காஷ்மீர் சர்ச்சையில் மலேசியாவின் பனை எண்ணெய் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காஷ்மீர் சர்ச்சையில் மலேசியாவின் பனை எண்ணெய் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

04 ஜனவரி 2020

காஷ்மீர் சர்ச்சையில் மலேசியாவின் பனை எண்ணெய் - 1

தமிழ் மலர் - 03.01.2020

இந்தியா வாழ் மக்களின் அன்றாட உணவுப் பொருட்களில் பாமாயில் எனும் சமையல் எண்ணெய் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெய்; கடலை எண்ணெய்; சூரியகாந்தி எண்ணெய்; ஆலிவ் எண்ணெய்; மரக்கறி எண்ணெய்; எள்ளெண்ணெய் (நல்லெண்ணெய்) வகைகளின் விலை சற்றே அதிகம். உற்பத்தியும் மிதமாகவே உள்ளது. 




அதற்குப் பதிலாக மலேசியாவின் பனை எண்ணெயை (Palm oil) அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். பாமாயில் எனும் சொல் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப் படுவதால் இந்தக் கட்டுரையில் பாமாயில் எனும் சொல்லையே பயன்படுத்துகிறோம்.

உலகிலேயே அதிகமாகச் சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஆண்டுதோறும் சமையலுக்கும் மற்ற பயன்பாடுகளுக்கும் 9 மில்லியன் டன் பனை எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்தோனேசியா; மலேசியா ஆகிய இந்த இரு நாடுகளில் இருந்து தான் அதிமாகவே இறக்குமதி செய்கிறது.

2019 ஜனவரி - அக்டோபர் மாதங்களில், 4 மில்லியன் டன் மலேசிய பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்து இருக்கிறது. அந்த வகையில் மலேசியாவின் பாமாயிலை அதிகமாக வாங்கிய நாடு இந்தியாவாகும். 



மலேசியாவில் இந்தியா இறக்குமதி செய்த பாமாயில் புள்ளி விவரங்களைத் தருகிறேன். 2018-ஆம் ஆண்டைவிட 2019-ஆம் ஆண்டில் 100% கூடுதலாக மலேசியாவின் பாமாயிலை இந்தியா வாங்கி இருக்கிறது.

உலக நாடுகளுக்கு மலேசியா எண்ணெய் பனை ஏற்றுமதி (இந்தியா மட்டும்)

(மெட்ரிக் டன்கள்)

நாடு    ஜனவரி – நவம்பர் 2019   

இந்தியா    4,270,864

ஜனவரி – நவம்பர் 2018

இந்தியா    2,229,830



இந்தியாவின் சமையல் எண்ணெய் வகையில் அதிக அளவில் இறக்குமதி செய்யப் படுவது பாமாயில் ஆகும். மலேசியாவில் இருந்துதான் அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யப் படுகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு, பாமாயில் சார்ந்த  பொருட்கள் மட்டும் மலேசியாவில் இருந்து 163 இலட்சம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் மலேசியாவின் எண்ணெய் வர்த்தக நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்து வந்தது. இப்போது இல்லை. அந்த இடத்தை வேறு ஒரு நாடு எடுத்துக் கொண்டு விட்டது. மன்னிக்கவும்.

இந்தியாவின் காஷ்மீர் விவகாரத்தில் மலேசியா தலையிட்டதால் இரு நாடுகளின் வாணிக உறவுகள் சற்றே பாதிப்பு அடைந்து உள்ளன. சரி செய்யக் கூடிய உறவுகள் தான். சமாதானமாகப் பயணிக்க வேண்டிய உறவுகள் தான். 




இந்தியாவும் மலேசியாவும் பல நூற்றாண்டுகளாக நட்பு நாடுகளாகப் பயணித்து இருக்கின்றன. பற்பல பின்னடைவுகளைச் சந்தித்து இருகின்றன. இருந்தாலும் நல்ல உறவுடன் தோழமை பாராட்டி வந்து உள்ளன. எதிர்காலத்தில் நல்லதே நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.

கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது (விதி எண் 370). மேலும் காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டன.   

இதனால் காஷ்மீரில் கட்டுக்கு அடங்கா கலவரங்கள். அவற்றைத் தடுக்க அங்கே கடுமையான கட்டுப்பாடுகள். இது பாகிஸ்தானுக்குப் பிடிக்கவில்லை. மனித உரிமைகள் மீறப் படுவதாக உலக நாடுகளிடம் புகார் செய்தது. பல நாடுகள் பலவிதமான கருத்துகளை முன் வைத்தன. மலேசியாவும் தன் கருத்தை முன் வைத்தது.




ஐ.நா. பொதுக் குழுவில் அதைப் ப்ற்றி பேசிய பிரதமர் மகாதீர், “இந்தியா காஷ்மீர் மீது படை எடுத்து இருக்கிறது. இராணுவத்தின் மூலமாகக் காஷ்மீரை ஆக்கிரமித்து இருக்கிறது“ என்றார். பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து..  

மகாதீரின் அந்த ஐ.நா. பேச்சு இந்தியாவில் பெரிய ஓர் அதிருப்தி அலையை ஏற்படுத்தி விட்டது. ஏற்கனவே துருக்கி நாடு பாகிஸ்தானுக்கு இதே மாதிரி ஆதரவாக கருத்து தெரிவித்தது. அதனால் இந்தியா ஆத்திரம் அடைந்தது. அதைத் தொடர்ந்து துருக்கி நாட்டுடன் போர்க் கப்பல்கள் கட்டும் ஒப்பந்தத்தையும் உடனடியாக ரத்து செய்தது.

மகாதீரின் கருத்து இந்தியாவிற்கு எப்படி ஓர் அதிருப்தியை ஏற்படுத்தியதோ அதே போல மலேசியாவிற்கும் ஓர் அதிருப்தியான நிலைமை ஏற்பட்டது என்று சொல்லலாம்.

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவை குறைக்கும் வழிமுறைகளை இந்தியா ஆராய்ந்து வருவதாகவும் ஊடகத் தகவல்கள் கசிந்தன.




ஒரு வகையில் இந்தக் காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான மறைமுக வர்த்தகப் போரின் தொடக்கப் புள்ளி என்றுகூட சொல்லலாம்.

அந்த வகையில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலைக் குறைக்க இந்தியா திட்டம் வகுத்தது. அதற்குப் பதிலாக இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யலாம் என முடிவும் செய்தது.

இந்திய அரசாங்கத்தின் அந்தத் திடீர் முடிவுக்கு இந்திய எண்ணெய் வர்த்தகர்கள் சங்கம் ஆதரவும் அளித்தது என்பதை நினைவில் கொள்வோம்.

அது இந்தியா கொடுக்கும் பதிலடி என்று ஒரு தரப்பு கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், 2019 அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் மலேசியாவில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய வர்த்தகர்கள் தயக்கம் காட்டினர்.




மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கான இறக்குமதி வரியை இந்தியா உயர்த்தலாம் என்று இந்திய வர்த்தகர்கள் அனுமானித்ததே அதற்குக் காரணம்.

அது மட்டும் அல்ல. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்ற மற்ற பொருட்களின் இறக்குமதி அளவையும் குறைப்பதற்கு இந்தியா திட்டம் வகுத்ததாகவும் சொல்லப் பட்டது.

இந்த நிலையில் மகாதீரும் விட்டுக் கொடுக்கவில்லை. காஷ்மீர் விவகாரம் குறித்த நிலைப்பாட்டில் இருந்து அவர் பின்வாங்கவும் இல்லை.

ஒரு கட்டத்தில் மகாதீர் சொன்னார்: இந்தியாவும் மலேசியாவுக்குப் பற்பல பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இது ஒரு வழி வர்த்தகம் அல்ல. இரு வழி வர்த்தகம்" என்றார்.




2019 அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி இந்திய எண்ணெய் வர்த்தகர்கள் சங்கம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படும் மலேசியாவில் இருந்து பாமாயில் வாங்கப் போவது இல்லை என அறிவித்தது.

சர்ச்சைக்குரிய காஷ்மீர் தொடர்பாக மலேசியாவின் பாமாயில் வர்த்தகம் ஓர் எதிர்பாராத விபத்தாக மாறியது என்றும் சொல்லலாம்.

அரசியல் என்றால் ஆயிரம் இருக்கும். காஷ்மீர் விவகாரத்தில் மகாதீர் தன்னுடைய நிலைப்பாட்டைக் கூறினார். அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை என மலேசிய ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் நாடு. அந்த வகையில் மகாதீர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்ததில் தப்பு இல்லை என்றும் வாதிட்டார்கள்.




இதனால் இந்திய இணைய ஊடகவியலாளர்கள் கோபம் அடைந்தார்கள். மலேசியாவையும் மலேசிய நாட்டுப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று இணையப் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவைப் புறக்கணிக்குமாறு மலேசிய இணைய ஊடகவியலாளர்களும் களம் இறங்கினார்கள். சமூக வலைத் தளங்களில் தங்களின் தாக்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

இப்படிப்பட்ட இணையப் பிரசாரங்களினால் மலேசியாவுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படப் போவது இல்லை. தவிர இந்தியத் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்றும் மகாதீர் கருத்து தெரிவித்தார்.




இந்தியா மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சமையல் எண்ணெயில் மூன்றில் இரண்டு பங்கு பாமாயில் எனும் பனை எண்ணெய். மலேசியாவில் மட்டும் மாதம் தோறும் 4 இலட்சத்து 33 ஆயிரம் டன் பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்து வந்து உள்ளது.

அதே சமயத்தில் இந்தியாவில் இருந்து பெட்ரோலியத் திரவப் பொருட்கள், இறைச்சி, உலோகம், மருத்துவ இரசாயனப் பொருட்களை மலேசியா இறக்குமதி செய்து வந்து உள்ளது. இந்த இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போரைப் பற்றி நாளையும் தெரிந்து கொள்வோம்.

(தொடரும்)

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
03.01.2020

1. http://mpoc.org.my/monthly-palm-oil-trade-statistics-2019/

2. https://www.bbc.com/tamil/global-50061544

3. https://www.patrikai.com/indian-oil-merchants-decided-to-boycott-purchase-of-palm-oil-from-malaysia/