மலேசியா 1MBD மோசடி - 5 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியா 1MBD மோசடி - 5 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 5

 தமிழ்மலர் - 21.11.2018 - புதன்கிழமை

ரஸ்புட்டின் எனும் பெயர் ரஷ்யா நாட்டுக் காலச் சுவடுகளில் மறைக்க முடியாத கறைகளை விட்டுச் சென்ற பெயர். அப்போதைக்கு அதை ஒரு மந்திரப் பெயர் என்றுகூட சொல்வார்கள். அந்தப் பெயர் இல்லாமல் போய் இருந்தால் ரஷ்யாவின் வரலாறும் வேறு கோணத்தில் பயணித்து இருக்கும். ரஷ்ய மன்னராட்சி மறைந்து போனதற்கு ரஸ்புட்டின் என்பவரும் ஒரு காரணம். 



ரஸ்புட்டின் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பள்ளிக்கூட வாசல் பக்கமே தலைவைத்துப் படுக்காதவர். ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு திரிந்தவர். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஊர் சுற்றித் திரிந்த ஒரு சாமான்யச் சிறுவர். ஆனால் ரஷ்யாவின் ஆட்சிக் கிரீடத்தையே தன் பிடிக்குள் இறுக்கிப் பிடித்துப் பார்த்த ஓர் அதிசய மனிதர்.

காடுமேடுகளில் அலைந்து திரிந்த அந்த ரஸ்புட்டின் தான் ரஷ்ய நாட்டு மகாராணி அலெக்ஸாண்டிராவைத் தன் மாயவலைக்குள் சிக்க வைத்தார். மகாராணியின் தனிப்பட்ட விசயங்களில் தலையிட்டு ரஷ்யாவின் தலை எழுத்தையே மாற்றி அமைத்தார். உண்மையிலேயே அவர் ஒரு பைத்தியக்காரச் சித்தர்.

அதே போலத் தான் மலேசியாவிலும் ஒரு ரஸ்புட்டின். எங்கு இருந்தோ வந்து மலேசிய வரலாற்றையே மாற்றிப் போட்ட மாபெரும் மனிதர். வண்ணத்துப்பூச்சி விளைவைப் போல ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றிப் போட்ட மனிதர். ரோசாப்பூ ரோசம்மாவின் குடும்பத்தையே அலைகழிப்புச் செய்த மகா ஜோலோ.




ஜோலோவிற்கும் ரோஸ்மாவிற்கும் நட்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தவர் வேறு யாரும் அல்ல. ரோஸ்மாவின் மகன் ரிஷா அஜீஸ் தான். ரோஸ்மாவின் முதல் கணவருக்குப் பிறந்தவர் தான் இந்த ரிஷா அஜீஸ்.

ஜோலோவும் ரிஷா அஜீஸும் இங்கிலாந்தில் படிக்கும் போதே அவர்களுக்குள் நெருங்கிய நட்பு. அந்த வகையில் ஜோலோவிற்கு ரோஸ்மா அறிமுகம் ஆனார். ரோஸ்மா வழியாக நஜீப் அறிமுகம் ஆனார். அப்படியே புத்ராஜெயாவும் நெருக்கம் ஆனது. சரி.

அதற்கு முன்னர் 1எம்.டி.பி. முறைகேடுகளை வெளியுலகத்தில் கசிய வைத்த ஊடகங்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

தி வால் ஸ்டீரிட் ஜர்னல் என்பது அனைத்துலக அளவில் புகழ்பெற்ற ஓர் ஆங்கில நாளிதழ். அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து வெளிவருகிறது. ஒரு நாளைக்கு 20 இலட்சம் பிரதிகள் விற்பனை. இந்த நாளிதழ் தான் 1எம்.டி.பி. முறைகேடுகளை முதன் முதலாக அனைத்துலக அளவில் வெளியுலகத்திற்குத் தெரியபடுத்தியது. 




அதே சமயத்தில் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தையும் அதன் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுன் என்பவரையும் மறந்துவிட வேண்டாம். அழகிய அறிவார்ந்த பெண். இவர் இல்லை என்றால் 1எம்.டி.பி.யின் திருகுதாளங்கள் இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து இருக்காது. அந்த விசயத்தில் இப்போதைக்கு சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் தான் முதலிடம் வகிக்கிறது.

மலேசியாவில் ஏற்பட்டு இருக்கும் ஆட்சி  மாற்றத்திற்கு இந்தச் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளமும் முக்கியமான ஒரு காரணம். 2010-ஆம் ஆண்டிலேயே 1எம்.டி.பி. முறைகேடுகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டு விட்டது. இங்கிலாந்தில் எங்கோ ஒரு வீட்டுச் சமையல் கூடத்தில் இருந்து இயங்கிய இந்த இணையத் தளம் மலேசிய அரசியலையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது.

சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தையும்; ரேடியோ பிரீ சரவாக் எனும் வானொலி நிலையத்தையும் தோற்றுவித்தவர் கிளேர் ரியூகாசல் பிரவுன். இவரின் மூத்தார்; அதாவது கணவரின் அண்ணன் தான் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன்.




கிளேர் ரியூகாசல் பிரவுன் 1959-ஆம் ஆண்டு சரவாக் மாநிலத்தில் பிறந்தவர். எட்டு வயதில் தன் தாயகம் இங்கிலாந்திற்குச் சென்றார். இருந்தாலும் சரவாக் மாநிலத்தின் மீது தனி ஒரு பாச உணர்வு. சரவாக் பழங்குடி மக்கள் மீதும் தனி ஒரு ஈர்ப்பு.

சரவாக் மாநில அரசாங்கத்தின் ஊழல்களை அம்பலப் படுத்த வேண்டும் என்பதற்காகவே சரவாக் ரிப்போர்ட் எனும் இணையத் தளத்தை உருவாக்கினார். சரவாக் பழங்குடி மக்களின் உரிமைகளைத் தற்காக்க ரேடியோ பிரீ சரவாக் எனும் வானொலி நிலையத்தைத் தோற்றுவித்தார்.

2005-ஆம் ஆண்டு சரவாக் கூச்சிங் நகரில் ஒரு சுற்றுச் சூழல் மாநாடு. சரவாக் மாநிலத்தில் காடுகள் அழிக்கப் படுவதைக் கண்டித்து அந்த மாநாட்டில் பேசினார். அவருடைய பெயர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்டது. கொலை மிரட்டல்களும் வந்தன. இருந்தாலும் கிளேர் ரியூகாசல் பிரவுன் பயப்படவில்லை. தன் போராட்டத்தைத் தொடர்ந்தார். இன்னும் தொடர்கிறார்.

அதன் பின்னர் இவரின் பார்வை 1எம்.டி.பி. பக்கம் திசை திரும்பியது. 1எம்.டி.பி. முறைகேடுகளைப் பற்றி தொடர்ந்து கட்டுரைகளை எழுதினார். சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தில் பிரசுரித்து வந்தார்.




இன்றைய காலக்கட்டத்தில் 1எம்.டி.பி. முறைகேடுகள் பலரால் பகிரங்கமாகப் பேசப்படுகின்றன. எழுதப்படுகின்றன. ஆனால் நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே 1எம்.டி.பி. முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் கிளேர் ரியூகாசல் பிரவுன். இதை யாரும் மறந்து விட வேண்டாம்.

இவர் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால் 1எம்.டி.பி. விவகாரம் இவ்வளவு பெரிதாக தெரிய வந்து இருக்காது. சகாரா பாலைவனத்தில் தொலைந்து போன சல்லிக்காசு மாதிரி காணாமல் போய் இருக்கும். அப்படியே அமிழ்ந்து போய் இருக்கும்.

2015-ஆம் ஆண்டில் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் முடக்கப் பட்டது. கிளேர் ரியூகாசல் பிரவுன் மீது கைது ஆணை பிறப்பிக்கப் பட்டது.

சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் நாட்டிற்கு எதிரானது என குற்றம் சாட்டப் பட்டது. மலேசியர்கள் எவரும் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்துடன் தொடர்பு கொள்ளக் கூடாது எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது. அப்படியே தொடர்பு வைத்து இருந்தால் அவர்கள் கைது செய்யப் படலாம். நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம் என்கிற ஒரு பயமுறுத்தல் நிலையும் ஏற்பட்டது. 




கிளேர் ரியூகாசல் பிரவுன் மீது சிவப்பு எச்சரிக்கையைப் பதிவு செய்யுமாறு இண்டர்போல் அனைத்துலகப் போலீசாருக்குக் கடிதம் அனுப்பப் பட்டது. ஆனால் இண்டர்போல் நிராகரித்து விட்டது.

Interpol has rejected Malaysian police’s request to issue a red notice against Sarawak Report editor-in-chief Clare Rewcastle Brown. In a letter to UK-based NGO Fair Trials International, Interpol secretary-general Jurgen Stock confirmed that the his organisation had rejected Malaysia’s request.

Rewcastle Brown, an investigative journalist based in the UK, had doggedly covered alleged misappropriation of Malaysian state-owned 1MDB and multi-billion ringgit deposits into Prime Minister Najib Abdul Razak’s accounts.

Source: https://web.archive.org/web/20150829001426/https://www.malaysiakini.com/news/310347 


கிளேர் ரியூகாசல் பிரவுன் மீது கைது ஆணை பிறப்பிக்கப் பட்டது. இருந்தாலும் அவர் அசரவில்லை. இலண்டனில் அவர் வீட்டின் சமையல் கூடத்தில் இருந்து கொண்டே தன் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

2018 மே மாதம் 9-ஆம் தேதி பொதுத் தேர்தல். ஒரு புதிய மலேசியா உருவானது. அதே மே மாதம் 18-ஆம் தேதி கிளேர் ரியூகாசல் பிரவுன் கோலாலம்பூருக்கு வந்தார். மலேசியாவில் ஏற்பட்டு இருக்கும் ஆட்சி மாற்றத்தை நேரடியாகப் பார்க்க வந்ததாதாகச் சொன்னார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் மீதான தடை நீக்கப் பட்டது. மலேசியாவிற்குள் நுழைவதற்கு அவருக்கு விதிக்கப்பட்ட தடையும் உடனடியாக நீக்கப் பட்டது.

இதில் ஒரு பெரிய அதிசயம் என்ன தெரியுங்களா. மலேசியாவுக்கு வரக் கூடாது என்று கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு முன்பு யார் தடை விதித்தார்களோ அவர்கள் தான் இப்போது நாட்டை விட்டு வெளியே போக முடியாமல் தடை விதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எல்லாமே தலைகீழாக மாறிப் போய் விட்டது. வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்று சொல்வார்கள். அது சரியாகவே இருக்கிறது. 




1எம்.டி.பி. மோசடிகளை அம்பலப் படுத்திய கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு அண்மையில் அமெரிக்காவின் பத்திரிகையாளர் விருது வழங்கப்பட்டு சிறப்புச் செய்யப் பட்டார்.

Association of Certified Fraud Examiners Guardian Award


ஜோலோ எப்படி புத்ராஜெயா நிர்வாகத்தில் தலையீடு செய்தார் என்பதைப் பார்ப்போம். மலேசிய நிர்வாகத்தில் ஆக உயர்மட்டத்தில் இருந்தவர்களுடன் ஜோலோ தொடர்பு கொள்ள கதவைத் திறந்து விட்டவரே ரோஸ்மா தான்.

டோம் ரைட் எனும் பத்திரிகையாளர் எழுதி வெளியிட்ட பில்லியன் டாலர் திமிங்கிலம் எனும் நூலில் இதை எழுதி இருக்கிறார். ரோஸ்மாவின் மூலமாக ஜோலோவிற்கு பிரதமர் நஜீப்பின் நட்பு கிட்டியது. நஜீப்பின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார்.

ஜோலோவினால் ரோஸ்மாவிற்கும் அதிக நன்மைகள் அதிக லாபங்கள். பணம், நகைகள், அன்பளிப்புகள் என நிறையவே வந்து குவிந்தன.  தி வால் ஸ்டிரீட் ஜர்னல் சஞ்சிகை வெளியிட்டு உள்ள செய்தியைத் தான் நான் உங்களுக்கு மொழியாக்கம் செய்து தருகிறேன். இவை என் சொந்த கருத்துகள் அல்ல.

The Wall Street Journal has published a shocking report on Monday (2018 Jun 25) where it touched on many allegations against former first lady Datin Sri Rosmah Mansor.

https://www.wsj.com/articles/malaysias-extravagant-ex-first-lady-lands-in-graft-investigators-sights-1529958911


ரோஸ்மா ஒரு சாதாரண நடுத்தர வகை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். இருப்பினும் தான் ஒரு கோடீஸ்வரரைப் போல வாழ வேண்டும் என்று கனவு கண்டவர். தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்ததும் நஜீப்பை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். நஜீப் பிரதமர் ஆனதும் ரோஸ்மாவின் வாழ்க்கையும் திசை மாறியது. 




தனக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ள ஒரு விமானத்தையே வாடகைக்கு எடுத்துக் கொண்டு லண்டன் பாரிஸ் நியூயார்க் என்று பறந்து செல்லும் அளவிற்கு தன் தகுதியை உயர்த்திக் கொண்டார். புருணை சுல்தான் போல வாழ்ந்து காட்டுகிறேன் என்று சொன்னவர் தான் இந்த டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சூர். ஆடம்பர வாழ்க்கையின் உச்சத்தைத் தொட்டுப் பார்க்க கனவு கண்ட அவருக்கு எல்லாமே நனவாகிப் போனது.

இவருடைய படாடோபமான ஆடம்பர வாழ்க்கை மலேசிய அரசியலில் ஒரு கறுப்புப் புள்ளியைத் தோற்றுவிக்கும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லியும் ரோஸ்மா கேட்பதாக இல்லை.

2015-ஆம் ஆண்டில் 1எம்.டி.பி. புலன் விசாரணைகள் உச்சத்தில் இருந்த போது ரோஸ்மாவின் நன்மதிப்பும் பாதிக்கப்பட்டு விட்டது. அந்தக் கட்டத்தில் 2015 மார்ச் மாதம் அவர்களின் மகள் நூர்யானா நாஜ்வாவிற்குத் திருமணம். அதிகமாகச் செலவு செய்ய வேண்டாம் என்று நஜீப் சொல்லி இருக்கிறார்.

இருந்தாலும் ரோஸ்மா கேட்கவில்லை. அந்தத் திருமணத்தில் பூக்களுக்கு மட்டும் 30 இலட்சம் ரிங்கிட் செலவு செய்து இருக்கிறார்.

அதைப் பற்றி துன் மகாதீர் கருத்து சொன்ன போது அரசர்கள்கூட இப்படி ஆடம்பரமாகச் செலவு செய்ய மாட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

(தொடரும்)


மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7



சான்றுகள்

1. Clare Rewcastle Brown: The Lone brave journalist exposes 1MDB corruption - https://dinmerican.wordpress.com/2018/05/17/clare-rewcastle-brown-the-lone-brave-journalist-exposes-1mdb-corruption/

2. A Round Up Of The Scandal That Toppled A Government - https://mustsharenews.com/1mdb-scandal-explained/

3. The inside story of how Jho Low and friends stole billions from Malaysia - http://www.theedgemarkets.com/article/book-review-inside-story-how-jho-low-and-friends-stole-billions-malaysia

4. WSJ: 1MDB Embezzlement All Points to Rosmah & Jho Low - https://juiceonline.com/wsj-1mdb-embezzlement-all-points-to-rosmah-jho-low/