சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 செப்டம்பர் 2010

சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள்


(இந்தப் புதினம் 12.09.2010 மலேசிய நண்பன் நாளிதழில் வெளிவந்தது)
 

மரத்தில் இருந்து உதிரும் சண்பகப் பூக்கள் மண்ணுக்குச் சொந்தம். மண்ணில் இருந்து உதிரும் சரித்திரப் பூக்கள் மனிதனுக்குச் சொந்தம். சண்பகப் பூக்கள் தொலைந்து போன சண்பக மணங்களைத் தேடுகின்றன. சரித்திரப் பூக்கள் கலைந்து போன சரித்திரங்களைத் தேடுகின்றன. அந்தக் காவியங்களில் ஒன்றுதான் சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள்.பூஜாங் பள்ளத்தாக்கில் புதைந்து கிடக்கும் சொப்பனப் பூக்கள்.


ஒரு காலக் கட்டத்தில் தீபகற்ப மலேசியாவை ஒட்டு மொத்தமாகச் சுவர்ண பூமி என்று சொல்வார்கள். நல்ல ஒரு நெருக்கம். நல்ல ஓர் இறுக்கம்.

அந்தச் சுவர்ண பூமி என்கிறச் சொல் இருக்கிறதே அது தீபகற்ப மலேசியாவின் பெர்லிஸ், கெடா, வட பேராக் மாநிலப் பகுதிகளைக் குறிப்பிடும் ஒரு சரித்திரக் கலைச் சொல்.

தொப்புள் கொடி உறவுகள்

பல நூறு ஆண்டுகள் என்று சொல்லலாம். சுவர்ண பூமிக்கும் தமிழர்களுக்கும் இருந்த தொப்புள் கொடி உறவுகள் இன்னும் கூட அறுந்து போகவில்லை. அவை எல்லாம் மறைக்க முடியாத வரலாற்றுப் புதினங்கள்.

மகாபலிபுரத்தைக் கட்டிக் காத்தவன் பல்லவ ராஜா. அந்த ராஜா காலத்திற்கு முன்பு இருந்தே உறவுகள் தொடங்கி விட்டன. இன்னும் தொடர்ந்தும் வருகின்றன.

சுருங்கச் சொன்னால் விஜயாலய சோழன் என்பவர் தான் சோழ சாம்ராஜ்யத்திற்கு அஸ்திவாரம் போட்டவர். ஆக,  சோழப் பேரரசு தொடங்கிய காலத்தில் இருந்தே உறவுகள் தொடர்கின்றன.

மலேசியாவின் கெடா மாநிலத்தில் இருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு மிகவும் பழைமை வாய்ந்தது. பூஜாங் பள்ளத்தாக்கைக் கெடா மாநிலத்தின் புராதன அதிசயம் என்றும் வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பூஜாங்  பள்ளத்தாக்கின் நாகரீகம் மேற்கு ஆசிய - இந்திய - சீன நாகரீகங்களுடன் தொடர்பு உடையது.

அது மட்டும் அல்ல. கம்போடியா, அராபியா, எகிப்து போன்ற நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன. இருபது நூற்றாண்டுகளாக அந்த நாகரீகம் நீண்டு போகிறது.

அந்தக் காலக் கட்டத்தில் கடல் வழி வாணிபம் சிறந்து விளங்கி உள்ளது. வணிகச் செல்வங்கள்  நிறைந்து வழிந்துள்ளன.

நளினம் காட்டும் மெர்போக் நதி

தென்னிந்தியாவை ஆட்சி செய்த பாண்டிய, பல்லவ, சோழ மன்னர்களுக்கும் கடாரத்தை ஆட்சி செய்த மன்னர்களுக்கும் நல்ல சுமுகமான உறவுகள் நெடும் காலம் நீடித்து வந்துள்ளன.

இங்கே குனோங் ஜெராய் எனும் ஓர் உயரமான மலை இருக்கிறது. இதன் உயரம் 1230 மீட்டர். இந்த மலை கடல் கரையில் இருந்து மிகத் தொலைவில் இல்லை. அந்தக் காலங்களில் இந்த மலை கடலோடிகளூக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து வந்திருக்கிறது.

அந்த மலையின் அடிவாரத்தில் தான் பூஜாங் பள்ளத்தாக்கு பரந்து விரிந்து கிடக்கிறது. பூஜாங் பள்ளத்தாக்கின் பரப்பளவு 224 சதுர கிலோமீட்டர்கள்

ஆகும். பள்ளத்தாக்கின் வழியாக மெர்போக் நதியும் நளினம் காட்டுகிறது. பசுமை புரட்சி செய்கிறது.

கி.பி.1025 ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படை எடுத்த போது பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதி கடாரம் என்று அழைக்கப் பட்டது.

இந்தக் கடாரம் எனும் சொல்தான் காலப் போக்கில் கெடா என்று மருவியது.

பூஜாங் பள்ளத்தாக்கு ஒரு வியாபார மையமாகவும், ஆட்சி செய்யும் இடமாகவும் இருந்து இருக்கிறது. இராஜேந்திர சோழனின் ஆட்சி காலம் கி.பி.1012 லிருந்து கி.பி.1044 வரை.

பட்டினப்பாலையில் கடாரம்

இராஜேந்திர சோழனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தென்னிந்தியாவில் கரிகாற் பெருவளத்தான் சோழன் எனும் ஒரு வீரமிகு சோழ அரசர் இருந்தார்.

இந்தக்  கரிகாற் பெருவளத்தான் சோழன் ஆட்சி காலத்தில் தான் பட்டினப்பாலை எனும் சங்க இலக்கியக் காவியம் எழுதப்பட்டது.

பொருநராற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன் என்றும் இவருக்கு அடைமொழி உண்டு. பட்டினப்பாலை என்பது பத்துப் பாட்டு இலக்கிய நூல்களில் ஒன்று.

இந்தக் காவியத்தைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பூம்புகார் நகரில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலையில் என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் புலவர் பாடலாகப் பாடுகிறார். அதில் வரும் ஒரு பகுதியின் வரிகளைப் படியுங்கள்.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு

இதில் 'ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்' எனும் வரிகள் வருகின்றன. கடாரத்தின் பழைய சொல் காழகம். காழகத்தின் ஆக்கம் என்றால் கடார தேசத்தின் பொருட்கள் என்று அர்த்தம்.

அந்தக் காலத்தில் பூம்புகார் எப்படி பிரசித்தி பெற்ற நகராக இருந்ததோ அதே போல கடாரமும் சிறந்து விளங்கிய பெருமையைச் சேர்க்கிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்

இராஜேந்திர சோழன் தான் அயல் நாடுகளுக்குப் பெரும்படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன். கங்கை கொண்ட சோழன் என்றும் இவரை அழைப்பார்கள்.

கடாரத்தின் மீது சோழ மன்னன் படை எடுத்தான் என்று படித்து இருப்பீர்கள். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் கடாரத்தை 'கடாஹ' என்று குறிப்பும் சொல்லப் படுகிறது.

இந்தக் காலக் கட்டத்தில் சுமத்திராவைச் சேர்ந்த ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யம்  பூஜாங் பள்ளத்தாக்கையும் ஆட்சி செய்து வந்தது. ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யம் சுமத்திராவின் பலேம்பாங்கில் தலைமையகம் இருந்தது.

அந்த ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யத்திற்கு சங்கிராம விஜயோத்துங்க வர்மன் என்பவர் அரசராக இருந்தார். இராஜேந்திர சோழனின் கடாரப் படையெடுப்பு நடந்தது 1025 ஆம் ஆண்டு.

இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுத்ததற்கு காரணம் என்ன. கடாரத்தின் ஆளுமை ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்ததே.

தமிழ் நாட்டுச் சோழர்களுக்கும் சுமத்திராவின் ஸ்ரீவிஜயா அரசர்களுக்கும் நல்ல நட்பு முறை உறவுகள் இருந்து வந்துள்ளதாகக் கல்வெட்டுகளில் ஆதாரங்கள் உள்ளன.

குலோத்துங்கச் சோழன்

அப்புறம் ஏன் இராஜேந்திர சோழன் படை எடுக்க வேண்டும். இதற்கு சரியான காரணம் தெரியவில்லை. இருந்தாலும் சீன அரசுக்கும் சோழ அரசுக்கும் இடையே இருந்த வணிகத்தைத் தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்திற்கு இருந்திருக்கலாம்.

இந்தப் படையெடுப்பின் மூலமாக ஸ்ரீவிஜயாவின் எந்த நிலப்பகுதியும் சோழ அரசுடன் சேர்க்கப் படவில்லை. விஜயதுங்கவர்மனே மீண்டும் ஸ்ரீவிஜயாவின் அரசனாகச் சோழர்களால் முடி சூட்டப் பட்டான்.

அதன் பின்னர் முதலாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி.1070 - கி.பி.1120) காலத்திலும் கடாரத்தின் மீது படையெடுப்பு நடந்துள்ளது. ஒரு சமரசத் தீர்வு காண்பதற்காக இந்த இரண்டாம் படையெடுப்பு நடந்தது என்று சொல்லப் படுகிறது.

பூஜாங் பள்ளத்தாக்கில் உள்ள கோவில்களின் காலக் கட்டம் நான்காம் நூற்றாண்டில் தொடங்கி 14 ஆம் நூற்றாண்டு வரை செல்கிறது. இந்துக் கோவில்களும் உள்ளன. புத்த விகாரங்களும் உள்ளன. இது வரை ஏறக்குறைய 50 கோவில்களைக் கணக்கிட்டு இருக்கிறார்கள்.


சிதைவு அடைந்த சிவலிங்கம்

பூஜாங் பள்ளத்தாக்கில் கண்டு எடுக்கப் பட்ட ஆலயங்களில் மிகப் பெரியது புக்கிட் பத்து பகாட் ஆலயம் ஆகும். Dr.Quaritch Wales எனும் ஆராய்ச்சியாளரால் 1936 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்டது. இவருக்கு அடுத்து Alastar Lamp எனும் ஆராய்ச்சியாளர் அகழ் ஆய்வுகளை மேற்கொண்டார்.

சிதலம் அடைந்த ஆலயத்தின் முழுப் பகுதியையும் வெளியுலகத்திற்கு காட்டினார். இந்த ஆலயத்தில் இருந்து பல பகையான  சிலைகள், முத்து மணிகள் கண்டுபிடிக்கப் பட்டன.

இந்த ஆலயம் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டிருக்கலாம் பூஜாங் நதிக்கு மேற்குப் பகுதியில் மெர்போக் நகரம் இருக்கிறது. இந்த நகரத்தின் அருகில் Kampung Bendang Dalam எனும் ஒரு கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தில் 1960 ஆம் ஆண்டில் அகழ் ஆய்வின் போது ஓர் ஆலயம் கண்டு பிடிக்கப் பட்டது.

இறுகிப் போன பல்லவ இரகசியங்கள்

இந்த ஆலயத்தின் சுற்றுப் பகுதிகளில் சிவலிங்கம், சிதைவு அடைந்த žனக் கல்
பொருட்கள், சிற்பங்கள் கண்டு எடுக்கப் பட்டன.

இந்த ஆலயம் 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் கட்டப் பட்டு இருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

சண்டி பெண்டியாட், சண்டி பெங்காலான் பூஜாங் என்று பல ஆலயங்கள் இங்கே உள்ளன. பூஜாங் பள்ளத்தாக்கில் இந்து சமயமும் புத்த சமயமும் மாறி மாறி வந்துள்ளன. காலக் கட்டங்களும் மாறி மாறி வருகின்றன.

கடார மண்ணின் இறுகிப் போன பல்லவ இரகசியங்கள் இன்னும் மறைந்து போய் கிடக்கின்றன. கடார மண்ணைப் பற்றி நம் நாட்டில் தமிழ் அறிஞர்கள் மிகப் பெரிய அளவில் ஆய்வுகள் செய்துள்ளனர்.

அந்த ஆய்வுகளை வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும். பழம் பெரும் உண்மைகளைச் சொல்ல வேண்டும். உலகத் தமிழர்கள் அந்த அறிஞர்களை ஊழி ஊழி காலத்திற்கும் ஆராதனை செய்ய வேண்டும்.

(அறிஞர் நீலகண்ட சாஸ்திரி அவர்களின் வரலாற்று ஆவணங்களின்  ஆதாரங்களுடன் இந்தக் கட்டுரை எழுதப் பட்டது. இருப்பினும் வரலாற்றுத் துறை அறிஞர்களிடம் என்னுடைய  தாழ்மையான வேண்டுகோள். குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன். நன்றி.)