சாவித்திரி பாய் புலே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாவித்திரி பாய் புலே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

04 ஜனவரி 2018

சாவித்திரி பாய் புலே

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்

சாதியின் சங்கிலிகளை அறுத்து எறிந்தவர். வாழ்வே சேவை என வாழ்ந்த ஓர் அழகிய ஜீவன். அவரின் பிறந்த நாள் இன்று. அவரை நினைப்போம். வாழ்த்துவோம்.



சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule)  மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் எனும் சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கல்வி வாய்ப்பு இல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்.

இவரின் கணவர் ஜோதிராவ் (Mahatma Jyotirao Govindrao Phule). ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர்.

ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்காகவும் சாவித்திரிபாய் அரும்பாடு பட்டவர். பெண் கல்விக்காக முதல் பள்ளியைப் பூனாவிற்கு அருகில் நிறுவியவர். 




அந்தக் கால வழக்கப்படி சாவித்திரிபாய் தன் 9-ஆம் வயதில் ஜோதிராவ் புலே (13 வயது) என்பவரை 1840-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். ஜோதிராவ் புலே தன் மனைவி சாவித்திரிபாயைச் சாதீய, பெண் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் களம் இறக்கினார்.

இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு பிராமண விதவையின் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர். ஜோதிராவ் புலே தன் மனைவி சாவித்திரிபாய்க்குச் சொந்தமாகக் கல்வி போதித்தார். 


ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியைத் தாங்களே அவர்களின் பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவோம் என்று சொல்லி 1846-ஆம் ஆண்டில் ஒரு பள்ளியைத் தொடங்கினார்கள். அந்த வகையில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகப் பெயர் பெற்றவர் சாவித்திரிபாய். 



பின்னர் 1848-ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848-ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் தொடங்கினார். அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார்.

சுமார் ஆறு மாதங்களுக்குப் பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் தொடங்கப் பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர்.
 

அவர் பள்ளிக்கு நடந்து போகிற பொழுது எல்லாம் ஆதிக்கச் சாதியினர் அவர் மீது கற்களையும் சாணத்தையும் வீசிப் பற்பல தொல்லைகள் கொடுத்தனர்.

கணவர் ஜோதிராவிடம் இவர் அதைச் சொல்லிப் புலம்பினார். "அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ! அதன் பின் பள்ளிக்குப் போய் நல்ல சேலையை அணிந்து கொள்" என்று சொல்லித் தொடர்ந்து பயணிக்க ஊக்கம் அளித்தார்.

சாவித்திரிபாய் தினமும் பள்ளிக்குச் செல்லும் போது பழைய ஆடைகளை அணிந்து செல்வார். பள்ளிக்குச் சென்றதும் வேறோர் சேலையை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.

தவித்த வாய்க்கு *தீண்டத் தகாதவர்* என்று சொல்லி ஆதிக்கச் சாதியினர் தண்ணீர் கொடுக்க மறுத்தனர்.  அந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். 




பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அப்போது அமலில் இருந்தது. அந்த மழிக்கும் பணியைச் செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் இனி செய்ய மாட்டோம் என அறிவிக்கச் செய்தார்.

விதவை மறுமணங்களைத் தொடர்ந்து நடத்திக் காட்டினார் சாவித்திரிபாய். இவர் ஒரு நல்ல கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப் போக்கு இவரில் இருந்தே தொடங்குகிறது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன.

1852-ஆம் ஆண்டு இவர் 'மஹிளா சேவா மண்டல்' எனும் பெண்கள் சேவை மையத்தைத் தொடங்கினார். இந்த மையம் மனித உரிமைகள், சமூக அங்கீகாரங்களுக்காகப் போராடியது. பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது.


1876-1878-ஆம் ஆண்டுகளில் பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தம் கணவரோடு கடுமையாக உழைத்தார். மக்களின் துயரங்கள் தீர்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்தார்.

பல மையங்களில் ஜாதி வேற்றுமை பாராட்டி ஒடுக்கப்பட்ட, மறுக்கப்பட்ட நிலையில் கூட  இருவரும் இலவச உணவுகளைப் பரிமாறினார்கள். பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியைத்  தொடக்கினார்கள்.



மகாராஷ்ட்ராவை பிளேக்கு நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த் தொற்று பரவாமல் இருக்க கடுமையான பிளேக்குச் சட்டங்களைப் போட்டது. பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களைப் பிரித்து வைத்தது.

மருத்துவம் படித்து இராணுவத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இவரின் வளர்ப்பு மகன் யஸ்வந்த் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தார்.

அவரைக் கொண்டு சாவித்திரி பாய் ஊருக்கு வெளியே மருத்துவமனை ஒன்றைத் தொடங்கினார். அவரே அறுபத்தி ஆறு வயதிலும் பல பேரை தூக்கிக் கொண்டு வந்து அவர்களின் உயிர்களைக் காக்கப் போராடினார்.


பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜி என்பவனைத் தூக்கிக் கொண்டு வந்த பொழுது அவருக்கும் பிளேக்கு நோய் தொற்றிக் கொண்டது. சாவித்திரி பாய் மரணம் அடைந்தார். ஆனால் அந்தச் சிறுவன் பிழைத்துக் கொண்டான். அப்போது சாவித்திரி பாய்க்கு அவருக்கு வயது 66.

சாவித்திரிபாய் அவர்களின் 186-ஆவது ஆண்டு நிறைவைக் கூகுள் (Google) நிறுவனம் சிறப்பு செய்தது. 2017 ஜனவரி 3-ஆம் தேதி ”கூகுள் டூடுள்” (Google Doodle) கொண்டு உலகளாவிய நிலையில் அவரை அடையாளப் படுத்திச் சிறப்பித்தது.

மகாராஷ்டிரா அரசு சாவித்திரிபாய் பெயரில் ஒரு விருதினை ஏற்படுத்தியது. 2015-ஆம் ஆண்டில் புனே பல்கலைக்கழகத்தின் பெயர் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் என மாற்றம் செய்யப் பட்டது. 10.03.1998-ஆம் தேதி இந்திய அஞ்சல் துறை சாவித்திரிபாய் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டது.

இவரின் பெயரில் இரு கவிதை நூல்கள் Kavya Phule (1934). மற்றொன்று Bavan Kashi Subodh Ratnakar (1982) வெளியிடப்பட்டு உள்ளன.