அக்கினி சுகுமார் அமைதியானார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அக்கினி சுகுமார் அமைதியானார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 அக்டோபர் 2019

அக்கினி சுகுமார் அமைதியானார்

மலேசிய படைப்புலகில் நன்கு அறிமுகமான பத்திரிகையாளர், கவிஞர், வணக்கம் மலேசியாவின் ஆசிரியர்  அக்கினி சுகுமார். இன்று 03.10.2019 பிற்பகல்  1.40-க்கு தம் இல்லத்தில் காலமானார். 



64 வயதான அவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். மலேசியத் தமிழ் எழுத்துலகில் இவருக்கு அறிமுகம் தேவை இல்லை.

பத்திரிகையாளர்; படைப்பாளர்; கவிஞர் எனும்  மும்முனைகளில் முத்திரை பதித்தவர். அக்கினியின் இயற் பெயர்
சுகுமார் வெள்ளதுரை.

1973-ஆம் ஆண்டு இவரின் தமிழ்ப் பத்திரிக்கை  உலகப் பிரவேசம் ஆரம்பமானது. தமிழ் மலர் தினசரியில் ஆசிரியர் பகுதியில் சாதாரண ஊழியராகப் பணியைத் தொடங்கியவர். 



வானம்பாடி வார இதழை உருவாக்கிய மூவரில் இவரும் ஒருவர். பின்னர் தமிழோசை தினசரியின் தொடக்க உறுப்பினர் என்பதோடு அதன் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

மலேசிய நண்பன் நாளிதழில் செய்தி ஆசிரியராகவும், மக்கள் ஓசை வார இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்று வகித்துள்ள அக்கினி சுகுமார் பின்னர் தமிழ்குரல் நாளிதழில் உருவாக்கத்திற்கு ஆணிவேராக இருந்தார். அதன் ஆசிரியராகவும் பொறுப்பு ஏற்றிருந்தார்.

இறுதியாக வணக்கம் மலேசியா.காம்  மூத்தப் பத்திரிகையாசியராகவும் பொறுப்பு ஏற்று இருந்தார்.


பத்திரிகைத் துறையிலும் படைப்புத் துறையிலும் தமக்கு என்று ஒரு தனித்துவத்தை கொண்டவர் அக்கினி சுகுமார்.

மலேசிய மண்ணில் புதுக் கவிதையின் மறுமலர்ச்சிக்கு வித்தாகவும் முன்னோடியாகவும் விளங்கியவர். இவரது புதுக்கவிதைகள் ஒரு தலைமுறை எழுத்தாளர்களின் எழுச்சிக்கு துணை புரிந்தது.

கனா மகுடங்கள் புதுக் கவிதை நூல்; பட்டுப்புழுக்கள் குறுநாவல்; மண்ணே உயிரே எனும் ஈழப் பயண நூல்களை வெளியிட்டு உள்ளார்.

குறிப்பாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை அவர் சந்தித்து வந்தது மறக்க முடியாத அனுபவம் என்று அடிக்கடி கூறுவார்.




அவர் தமிழீழத்திற்கு சென்று இருந்த காலம் மிகவும் ஒரு நெருக்கடியான காலக் கட்டமாகும். பாதுகாப்பு, பயணம் என பலவேறு சிக்கல்களைத் தாண்டி அவர் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டார். 

அவரின்  மண்ணே உயிரே புத்தகம்  காலத்திற்கும் தடயமாக  இருந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது. கவிதைகளுக்கு அப்பால் ஆயிரக் கணக்கான கட்டுரைகளின் வழி பல்லாயிரக் கணக்கான வாசகர்களை ஈர்த்தவர்அக்கினி சுகுமார்.

ஆய்வியல், அரசியல், கலையியல்,ஆன்மிகம், விளையாட்டுத்துறை என பல்வகை கட்டுரைகளை எழுத்துலகில் அழுத்தமாகக் காலூன்றியவர். அறிவியல் கட்டுரைகளை தமிழில் தருவதில் அக்கினி சுகுமார் தன்னிகரற்று  விளங்கியவர்.

அறிவியலை எளிமைப்படுத்தித்  தமிழில் அவர் வாரி வழங்கிய கட்டுரைகள் வாசகர்கள் மத்தியில் நினைவு கூறப் படுபவை எனலாம்.

இலக்கு எதிர்ப்பு இல்லாமல் இவரின் பத்திரிகைப் பயணம் அன்று ஆரம்பமானது. பின்னர் நாற்பது ஆண்டுகள் ஓடி மறைந்தது.

செய்கிற பணியைச் செம்மையாகச் செய்தல் என்கிற இலக்கும் எதிர்பார்ப்பும் அவரிடம் வேரூன்றியது போற்றத்தக்க விசயமாகும்.

அன்னாரின் நல்லுடல் நாளை 04.10.2019 - No 45,  BP 3, Taman Bukit Permata,Batu cave (68100) Selangor எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டு  நல்லடக்கம் செய்யப்படும்.

(நன்றி: வணக்கம் மலேசியா)




பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்