அடுத்து புந்தோங் சுங்கை பாரியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலும் கல்லுமலைக் குகைக் கோயிலும் ஒரே நிர்வாகத்தின் கீழ் வந்தன.

அன்று முதல் தைப்பூசக் காவடி காணிக்கைகள் சுங்கை பாரி மாரியம்மன் கோயிலில் இருந்து கல்லுமலைக் கோயிலுக்கு கொண்டு செல்லும் முறை உண்டானது. 




மலேசியாவில் மிகப் பழமையான கோயில் எது தெரியுங்களா. மலாக்காவில் உள்ள ஸ்ரீ பொய்யாத விநாயகர் கோயில். 1710-ஆம் ஆண்டில் டச்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்டது. சரி.

சுங்கை பாரி மாரியம்மன் கோயிலைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

சுங்கை பாரி மகாமாரியம்மன் கோயில், ஈப்போ புந்தோங் பகுதியில் அமைந்த கோயில். புந்தோங் தமிழர்கள் நிறைந்த பகுதி.

1900-ஆம் ஆண்டுகளில் ஈப்போவில் சுண்ணாம்புக்காரக் கம்பம், வேட்டியப்ப தேவர் கம்பம், வங்காளி கம்பம் என்ற மூன்று பகுதிகள் இருந்தன. இங்கு இந்துக்கள் அதிகமாக வாழ்ந்தனர்.

அந்தக் காலத்தில் வேட்டியப்ப தேவர் என்பவர் ஈப்போவில் புகழ்பெற்ற ஒரு குத்தகையாளர். வெள்ளைக்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இணையான ஒரு செல்வந்தர். ஈப்போ வாழ் மக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்றவர். தெய்வபக்தி நிறைந்தவர். 




இப்போது ஜாலான் பெண்டஹாரா என்று சொல்கிறார்களே அங்கே தான் வேட்டியப்ப தேவரின் இருப்பிடம். அவரிடம் நிறைய மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், மனித இழுப்பு வண்டிகள் இருந்தன.

1902-ஆம் ஆண்டு வாக்கில் இன்றைய நியூ டவுன் (Ipoh New Town) பகுதியில் ஒரு சிறிய அம்மன் கோயிலைக் கட்டினார். இந்தக் கோயில் அந்தப் பகுதியில் கிடைத்த சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு அமைக்கப் பட்டது. அந்தக் கோயிலுக்கும் புந்தோங் மாரியம்மன் கோயிலுக்கும் தொடர்புகள் இல்லை. தனித்தனியாக இயங்கி வந்தன.

வேட்டியப்ப தேவரைப் போல இன்னும் ஒருவர் இருந்தார். அவருடைய பெயர் வி.செங்கல்வராயன். இவரும் ஒரு குத்தகையாளர். புந்தோங் சேத்துக்கம்பம் பகுதியில் ஒரு சின்ன கோயில் கட்டுவதற்கு இடம் கொடுத்து உதவினார். அதன் பெயர் சேத்துக் கம்பத்து மாரியம்மன் கோயில். 1900-ஆம் ஆண்டுகளில் நடந்தது.




1914 -ஆம் ஆண்டு அந்தக் கோயில் சுங்கைப்பாரி சாலைக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப் பட்டது. 1915-ஆம் ஆண்டு சுங்கைப்பாரி சாலையில் புதிய மகாமாரியம்மன் கோயில் அமைக்கப்பட்டது. பழைய கோயிலில் இருந்த சிலைகள் அனைத்தும் புதிய கோயிலுக்குக் கொண்டு வரப் பட்டன. பின்னர் குடமுழுக்குச் சடங்கும் நடைபெற்றது.

1922-ஆம் ஆண்டில் கோயில் விரிவுபடுத்தப் பட்டது. இந்தியாவில் இருந்து வந்த சட்டி சாமியார் என்பவர் கருவறைக்கு அடிக்கல் நாட்டினார்.

1937-ஆம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடந்தது. 1963-இல் ராஜகோபுரம் எழுப்பப்பட்டது. மூன்று நிலை ராஜகோபுரம். 1979-இல் மூன்றாம் முறையாக குடமுழுக்கு விழா நடந்தது.

தைப்பூசத் தினத்தில் சுங்கை பாரி மகாமாரியம்மன் கோயிலில் இருந்து, ஈப்போ குனோங் சீரோ கல்லுமலை முருகன் கோயில் வரை தேரோட்டம் நடைபெறும். 




1926-ஆம் ஆண்டு, நடைபெற்ற தைப்பூச திருவிழாவின் போது பெரிய பாறை ஒன்று உடைந்து விழுந்ததில் இரு அர்ச்சகர்கள் மரணம் அடைந்தனர். அதனால் ஆலயத்தை அங்கு இருந்து அகற்றும்படி அரசாங்கம் உத்தரவிட்டது.

அதன் பின்னர் ஆலயத்தை தற்போது உள்ள இடத்திற்கு மாற்றி ஒரு புதிய கோயிலை நிர்மாணித்தார்கள். அதுதான் இன்றைக்கு அருள்மிகு சுப்பிரமணியர் கல்லுமலைக் கோயில்.

1930-ஆம் ஆண்டு வரையில் குகைக் கோயிலாக இருந்த கல்லுமலைக் கோயில், சிற்ப வேலைப்பாட்டுக் கோபுரத்துடன் கூடிய ஒரு கூரை ஆலயமாக மாற்றம் கண்டது.

தமிழ்நாட்டில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு சிற்ப வேலைபாடுகள் நடைபெற்றன. 1932-ஆம் ஆண்டு புதிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.




1954-இல் ஒரு திருப்பம். ஈப்போவில் வாழும் தமிழர்களுக்கு ஒரு தமிழ் உயர்நிலைப்பள்ளி தேவை என ஈப்போ தமிழர்கள் ஆசைப் பட்டு இருக்கிறார்கள். ஆக பொதுமக்கள் ஒன்றுகூடி 15,000 ரிங்கிட் சேர்த்தனர். கோயில் வளாகத்திலேயே தமிழ் உயர்நிலைப் பள்ளியையும் கட்டினார்கள்.

ஆனால் நடந்தது வேறு. தமிழ் உயர்நிலைப்பள்ளியை நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. ஒன்று மட்டும் உண்மை. மலேசியாவில் தமிழ் உயர்நிலைப்பள்ளி அமைப்பதற்கு ஈப்போ தமிழர்களும் முயற்சி செய்து இருக்கிறார்கள். கட்டியும் இருக்கிறார்கள். இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். சொல்லுங்கள்.

பின்னர் அந்தப் பள்ளி மண்டபம், பக்தர்கள் ஓய்வு எடுக்கும் இடமாகவும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தும் இடமாகவும் மாறியது. இப்போது, அது நவீன வசதிகளுடன் கூடிய ஒரு திருமண மண்டபமாக மாற்றம் கண்டுள்ளது.

இப்போது மலேசியாவில் மிக அழகான கோயில்களில் கல்லுமலைக் கோயிலும் ஒன்றாகத் திகழ்கிறது. 22 மீட்டர் உயரத்திற்கு ராஜ கோபுரத்தைக் கட்டி இருக்கிறார்கள். அதற்கான செலவை ஜாலான் பெண்டஹாரா போத்தல் கடை வியாபாரிகள் ஏற்றுக் கொண்டனர். 




இன்னும் பலரும் உதவி செய்து மிகக் கம்பீரமான புதிய கோயிலைக் கட்டி இருக்கிறார்கள். 528 சிலைகள் உருவாக்கப் பட்டுள்ளன. பார்க்கும் போது மலைப்பைத் தருகிறது. 2016 ஜூலை மாதம் 4ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கல்லுமலைக் கோயில் என்றால் அது இப்போது உலகம் முழுமையும் அறியப்பட்ட ஒரு புனிதத் தளமாகி விட்டது.

இன்னும் ஒரே ஒரு செய்தி. இந்த குகைக் கோயிலுக்கு அருகில் 1973-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி ஒரு கோர விபத்தும் நடந்து இருக்கிறது. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.

ஈப்போ கல்லுமலைக் கோயிலில் எவ்வளவு பெரிய வரலாறு, எவ்வளவு பெரிய ரகசியங்கள். ஈப்போ நகரத்தைப் பற்றி ஒரு சிறிய தகவல்.

மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூர். அங்கே இருந்து வடக்கே 200 கி.மீ. தொலைவில் ஈப்போ. பேராக் மாநிலத்தின் தலைநகரம். கிந்தா நதி; சுங்கை பிஞ்சி; சுங்கை பாரி; மூன்று நதிகளும் ஒன்றாக இணைந்து பாய்கின்ற முச்சந்திக் கூடம். உலகத்திலேயே அதிகமாக ஈயம் வெட்டி எடுக்கப்பட்ட ஈய பூமி ஈப்போ. வரலாறு பேசும் வெள்ளி மண்ணும் அதுவே.

முன்பு காலத்தில் அதற்கு கோடீஸ்வரர்களின் பூமி எனும் அடைமொழி இருந்தது. நிறையவே சீனக் கோடீஸ்வரர்கள். ஈயம் விளையாடி கோடிக் கோடியாய்ச் சம்பாதித்தார்கள். அதே சமயத்தில் கம்பிச் சடக்கை நம்பி காலத்தைக் கரைத்த தமிழர்களும் இருந்தார்கள். இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.




மலேசியாவில் மிகத் தூய்மையான நகரம் என்று பெயர் எடுத்த நகரம் ஈப்போ. உண்மையும் அதுதான். ஆனால் அந்தப் பேரும் புகழும் சீனிவாசகம் சகோதரர்கள் ஆட்சி செய்த காலத்தோடு கலைந்து போய் கரைந்து விட்டன. சோம்பேறிகள் மலிந்துவிட்ட காலத்தில் காசு பெரிசா காரியம் பெரிசா. ரொம்ப வேண்டாமே.

ஈப்போ நகரத்தை விட்டுக் கொஞ்சம் வெளியே வந்து எட்டிப் பாருங்களேன். ஒவ்வொரு குடியிருப்புத் தாமானிலும் மானாவாரியாக வீசப்பட்ட குப்பை மலை மேடுகளைப் பார்க்கலாம். மன்னிக்கவும். குப்பை மலைக்காடுகள். நிரம்பி வழிந்து நிலை கொள்ளாமல் தவிக்கின்ற கண்கொள்ளாக் காட்சிகள்.

ஈப்போ நகராண்மைக் கழகமும் தன்னால் இயன்றதைச் செய்கிறது. செய்து என்ன பிரயோசனம். வெள்ளி நகர மக்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்ப்பதாகத் தெரியவில்லை. விடுங்கள். நம்ப கல்லுமலைக் கோயில் பக்கம் போவோம். சரி.

தமிழகத்தில் முருகப் பெருமானுக்கு ஆறுபடை வீடுகள். அதைப் போல் மலேசிய நாட்டிலும் மூன்று படை வீடுகள் உள்ளன. மூன்றுமே மிக மிகப் புகழ்பெற்றவை. பத்துமலை, தண்ணீர்மலை, கல்லுமலை. இந்த மூன்று ஆலயங்களிலும் தைப்பூச விழா என்பது தனிச் சிறப்பு.

தைப்பூசத் திருவிழாக்களில் தமிழர்கள் மட்டும் அல்ல. சீனர்களும் வெளிநாட்டுக்காரர்களும் அதிக அளவில் வந்து கலந்து கொண்டு வழிபாடு செய்வது வழக்கம். தைப்பூசத் தினத்தன்று ஜொகூர்; நெகிரி செம்பிலான்; பினாங்கு; பேராக்; புத்ரா ஜெயா; சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் பொதுவிடுமுறை. ஆகவே அதுவும் ஒரு சிறப்பு அம்சம்.

ஈப்போவில் நிறையவே சுண்ணாம்புக் குன்றுகள்; சுண்ணாம்புப் பாறை மலைகள். அதில் ஒரு மலையின் பெயர் செரோ. அங்கே ஒரு மலைக் குகை. அங்கே தான் மிகவும் பழைமையான சுப்பிரமணியர் ஆலயம். வெகு காலமாக இருந்து வந்தது. 1889-ஆம் ஆண்டில் ஒரு நிலச்சரிவு. அதனால் குகைக் கோயில் பெரிதும் பாதிக்கப் பட்டது. இருந்தாலும் வழிபாடுகள் நடந்தன. அதன் பின்னர் மாற்று இடம் தேடினார்கள்.

1973-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி இந்தப் பகுதியில் ஒரு கோரமான விபத்து நடந்தது. அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)