சுங்கை பூலோ தோட்டத்தில் எலிசபெத் மகாராணியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுங்கை பூலோ தோட்டத்தில் எலிசபெத் மகாராணியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 மே 2020

சுங்கை பூலோ தோட்டத்தில் எலிசபெத் மகாராணியார்

மலேசிய வரலாற்றில் ஆயிரமாயிரம் தோட்டங்கள்...  ஆயிரமாயிரம் கதைகள்... ஆயிரமாயிரம் வரலாற்றுச் சுவடுகள். அவற்றில் சுங்கை பூலோ தோட்டத்திற்குத் தனி ஒரு மதிப்பு. தனி ஒரு மரியாதை. தனி ஓர் உப்பரிகை. எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த தமிழர்கள் அதற்கு வைத்த செல்லப் பெயர் ஆர்.ஆர்.ஐ. தோட்டம். 


ஆனாலும் 1900-ஆம் ஆண்டுகளில் அது ஓர் அழகிய கித்தா காடு. அந்தக் கால மலாயாவிலும் இந்தக் கால மலேசியாவிலும் புகழ்பெற்ற ஒரு ரப்பர் தோட்டம். மலேசிய ரப்பர் வாரியத்திற்குச் சொந்தமான தோட்டம்.

அந்தத் தோட்டத்தில் எலிசபெத் மகாராணியார் பால் மரம் சீவி மலேசிய மக்களையே அசத்தி இருக்கிறார். பலருக்கும் தெரியாத செய்தியாக இருக்கலாம்.

இன்று நேற்று நடந்த செய்திக் கதை அல்ல. 48 வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை. இப்போதைய பெரிசுகளில் சிலருக்கு நினைவிற்கு வரலாம்.


1972 பிப்ரவரி 25-ஆம் தேதி நடந்தது. அந்தச் செய்தியை உலக நாளிதழ்களும் பெரிய அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டின. உலகமே மலேசியாவை மூன்றாவது முறையாகத் திரும்பிப் பார்த்தது.

இதில் ஒரு பெரிய கிளைமாக்ஸ் என்ன தெரியுங்களா. எலிசபெத் மகாராணியார் பால் மரம் சீவக் கற்றுக் கொடுத்தவர் ஒரு தமிழ்ப் பெண்மணி. 1972-ஆம் ஆண்டில் சுங்கை பூலோ தோட்டத்தில் பணியாற்றியவர். இவருடைய பெயர் லெட்சுமி. அந்தத் தோட்டத்தில் பெரும்பாலோர் அவரை அழகி என்று அழைப்பார்கள். அப்போதும் இப்போதும் அழகி போலும். வாழ்த்துவோம்.


மலாயாவில் காடுகளுக்குப் பதிலாகக் கித்தா காடுகளை உருவாக்கித் தந்தவர்கள் தென்னிந்தியர்கள். சித்திர குப்தருக்கே தெரிந்த விசயம். அதனால் அவர்களை இங்கிலாந்து மக்கள் மறக்கவில்லை போலும்...

எப்படி மறக்க முடியும். அவர்களின் வியர்வை இரத்தத்தில் வடிந்த கித்தா பாலை எப்படிங்க மறக்க முடியும். கொஞ்சமாவது நன்றி இருக்கும்ல...

இருப்பினும் அந்த நிகழ்ச்சியை எலிசபெத் மகாராணியாரும் மறக்க மாட்டார். அவருடன் வந்த அவரின் கணவர் இளவரசர் பிலிப் (Prince Philip, Duke of Edinburgh) அவர்களும் மறக்க மாட்டார். அவர்களின் மகள் இளவரசி அன்னி (Princess Anne) அவர்களும் மறக்க மாட்டார்.

அந்த நன்றிக் கடனைத் தீர்ப்பதற்காக எலிசபெத் மகாராணியாருக்கு உதவி செய்ய ஒரு தமிழ்ப் பெண்ணை ஏற்பாடு செய்து இருந்தார்கள். 


அந்த நிழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தவர் டான்ஸ்ரீ டாக்டர் பி. சி. சேகர் (B.C.Sekhar). மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் தலைமைப் பதவியில் அமர்ந்த முதல் மலேசியர்; முதல் இந்தியர்; முதல் ஆசிய நாட்டவர். சின்ன ஓர் ஆதங்கம்.

நேற்று முளைத்த காளான்களில் நன்றி மறந்த காளான்களும் இருக்கவே செய்கின்றன. ஏர்கான் அறையில் நெற்றி வியர்வையைப் பார்க்காத காளான்கள். அதனால் அந்தக் காளான்கள் வரலாற்றில் தடம் பதிக்கப் போவது இல்லை.

ஆனால்... தென்னிந்தியர்கள் சிந்திய செந்நீரைப் பார்த்த வரலாறே கண்ணீர் சிந்தி இருக்கிறது. அதனால் தான் இவர்கள் வரலாற்றில் தடம் பதிக்கிறார்கள். வரலாறு என்றைக்கும் இவர்களை மறக்காது. மறக்கவே மறக்காது.