கேமரன் மலை தெரியாத ரகசியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேமரன் மலை தெரியாத ரகசியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 ஜூலை 2016

கேமரன் மலை தெரியாத ரகசியங்கள்

மலேசிய நாட்டில் இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் சீதனமாகச் சீர் சிறப்புகளை வாரி இறைத்துவிட்டுப் போய் இருக்கிறாள். 



கேமரன் மலை, பிரேசர் மலை, பினாங்கு கொடி மலை, ஈப்போ கல்லுமலை, மலாக்கா செட்டித் தெரு, தைப்பிங் தாமரைத் தடாகம், பங்கோர் தீவு, புலாவ் தியோமான், கோலா கங்சாரில் இருக்கும் மலேசியாவின் முதல் ரப்பர் மரம்;

பத்து காஜாவில் இருக்கும் மலேசியாவின் கடைசி ஈயக் கப்பல்; 1940-களில், மலாயாவை ஒருநாள் ஆட்சி செய்த பத்து ஆராங் இந்தியர்கள்; ஈப்போ கோனாலி சாலையில் இருக்கும் வீரப் பெண்மணி சிபில் கார்த்திகேசுவின் கல்லறை. இப்படி நிறைய இருக்கின்றன. அடுக்கிக் கொண்டே போகலாம்.





இவை எல்லாம் நம் நாட்டின் வரலாற்றுச் சின்னங்கள் இல்லை; சீதனங்கள். அந்த அழகுகளைப் பார்த்து ரசிக்க நம்மில் பலருக்கு நேரம் இருக்காது. மற்ற நாடுகளுக்குப் போவது என்றால் வரிசை பிடித்து நிற்பார்கள். தவறாகச் சொல்லவில்லை. வேதனைப்பட வேண்டாம்.

வெளிநாடுகளுக்குப் போங்கள். போய்ப் பாருங்கள். கட்டிச் சோறு புளிச் சாதம் கட்டிக் கொண்டு போங்கள். வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால்,  அதே சமயத்தில் உங்கள் நாட்டின் அழகையும் பார்த்து ரசியுங்கள். 





இது உங்கள் நாடு. இது நீங்கள் பிறந்த பூமி. உங்களுக்குச் சொந்தமான மண்ணின் அழகை முதலில் ஆராதனை செய்யுங்கள். மனதிற்குள் சின்ன ஆதங்கம். கொட்டி விடுகிறேன். ஏசினால் ஏசிவிட்டுப் போங்கள்.

ஒரு செருகல். பக்கத்து வீட்டுப் பெண்பிள்ளை, நன்றாகப் பாடுகிறாள். அற்புதமாகப் பரத நாட்டியம் ஆடுகிறாள். நிறைய பரிசுகளை வாங்கி இருக்கிறாள். அவளைப் போய்ப் பார்க்கலாம் என்றால் சிலருக்கு நேரம் இருக்காது. இன்னும் சிலருக்கு, இரண்டு வார்த்தைகள் பாராட்டிச் சொல்லக்கூட மனசும் இருக்காது. மனசும் வராது.

மிஸ்டர் மைனர் மோகம்

ஆனால், பக்கத்து நாட்டில் இருந்து சில மினுக்கிகள் வந்து இருக்கிறார்கள். தளுக்கு மேனியைக் குலுக்கிக் காட்டுகிறார்கள் என்றால் சொல்லவே வேண்டாம். சிலருக்கு நடுஜாமத்திலேயே மிஸ்டர் மைனர் மோகம் வந்துவிடும். 




அப்புறம் இரவுகள் இம்சையாகிப் போகும். விடிய விடிய காற்றின் காலுக்கு கொலுசு கட்டுவார்கள். எஸ். எம். எஸ் அனுப்பி அனுப்பியே ரொம்பவும் சந்தோஷப் படுவார்கள்.

இவை எல்லாம் பார்த்துப் பழகிப் போன சில பழைய சமாசாரங்கள். பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.

1885-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி. அப்போது மலாயாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்களுக்கு தித்திவாங்சா மத்தியமலைத் தொடரை நிலஆய்வு செய்ய வேண்டும். மலையின் எல்லைகளை வரைய வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம். அதற்காக சர் வில்லியம் கேமரன் என்பவரை அனுப்பி வைத்தார்கள்.

அவருக்குத் துணையாக குலோப் ரியாவ் (Kulop Riau) என்பவர். இந்தத் தித்திவாங்சா மத்தியமலைத் தொடர்தான் மலாயாத் தீபகற்பத்தை இரண்டாகப் பிரிக்கிறது.  மத்திய மலைப் பகுதியின் பெரும்பாலான பகுதிகள் 1200 - 1800 மீட்டர் உயரத்தில் உள்ளன. ஆக சர் வில்லியம் கேமரனின் ஆய்வுக்கு தடபுடலான ஏற்பாடுகள்.

பதினைந்து யானைகள். இருபது குதிரைகள். சுமைகளைத் தூக்கிச் செல்ல முப்பது நாற்பது கூலியாட்கள். வழிகாட்டிகளாக இருபதுக்கும் மேற்பட்ட பூர்வீகக் குடிமக்கள். இப்படி ஒரு பெரிய பட்டாளமே நில ஆய்வுக் களத்தில் இறங்கியது. 





அவர்கள் தஞ்சோங் ரம்புத்தான் சிறுநகர் வழியாகத்தான் மலையில் ஏறி இருக்கிறார்கள். தஞ்சோங் ரம்புத்தான் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்ற ஓர் இடமாக இப்போது இருக்கின்றது.

தஞ்சோங் ரம்புத்தான் காட்டுப் பாதை

கேமரன் மலையில் ஏறுவதற்கு ஏன் தஞ்சோங் ரம்புத்தான் வழியாகப் போக வேண்டும். சிலர் கேட்கலாம். நீங்கள் நினைக்கிற மாதிரி அப்போது தாப்பா பாதையும் இல்லை. சிம்பாங் பூலாய் பாதையும் இல்லை. ஒரே ஒரு காட்டுப் பாதை மட்டுமே இருந்தது. அதுவும் ஒற்றையடிப் பாதை.

அதுதான் தஞ்சோங் ரம்புத்தான் காட்டுப் பாதை. வேறு எந்தப் பாதையும் இல்லை. 130 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.

பல மாதங்களுக்குப் பிறகு மலைகளுக்கு நடுவில் ஒரு பெரிய பச்சை பிருந்தாவனம் படர்ந்து விரிந்து கிடப்பதைப் பார்த்து எல்லோரும் அசந்து போனார்கள். ‘இங்கேதான் உலகின் எட்டாவது அதிசயம் மறைந்து கிடக்கிறது’ என்று வில்லியம் கேமரன் சொன்னாராம்.

அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. இயற்கை அன்னை நடனம் ஆடிச் சென்ற பசும் புல்வெளி. பின்னே இருக்காதா... அதைப் பார்த்து மெய்மறந்து போய் இருக்கிறார்கள்.




அவர்களின் இரு முக்கிய ஆய்வுப் பணிகள். முதலாவது கிந்தா ஆறு எங்கே உற்பத்தி ஆகிறது. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். இரண்டாவது… பேராக் - பகாங் மாநிலங்களின் எல்லைகளைப் பிரிக்க வேண்டும். இந்த இரண்டும்தான் அவர்களின் முக்கியப் பணிகள். கடைசியில் கிந்தா ஆற்றின் நதிமூலத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள். சர் வில்லியம் கேமரன்

குனோங் சாபாங் எனும் மலையில்தான் கிந்தா ஆற்றின் ஊற்றுக் கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் குளிக்கப் பயன்படுத்துவோமே நீர்த்தொட்டி. அவ்வளவு பெரியதுதான் அந்த ஊற்றுக் கிணறு. அங்கு இருந்துதான் கிந்தா ஆறு உற்பத்தியாகி ஈப்போ வழியாக வந்து பிறகு பேராக் ஆற்றுடன் கலக்கின்றது.

நில ஆய்வுக் குறிப்புகளை எழுதும் போது 1800 மீட்டர் உயரத்தில் சுழிப்பு முனைகளைக் கொண்ட மலைகள் இருக்கின்றன. பல பகுதிகளில் மென்மையான மலைச் சரிவுகள் உள்ளன என்றும் சர் வில்லியம் கேமரன் எழுதி இருக்கிறார். ஆனால் அவர்கள் பார்த்தது ‘புளு வேலி’ பகுதி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது நடந்தது 1885-ஆம் ஆண்டு.

இந்தக் கட்டத்தில் அதிக நாட்கள் மலைகளின் உச்சியிலேயே இருந்ததால் சர் வில்லியம் கேமரனுக்கு ஒரு வகையான மறதி நோய் ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கும் வயது ஆகிவிட்டது. இருந்தாலும் பூர்வீகக் குடிமக்கள் வழங்கிய ’தொங்காட் அலி’ வேர்களை அதிகமாகச் சாப்பிட்டு இருக்கிறார்.

தொங்காட் அலி என்பது ஒரு வகையான வலி நிவாரணி. ஆண்மையைப் பெருக்கும். உடலுக்கு அதிகமாகச் சுறுசுறுப்பைக் கொடுக்கும். 2005-ஆம் ஆண்டு குனோங் தகான் மலையில் ஏறி இருக்கிறேன். ஏறி இறங்க ஒன்பது நாட்கள் பிடிக்கும். எங்களுடன் வந்த வழிகாட்டி, தொங்காட் அலியைப் பிடுங்கிச் சாப்பிடச் சொல்லி இருக்கிறார்.

சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் உடல் சூடாகிப் போகும். மூட்டு வலிகள் பறந்து போகும். இருந்தாலும் அளவுக்கு மிஞ்சி போகக் கூடாது. கல்லீரலைப் பாதிக்கும்.

அழகிய பச்சைப் பிருந்தாவனம்

ஆக தொங்காட் அலியைச் சாப்பிட்டு அதனால் பிரச்னைகள் ஏற்பட சர் வில்லியம் கேமரனுக்கு மலை உச்சியிலேயே நினைவு இழந்து போனது. கீழே இறங்கி வந்த சில நாட்களிலேயே இறந்தும் போனார்.

ஆனால் அவர் கண்டுபிடித்த பிருந்தாவனத் தகவல்கள் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு வந்து கிடைக்கவே இல்லை. இன்னும் ஒரு விஷயம். அவர் கண்டுபிடித்த அந்தப் பச்சைப் பள்ளத்தாக்கைப் பற்றி வரைபடத்தில் அவரும் சரியாகக் குறித்து வைக்கவும் தவறிவிட்டார்.

ஆனால் ஓர் அழகிய பச்சைப் பிருந்தாவனம் இருக்கிறது என்று உலகத்திற்கு முதன் முதலில் சொன்னவர் சர் வில்லியம் கேமரன் தான். அதனால் அவரை மலேசியர்கள் மறக்கவில்லை. அவருடைய பெயரையே அந்த மலைக்கு வைத்து இன்று வரை அழகு பார்க்கிறார்கள். சரி. விஷயத்திற்கு வருவோம்.

அதோடு கேமரன் மலையை ஆங்கிலேயர்கள் மறந்துவிட்டார்கள். பாவம் அவர்கள். உள்நாட்டில் மலாயா மாநிலங்களை வளைத்துப் போட வேண்டும். கிடைத்ததைச் சுரண்டிக் கப்பல் ஏற்ற வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள்.

அதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. அப்புறம் எப்படி அவர்களுக்கு கேமரன் மலை நினைவுக்கு வந்து இருக்கும். சொல்லுங்கள்…

சர் பிரான்சிஸ் லைட்


ஆங்கிலேயர்கள் குளிர்ப் பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள். கோடை காலங்களில் ஓய்வு எடுத்துப் பழக்கப் பட்டவர்கள். ஆக வெப்ப மண்டலத்தில் இருந்த மலாயாவில் அவர்கள் ஓய்வு எடுக்க குளிரான மலைப் பகுதிகளில் தேவைப் பட்டன.

அந்த வகையில் 1788-இல் பினாங்கு மலையில் ஒர் இடம் கிடைத்தது. சர் பிரான்சிஸ் லைட் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே. அவர்தான் பினாங்கு மலையில் ஒரு குழுவுடன் முதன்முதலாக ஏறியவர். உச்சியில் ஒரு கொடிக் கம்பத்தை நட்டுவிட்டு வந்தவர். அப்புறம் வந்த ஆங்கிலேயர்கள் உச்சி மலைக்கு ஒரு கம்பிச் சடக்கைப் போட்டார்கள். உச்சியில் போய் குடிசைகளைப் போட்டுக் குளிர் காய்ந்தார்கள்.

அதன் பின்னர் தைப்பிங் மாக்ஸ்வல் ஓய்வுத்தளம் 1884-இல் உருவாக்கப் பட்டது.  அடுத்து பிரேசர் மலை. மலாயா ரப்பரின் தந்தை என்று பெருமையாக அழைக்கப்படும் எச். என். ரிட்லி அவர்களால் பிரேசர் மலையில் 1897-இல் ஓய்வுத் தளம் அமைக்கப் பட்டது.

இங்கே ஒரு சின்னச் செருகல். கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும். பிரேசர் மலையைக் கண்டுபிடித்தது என்னவோ லூயி ஜேம்ஸ் பிரேசர் (Louis James Fraser) என்பவர்தான். அவருடைய பெயர்தான் வைக்கப்பட்டும் இருக்கிறது. இருந்தாலும் எச்.என். ரிட்லிதான் அந்த மலைக்குப் பெருமை சேர்த்தவர். அதை நாம் மறந்துவிடக் கூடாது.

பிரேசர் மலை வரலாறு

அவர் மட்டும் இந்த நாட்டிற்கு வராமல் இருந்து இருந்தால் தமிழர்களும் இந்த நாட்டிற்கு வந்து இருக்க முடியாது. தென்னிந்தியாவில் இருந்து தமிழர்களை மலாயாவுக்கு கொண்டு வர பிள்ளையார் சுழி போட்டவரும் அதே அந்த எச்.என். ரிட்லி தான்.  மலேசியத் தமிழர்கள் போற்ற வேண்டிய மனிதர். எச்.என்.ரிட்லி ரப்பரின் மூலமாக மலேசியாவை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.


பிரேசர் மலையில் ஒரு பெரிய வரலாறே புதைந்து கிடக்கிறது. இப்போதைக்கு ஒரு சின்னத் தகவல். 1951 அக்டோபர் மாதம் 6ஆம் தேதி மலாயாவில் அவசரகாலம் நடைமுறையில் இருந்த போது நடந்த நிகழ்ச்சி. அப்போது மலாயாவின் உயர் ஆணையராக இருந்த சர் ஹென்றி கர்னி, பிரேசர் மலைக்குப் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது மலாயாக் கம்யூனிஸ்டுகளால் சுடப் பட்டார்.

மலாயாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்களில் மிக மிக மரியாதைக்கு உரியவர் யார் என்றால் அவர்தான் இந்த சர் ஹென்றி கர்னி. அவருடைய பெயரில் மலேசியாவில் பல சாலைகள் பல இடங்கள் உள்ளன.

அவருடைய கல்லறைகூட கோலாலம்பூர், ஜாலான் செராஸ் கிறிஸ்துவ மயானத்தில் இருக்கிறது. ஓய்வு கிடைத்தால் போய்ப் பார்த்து மரியாதை செய்து விட்டு வாருங்கள். கேமரன் மலையின் தெரியாத ரகசியங்கள் என்று எழுதப் போய் எங்கு எங்கோ போய்விட்டேன்.

பினாங்கு கொடிமலை

ஆக இந்தப் பினாங்கு கொடிமலை, பிரேசர் மலை, மேக்ஸ்வல் மலை போன்ற ஓய்வுத் தளங்களில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. அதனால் இடப் பற்றாக்குறையும் ஏற்படத் தொடங்கியது. இந்தக் கட்டத்தில் பிரேசர் மலைக்குப் பதிலாக வேறு ஒரு மலைப் பிரதேசத்தை ஆங்கிலேயர்கள் தேடிக் கொண்டு இருந்தனர்.

பிரதான ஓய்வுத் தளமாக இருந்த பிரேசர் மலையில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதே அதற்கு மூல காரணம் ஆகும். தவிர மனித மனங்களைப் பெரிதாக ஈர்க்கும் வகையில் பிரேசர் மலையில் சிறப்பாக எதுவும் அமையவில்லை.

நாற்பது ஆண்டுகள் கழித்து சர் ஜார்ஜ் மேக்ஸ்வல் என்பவர் கேமரன் மலைப் பகுதிக்குச் சென்றார். இந்த ஜார்ஜ் மேக்ஸ்வல்தான் தைப்பிங் நகரில் மேக்ஸ்வல் மலையைக் கண்டுபிடித்தவர் ஆகும்.

கேமரன் மலையில் அவர் கண்ட இயற்கையின் அழகைப் பற்றி ஆங்கிலேய அரசு நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அந்தக் காலக் கட்டத்தில் பேராக் மாநிலத்தின் ஆங்கிலேய ஆளுநராக சர் ஹியூ லோ என்பவர் இருந்தார். கேமரன் மலையைப் பற்றி கேள்விப்பட்ட அவர் அதை விரிவுபடுத்த ஆசைப் பட்டார்.

1926-ஆம் ஆண்டில் தாப்பாவில் இருந்து கேமரன் மலைக்கு ஒரு சாலையை அமைக்க திட்டம் வகுத்தார்கள். அதற்கு அப்போதே பத்து மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப் பட்டது. இப்போதைய கணக்குப்படி முன்னூறு மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டி நிற்கும். நான் சொல்வது 1920-ஆம் ஆண்டுகளில் நடந்த கதை.

இந்திய மன்மத ராசாக்கள்

போக்டென் பிரிஸ்பர்ன் கம்பெனி (Messrs. Fogden, Brisbane and Company) எனும் நிறுவனத்திற்கு 250,000 டாலர்கள் முன்பணம் வழங்கப் பட்டது. 1928 ஜனவரி முதல் தேதி சாலை அமைப்புப் பணிகள் தொடங்கின.

அது ஒரு சவால்மிக்க நிர்மாணிப்புப் பணி ஆகும். குதிரை அல்லது மாட்டு வண்டிகளில், தளவாடப் பொருட்கள் கேமரன் மலைக்குக் கொண்டு செல்லப் பட்டன. பின்னர் நீராவி இயந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன.

ஒவ்வொரு நாளும் 500 லிருந்து 3000 பேர் வேலை செய்தனர். ஏறக்குறைய 375 பேர் மலேரியா காய்ச்சலினால் இறந்து போனார்கள். ஒரு சிலர் பூர்வீகப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு காட்டுக்குள் காணாமல் போயினர். முக்கால்வாசி பேர் நம்முடைய இந்திய மன்மத ராசாக்கள்.

எது எப்படியோ காட்டுக்குள் போன நம் ராசாக்கள் அங்கே ஒரு புதிய சமுதாயத்தையே உருவாக்கி இருக்கிறார்கள். அதுவரை பாராட்டுவோம். அவர்களின் வாரிசுகள் சிலரை ரிங்லெட் நகரில் இன்றும் பார்க்கலாம். முகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும். இந்திய லாவண்யம் ’பளிச்’ சென்று தெரியும்.

அதற்கு அப்புறம் மூன்று ஆண்டுகளில் கேமரன் மலைக்குச் சாலை அமைக்கப்பட்டது. அடுத்து ரிங்லெட்டில் இருந்து தானா ராத்தாவிற்கு சாலை அமைத்தார்கள். அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் பிரிஞ்சாங் வரை சாலை அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர்களும் சீனர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு கேமரன் மலையில் வீடுகள் பங்களாக்களைக் கட்டிக் கொண்டார்கள்.

1929-இல் போ தேயிலைத் தோட்டம் உருவானது. அப்புறம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்றைக்கு உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. 2006-இல் சிம்பாங் பூலாய் பகுதியில் இருந்து கம்போங் ராஜாவிற்குப் போக ஒரு நவீன விரைவு சாலையையும் அமைத்து விட்டார்கள்.

கேமரன் மலையைக் காப்பாற்றுவோம்

உலகின் எட்டாவது அதிசயமாக இருந்த கேமரன் மலையை இப்போது எந்த இடத்தில் வைப்பது என்றுதான் தெரியவில்லை. விவசாயம் என்கிற பேரில் காடுகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டார்கள்.

அழகு அழகான பறவைகளை எல்லாம் விரட்டித் துரத்தி விட்டார்கள். துள்ளி விளையாடிய புள்ளிமான்கள், சருகுமான்களை எல்லாம் ‘அட்ரஸ்’ இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். ஆடு மாடுகளைப் போல சுற்றித் திரிந்த புலிகளை எல்லாம் வறுத்து எடுத்து ட்டார்கள். அடுத்து மனிதர்கள்தான் பாக்கி.

கேமரன் மலை இந்தியர்கள் ’கேமரன் மலையைக் காப்பாற்றுவோம்’ எனும் இயக்கத்தைத் தொடங்கி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாகச் செய்தும் வருகிறார்கள். பாராட்டுவோம்.

பகாங் மாநில அரசும் இயற்கைப் பாதுகாப்புகளுக்காக நிறைய மான்யங்களை ஒதுக்கி இருக்கிறது. வெள்ளம் வந்து வீட்டு வாசல் கதவைத் தட்டிய பிறகு இனிமேல் காடுகளை அழிக்கக் கூடாது என்று தடாலடியான சட்டத்தையும் கொண்டு வந்து இருக்கிறது. பாராட்டுகள்!

இயற்கையைப் பாதுகாப்பதில் இந்தியர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர் என்று ’கேமரன் மலையைக் காப்பாற்றுவோம்’ இயக்கத்தின் முன்னோடியான சிம்மாதிரி கூறுகிறார்.

கேமரன்மலையைப் பாதுகாக்கச் சொல்லி இவரும் பத்திரிகைகளுக்கு நிறைய செய்திகளை அனுப்பி வருகின்றார். விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றார். அந்த வகையில் சிம்மாதிரி, வேலு போன்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்வோம்.

அடுத்து… நினைவு திரும்பாமல் இறந்து போன சர் வில்லியம் கேமரனின் நினைவாக அவர் கண்டுபிடித்த அந்த மலைக்கு கேமரன் மலை என்று அவருடைய பெயரையே வைப்பார்கள் என்று அவரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

கேமரன் மலையில் வெள்ளம்

அதே சமயத்தில் தான் கண்டுபிடித்தக் காடுகள் இந்த மாதிரி அழிக்கப்படும். அந்தக் காடுகளில் திடீர் வெள்ளம் வரும். சிம்மாதிரி என்கிற ஒரு தமிழர் வருவார். பக்கம் பக்கமாய் எழுதுவார் என்று சர் வில்லியம் கேமரனும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். பாவம் சர் வில்லியம் கேமரன். அதே சமயத்தில் அவர் நினைவாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சிம்மாதிரிக்கு மறுபடியும் நன்றிகள்.

யானை மீது ஏறிப் போய் கஷ்டப்பட்டு கேமரன் மலையைக் கண்டுபிடித்த அவரை நினைத்துப் பார்க்கையில் ரொம்பவும் வேதனையாக இருக்கிறது. கடைசியாக ஒன்று. மனதில் படுகிறது. சொல்கிறேன்.

நம்ப நாட்டு அழகை நாம்தான் முதலில் ரசிக்க வேண்டும். அப்புறம் தானே மற்றவர்களும் வருவார்கள் பார்ப்பார்கள் ரசிப்பார்கள். கேமரன் மலையில் வெள்ளம் வந்தது உண்மைதான்.

எங்கே தான் பிரச்சினை இல்லை. சொல்லுங்கள். அதற்காக கேமரன்மலையை ஒதுக்கி வைத்துவிட முடியுமா. அரிசி வேகவில்லை என்பதற்காக சோற்றுப் பானையைத் தூக்கி வீசிவிட முடியுமா. சொல்லுங்கள்.

மறுபடியும் சொல்கிறேன். போர்னியோ காடுகளில் எலியை பிடிக்கப் போகிறீர்களோ இல்லை பாப்புவா நியூகினி காடுகளில் புலியை பிடிக்கப் போகிறீர்களோ. பிரச்சினை இல்லை. வீட்டில் அழகான கிளியை வைத்துக் கொண்டு வெளியே மரத்திற்கு மரம் தாவும் ஜீவன்களைத் தேடிப் போவது எல்லாம் நன்றாக இல்லை!

நம்ப வீட்டுக் கிளியை முதலில் ரசிப்போம். முதலில் அதைத் தூக்கி வைத்து துதி பாடுவோம்! அப்புறம் மாற்றான் வீட்டு மல்லிகைக்கு மணம் இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்வோம்.