பாலியியல் வன்முறையாளர்களும் குழந்தைகளின் பாதுகாப்பும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலியியல் வன்முறையாளர்களும் குழந்தைகளின் பாதுகாப்பும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 மே 2013

பாலியியல் வன்முறையாளர்களும் குழந்தைகளின் பாதுகாப்பும்

Joint Action Group for Gender Equality (JAG)
Women’s Centre for Change Penang (WCC)

Sabah Women’s Action Resource Group (SAWO)

Women’s Aid Organisation (WAO)

Sisters in Islam (SIS)

All Women's Action Society (AWAM)

Perak Women for Women (PWW)

Persatuan Sahabat Wanita (PSWS)

பாலியல் வன்முறையாளர்: 40 வயது நிரம்பிய ஓர் உணவகத்தின் நிர்வாகி. 
பாதிக்கப்பட்டவர்: 13 வயது சிறுமி. 

2013 மே மாதம் 8 ஆம் தேதி ’தினக்குரல்’  ‘தி ஸ்டார்’, ‘சபா டெய்லி எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, கோத்தா கினபாலு செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பாலியல் வன்முறை குற்றச்சாட்டை மீட்டுக் கொள்ள, 40 வயது நிரம்பிய ஓர் ஆடவர் விண்ணப்பம் செய்துள்ளார். 

அதற்குக் காரணம், அந்தச் சிறுமியை அந்த ஆடவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம். ஷாரியா நீதிமன்றம் அனுமதிக்கும் வரையில், இடைக்காலத்திற்கு இந்த வழக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று கூறிய அரசு தரப்பு வழக்குரைஞர், குற்றச்சாட்டை மீட்டுக் கொள்வதில் மறுப்பு தெரிவிக்கவில்லை. இது ஓர் அதிர்ச்சியான செய்தி.

பாலியல் வன்முறையாளர் என்று கருதப்படுகின்ற ஒருவர், வன்முறைக்கு உள்ளான அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தால், அவரைச் சிறைத் தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியும் என்பது ஒரு நியாயமான செயலாகுமா? 

வயது குறைந்த சிறுமிகளை நம்முடைய சமுதாயம் இப்படியுமா நடத்த வேண்டும்? ஏழ்மை, கலாசாரப் பாரம்பரியம் எனும் காரணங்களுக்காக, குழந்தைத்தனமான ஒரு சின்னஞ் சிறுமியைத் திருமணம் செய்து வைக்க பெற்றோர்களுக்கு அப்படியும் அனுமதி வழங்கலாமா?

பல்வகையான வன்முறைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டம், ’பினல் கோட்’ சட்டம் போன்றவை நடைமுரையில் உள்ளன. அதே சமயத்தில், நீதி தர்ம நியாயங்களைக் காப்பாற்றிப் போற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்தைச் சார்ந்துள்ளது.

வயது குறைந்த பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. ஆகவே, குற்றவாளிகளுக்கு அதிகப்பட்சத் தண்டனைகளை வழங்குவதற்கு,  கிரிமினல் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் துறையைச் சேர்ந்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ நாஸ்ரி அப்துல் அசீஸ், கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதியாக வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.

சமயக் கலாசாரப் பின்னணிகளைக் காரணம் காட்டி, பாலியல் வன்முறையாளர்கள் சிறைத் தண்டனையில் இருந்து தப்பித்துச் செல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். பேசுவதைக் குறைத்துக் கொண்டு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தீவிரம் காட்ட வேண்டும்.

சபா விசயத்திற்கு வருவோம். ஒரு மோசமான பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும் 40 வயது நிரம்பிய மனிதர், பாதிப்புக்குள்ளான அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொள்வதற்கு ஷாரியா நீதிமன்றம் அனுமதி வழங்கலாமா என்பதே இப்போதைய தலையாய பிரச்னையாகும்.

இரண்டாவதாக, 13 வயதே நிரம்பிய ஒரு பெண் சிறுமி, தான் திருமணத்திற்கு தயாரான நிலையில் உள்ளார் என்று எப்படி அனுமதி வழங்க முடியும்?

மலேசியாவில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் போது, ஏன் அந்தக் குழந்தைக்கு மட்டும் பாதுகாப்பில் இருந்து ஒரு தவிர்ப்பு நிலையை அனுமதிக்க வேண்டும்?

சின்ன வயதில் திருமணமாகிப் போகும் வயது குறைந்த பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கும், தவறான பாலியல் கொடுமைகளுக்கும் உள்ளாகின்றனர் என்பது நன்கு அறியப்பட்ட கருத்து. தவிர, இவர்கள் குழந்தை பெறும் சமயத்தில் இறந்து போகும் துயர்ச் சம்பவங்களும் அதிகமாகவே உள்ளன.  

கடைசியில், ஒரு குழந்தைக்கு நியாயமும் பாதுகாப்பும் தேவைப்படும் காலக் கட்டத்தில், அதே குழந்தையுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று திருமணச் சான்றிதழை  வழங்கி நியாயப்படுத்தும் போதுதான், அங்கே சட்டமும் சட்ட அமைப்பு நிலைகளும் தோல்வியில் அடைக்கலம் தேடுன்றன

கற்பழிப்புக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கற்பழிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்து, அவரையே மனைவியாக்கிக் கொண்டால், எதிர்காலத்தில் அந்தப் பெண்ணை மதிப்பு மரியாதையுடன்  நடத்துவார் என்று எப்படி அவரிடம் ஓர் உன்னதமான ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்? அதே பெண், ஒரு குழந்தையாக இருந்தால் நிலைமை மேலும் மோசமாகிப் போகும் அல்லவா?


ஏற்றுக் கொள்ள முடியாத இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். நீதி முறைமைகள் தவறான வழிகளில் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிப் படுத்த வேண்டும். 

ஆகவே, இந்த விசயத்தில் அரசு வழக்கறிஞர்களும் ஷாரியா நீதிமன்றமும் நல்ல ஒரு முடிவை எடுத்து,  நல்ல ஒரு நியாயமான தீர்ப்பை வழங்க முன் வர வேண்டும்.

இருபாலர் சம உரிமைக் கூட்டுச் செயல் குழுவினர் Joint Action Group for Gender Equality (JAG) கீழ்க்காணும் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்:

1. ஒரு 13 வயது சிறுமி திருமணம் செய்து கொள்கிறார் என்றால் அவரால் அந்த வயதில் முறையான சம்மதம் தெரிவிக்க இயலாது; அத்துடன் அவருக்கு அந்தக் கட்டத்தில் சரியான மனப்பக்குவமும் அமைந்து இருக்காது எனும் காரணங்களை அடிப்படையாகக் காட்டி ஷாரியா நீதிமன்றம் அந்தத் திருமணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

2. தெட்டத் தெளிவாகத் தெரியும் கற்பழிப்புக் குற்றச்சாட்டையும்; குற்றம் சுமத்தப்பட்டவருக்கும் குழந்தைக்கும் இடையே நிலவுகின்ற நீண்ட வயது வித்தியாசத்தையும்; அவர்களிடையே நிலவும் நடைமுறை வேறுபாடுகளையும்; பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டை மீட்டுக் கொள்வதற்காக, திருமண பந்தம் என்பதைக் காரணம் காட்டப் பட்டிருப்பதையும், அரசு வழக்குரைஞர் மன்றம் கருத்தில் கொண்டு, அந்த வழக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
                 
3. பெண்களுக்கு எதிரான அனைத்து கொடுமைகளின் தடுப்புச் சம்மேளனம்  (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women - CEDAW) குழந்தைக் கல்யாணங்கள், அவை தொடர்பான நிகழ்வுகளை முற்றாக நிராகரிக்கின்றது.    

இந்தச் சம்மேளனத்தில் மலேசியாவும் இணைந்து இருப்பதால், சம்மேளனத்தின் கொள்கை விதிகளின்படி அனைத்து மலேசியர்களும் சட்டத்திற்குள் சமமாக உட்பட்டு இணங்கி நடக்க வேண்டும் என்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

4. பாதிக்கப்பட்டவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு, ஆலோசனைகள், ஆதரவுகள், தேவையான உதவிகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வழங்க வேண்டும். குழந்தைக்கு பாதுகாவலராக இருப்பவர், 2001 ஆம் ஆண்டு சிறார்ச் சட்டத்தின் முழு அதிகாரங்களைப் பயன்படுத்தி, குழந்தையின் நலன்களில் நேர்மையான அக்கறையைச் செலுத்த வேண்டும்.

குழந்தையின் நலன்களைப் பாதிக்கும் சட்டங்களையும் சம்பிரதாயப் பழக்க வழக்கங்களையும் சவால்களாக ஏற்று மாற்றங்களைச் செய்ய முன் வர வேண்டும். நம்முடைய குழந்தைகள் பாலியல் முறைகேடுகளினால் பாதிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு நம்மால் வாளா இருக்க முடியாது. அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும். 

நம்முடைய குழந்தைகளுக்கு இப்போது பாதுகாப்பு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது. எத்தனை வேதனைகள் வந்தாலும், எத்தனைச் சோதனைகள் வந்தாலும் நம்முடைய குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் நெஞ்சார்ந்த கடமையாகும்.


லோ செங் கூய் / மெலிசா முகமட் அகீர்
இருபாலர் சம உரிமைக் கூட்டுச் செயல் குழுவினர் சார்பில்
Joint Action Group for Gender Equality (JAG)

கூட்டுச் செயல் குழுவினர்:


Women’s Centre for Change Penang (WCC)

Sabah Women’s Action Resource Group (SAWO)

Women’s Aid Organisation (WAO)

Sisters in Islam (SIS)

All Women's Action Society (AWAM)

Perak Women for Women (PWW)

Persatuan Sahabat Wanita (PSWS)



17  May  2013