வீட்டுக்கு வீடு கோயில் தேவையா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீட்டுக்கு வீடு கோயில் தேவையா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 ஜூன் 2017

வீட்டுக்கு வீடு கோயில் தேவையா

ஓர் ஆடு மேய்க்கும் சிறுவனின் கையில் ஒரு சின்ன இரும்பு குச்சி. ஒரு பாறையின் அருகில் சென்றான். அந்தப் பாறையில் உள்ள காந்த சக்தியினால் கையில் இருந்த இரும்புக் குச்சி பாறையில் ஒட்டிக் கொண்டது.

இதை மற்றவரிடம் போய்ச் சொன்னான். அந்தப் பாறையை ஆராய்ந்து பார்த்தார்கள். அதில் காந்தச் சக்தி இருப்பது தெரிய வந்தது. சரி.




இதே இந்த நிகழ்ச்சி இங்கு ஓர் இடத்தில் நடந்து இருந்தால் என்ன ஆகி இருக்கும் தெரியுங்களா. அந்தப் பாறைக்கு இழுத்தடிச்சான் பாறை என பெயர் வைத்து இருப்பார்கள். உடனே அங்கே ஒரு கோயிலையும் கட்டி இருப்பார்கள்.

அப்புறம் எங்காவது காட்டில் மேய்கிற ஒரு பாம்பை அடித்துப் பிடித்துச் செத்தும் சாகாமல் பாதி உயிரோடு கொண்டு வருவார்கள். அதை அப்படியே அந்தப் பாறையின் மேல் சுருட்டிப் படுக்க வைப்பார்கள்.

அப்புறம் ஊர் முழுக்க தண்டோரா. பத்திரிகை நிருபர்களை கூப்பிட்டு பப்ளிசிட்டி. அப்புறம் வீடியோ படம் எடுத்து யூடியூப்பில் போட்டுக் காட்டுவார்கள். அப்புறம் என்ன.

அந்தக் கோயிலுக்கு ஒரு பேரை வைத்து மஞ்சள் கடுதாசியில் பத்திரிகை அடித்து உலகம் பூராவும் வசூல். இது மலேசியாவில் நடக்கிற ஒரு சாமான்யக் கூத்து.

கோயில் கட்டியது அடுத்தவன் நிலமாக இருக்கும். நிலத்தின் சொந்தக்காரன் சும்மா இருப்பானா. வந்து கேட்பான். வாய்ச் சண்டை. வாய்ச் சவடால். கை வரிசை. கத்திக்குத்து. அப்புறம் அரசியல் தலையீடுகள். இப்படித் தான் மலேசியா முழுவதும் ஆயிரம் ஆயிரம் கோயில்கள் புற்றீசல் மாதிரி பூத்துக் குலுங்குகின்றன. 



அதை விடுங்கள். வீட்டுக்கு வீடு கோயில் என்பது இப்போதைக்கு ஓர் ஐதீகமாகி விட்டது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சாமி அறை போதுங்க. ஆனால் அப்படியா நடக்கிறது. ஒரு சாமி அறை பற்றாதுங்களா... போதுங்க.

வீட்டு முகப்பில் ஒரு கோயிலையே கட்டி... அதற்கு உறுமி மேளம், நாதஸ்வரம், இத்யாதி இத்யாதி. அப்புறம் நாலைந்து ஒலிப்பெருக்கிகளில் ஒரு கிராமமே அதிர்ந்து அண்ட சாசரங்கள் உதிர்ந்து அடங்கிப் போகும் அளவுக்குப் பக்திப் பரவசப் பாடல்கள்.

ஊரே அடங்கிப் போய் இருக்கும் நேரத்தில் திடீரென்று ஒரு ஜிங்கு ஜிக்கான் பாடல். அப்புறம் என்ன. கோயிலுக்கு வந்தவர்கள் சிலர் குத்தாட்டம் போடுவார்கள். உண்மையாக நடக்கிற விசயம்ங்க. தப்பாகச் சொல்லவில்லை. நான் பார்த்து வேதனைப் பட்டு இருக்கிறேன்.

கோயில் தலைவருக்கு அதை நிறுத்த வீரம் இருக்காது. துணிச்சல் இருக்காது. ஆனால் அந்தக் கம்பத்து மக்களைத் தூங்க விடாமல் செய்தால் மட்டும் சந்தோஷம். என்ன ஜென்மங்களோ.



பாவம் அக்கம் பக்கத்துக்காரர்கள். தூக்கம் போய் மயக்கம் வந்து ஒரு பத்து நாளைக்கு மன உலைச்சல்கள். இவர்களின் உடல் உலைச்சல்கள் மன உலைச்சல்கள் கோயில் சொந்தக்காரனுக்குத் தெரியுமா. அவனுக்கு அவன் கோயில் தான் பெரிசு. மற்றவங்களைப் பற்றி Just dont care.

அப்புறம் தெருவிற்குத் தெரு கோயில்கள். எங்கேயாவது ஒரு துண்டு நிலம் சும்மா கிடந்தால் போதும். அங்கே ஒரு கோயில். போகிற பக்கம் எல்லாம் கோயில் கோயில் கோயில்கள். தடுக்கி விழுந்தாலும் ஒரு கோயில். வெட்கமாக இருக்கிறது.

ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு தனிநபரின் அதிகாரத்தையும் வருமானத்தையும் அழகு பார்க்க... பார்க்கும் இடம் எல்லாம் சிறுதெய்வக் கோயில்கள். தேவை தானா.

நாலு மரக் கட்டைகள். நாலு அலுமினியத் தகரங்கள். நாலு பலகைகள். நாலு ஆணிகள். அப்புறம் நாலு நம்பர் கேட்க நாலு சீனன் குச்சிகள். இதற்கு பெயர் தான் இந்துக் கோயிலா. சொல்லுங்கள். என்னங்க இது. அப்புறம் எங்கேயாவது ஒரு பாம்பைப் பிடுத்துக் கொண்டு வந்து படம் காட்டுவது.

கிலோ கணக்கில் சாம்பிராணியைக் கொளுத்தி பாவம் அந்தப் பாம்பு. மூச்சுவிட முடியாமல் செத்துக் கொண்டு இருக்கும். அதைப் பார்க்க வருபவர்களுக்கும் மூச்சுத் திணறல்.

அந்தத் திணறலில் ஒரு மகராசிக்குச் சாமி வந்து ’டேய் சொர்ணக்கா வந்து இருக்கேண்டா... இரண்டு கிடா இரண்டு போத்தல் கொண்டாங்கடா என்று சத்தம் போடுவாள்.

சாமி கண்ணைக் குத்தும் என்று சொல்லி வாங்கிக் கொடுப்பார்கள். நான் கேட்டது செவன் அப் இல்லேடா முண்டம்... ராயல் ஸ்டவுட்டுடா... என்று பதில் வரும்.

சரி. அப்புறம் நிலத்தின் சொந்தக்காரன் வந்து கேட்டால் எங்கள் மதத்தை சீனாக்காரன் அவமதிக்கிறான். கேட்க நாதியே இல்லையா என்று கூப்பாடு. நிலத்தின் சொந்தக்காரன் சும்மா இருப்பானா.

கோயிலை உடைக்கிறான் என்று ஒட்டுமொத்த நாடே நடுங்குற மாதிரி காட்டுக் கத்தல். சொந்த பந்தம் எல்லாம் ஒன்றுகூடி ஒரு பேரணி. அதைப் பார்த்து அமைச்சர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் குலை நடுக்கம்.

எங்கேடா ஓட்டு கிடைக்காமல் போய் விடுமோ என்று பயந்து அவர்களும் சமாதான ஆயுதங்களைத் தூக்கித் தங்கள் சாக்குப் போக்கு கைவரிசையைக் காட்டுவார்கள்.

அதைப் பார்க்கப் பத்து பேர் கூட்டம். அப்படியே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. இதுவும் ஓர் அரசியல் கூத்து. ஏங்க எத்தனை நாளைக்குத் தான் காதில் பூ சுற்றுவது. சலிச்சு போச்சு.



மலேசியாவில் பதிவு செய்யப் படாமல் 42,000 கோயில்கள் இருக்கின்றன. பதிவு செய்யப்பட்டவை 14,000. காட்டுக்குள் புற்றுக் கோயில்கள் ஒரு இலட்சம் இருக்கலாம் என்று ஆய்வுக் கணிப்புகள் சொல்கின்றன.

தயவு செய்து மலேசிய இந்து அமைப்புகளின் மீது பழி வேண்டாமே. எங்கேயோ பகாங் காட்டுக்குள் ஒரு புற்றுக் கோயில் இருக்கும். அதைப் பற்றி இந்து சங்கத்திற்கு எப்படி தெரியும்.

மற்ற இனங்கள் நம்மைப் பார்த்து சிரிக்கிற மாதிரி நம் சமயத்தைக் கேவலப்படுத்த வேண்டாம். கண்ட கண்ட இடங்களில் கோயிலைக் கட்டுவது நம் சமயத்திற்குத் தான் அவமானம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.