கோகினூர்_4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோகினூர்_4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 செப்டம்பர் 2009

கோகினூர் வைரத்தின் கொடுமைகள் - பகுதி4

சொல்லி வைத்து ஆறே மாதங்களில் தன் படையைத் திரட்டிக் கொண்டு இந்தியாவிற்குள் நுழைந்தான். கஜ்னி, காபுல், பெஷவார், லாகூர் போன்ற மொகலாய அரண்கள் அத்தனையும் நாடிர் ஷாவின் கால்களில் வந்து விழுந்தன. உலகமே அதிசயமாய்ப் பார்த்த பாபர், அக்பர், ஷாஜகான், அவுரங்கசிப் போன்றவர்கள் கட்டிக்காத்த டில்லி சாம்ராஜ்யம் சுக்கு நூறாக    நொறுங்கிப் போனது.

1739 மார்ச் மாதம் 9ஆம் தேதி மொகலாய சாம்ராஜ்யம் மொத்தமாகச் சரண் அடைந்தது. அப்போது நாசிர் முகமது என்பவர் மொகலாய அரசராக இருந்தார். அவரிடம் 25 இலட்சம் நஷ்டயீடு கேட்டான் நாடிர் ஷா.

கொடுப்பதற்கு ஒன்றுமேயில்லை. இருந்தால்தானே கொடுப்பதற்கு. கஜானா காலி. என்ன  செய்வது. பல வருடங்களுக்கு முன்னாலேயே கோகினூர் வைரத்தைப் பற்றி  கேள்விபட்ட நாடிர் ஷா தனக்கு அந்த வைரம்தான் வேண்டும் என்று பிடிவாதமாக நின்றான்.


தன்னிடம் இல்லை என்று அரசன் நாசிர் முகமது பொய் சொல்லவே அமைதியாகிப் போனான் நாடிர் ஷா. ஆர்ப்பரிக்கவில்லை. ஆனால், அவனுக்குத் தெரியும் கோகினூர் வைரம் அங்கேதான் இருக்கிறது என்று. வைரத்தை எப்படி வரவழைப்பது என்று திட்டம் போட்டான் நாடிர் ஷா.

கோகினூர் வைரத்தின் மறைவிடத்தைத் தேடிக் கொண்டிருக்கும் சமயத்தில் நாடிர் ஷாவின்  வீரர்களுக்கும் மொகலாய உள்ளூர் மக்களுக்கும் சின்ன கலகலப்பு ஏற்பட்டது. இந்தக் கலகலப்பு கடைசியில் பெரிதாகி சில வீரர்கள் இறந்தும் போனார்கள்.

நாடிர் ஷாவுக்கு வேறு துப்பாக்கிச் சூடு. ஆத்திரமடைந்த நாடிர் ஷா டில்லியையே    கொள்ளை அடித்துக் கொளுத்தும்படி கட்டளையிட்டான். இந்தச் சம்பவம் இந்திய வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி.
ஈரானிய வீரர்கள் பொதுமக்களைக் கண்ட கண்ட இடங்களில் வெட்டிக் கொன்றனர். வீடுகள் எரிக்கப்பட்டன. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். குழந்தைகளை மேலே தூக்கிப் போட்டு கூர்வாள்களினால் செருகினர். ஒரே நாளில் 30000 உயிர்கள் பலி. அத்துடன் கலவரத்தை நிறுத்திக் கொண்டு ஈரானுக்குத் திரும்பிப் போக தன் படைகளுக்கு ஆணை பிறப்பித்தான் நாடிர் ஷா.

கடைசி நேரத்தில் மொகலாய பாரம்பரிய மயில் சிம்மாசனம் நாடிர் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், கோகினூர் வைரம் அதில் இல்லை. மொகலாய மன்னர் நாசிர் முகமதுவின் தலைப்பாகைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அது பரம இரகசியம். இருந்தாலும் அந்தப்புரத்தில் வேலை செய்து வந்த திருமகள் ஒருத்தி, நாடிர் ஷாவிடம் அந்த இரகசியத்தைச் சொல்லி விட்டாள். ஈரானுக்குத் திரும்பிச் செல்லும் போது தன்னையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று பேரம் பேசிக் கொள்ளப்பட்டது.

விடைபெறும் கடைசி நாளன்று நாடிர் ஷா ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்தான். அந்த விருந்தில்  நாசிர் முகமதுவும் கலந்து கொண்டார். மொகலாய சாம்ராஜ்யத்தை  நாசிர் முகமதுவிடமே ஒப்படைக்கிறேன் என்று சொன்னான் நாடிர் ஷா. அதன் அடையாளமாக தத்தம் தலைப்பாகைகளை மாற்றிக் கொள்வோம் என்று சொல்லியவாறு தன்னுடைய தலைப்பாகையைக் கழற்றி அவரிடம் நீட்டினான்.

நாசிர் முகமதுவும் வேறு வழியின்றி தன் தலைப்பாகையைக் கழற்றி நாடிர் ஷாவிடம் கொடுத் தார். அதற்குள்தான் கோகினூர் வைரம் மறைக்கப்பட்டு இருந்தது. அத்துடன் கோகினூர் வைரமும் தலை மாறிப் போனது. விருந்து முடிந்த பின்னர் தன்னுடைய அறைக்குச் சென்ற நாடிர் ஷா தலைப்பாகையைப் பிரித்துப் பார்த்தான்.

அதனுள் ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த ஒளி மின்னலாய்ப் பளிச்சிட்டது. தன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை. 'கோகினூர்' என்று உரக்கக் கத்தினான். பாரžக மொழியில் கோகினூர் என்றால் 'மலையைப் போன்ற ஒளி' என்று அர்த்தம். அதன் பின்னர்தான் அதற்கு கோகினூர் என்று பெயர் வந்தது. ஆக, கோகினூர் வைரத்திற்கு பெயர் வைத்தது நாடிர் ஷா எனும் ஆடு மேய்த்த சிறுவன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

நாடிர் ஷா திரும்பிப் போகும் போது கோகினூர் வைரத்துடன் மட்டும் போகவில்லை. கூடவே சில ஆயிரம் இந்தியப் பெண்களையும், அடிமைகளாக சில ஆயிரம் சிறுவர்களையும் கொண்டு சென்றான். அது மட்டும் அல்ல பல ஆயிரம் யானைகள், குதிரைகள், ஒட்டகங்களையும் உடன் கொண்டு சென்றான்.


நாடிர் ஷா ஒரு போர் வீரன் என்று சொன்னால் தப்பில்லை. ஆனால் நாட்டு மக்களைச் சரியாகக் கவனிக்கவில்லையே. அதிகமாக வரி வசூலித்தான். வரி கட்டத் தவறியவர்களின் தலைகளை வெட்டி முச்சந்திகளில் வைத்தான். அவனுக்கு மொத்தம் 33 மனைவிகள். எப்போதும் அவனுடைய தாடிக்கு கறுப்பு மை அடித்துக் கொண்டு இளமையாகக் காட்சி அளித்தான்.




நாடிர் ஷாவின் அட்டகாசங்களைத் தாங்க முடியாமல், அவன் தூங்கும் போது அவனுடைய பாதுகாவலர்களே கழுத்தை அறுத்து கொன்று விட்டார்கள். நாடிர் ஷாவின் சகாப்தம் முடிந்தது. அதன்பின்னர், கோகினூர் வைரம் ஈரானில் கொஞ்ச காலம் இருந்தது. ஏழெட்டு ஆண்டுகள்.


அதன்பிறகு ஆப்கானிஸ்தானிய அரசன் Ahmed Shah Abdali என்பவரின் கைக்கு வந்தது. இந்த அரசன் ஈரான் மீது தாக்குதல் நடத்தி கோகினூர் வைரத்தைக் கவர்ந்து காபூலுக்கு கொண்டு வந்தான். ஏறக்குறைய 80 ஆண்டு காலம் ஆப்கானிஸ்தானில் இருந்தது.


கோகினூர் வைரம் காபூலில் இருக்கும் போது அங்கேயும் ஓர் ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. அப்போது ஆட்சியில் இருந்த ஆப்கானிஸ்தானிய அரசன் Shah Shuja-ul-Mulk கோகினூர் வைரத்தை எடுத்துக் கொண்டு பாகிஸ்தான் லாகூருக்கு ஓடி வந்துவிட்டான். பின்னர் அந்த வைரம் பஞ்சாப் மகாராஜா ரஞ்சிட் சிங்கிடம் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது.

ரஞ்சிட் சிங் அதற்குப் பதிலாக கிழக்கு இந்தியக் கம்பெனியின் படைகளை ஆப்கானிஸ்தான் பக்கம் திருப்பிவிட்டார். கிழக்கு இந்தியக் கம்பெனியினர் சண்டை போட்டு ஆப்கானிஸ்தானை அரசன் ஷா சுஜாவிற்கு மீட்டுக் கொடுத்தனர். சரி!

எங்கே எங்கேயோ போய் கடைசியில் கோகினூர் வைரம் இந்தியாவிற்கே வந்து சேர்ந்தது. 1839ல் மரணப்படுக்கையில் இருந்த ரஞ்சிட் சிங் ஓர் உயில் எழுதினார். அதன் பிரகாரம் கோகினூர் வைரம் ஒரிசாவிலுள்ள ஜெகநாத் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட வேண்டும் என்று எழுதினார். ஆனாலும், சொன்னபடி கோகினூர் வைரம் ஜெகநாத் கோயிலுக்கு வழங்கப்படவில்லை.


இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி வந்ததும் கோகினூர் வைரத்தை இங்கிலாந்திற்கு கொண்டு போய் விட்டார்கள். எப்படி? இறந்து போன ரஞ்சிட் சிங்கின் மகன் துலிப் சிங்கிற்கு வயது 13. அவன் தான் கோகினூர் வைரத்தை விக்டோரியா மகாராணியிடம் கொடுக்க வேண்டும் என்று அவனை இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்றார்கள்.


அந்தச் சிறுவன் மூலமாக வைரம் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப் பட்டது. அங்கே 186 காரட்டாக இருந்த வைரம் 105 காரட்டாகப் பட்டை தீட்டப்பட்டது. இங்கிலாந்து மகாராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டது. மேலும் 2000 சின்னச் சின்ன வைரங்களும் சேர்க்கப்பட்டன.

மகாராணிகள் அலெக்சாந்திரா, மேரி அணிந்த அந்தக் கிரீடத்தை இப்போது எலிசபெத் மகாராணியார் அணிந்திருக்கிறார். இப்போது பல நாடுகள் கோகினூர் வைரத்தை உரிமை கோருகின்றன. 1976ல் முன்னாள் பாகிஸ்தானிய பிரதமர் பூட்டோ பிரிட்டிஷ் பிரதமர் ஜிம் காலகானிடம் தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டார்.


இந்தியாவும் உரிமை கோருகிறது. இந்தியாவிற்கு வைரத்தை எடுத்துச் செல்லும்போது ரஞ்சிட் சிங்கின் மகனுக்கு 13 வயது. அந்த வயதில் கொடுக்கப்படும் சம்மதம் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று இந்தியா சொல்கிறது. ஏற்கனவே தலிபான் அரசாங்கம் உரிமை கேட்டது. நல்ல தகவல் இல்லை.

எது எப்படியோ அவ்வளவு சீக்கிரத்தில் இங்கிலாந்து அரசாங்கம் மனம் இளகி கோகினூர் வைரத்தை விட்டுக் கொடுக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இன்னும் பல கோடி ஆண்டுகள் ஆனாலும் கோகினூர் வைரம் கதை சொல்லிக் கொண்டிருக்கும். நாம்தான் கதை கேட்க இருக்க மாட்டோம்.