பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 செப்டம்பர் 2017

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3

நீல உத்தமனின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா திரிபுவனா (Sri Maharaja Parameswara Tribuwana). கி.பி.1299-ஆம் ஆண்டில் இருந்து 1347-ஆம் ஆண்டு வரை ஸ்ரீ விஜய அரசின் அரசராக நீல உத்தமன் பலேம்பாங்கை ஆட்சி செய்து வந்தார். 


இவருக்கு முன்னர் பலேம்பாங்கை நீல உத்தமனின் தந்தையார் ஆட்சி செய்து வந்தார். அவருடைய பெயர் ஸ்ரீ பிரபு தர்மா சேனா திரிபுவனா (Sri Prabhu Dharma Sena Tribuwana). இவரின் மற்றொரு பெயர் ஸ்ரீ திருமூர்த்தி திரிபுவனா (Sri Trimurti Tribuwana).  நீல உத்தமனின் தாயார் பெயர் ஸ்ரீ திருமூர்த்தி சுந்தரி (Sri Trimurti Sandari).

(சான்று: http://www.royalark.net/Malaysia/malacca2.htm)

பலேம்பாங் தோற்கடிக்கப் பின்னர் நீல உத்தமனின் ஸ்ரீ விஜய அரசக் குடும்பத்தினர் பிந்தாங் தீவில் அடைக்கலம் அடைந்தனர். இந்தப் பிந்தாங் தீவு சிங்கப்பூருக்கு அருகில் இருக்கிறது.
 

அத்துடன் ஸ்ரீ விஜய அரச குடும்பத்தினருடன் பலேம்பாங்கில் இருந்த பல ஆயிரம் மக்களும் பிந்தாங் தீவில் தஞ்சம் அடைந்தனர். அடுத்தக் கட்டமாக நீல உத்தமன், பிந்தாங் தீவில் தற்காலிகமாக ஓர் அரசாட்சியை உருவாக்கிக் கொண்டார். அதற்கு அவரே அரசர் ஆனார்.

(சான்று: Paul Wheatley (1961). The Golden Khersonese: Studies in the Historical Geography of the Malay Peninsula before A.D. 1500. Kuala Lumpur: University of Malaya Press. pp. 82–83.)

இந்தக் காலக் கட்டத்தில் சிங்கப்பூரைத் தெமாகி எனும் ஒரு சிற்றரசர் ஆட்சி செய்து வந்தார். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக் (Temasek). தெமாகி சிற்றரசரைச் சயாம் நாட்டு அரசு ஒரு சிற்றரசராக ஏற்கனவே நியமனம் செய்து வைத்து இருந்தது. அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

1324-இல் நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார். அதனால் நீல உத்தமன் சயாம் அரசின் கோபத்திற்கும் உள்ளானார். இருந்தாலும் நீல உத்தமன் கவலைப் படவில்லை. சிங்கப்பூர் எனும் ஓர் ஊரை உருவாக்கினார்.

சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தது நீல உத்தமன் தான். சிங்கப்பூர் ஓர் ஊர் தான். சின்ன ஒரு மீன்பிடி கிராமம். அப்போது அது ஒரு நகரம் அல்ல. மறுபடியும் சொல்கிறேன். சிங்கப்பூரை உருவாக்கியவர் நீல உத்தமன்.

அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்குச் சிங்கப்பூர் நீல உத்தமனின் கட்டுப்பாட்டிலும் அவருடைய வாரிசுகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. வளர்ச்சியும் பெற்றது.

1366-இல் சீனாவில் இருந்து ஒரு சீனத் தூதர் சிங்கப்பூருக்கு வந்தார். அவர் சீன அரசரின் பிரதிநிதியாகும். அவர் நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டார். அது சயாம் நாட்டிற்கு எதிரான ஒரு செயலாகும்.

நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டது மட்டும் அல்ல, அவருக்கு ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரி புவனா (Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana) எனும் சிறப்புப் பெயரையும் அந்தச் சீனத் தூதர் வழங்கினார். 


(சான்று: John N. Miksic (15 November 2013). Singapore and the Silk Road of the Sea, 1300_1800. NUS Press. p. 154)

சிங்கப்பூரின் புதிய நிர்வாகத்திற்குச் சீனாவின் பக்கபலம் இருப்பதைப் பார்த்த சயாம் கலக்கம் அடைந்தது. அதனால் நீல உத்தமன் மீது தாக்குதல் நடத்த சயாம் அச்சப் பட்டது.

நீல உத்தமனுக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ விக்கிரம வீர ராஜா (Seri Wikrama Wira) என்பவர் சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவர் 1347 லிருந்து 1362 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

அந்தச் சமயத்தில் சிங்கப்பூரின் உள் ஆட்சியில் சில திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன. குடும்பச் சச்சரவுகள் தான் மூல காரணம். அதனால் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா (Sri Rana Wira Karma) என்பவர் சிங்கப்பூரின் ஆட்சிப் பதவியை ஏற்க வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டது.

இவர் 1362 லிருந்து 1375 வரை சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

அதன் பின்னர் சிங்கப்பூரின் அரசராக ஸ்ரீ மகாராஜா (Sri Maharaja) என்பவர் பதவிக்கு வந்தார். இவர் 1375 லிருந்து 1389 வரை சிங்கப்பூரை ஆட்ி செய்தார். இவர் சாங் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும்.

அடுத்து வந்தவர் பரமேஸ்வரா (Parameswara). இவர் சிங்கப்பூரை 1389 லிருந்து 1398 வரை ஆட்சி செய்தார். இவர் தான் மலாக்காவைக் கண்டுபிடித்த பரமேஸ்வரா.

*செஜாரா மலாயு* எனும் மலாய் வரலாற்றுக் காலக் களஞ்சியம், சிங்கப்பூரை உருவாக்கிய நீல உத்தமனை வேறு கோணத்தில் சித்தரிக்கிறது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வரலாற்று அறிஞர்கள் கருத்து கூறுகின்றனர். (The accuracy and historicity of the Malay Annals is in doubt according to historians).
(தொடரும்)