மலேசியா 1MBD மோசடி - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியா 1MBD மோசடி - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 1

தமிழ்மலர் - 16.11.2018 - வெள்ளிக்கிழமை

1எம்.டி.பி. என்பது மலேசியாவின் ஒரு மேம்பாட்டு நிறுவனம். 2009-ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது. உலக நாடுகளுடன் பரஸ்பர கூட்டு வணிகம் மேற்கொள்வது; வெளிநாட்டு முதலீடுகளை மலேசியாவிற்குள் கொண்டு வருவது; மலேசியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது; மலேசிய மக்களின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்திக் காட்டுவது; இவைதான் 1எம்.டி.பி. நிறுவனத்தின் தலையாய நோக்கங்கள். 




2008-ஆம் ஆண்டில் திரங்கானு மாநிலத்தில் ஒரு முதலீட்டுக் கழகம் இருந்தது. அதன் பெயர் திரங்கானு இன்வெஸ்ட்மெண்ட் அத்தோரிட்டி (Terengganu Investment Authority). சுருக்கமாக டி.ஐ.ஏ. என்பார்கள். அந்த முதலீட்டுக் கழகத்தின் புதிய வடிவமே இந்த 1எம்.டி.பி. நிறுவனம் ஆகும்.

வெளிநாடுகளில் முதலீடுகள் செய்து பணம் சம்பாதிக்கும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் நோக்கம் நிறைவேறியாதா இல்லையா; மலேசிய மக்களின் எதிர்கால நலன்களுக்காக உருவாக்கப்பட்ட 1எம்.டி.பி. நிறுவனத்தில் ஏற்பட்ட பண மோசடிகளின் தாக்கங்கள் என்ன என்ன என்பதை அலசிப் பார்ப்பதே இந்தக் கட்டுரைத் தொடரின் பார்வை ஆகும்.

1எம்.டி.பி. நிறுவனம் மலேசிய நிதியமைச்சிற்குச் சொந்தமானது. மலேசிய நிதியமைச்சரின் நேரடிப் பார்வையின் கீழ் இருந்தது. (Minister of Finance (Incorporated). இந்த நிறுவனத்தின் பண முதலீடுகள்; வருமானம்; இலாப நட்டம் அனைத்திற்கும் மலேசிய நிதியமைச்சு தான் பொறுப்பு. 




கூட்டிக் கழித்துப் பார்த்தால் 1எம்.டி.பி. நிறுவனம் ஈடுபட்ட எல்லா நடவடிக்கைகளுக்கும் மலேசிய நிதியமைச்சே பொறுப்பு. அந்த மலேசிய நிதியமைச்சிற்கு மலேசிய அரசாங்கமே பொறுப்பு. அந்த மலேசிய அரசாங்கத்திற்கு மலேசிய மக்களே பொறுப்பு.

அதாவது அந்த நிறுவனத்தின் இலாப நட்டங்களுக்கு மலேசிய மக்களே பொறுப்பு. இப்போது அந்த நிறுவனம் 4200 கோடி ரிங்கிட் நட்டத்தில் தத்தளித்துக் கொண்டு நிற்கிறது. அந்த வகையில் மலேசிய மக்களின் பேரைச் சொல்லி வாங்கப் பட்ட கடன்களுக்கு மலேசிய மக்களே பொறுப்பு.

இன்னும் தெளிவாகச் சொல்லலாம். மலேசியாவில் இன்று பிறந்த குழந்தையில் இருந்து; நேற்று இறந்து போனவர் வரை ஒவ்வொருவரும் இந்த 1எம்.டி.பி. நிறுவனத்தின் கடனுக்கு மட்டும் ஆளுக்கு 1400 ரிங்கிட் கடன் கொடுக்க வேண்டும்.

அந்த ஒரே ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே நீங்களும் நானும் ஆளுக்கு 1400 ரிங்கிட் கடன் பட்டு இருக்கிறோம். என்ன இருந்தாலும் அது பழைய அரசாங்கம் வாங்கிய கடன். அந்தக் கடனை இப்போதைய அரசாங்கம் கட்டித் தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை. கடன் கொடுத்தவர்கள் சும்மா விட மாட்டார்கள். அனைத்துலக நீதிமன்றம் வரை இழுத்துச் சென்று விடுவார்கள்.




மலேசியர்களை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் அல்லவா. ஆக அந்தக் கடனை இப்போதைய புதிய அரசாங்கம் கட்ட வேண்டிய நிலையில் உள்ளது.

முன்னாள் பிரதமர் நஜீப், மலேசியாவின் பிரதமராக இருந்த காலத்தில் நாட்டின் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். அதனால் நிதியமைச்சு அவரின் நேரடிப் பார்வையின் கீழ் இருந்தது.

அந்த வகையில் 1எம்.டி.பி. நிறுவனத்தின் தலைமை ஆலோசனை மன்றத்தின் தலைவராகவும் முன்னாள் பிரதமர் நஜீப் பொறுப்பு ஏற்று இருந்தார். அவருடைய அனுமதியின் பேரில் தான் 1எம்.டி.பி. நிறுவனம் இயங்கி வந்தது. அதாவது அவரின் கண் அசைவில் தான் அந்த நிறுவனமே இயங்கியது.

1எம்.டி.பி. நிறுவனத்தின்  பொதுவான நோக்கம் இதுதான். எரிபொருள்; நில உடைமைகள்; சுற்றுலாத் துறை; விவசாய வணிகம் போன்ற அபிவிருத்தி திட்டங்களில் கவனம் செலுத்துவது. அந்த வகையில் சில முக்கியமான திட்டங்களில் ஈடுபட்டு வந்தது. அதில் துன் ரசாக் எக்ஸ்சேஞ்ஜ் எனும் துன் ரசாக் மாற்றுத் திட்டம் மிக முக்கியமானது. 




Tun Razak Exchange - Tun Razak Exchange, TRX

அந்தத் திட்டத்தின் பழைய பெயர்

Kuala Lumpur International Financial District.

கோலாம்பூர் மாநகரின் நடு மையத்தில் 70 ஏக்கர் பரப்பளவில் இந்தத் திட்டம் வகுக்கப் பட்டது. புக்கிட் பிந்தாங், புடு, கொக்ரெயின், கம்போங் பாண்டான், அம்பாங் ஹிலீர் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு மேம்பாட்டுத் திட்டம்.

இந்தத் துன் ரசாக் மாற்றுத் திட்டத்தின் கீழ் வருவது பண்டார் மலேசியா எனும் மற்றொரு கிளைத் திட்டம். ஒரு துணைத் திட்டம். 486 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. சுங்கை பீசி விமான நிலையத்தில் மையம் கொண்டது.

பண்டார் மலேசியா திட்டம் 15 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட திட்டம் போடப் பட்டது. புதிய பக்காத்தான் அரசாங்கத்தின் கீழ் இந்தத் திட்டம் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதைப் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.




2015-ஆம் ஆண்டு தொடக்கம் 1எம்.டி.பி. நிறுவனத்திற்குப் பிரச்சினைகள். சந்தேகத்திற்கு உரிய பண பரிவர்த்தனைகள்; சந்தேகத்திற்கு உரிய பணமோசடி நடவடிக்கைகள்; பணச் சலவைகள்; ஊழல்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் செய்திகள் கசியத் தொடங்கின.

லண்டன் மாநகரில் இருந்து வெளிவரும் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் தான் முதன் முதலில் பூனைக்கு மணி கட்டியது. அதைத் தொடர்ந்து தி எட்ஜ் எனும் செய்தி இதழும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் இரகசியங்களை வெளி உலகத்தில் கசிய விட்டது. அதனால் 1எம்.டி.பி.  நிறுவனம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.

அந்த நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவின் நீதித் துறை அமைச்சு வழக்கு தொடர்ந்து உள்ளது. மலேசியாவிலும் அடுக்கடுக்காய் வழக்குகள். ஒவ்வொரு நாளும் புதிது புதியாய் வழக்குகள். நஜீப்பில் இருந்து ரோஸ்மா வரை அன்றாடம் குற்றப் பத்திரிகைகள். 




இதைத் தவிர உலகில் மேலும் ஆறு நாடுகளில் 1எம்.டி.பி. நிறுவன வழக்குகள் தயார் நிலையில் உள்ளன. 1எம்.டி.பி. நிறுவனத்தில் நடந்து உள்ள மோசடிகள் என்ன என்று பார்ப்போம்.

2015-ஆம் ஆண்டு 1எம்.டி.பி. நிறுவனத்திற்குச் சொந்தமான 267 கோடி ரிங்கிட் பணம் முன்னாள் பிரதமர் நஜீப்பின் வங்கிக் கணக்கில் சேர்க்கப் பட்டது என்பது தான் மிகப் பெரிய குற்றச் சாட்டு. ஒரு நாட்டின் தலைவரின் வங்கிக் கணக்கில் கோடிக் கோடியாகப் பணம் போடப் பட்டது தான் விஸ்வரூபமாகத் தலை எடுத்துக் களை கட்டியது. 

பணத்தைப் பார்த்தீர்களா. ஒரு கோடி இரண்டு கோடி இல்லைங்க. அம்மாடியோவ் என்று சொல்லும் அளவிற்கு 267 கோடிகள். முன்னாள் நஜீப்பின் தனி வங்கிக் கணக்கில் மட்டும் 2,672,000,000 மலேசிய ரிங்கிட் இருந்தது. அதாவது USD 700 million (அமெரிக்க டாலர்கள்). இரண்டே இரண்டு வங்கிக் கணக்குகளில் மட்டும் அவ்வளவு பணம்.

ஆனாலும் அந்தப் பணத்தை சவூதி அரேபியா அரசக் குடும்பம் அன்பளிப்பாகக் கொடுத்தது என்று சொல்லி நஜீப் மறுத்து வருகிறார். 




ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 6355 ரிங்கிட் என்று செலவு செய்தால் 267 கோடி ரிங்கிட் பணத்தையும் செலவு செய்து முடிக்க 2739 ஆண்டுகள் பிடிக்கும். அது மட்டும் அல்ல.

267 கோடி ரிங்கிட் பணத்தை 100 ரிங்கிட் நோட்டுகளாக மாற்றினால் அவ்வளவு பணத்தையும் ஏற்றிச் செல்ல 12 இராட்சச லாரிகள் தேவைப்படும். (24 டயர் லாரிகள்). அப்படி என்றால் எவ்வளவு பணம் என்று நீங்களே கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

1எம்.டி.பி. நிறுவனத்தைப் பற்றிய மோசடி இரகசியங்கள் வெளியே கசிய ஆரம்பித்ததும் மலேசிய மக்கள் முகம் சுழித்தார்கள். உலக மக்கள் திகைத்து நின்றார்கள். மோசடிகளில் சம்பந்தப் பட்டவர்கள் கழுத்திற்குக் கத்தி எப்போது வரும் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அல்லாடுகிறார்கள்.

அவர்களில் சிலர் கருவாடு என்றால் என்ன; அது எப்படி இருக்கும்; ஒரு கிலோ என்ன விலை என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். அதில் ஒரு தலைவர் வேறு ஓர் உலகில் வாழ்ந்து கொண்டு அது சொட்டை இது நொட்டை என்று டிவிட்டர் பண்ணிக் கொண்டு  இருக்கிறார். 




மோசடி இரகசியங்கள் உச்சம் பார்த்த போது நஜீப் பதவி விலக வேண்டும் என்று பலர் அறைகூவல் விடுத்தார்கள். அவர்களில் ஒருவர் இப்போதைய பிரதமர் துன் மகாதீர். இருந்தாலும் நஜீப் விடாப்பிடியாக நின்றார். தான் தவறு செய்யவில்லை என்று நியாயம் சொல்லி வந்தார். அது மட்டும் அல்ல. பூனை பால் குடிக்காது; கருவாடு தின்னாது என்று சொல்லிச் சொல்லியே காலத்தையும் நகர்த்தி வந்தார்.

நஜீப்பிடம் அரசியல் பலம் இருந்தது. அதிகாரப் பலம் இருந்தது. அரசாங்க இயந்திரப் பலம் இருந்தது. உயர்மட்ட நண்பர்கள் பலம் இருந்தது. அதையும் தாண்டிய நிலையில் பண பலம் இருந்தது. அசைக்க முடியவில்லை. தலைவரின் கட்டளைகளுக்கு அடிபணிந்து போக வேண்டிய ஒரு கட்டாய நிலை. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று பலரும் குழம்பிப் போய் நின்றார்கள்.

2018 மே மாதம் 9-ஆம் தேதி மலேசியப் பொதுத் தேர்தல் வந்தது. மலேசிய மக்கள் அணி திரண்டார்கள். அரசாங்கத்தையே மாற்றிப் போட்டார்கள். அந்த வகையில் ஆடாத ஆட்டம் ஆடிய ஆண் ஜாதி பெண் ஜாதி பூனைகளுக்கு நன்றாகவே மணிகளைக் கட்டியும் விட்டார்கள். பாவம் அந்தப் பூனைகள். இப்போது நீதிமன்றத்திற்கும் வீட்டு வாசலுக்கும் நடையாய் நடந்து கொண்டு இருக்கின்றன. நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.




நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்த கையோடு அரசியல் ஜீவி அன்வார் இப்ராகிம் அவர்களும் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார். 1எம்.டி.பி. நிறுவனத்தின் நம்பிக்கைத் தன்மையை வெளிப்படையாகவே விமர்சனம் செய்தார். அந்த நிறுவனத்திற்கு என்று ஒரு வணிக முகவரி இல்லை; உருப்படியான ஒரு கணக்காய்வாளர் இல்லை என்று நாடாளுமன்றத்திலேயே விலாவாரியாக விலாசித் தள்ளினார்.

மலேசியப் பொதுத் தேர்தலுக்குப் பின் புதிய அரசாங்கம் பதவி ஏற்றது. மகாதீர் பிரதமரானார். 1எம்.டி.பி. நிறுவனத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டு போக கதவுகளையும் திறந்து விட்டார். 1எம்.டி.பி. நிறுவனத்திற்கு இப்போது 4200 கோடி ரிங்கிட் கடன்.

1எம்.டி.பி.  மோசடியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் வெளிநாட்டு வங்கிகளில் முதலிடம் வகிப்பது கோல்ட்மேன் சாஸ் (Goldman Sachs) எனும் வங்கியாகும்.

கோல்ட்மேன் சாஸ் வங்கி என்பது ஒரு பன்னாட்டு முதலீட்டு வங்கி. உத்தரவாதக் கடன் பத்திரங்கள் மூலமாக நிதி திரட்டிக் கொடுப்பது தான் அந்த தலையாயப் பணியாகும். இந்த வங்கி மலேசிய மக்களை ஏமாற்றி இருக்கிறது என்று பிரதமர் மகாதீர் சில தினங்களுக்கு முன்னர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். படித்து இருப்பீர்கள்.

கோல்ட்மேன் சாஸ் வங்கியின் தலைமையகம் அமெரிக்கா நியூயார்க் நகரில் உள்ளது. உலகம் முழுமைக்கும் 82 கிளை நிறுவனங்கள் உள்ளன. அந்தக் கிளை நிறுவனங்களில் 37 ஆயிரத்து 300 பேர் வேலை செய்கிறார்கள்.

இந்தக் கோல்ட்மேன் சாஸ் வங்கி 2015-ஆம் ஆண்டில் மலேசிய அரசாங்கத்தின் உத்தரவாதத்தின் பேரில் 1எம்.டி.பி. நிறுவனத்திற்கு 2706 கோடி ரிங்கிட் பணத்தைக் கடனாகத் திரட்டிக் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் அந்த கோல்ட்மேன் சாஸ் வங்கிக்கு சேவைக் கட்டணமாக 201 கோடி ரிங்கிட் (கமிசன்) கிடைத்து இருக்கிறது.

எவ்வளவு கமிசன் என்று பாருங்கள். தலை சுற்றுகிறது. 201 கோடி ரிங்கிட். அந்தக் கமிசன் பணத்தைக் கொண்டு 4000 மலேசிய மாணவர்களுக்கு முழு நிதியுதவி செய்து அவர்களை மருத்துவர்களாக ஆக்கி இருக்கலாம். அது வெறும் கமிசன் மட்டும் தாங்க. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாய் இன்னும் எவ்வளவோ கதை இருக்கிறது. அதைப் பற்றி நாளை பார்ப்போம். (தொடரும்)



மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7மலேசியா 1MBD மோசடி - 8

சான்றுகள்


1. 1MDB: The inside story of the world’s biggest financial scandal - https://www.theguardian.com/world/2016/jul/28/1mdb-inside-story-worlds-biggest-financial-scandal-malaysia

2. 1MDB controversy started from day one - https://www.thestar.com.my/news/nation/2018/05/17/controversial-start/

3. Global Witness, "The Real Wolves of Wall Street - The banks, lawyers and auditors at the heart of Malaysia’s biggest corruption scandal (PDF)"

4. Brown, Clare Rescastle (2018). The Sarawak Report: The Inside Story of the 1MDB Exposé. Gerak Budaya. p. 496. ISBN 9789670311166.

5. Wright, Tom; Hope, Bradley (2018). Billion Dollar Whale: The Man Who Fooled Wall Street, Hollywood, and the World. Hachette UK. p. 400. ISBN 9780316436489.

6. Ex-Goldman bankers face 1MDB charges. BBC News. - https://www.bbc.com/news/business-46062576

7. Value of cash and goods seized from Najib-linked residences amounted to about RM1bil - https://www.thestar.com.my/news/nation/2018/06/27/amar-singh-pc-1mdb/