மலாயாவின் முதல் இரயில் பாதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலாயாவின் முதல் இரயில் பாதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 ஜூன் 2020

மலாயாவின் முதல் இரயில் பாதை

மலாயாவில் அமைக்கப்பட்ட முதலாவது இரயில் பாதை, தைப்பிங் - போர்ட் வெல்ட் இரயில் பாதை (Taiping – Port Weld railway). போர்ட் வெல்ட் என்பது இப்போது கோலா செபாத்தாங் (Kuala Sepetang) என்று அழைக்கப் படுகிறது. இந்தப் பாதை 1885-ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது. 



1880-ஆம் ஆண்டு சர் பெரடரிக் வெல்ட் (Sir Frederick Weld) என்பவர் தொடுவாய் குடியேற்றப் பகுதிகளின் கவர்னராக மலாயாவுக்கு வந்தார். இவர் ஏற்கனவே 1864- ஆம் ஆண்டில் நியூஸிலாந்து பிரதமராகப் பதவி வகித்தவர்.

1881-ஆம் ஆண்டில் தைப்பிங் போர்ட் வெல்ட் பகுதியில் ஈய வருமானத்தைப் பார்த்தார். ரொம்பவே சம்பாதிக்க முடியும் என்பதை உணர்ந்தார். அப்போது பேராக் மாநிலத்தின் ஆங்கிலேய ஆளுநராக சர் ஹியூ லோ (Sir Hugh Low) இருந்தார்.

அப்புறம் என்ன தைப்பிங்கிற்கும் போர்ட் வெல்ட்டிற்கு இரயில் பாதை போடுவதில் தீவிரம் காட்டப்பட்டது.


இரயில் பாதை போடுவதற்காகத் தமிழ்நாட்டில் இருந்து நூற்றுக் கணக்கான தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள் (first influx of Indians, mainly Tamils to Perak). இரயில் பாதை போடுவதில் அனுபவம் பெற்ற தொழிலாளர்கள் தமிழ்நாட்டிலும் மற்ற இந்திய மாநிலங்களிலும் இருந்தார்கள். அந்தக் காலக் கட்டத்தில் இந்தியாவில் இரயில்பாதை நிர்மாணிப்புகள் தீவிரமாக இருந்தன.

உள்நாட்டு மலாயாவாசிகளுக்கு இரயில் பாதை போடுவதில் அனுபவம் இல்லை. ஏன் என்றால் இரயில் என்றால் என்ன என்று அவர்களுக்கே தெரியாத நிலை. சீனர்கள் ஈய லம்பங்களில் ஈயம் எடுப்பதில் முழுமூச்சாக இருந்தார்கள். மலாய்க்காரர்கள் விவசாயம் செய்வதிலும், கால்நடை வளர்ப்பதிலும், மீன் பிடிப்பதிலும் தீவிரம் காட்டி வந்தனர்.

அதனால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தேர்வு செய்யப் பட்டார்கள். தவிர இந்தத் தொழிலாளர்களுக்கு கண்காணிப்பாளர்களாக இலங்கைத் தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள். இவர்களைப் பற்றிய படங்கள் கிடைக்கவில்லை.

1885-ஆம் ஆண்டு ஜுன் 1-ஆம் தேதி மலாயாவின் முதல் இரயில் பாதை திறக்கப்பட்டது. 13 கிலோமீட்டர் தூரப் பாதை. கட்டுவதற்கு £7000 பவுண்டு பிடித்தது. இரண்டாம் உலகப் போரின் போது அந்தப் பாதை சேதம் அடைந்தது. இப்போது பயன்பாட்டில் இல்லை.


இருப்பினும் இரயில் நிலையத்தின் அறிவிப்புத் தூண் இன்றும் உள்ளது. நான்கு மொழிகளிலும் எழுதப் பட்டது. அந்தத் தூண் இப்போர் கேட்பார் இல்லாமல் அனாதையாய் அமைதியாய் குத்துக்கல் போல உட்கார்ந்து இருக்கிறது. அறிவிப்புத் தூண் அருகில் ஒரு சாப்பாட்டுக் கடை (Kedai Kopi Guang Ming).

இந்தக் காபிக் கடைதான் முன்பு போர்ட் வெல்ட் இரயில்வே அலுவலகமாக இருந்தது. அதாவது டிக்கெட் விற்ற இடம் இப்போது காப்பிக் கடை. இருந்தாலும் அசல் அலுவலகத்தின் கட்டமைப்பு இன்னும் அப்படியே உள்ளது.


அறிவிப்புத் தூணின் ஒரு பகுதி அண்மையில் உடைந்து விட்டது. புதிதாக தூண் செய்து, சாயம் அடித்து ஒட்ட வைத்து இருக்கிறார்கள். மலாயாவின் முதல் இரயில் நிலையம். அதன் இன்றைய நிலையைப் பாருங்கள். வேதனை.

மனிதனுக்கும் இப்படித்தான். வயதானதும் சொந்த பந்தங்கள் அவனைக் கண்டு கொள்வது ரொம்பவும் குறைவு. இந்தப் போர்ட் வெல்ட் அறிவிப்புத் தூணை நினைவில் கொண்டு நாமும் நம் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிப்போம். நமக்கும் இப்படி ஒரு நிலைமை வரலாம் என்பதை நினைவில் கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.06.2020