ஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 ஜூலை 2017

ஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு

இலண்டன், ஜூலை 22, 2017

பிரிட்டிஷ் மலாயாவில் தொடங்கி இன்றைய மலேசியாவிலும் தீர்க்கப் படாமல் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் இந்தியர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் ‘ஒடுக்கப்பட்ட உரிமைக் குரல்’ என ஹிண்ட்ராப் வழக்கு தொடர்ந்துள்ளது என்று அதன் தலைவர் பொன். வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

மலேசிய இந்திய தோட்டப் பாட்டாளி வம்சாவளியினர் பல்வேறு மனித உரிமை மீறலுக்கு இன்றளவும் ஆளாவதற்கு பிரிட்டிஷ் ஆட்சிதான் காரணம் என்ற அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை 18-07-2017 அன்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றப் பதிவாளரிடம் முறையான வழக்கு மனு ஹிண்ட்ராப் கட்சி சார்பில் சார்வு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மனித உரிமை மாநாட்டின் 34-ஆவது விதிப்படி, மலாயா இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களின் வம்சாவளி சார்பில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

பிரிட்டீஷ் நீதிமன்றத்தில் ஹிண்ட்ராப் மேற்கொண்ட சட்ட நடைமுறை நீர்த்துவிட்ட நிலையில் இந்தப் புதியப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் துணை அமைச்சருமான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இதன் தொடர்பில் இங்கிலாந்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை 1-04-2016இல் பிரிட்டிஷ் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கை விசாரித்த ஒற்றை நீதிபதியான ஹெண்டர்சன், பிரிட்டிஷ் மலாயாவில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் அடியோடு புறக்கணிக்கப் பட்டதற்கு பிரிட்டிஷ் மகாராணி தான் பொறுப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து மேல்முறையீட்டு நிதிமன்றத்தில் செய்த மனுவும் இவ்வாண்டு ஜனவரி மாதம் 19-ஆம் நாள் தள்ளுபடி செய்யப் பட்டது.

இப்படிப்பட்ட நிலையில்தான், இந்தப் பிரச்சினை ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

நூற்றுக் கணக்கான பக்கங்களை ஆவணங்களாகக் கொண்டு ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் தொடரப் பட்டுள்ள இந்த வழக்கில், பிரிட்டிஷ் அரசால் ‘டிகிளாசிஃபைட்’ (declassified) செய்யப்பட்ட சட்ட ஆவணங்களும் இணைக்கப்பட்டு உள்ளன.

மலாயா அரசியல் சாசனத்தை பிரிட்டிஷ் அரசு ஒருங்கிணைத்த போது, இந்தியத் தோட்டத் தொழிலாளர் குறித்த நலனில் சிறிதும் அக்கறை கொள்ளாமல் அப்பட்டமான மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தகவலும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்ற கட்ட அமைப்பை கடந்த 1953-இல் பிரிட்டீஷ் அரசு ஏற்றுக் கொண்டதுடன், அப்போது பிரிட்டீஷ் ஆதிக்கத்தில் இருந்த மலாயாவிற்கும் இது பொருந்தும் என்ற ஒப்பந்தமும் அப்போது ஏற்படுத்தப் பட்டது.

இதன் தொடர்பில் 1954-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசுக்கும் மலாயா பிரிட்டீஷ் உயர் ஆணையருக்கும் தகவல் பரிமாற்றமும் இடம்பெற்று உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட இந்திய தோட்டத் தொழிலாளர்களின் தலைமுறையினருக்கு உரிய நீதியைப் பெறுவதில் ஓயப் போவதில்லை என்று இலண்டனில் பொன். முனியாண்டி தெரிவித்தார்.

2007-இல் தொடங்கிய இந்த சட்டப் போராட்டம் பத்து ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையில், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மலேசிய இந்தியர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதில் இருந்து ஹிண்ட்ராப்  கட்சி அயரப் போவதில்லை.

ஏறக்குறைய 150 ஆண்டுகளாக இந்த மலேசிய மண்ணில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டீஷ் அரசாங்கத்தின் இன்றைய நீதி பரிபாலனத்திலும் மலேசிய இந்தியர்களின் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது என்பதற்கான சான்றுதான் நீதிபதி ஹெண்டர்சன் விசாரணைக்கு ஏற்காமலேயே வழக்கை தள்ளுபடி செய்தது.

மொத்தத்தில் மலேசிய இந்தியர்களுக்கான உரிமை மீறலை இன்னமும் இங்கிலாந்து அரசு தொடர்கிறது.

இதன் தொடர்பில் இலண்டனில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இக்கண்
பொன்.வேதமூர்த்தி
தலைவர்
ஹிண்ட்ராப்.

கோலாலம்பூர்.

21-07-2017