சந்திரமலர் ஆனந்தவேல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திரமலர் ஆனந்தவேல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 ஜூன் 2011

சந்திரமலர் ஆனந்தவேல்



சந்திரமலர் ஆனந்தவேல் மலேசியாவின் காவல் துறையில் உயர்ந்த பதவிகளில் ஒன்றான துணை ஆணையர் பதவியை வகித்த முதல் மலேசியப் பெண்மணி.

அனைத்துலகக் காவல் துறையின் மாநாடுகளில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர். ஐக்கிய நாடுகள் சபை யில் உயர் காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். மலேசியக் காவல் துறைப் பயிற்சிக் கல்லூரியின் முதல் பெண் ஆணையர்.

சந்திரமலர் ’இண்டர்போல்’ எனும் அனைத்துலகப் போலீஸ் படையில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய முதல் மலேசியப் பெண்மணி. நூற்றுக்கணக்கான சிவப்பு விளக்கு மாதர்களை நல்வழி படுத்தியவர்.

ஆயிரக் கணக்கான போதைப் பித்தர்களுக்குச் சீர்திருத்த வழிகளைக் காட்டி அவர்கள் சுயதொழில்களில் ஈடுபட ஊக்குவிப்பு செய்தவர்.


தற்காலிக ஆசிரியர்

சந்திரமலர் ஆனந்தவேல் இலங்கை, யாழ்ப்பாணத்தில் 1941ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் பிறந்த சில நாட்களிலேயே அவருடைய பெற்றோர் மலாயாவுக்குப் புலம் பெயர்ந்து விட்டனர். மலேசியக் குடியுரிமையைப் பெற்றனர். சந்திரமலர் தன் ஆரம்பக் கல்வியை மலாயா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள குளுவாங் நகரில் பெற்றார்.



ஐந்து பெண் பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் இவர் நான்காவது பெண் பிள்ளை. சந்திரமலரின் தகப்பனார் இரயில்வே அலுவலராகப் பணி புரிந்தார். சந்திரமலர் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கினார். சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராகச் சேர்ந்தார்.

அப்போதுள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் ஆசிரியர் தொழிலுக்குள் போவதையே பெருமையாகக் கருதினர். பெண்களுக்கு ஆசிரியர் தொழில்தான் சிறந்தது என்று பெற்றோரும் விரும்பினர்.

பேராக் ஈப்போவில் சந்திரமலர் காவல் அதிகாரி பயிற்சியின் போது 1960 ஆம் ஆண்டு காவல் துறை அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் சேர்வதற்கு சந்திரமலருக்கு இடம் கிடைத்தது.

பேராக் ஈப்போவில் இரண்டு ஆண்டு காலம்


பயிற்சி பெற்றார். பின்னர் பினாங்கு மாநிலக் காவல் துறையில் நன்னடத்தை அதிகாரியாகப் பணியில் சேர்க்கப் பட்டார். அவருக்குக் காவல் துறையின் சீருடைகள் அணியாத உளவுத் துறையில் இடம் கிடைத்தது.

அவருடைய பெரும்பாலான பணிகள் உளவுத் துறையைச் சார்ந்தவை. தற்காப்புக் கலையான ஜூடோவில் சந்திரமலர் தேர்ச்சி பெற்று இருந்ததால் அவருக்கு உளவுத்துறை வழங்கப்பட்டது.


ஜூடோ தற்காப்புக் கலை பயின்றவர்

1960 களில் இவர் பேராக் ஈப்போவில் உள்ள பயிற்சி முகாம்களில் காவல் துறைப் பயிற்சிகளைப் பெற்றார். குறி சுடுதல், தற்காப்புக் கலைகள், கொமாண்டோ பயிற்சிகள் போன்றவை குறிப்பிடத் தக்கவை. இவர் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கினார்.

ஜூடோ இவருக்குப் பிடித்த தற்காப்புக் கலை. ‘ஆண்களால் எதைச் செய்ய முடியுமோ அதைப் பெண்களாலும் செய்ய முடியும்’ என்பது சந்திரமலர் அடிக்கடி சொல்லும் தத்துவ வாசகங்கள்.


ஒரு முறை பினாங்கில் நடந்த நிகழ்ச்சி. போதைப் பொருள் கடத்தல்காரன் ஒருவனை மோட்டார் சைக்கிளில் எட்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு விரட்டிச் சென்றார்.

சந்து பொந்துகளில் எல்லாம் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கடத்தல்காரன் கடைசியாக ஒரு சாலையின் சந்திப்பில் மாட்டிக் கொண்டான். அவனோடு போராட்டம் நடத்தும் போது அவர் தலைக் கவசத் தொப்பியால் தாக்கப் பட்டு காயம் அடைந்தார்.

பினாங்கு ரகசியக் காவல் துறை

அப்படிப் பட்ட சூழ்நிலையிலும் அவனைத் துப்பாக்கியால் சுடாமல் பிடித்தார். அவர் நினைத்து இருந்தால் அப்போதே சுட்டுக் கொன்று இருக்க முடியும். ‘அனாவசியமாக ஓர் உயிர் பலியாகக் கூடாது’ என்பதில் உறுதிப்பாடு கொண்டவர் சந்திரமலர்.

அமெரிக்கா வாஷிங்டனுக்கு போதைப் பொருள் ஒழிப்பு பயிற்சிக்காகச் செல்லும் போது
ஓர் ஆண்டிற்குப் பின்னர், அவர் பினாங்கு ரகசியக் காவல் துறையில் விபாசார ஒழிப்புப் பிரிவின் தலைவராக நியமிக்கப் பட்டார். அனுதினமும் ரகசியக் கும்பல்களுடன் மோதிக் கொள்வது, அவர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுவது வாடிக்கையான விஷயங்கள்.

அவருடைய குழுவில் 13 பேர் இருந்தனர். எட்டு ஆண்கள் ஐந்து பெண்கள். ஒரு நாளைக்கு 15 விபசார விடுதிகளில் அதிரடி நடவடிக்கைகள் நடந்தன.


சில சமயங்களில் அவர் ஒரு விலைமாதைப் போல உடை அணிந்து, ஒரு விலைமாதைப் போலவே இயல்பாக நடித்துத் துப்பு துலக்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்பட்டுள்ளன. கள்ளத் தனமாகச் சூதாடுபவர்களுடன் சேர்ந்து கொண்டு இவரும் சூதாடுவார்.

தங்களுடன் சூதாட்டத்தில் கலந்து கொண்டு இருப்பவர் ஒரு போலீஸ் அதிகாரி எனத் தெரிந்ததும் விளையாட்டாளர்கள் தப்பித்து ஓடுவார்கள். அந்தச் சமயத்தில் வெளியே சீருடை இல்லாமல் இருக்கும் மற்ற அதிகாரிகள் அவர்களை வளைத்துப் பிடிப்பார்கள்.


சீருடை இல்லாத பணி

சில சூதாடிகள் ஜன்னல் வழியாக எகிறிக் குதித்து “Kelinga cha bor lai leow!” என்று சீன மொழியில் கத்திக் கொண்டு ஓடுவார்கள். “இந்தியப் பெண் வந்து விட்டாள்’ என்று பொருள். ‘ஒரு பெண்ணால் தண்டிக்கப் படுவதை எந்த ஓர் ஆணும் விரும்புவது இல்லை.

ஆனால், ஓர் அதிகாரி ஊழல் இல்லாதவர் என்று தெரிந்ததும் குற்றவாளிகள் அந்த அதிகாரிக்கு மதிப்புயையும் மரியாதையையும் கொடுப்பார்கள்’ என்று சொல்கிறார் சந்திரமலர்.


போதைப் பொருளும் விபசாரமும் இணைந்தே செல்பவை. அதனால் விபாசார ஒழிப்பு நடவடிக்கைகளின் போது போதைப் பொருள் ஒழிப்பு அதிகாரிகளையும் உடன் அழைத்துச் செல்வார்.

இளம்பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெண்கள் தங்கி இருக்கும் இடங்களில் காவல் துறையினர் நுழைய முடியாது. ஆனால், போதைப் பொருள் ஒழிப்புச் சட்டத்தின் கீழ அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியும்.


அவ்வாறான நடவடிக்கைச் சமயங்களில் பெரும் அளவில் பணம் பறிமுதல் செய்யப் படும். பறிமுதல் செய்யப் படும் பணம் நேர்மையாகக் கையாளப் பட வேண்டும் என்றும் உறுதியாய் இருப்பார் சந்திரமலர்.

தெருவில் பறந்த பணக் கத்தைகள்

தன் அதிகாரிகளுக்கு எச்சரிக்கைகளும் செய்வார். பினாங்குத் தீவின் பர்மா சாலையில் ‘யுனைடெட் ஓட்டல்’ எனும் தங்கும் விடுதி இருந்தது. அந்த விடுதிக்குள் சந்திரமலரும் அவருடைய அதிகாரிகளும் திடீர்ச் சோதனை மேற்கொண்டனர்.



பினாங்கில் உள்ள பர்மா சாலை
அந்தத் தங்கும் விடுதி கள்ளச் சூதாட்டத்திற்குப் பேர் போன இடம். சூதாட்ட அறைக்குள் நுழைந்ததும் சூதாடிகள் பணத்தையும் சில்லுகளையும் பண அடையாளத் தட்டைகளையும் கழிவறைத் துவாரங்களில் வீசினர். ஜன்னல் வழியாகவும் பணக் கத்தைகளை வீசி எறிந்தனர்.

ஏறக்குறைய 40,000 மலேசிய ரிங்கிட். பணத் தாள்கள் தெருவில் மிதந்து வரவதைப் பொறுக்குவதற்கு சந்திரமலரின் அதிகாரிகள் கீழ் தளத்திற்கு விரைந்தனர்.


பின்னர், சந்திரமலர் தன்னுடைய உளவு அதிகாரிகளை அனைவரையும் பரிசோதனை செய்தார். அவர்களுடைய காலுறைகள், உள்ளாடைகளில் இருந்து பணக் கற்றைகள் பல ஆயிரங்கள் மீட்கப் பட்டன.

தன்னிடம் பணி புரிபவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் சந்திரமலர் உறுதியாக இருந்தார். அவருடைய இந்த மாதிரியான கெடுபிடிகள் தான் பின்னாளில் அவருக்குப் பதவி உயர்வுகள் கிடைப்பதில் சுணக்கத்தை ஏற்படுத்தின.


போதை பித்தர் மீது இரக்கம்

ஒரு முறை ஓர் அமெரிக்க இளம் பெண் டாக்டர் பட்ட ஆய்வுகள் செய்ய பினாங்கிற்கு வந்து இருந்தார். நடுத்தரமான ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். ஒரு திடீர்ச் சோதனையின் போது அந்தப் பெண் கைது செய்யப் பட்டார்.
புக்கிட் அமான் - மலேசியப் போலீஸ் தலைமையகம்
அவருடைய கைகளில் ஊசி குத்திய அடையாளத் தளும்புங்கள் இருந்தன. போதைப் பொருள்களை வாங்குவதற்காகத் தன் உடலையே சில நாட்களாக விற்று வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

சந்திரமலருக்கு இந்த விஷயம் தெரிய வந்ததும் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தார். எனினும், மலேசியாவில் தங்குவதற்கு வழங்கப் பட்ட கால வரையறையையும் தாண்டி அந்தப் பெண் தங்கி இருந்து இருக்கிறார்.

அந்தப் பெண்ணின் மீது இரக்கப் பட்டார் சந்திரமலர். குடிநுழைவு அதிகாரிகளிடம் பேசி தண்டனை இல்லாமல் அவரைத் தாயகத்திற்கு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்தார். எனினும் அப்பெண் இரண்டு மாதங்கள் கழித்து அதிகமானப் போதை மருந்தை உடலுக்குள் செலுத்தியதால் இறந்து போனார்.


இன்னொரு முறை 12 வயது இளம் பெண்ணை விபசாரப் பிடியில் இருந்து காப்பாற்றியுள்ளார். ஒரு முறை ஒரு வாடிக்கையாளுருக்குச் சேவை செய்தால் அந்தப் பெண்ணுக்கு ஐந்து ரிங்கிட் சம்பளமாகக் கொடுக்கப் பட்டது.

ஆனால், தரகர்கள் வாடிக்கையாளரிடம் இருந்து தலா 100 ரிங்கிட் வசூலித்து வந்தனர். பின்னர், அந்த இளம்பெண் ஒரு பெண் புனர் வாழ்வு மையத்திற்கு அனுப்பப் பட்டார். அங்கே அவருடைய வாழ்க்கை நல்ல வழிக்குத் திருப்பப்பட்டது. சந்திரமலரைப் பார்க்கும் போது எல்லாம் அந்தப் பெண் கண்ணீர் மல்க நன்றி சொல்வாராம்.


அமெரிக்காவில் போதைப் பொருள் பயிற்சி

மலேசிய காவல் துறையின் முன்னாள் ஐ.ஜி.பி துன் ஹனிப் ஒமார். சந்திரமலரை துணைக் கண்காணிப்பாளர் பதவிக்கு உயர்த்தியவர்

பொது மக்களின் பார்வையில் சந்திரமலர் ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்று இருந்தார். இருந்தாலும் அவருடைய மேல் அதிகாரிகளிடம் சுமுகமான உறவு முறைகள் நல்லபடியாக அமையவில்லை.

சிக்கல்கள் நிறைந்து இருந்தன. அளவுக்கு மீறி சுதந்திரமாகவும் அளவுக்கு மீறி தன்னிச்சையாகவும் சந்திரமலர் செயல் படுகிறார் எனும் குறைபாடுகள் அதிகாரிகளிடையே நிரம்பி இருந்தன.

அவருக்கு வழங்கப் பட்ட அதிகார உரிமைகளை அவர் தாண்டிச் செல்வதாகச் சிலர் அதிருப்தி அடைந்தனர். தொழிலில் உறவு இறுக்கங்கள் ஏற்பட்டன். அதனால் அவருக்கு 17 ஆண்டுகள் பதவி உயர்வு கிடைக்கவில்லை.


1974 ஆம் ஆண்டு சந்திரமலர் அமெரிக்காவிற்கு அனுப்பப் பட்டார். வாஷிங்டனில் இருக்கும் அனைத்துலகப் போலீஸ் தலைமையகத்தில் போதைப் பொருள் பிரிவில் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றார். இரு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப் பட்டனர்.

அமெரிக்காவில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய சந்திரமலர் மலேசியாவில் பல ஊர்களில் பல நூறு காவல் துறை அதிகாரிகளுக்குப் பயிற்சிகளைக் கொடுக்கும் வாய்ப்புகளைப் பெற்றார்.


ஊழல் குற்றச்சாட்டு

1976 ஆம் ஆண்டு சந்திரமலர் மீது ஓர் ஊழல் குற்றம் பதிவு செய்யப் பட்டது. அதைப் பற்றி மலேசிய புக்கிட் அமான் காவல் தலைமையகம் விசாரணை நடத்தியது. அதில் அவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டது. அந்த விசாரணையின் மூலம் அவர் ஒரு நல்ல சிறப்பான அதிகாரி என்பது அறியப் பட்டது.
கோலகுபு பாரு நகரத்தின் பிரதான சாலை
ஏதோ உள்ளார்ந்த காரணங்களினால் அவருக்குப் பதவி உயர்வுகள் வழங்கப் படவில்லை என்பதும் தெரிய வந்தது. அளவுக்கு மீறிய நியாயமான கொள்கை, லஞ்ச மறுப்பு, லஞ்ச வாங்கிய அதிகாரிகளைக் கண்டித்து தண்டித்தது போன்ற விவாரங்களினால் சந்திரமலர் பழி வாங்கப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெளிவானது. விசாரணைக் குழுவின் தலைவராக ஐ.ஜி.பி துன் ஹனிப் ஓமார் இருந்தார்.

அதன் பின்னர்தான் சந்திரமலரின் தன்னமலற்றச் சேவைகள் வெளி உலகத்திற்குத் தெரிய வந்தன. அவர் தடாலடியாக எடுக்கும் முடிவுகள் நல்ல முடிவுகளாக இருந்தன என்பதும் மேலிடத்திற்கு தெரிய வந்தது.

அதனால் அவர் உடனடியாக துணைக் கண்காணிப்பாளர் பதவிக்கு உயர்வு பெற்றார். அடுத்து அவர் சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் கோலகுபு பாரு காவல்துறை கல்லூரிக்கு ஓர் உயர்ப் பயிற்சியாளராக அனுப்பப்பட்டார்.


எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து

1981 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தின் ஷா ஆலாம் காவல் துறைக்கு அனுப்பப் பட்டார். அங்கு பணியாற்றும் போது அவர் Deputy Superintendent of Police எனும் பதவி உயர்வைப் பெற்றார். அவருடைய அயராத உழைப்பிற்கும் தளராத சேவைகளுக்கும் அடுத்தடுத்து பதவி உயர்வுகள் கிடைத்தன.

1994 ஆம் ஆண்டு பதவி ஓய்வு முன் அவருக்கு துணை ஆணையர் பதவி வழங்கப் பட்டது. அடுத்து அவர் புக்கிட் அமான் தலையகத்தில் உயர் காவல் துறை பொறுப்பில் அமர்த்தப் பட்டார்.

அப்போது மலாய்க்காரர் அல்லாத எந்தப் பெண்ணும் அந்தப் பதவியை அதுவரை வகிக்கவில்லை. பதவி ஓய்வு பெற்ற பின் அவர் அடிக்கடி பினாங்கு நகருக்குச் செல்வது உண்டு.

ஐ.ஜி.பி துன் ஹனிப் ஓமார்
சந்திரமலர் தன் பதவி காலத்தில் நூற்றுக்கணக்கானோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அவர்களில் பலர் நாடறிந்த பிரபலங்கள். அவர்களைப் பார்த்து பேசுவதும் உண்டு. அவர்களில் நண்பர்களும் உள்ளனர்; எதிரிகளும் இருக்கிறார்கள்.

எந்த நேரத்திலும் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனும் எச்சரிக்கையுடன் நடமாடுகின்றார். சில சமயங்களில் உணவகங்களுக்குக் குடுமபத்துடன் போவார். அவர்கள் சாப்பிட்ட கட்டணத்தை யாராவது கட்டி விட்டுப் போயிருப்பார்கள்.

குடும்ப வாழ்க்கை

யார் என்று கடை முதலாளியிடம் கேட்டால் அவரும் சொல்வது இல்லை. இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் அவருடைய வாழ்க்கையில் நிறைய நடந்து வருகின்றன.


கணவர் ஆனந்தவேலுடன் சந்திரமலர். பிள்ளைகள் (இடமிருந்து) சுரேன், செல்வி, குகன்.
அன்னை திரேசா சந்திரமலரின் ஆன்மீகத் தலைவர். இப்போது பரபரப்பு இல்லாத அமைதியான வாழ்க்கை.ஆன்மீகத் துறையில் அதிகமாக ஈடுபாடு.

சந்திரமலரின் கணவரின் பெயர் ஆனந்தவேல். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இரு ஆண்கள். ஒரு பெண். பிள்ளைகள் யாருமே தாயாரைப் பின்பற்றி காவல் துறை வாழ்க்கையில் ஈடுபடவில்லை. அன்னை திரேசா சந்திரமலரின் ஆன்மீகத் தலைவர்.

இப்போது பரபரப்பு இல்லாத அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் கல்விச் சேவைகள் வழங்கி வருகிறார். ஆன்மீகத் துறையில் அதிகமாக ஈடுபாடு காட்டி வருகின்றார்.


விருதுகள்

    1975 - Pingat Jasa Masyarakat (PJM) பினாங்கு மாநிலத்தின் சேவை விருது.
    1977 - மலேசியப் பேரரசரிடம் இருந்து Ahli Mangku Negara (AMN) விருது.
    1994 - Kesatrian Mangku Negara (KMN) விருது.

ஆன்மீகத் துறையில் ஈடுபாடு

இன்று வரை மலேசியக் காவல் துறைத் தலைமையகத்தினர் இவருடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைக் கேட்டு வருகின்றனர். அமைச்சர்களும் கருத்துகளைக் கேட்கின்றனர். மலேசிய வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாக விளங்கி வருகிறார். மலேசியக் காவல் துறையில் சந்திரமலர் சரித்திரம் படைத்தவர்.

இப்போது கிள்ளான் மாநகரில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அன்பாக ‘சந்திரா’ என்று அழைக்கின்றனர். அவர் வீட்டில் ஒரு பூந்தோடத்தை வைத்து பராமரித்து வருகிறார்.

முன்பு அவர் பணியாற்றிய போது ஒழுங்கீன விடுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இளம்பெண்களைக் காப்பாற்றி இருக்கிறார். அவர்களுக்குப் புனர்வாழ்வும் வழங்கி உள்ளார். நூற்றுக்கணக்கான போதைப் பித்தர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு நல்ல வழிகளைக் காட்டியவர்.

சந்திரமலர் மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு வீரப் பெண்மணி. 2011 ஆம் ஆண்டு வரை எந்த மலேசியத் தமிழ் பெண்ணும் சந்திரமலர் வகித்து வந்த காவல் துறையின் ஏ.சி.பி. ஆணையர் பதவியை வகிக்கவில்லை.

இணையக் கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவில் இவரைப் பற்றி எழுதி இருக்கிறேன்.

அதன் முகவரி: 

© https://ksmuthukrishnan.blogspot.com/