மொரிசியஸ் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொரிசியஸ் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 மார்ச் 2017

மொரிசியஸ் தமிழர்

மொரிசியஸ் (Mauritius) ஆப்பிரிக்கக் கண்டத்திற்குத் தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. மடகாஸ்கர் தீவுக்கு 900 கி.மீ. கிழக்கே அமைந்து உள்ளது

மொரிசியஸ் தீவு நீண்ட காலமாக அறியப் படாமலும் மனிதவாசம் இல்லாமலும் இருந்தது. முதன்முதலில் மத்திய காலப் பகுதியிலே அராபியக் கடலோடிகள் இங்கு வந்தனர்.


தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றி உள்ளனர். தமிழர்கள் பலர் அமைச்சர்களாகவும் நீதிபதிகளாகவும் பதவி வகித்து உள்ளனர். சில பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாகக் கற்பிக்கப் படுகிறது. 

அண்மையில் தமிழ்நாடு அரசு இவர்களின் தமிழ்க் கல்விக்கு உதவி செய்ய முன்வந்தது. இந்த நாட்டின் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.



மொரிசியசில் வாழும் தமிழ் மக்களை மொரிசியஸ் தமிழர் எனலாம். இவர்கள் மொரிசியசின் பல பகுதிகளில் வாழ்கின்றனர். ஏறக்குறைய 75,000 பேர். இவர்கள் தங்களை இந்துத் தமிழர்கள் எனத் தெரிவித்துக் கொள்கின்றனர். இவர்களில் 54,000 பேர் தங்களின் தாய்மொழி தமிழ் எனத் தெரிவித்தனர். 

இவர்களில் 3,650 பேர் மட்டுமே தங்கள் வீட்டில் தமிழை அதிகமாகப் பேசுகின்றனர். மேலும் 3,300 பேர் தமிழும் இன்னொரு மொழியையும் வீட்டில் பேசுகின்றனர்.


தமிழர்கள் திறமை வாய்ந்த உழைப்பாளிகள். அவர்களைக் கௌரவிக்கும் விதமாக மொரிசியஸ் அரசு, மொரிசியஸ் ரூபாய் பணத்தில் தமிழ் எழுத்துக்களை அச்சிட்டு வெளியிடுகிறது. தைப்பூசம், தீபாவளிப் பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. 

பல இன மக்களின் மொழிக் கலப்பால் மொரிசியஸ் கிரியோல் என்னும் மொழி உருவானது. இந்த மொழியின் பல சொற்கள் தமிழில் இருந்து பெறப் பட்டவை.


தங்கள் பண்பாட்டைப் பேணிக் காப்பதற்காகத் தமிழ் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. சன்னாசி, சுப்பிரமணி, பொன்னுசாமி, முத்தையன் ஆகிய பெயர்கள் அதிகம் காணப் படுகின்றன. பன்மொழிச் சூழலில் வளர்ந்தாலும் தமிழிலேயே எழுத்து வழக்கங்கள் மேற்கொள்ளப் படுகின்றன

மொரிசியஸ் ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம், சேனல் 16 என்ற பிரிவில் தமிழில் சேவைகளை வழங்குகிறது. பத்திரிகை என்ற இதழ் தமிழ் மொழியில் கட்டுரைகளை வெளியிடுகிறது. ஒனெக்சு எப்.எம் தமிழ்ப் பாடல்களை ஒலிபரப்புகிறது. அவ்வப்போது தமிழ்த் திரைப்படங்களும் திரையிடப் படுகின்றன. 


பிற வானொலி நிலையங்களும் பகுதி நேரத் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. இந்தியத் தொலைக்காட்சியான பொதிகை டி.வியும் பிற அரசு தொலைக்காட்சிகளும் தமிழில் ஒளிபரப்பு செய்கின்றன. 

பெரும்பாலான தமிழர்கள் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள். முருகன், மாரியம்மன் கோயில்கள் பெருமளவில் உள்ளன.


தைப்பூச நாள் மொரீசிஸ் நாட்டின் தேசிய அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மொரிசியஸ் தமிழ்க் கோயில்கள் கழகம், தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் ஆகியன தமிழர் வாழ்வியலில் இயங்குகின்றன. 

இங்கே ஏறத்தாழ 120 தமிழ்க் கோயில்கள் உள்ளன. இவற்றில் 70 கோயில்கள் முருகனுக்கும், 40 கோயில்கள் அம்மனுக்கும் உரியவை.

ஏறத்தாழ 200 இளநிலைப் பள்ளிகளில் 100 பள்ளிகளில் தமிழ் கற்பிக்கின்றனர். 2013 ஆம் ஆண்டு இலக்குவனார் பெயரில் போர்ட் லூயிசில் தமிழ்ப் பள்ளி தொடங்கப் பட்டுள்ளது. தமிழைப் பல்கலைக் கழகத்தின் வழியாகப் படிக்க இந்திய அரசு உதவி வருகிறது.