கடாரத்து ஆய்வாளர் பூஜாங் நடராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடாரத்து ஆய்வாளர் பூஜாங் நடராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 நவம்பர் 2019

கடாரத்து ஆய்வாளர் பூஜாங் நடராஜன்

தமிழ் மலர் - 17.11.2019
மலாயா வரலாற்றில் ஒரு வல்லுநர். வரலாற்று ஆய்வாளர். வரலாற்று ஆசிரியர். நாளைய சமுதாயத்திற்கு நல்ல ஒரு வரலாற்று வழிகாட்டி. ’சோழன் வென்ற கடாரம்’ எனும் நூலின் ஆசிரியர். இருபது ஆண்டு காலமாக ஆய்வுகள் செய்து எழுதி இருக்கிறார். 


அவர்தான் டத்தோ நடராஜன். கடாரத்து மண் கண்டு எடுத்த கலிங்கத்துப் பரணி. மலேசிய வரலாற்று ஆசிரியர்களால் பூஜாங் நடா என்று அன்புடன் அழைக்கப் படுகிறவர்.

டாக்டர் ஜெயபாரதிக்கு அடுத்த நிலையில் கடாரத்து வரலாற்றுக் காற்றைச் சுவாசிக்கும் அழகிய மகன்.

அதற்கு முன் டாக்டர் ஜெயபாரதி பற்றி ஒரு சில வார்த்தைகள். டாக்டர் ஜெயபாரதி மலேசியத் தமிழர்கள் கொண்டாடும் மதிப்பிலா மாணிக்கம். ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். பலதுறை விற்பனர், கவனகர், சாஸ்திர நிபுணர், ஆராய்ச்சியாளர்.


டாக்டர் ஜெயபாரதி பற்பல துறைகளில் ஆராய்ச்சிகள் செய்து இருக்கிறார். அவர் ஆய்வுகள் செய்த துறைகள்: கல்வெட்டியல், அகழ்வு ஆராய்ச்சி, வரலாறு, பண்டைத் தமிழ் இலக்கியம், இந்து சமயம், சித்தரியல், மனோதத்துவம், மந்திர சாஸ்திரம், தற்காப்புப் போர்மு றைகள், ஜோதிடம், வானநூல், நாடி ஜோதிடம், சமுதாயச் சீர்திருத்தம்.

இவற்றுக்கும் அப்பால் அன்னாரின் பயணங்கள் நீடிக்கின்றன. சரி. பூஜாங் நடராஜாவின் வரலாற்று ஆய்வுகளுக்கு வருவோம்.

பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு என்பது பூஜாங் நடராஜாவின் வாழ்நாள் வேட்கை. அவரின் அந்த ஆய்வு வேட்கையின் முடிவே சோழன் வென்ற கடாரம் எனும் வரலாற்று ஆய்வு நூல். மீண்டும் சொல்கிறேன். 20 ஆண்டுகள் சிரமப்பட்டு ஆய்வுகள் செய்து எழுதி இருக்கிறார்.

பல மாதங்கள் கடாரத்துக் காடுகளில் அலைந்து திரிந்தவர். கடாரத்துக் காடுகள் என்றால் சின்னக் காடு அல்ல. சும்மா ஒரு பத்து ஏக்கர் பரப்பு கொண்ட காடு என்று நினைத்துவிட வேண்டாம். சிங்கப்பூரின் பாதி அளவிற்கு அகன்ற ஒரு பெரிய நிலப்பரப்பு. ஒரு பெரிய மழைக்காடு. அந்த வகையில் ஒரு பெரிய மலைக்காடு.



கெடா மாநிலத்தில் குருண் நகருக்கு அருகில் இருப்பது மெர்போக் சிறுநகரம். அதன் அருகாமையில் பூஜாங் சமவெளி. அதன் பரப்பளவு 224 சதுர கிலோ மீட்டர்.  அவ்வளவு பெரிய இடம்.

கடாரத்துக் காட்டு விரிப்புகளில் கறை படிந்த ஒரு வரலாறு நன்றாகவே இன்று வரை ஒப்பாரி வைத்து அழுது கொண்டு இருக்கிறது என்று சொல்கிறார். நானும் பலமுறை இந்தக் காடுகளுக்குள் ஆய்வுப் பணிகளுக்காகப் போய் இருக்கிறேன்.

பல முறை ஆய்வுப் பணிகளுக்கு கெடா, செமிலிங் காட்டிற்குள் போய் இருக்கிறோம். அங்கு ஒரு பெரிய நீர்வீழ்ச்சி. காய்ந்து போய் கற்பாறையாய்க் கிடக்கிறது. நீர்வீழ்ச்சியின் உச்சத்தில் நான்கைந்து கரும் பாறைகள்.

உட்கார்ந்து இயற்கை அழகை ரசிக்கலாம். கவனமாக உட்கார வேண்டும். கொஞ்சம் ஏமாந்தால் ஒரு கிலோமீட்டர் ஆழப் பள்ளத்தில் விழ வேண்டி இருக்கும். அந்த மாதிரி சில இறப்புகள் நடந்து இருக்கின்றன.

கரும்பாறைகளுக்குப் பக்கத்தில் பாழடைந்து போன ஒரு பலகை வீடு. அதைப் பேய்வீடு என்று சொல்ல மனசு வரவில்லை. அந்த வீட்டைச் சுற்றிலும் மீனாச் செடிப் புதர்கள். அசைந்தாடும் லாலான் புற்கள். காற்று வாடை இல்லாமலேயே ஆடிப் பாடும் செடி கொடிகள்.


கற்பாறைகளில் கண் அயர்ந்து கற்பனை செய்து பார்த்தால் கண்கள் கலங்கும். கண்களைத் திறந்து பார்த்தால் காட்டு மரங்களின் பட்டைகளில் நீர்க் கசிவுகள் தெரியும். காட்டுச் செடிகளின் கவின்தகு மலர்களில் இரத்தச் சுவடுகள் மறைந்து இருப்பதும் தெரியும்.

கடாரம் கண்ட மனிதர்களினால் எத்தனை எத்தனையோ ஆயிரம் உயிர்கள் இங்கே பலியாகி இருக்கலாம். பழங்காலத்துக் கடார மண் சொல்லும் சோகக் கதைகளைக் கேட்க நமக்கும் தெம்பு இல்லை.

அந்த உயிர்களின் ஆவிகள் நிச்சயம் இன்னும் அங்கு நடமாடிக் கொண்டு தான் இருக்கும். சமயங்களில் தனிமையில் அமர்ந்து அந்தக் கானகத்துக் காற்றைச் சுவாசிக்கும் போது ஒருவிதமான அச்சம் ஏற்படுகிறது. சத்தியமாகச் சொல்கிறேன். அந்த மாதிரி இனம் தெரியாத அச்சம் எனக்கும் பல முறை ஏற்பட்டு இருக்கிறது. சரி.

கடாரப் பேரரசு 2500 ஆண்டுகளுக்கு முன்னால் பூஜாங் சமவெளியில் புகழ்பெற்று விளங்கிய மாபெரும் பேரரசு. அந்த வகையில் கடாரத்தை, பூஜாங் பேரரசு என்றும் அழைக்கலாம். பூஜாங் நாகரிகம் என்றும் அழைக்கலாம். தப்பு இல்லை. ஏன் தெரியுங்களா. 


கடாரத்தின் வரலாறு மிக மிகத் தொன்மை வாய்ந்தது. 2000 – 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரலாறு. கெடா மாநிலத்தின் சுங்கை பத்து எனும் இடத்தில் கிடைக்கப் பெற்ற மண்பானை, மண்சட்டிகள், கப்பல் கம்பங்கள், கப்பல் தூண்கள்; 2600 ஆண்டுகள் பழைமையானவை என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

சுங்கை பத்து ஆய்வு மையம், சுங்கை பட்டாணி நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சுங்கை பத்துவின் மண் சிதைவுகள்; கரியச் சிதைவுகளை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்துலக தொல்பொருளியல் ஆய்வுத் துறை (Centre for Global Archaeological Research of Universiti Sains Malaysia (USM) ஆய்வுகள் செய்து உறுதிபடுத்தி உள்ளது.

The Sungai Batu Archaeological site in the Bujang Valley is now certified as dating back to 582 BC instead of 535 BC previously, making it by far the oldest recorded civilisation in the South East Asian region and among the oldest in Asia.

ஆக கெடாவின் வரலாறு மிகப் பழைமையானது என்று சொல்ல இது ஒரு தகவல் போதுமே.

கடாரத்து நாகரிகம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பழைமையான நாகரிகம் என்றும் ஆசியாவின் பழைமையான நாகரிகங்களில் முதன்மையானது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்; ஜாவாவில் உள்ள பொரோபுடுர் புராதன ஆலயங்களுக்கு முன்னரே கடார நாகரிகம் உருவாகி விட்டது என்று பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மொக்தார் சைடின் கூறுகிறார்.

(https://www.thesundaily.my/archive/sungai-batu-archaeological-certified-dating-back-582-bc-AUARCH561115)

மலாக்காவின் வரலாற்றையும், சிங்கப்பூர் வரலாற்றையும், சுமத்திரா ஜாவா வரலாற்றையும், கடாரத்து வரலாறு எங்கேயோ கொண்டு போய் எங்கேயோ ஒரு புறமாய் ஒதுக்கித் தள்ளி விடுகிறது.

ஆக மலாயாவின் பன்னெடுங்கால வரலாற்றில் கெடா வரலாறு என்பது தான் முதன்மையானது; தலைமையானது. இதை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வோம்.

டத்தோ நடராஜாவின் பல்லாண்டுகள் ஆய்வுகளின் முடிவே சோழன் வென்ற கடாரம் எனும் வரலாற்று ஆய்வு நூல்.


அந்த நூல் மலேசியத் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு வரலாற்றுச் சுவடி. பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு, அகழ்வாய்வியல் மற்றும் பழம்பொருள்கள் பற்றிய ஓர் ஆழமான பார்வை. மலேசியாவின் தேசியப் பாரம்பரியச் சொத்தான புராதன கெடாவின் வரலாற்றை இந்த நூல் விவரிக்கிறது.

டத்தோ நடராஜா மலேசியாவிலும் உலக அளவிலும் பல வரலாற்று மாநாடுகளில் கலந்து கொண்டவர். கரைந்து போகும் கடார வரலாற்றைக் காட்சிப் படுத்தியவர். பற்பல அனைத்துலகக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டவர். பூஜாங் சமவெளி அகழாய்வுப் பொருட்களை அடையாளப் படுத்தியவர். 


கடாரத்து வரலாற்றை உலக அளவில் கொண்டு சென்ற ஓர் இந்தியர் மலேசியாவில் இருக்கிறார் என்றால் அவர் தான் டத்தோ நடராஜா. பூஜாங் நடராஜா என்று அனபாக அழைக்கப் படுகிறவர்.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்று தேர்ச்சி பெற்றவர்.

டத்தோ நடராஜா ஆங்கிலத்தில் நல்ல புலமை. தாய்லாந்தின் பான் பான் அரசு, தாம்பிரலிங்கா அரசு, இந்தோனேசியாவின் சைலேந்திரப் பேரரசைப் பற்றியும் ஆய்வுகள் செய்து வருகிறார். இது ஒரு பெரிய ஆய்வு.

கெடா, சுங்கைப் பட்டாணி நகரில் பிறந்து வளர்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஒரு சாமானிய மனிதராகவே காலத்தைக் கழிக்கின்றார். வஞ்சகம் இல்லாத மனசு.

1980-களில் ம.இ.கா.வில் முக்கிய பதவி வகித்தவர். இவருக்கும் ம.இ.கா. தலைமைத்துவத்துற்கும் சிற்சில பிணக்குகள். அதனால் நீங்களாச்சு உங்கள் அரசியலாச்சு என்று சொல்லி அரசியலைத் தூக்கிப் போட்டுவிட்டு சட்டம் படிக்க இங்கிலாந்திற்குப் போனார். பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு பயின்றார். மலேசியாவுக்கு வந்து ஒரு சட்ட நிறுவனத்தையும் தொடங்கினார். 


இவரிடம் பழகிப் பாருங்கள். இவரை எதிர்த்து எதுவுமே பேச முடியாத அளவிற்கு இவரின் சொல்லாடல்கள் அமையும். நளினங்கள் செய்யும்.

எந்த நேரத்தில் எங்கே இருப்பார் என்பது அவருக்கே தெரியாது. ஒரு நாள் மாலை நேரம் சுங்கை பட்டாணி அமான் ஜெயாவில் பார்த்தேன். அடுத்த நாள் பினாங்கில் பார்க்கிறேன்.

என்னங்க டத்தோ என்று கேட்டால்... அது அப்படித் தான் என்பார். சமயங்களில் அவரின் நகைச்சுவையில் ஊசி மிளகாய் உரைப்புகள் இருக்கும்.

ஒரு தடவை மலேசியத் திரைப்படத் தயாரிப்பாளர் பிரான்சிஸ் சில்வன் அவர்களைப் பார்க்கத் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவிற்குச் சென்று இருந்தேன்.

அங்கே இருக்கும் சாட் மசாலா உணவகத்தில் சந்திப்பு. உள்ளே போகிறேன். அங்கே பூஜாங் நடராஜா. தனி ஒரு மேசையில் அவர் மட்டும். தனிமையில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டு இருந்தார்.

மூக்குக் கண்ணாடியைத் தாழ்த்தி என்னைப் பார்க்கிறார். முகத்தில் மகிழ்ச்சி அலைகள். மலேசிய இந்திய வரலாற்று ஆவணங்களை மீட்டு எடுக்கும் பணிகளில் இருவருமே ஈடுபட்டு வருகிறோம். அந்தச் சுவாசக் காற்றுகளின் அலைகள்.

அவர் பேசினார். இன்று பூஜாங் வரலாறு பற்றி பேசப் போகிறேன். வர்றீங்களா. பெரிய இடத்துப் பெரிசுகளைப் பற்றியும் அழுத்தமாகப் பேசப் போகிறேன்.

அதனால் என் மீது ஒரு கறுப்புப் புள்ளி வைக்கப்படும். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை மலாக்கா. வருவது வரட்டும் என்றார். அதே போல பேசியும் இருக்கிறார். என்னை மலாக்கா என்றே அழைப்பார்.


இவர் இன்னும் நிறைய வரலாற்று ஆய்வுப் பணிகளைச் செய்ய வேண்டும். புதைந்து கிடக்கும் மலேசிய இந்தியர்களின் வரலாறுகளை மீட்டு எடுக்க வேண்டும்.

அவருடைய ஆய்வுப் பணிகளுக்கு மலேசியத் தமிழர்கள் அனைவரும் துணையாக இருப்போம்.

மலேசியா இந்தியர்கள் கண்டு எடுத்த மந்திரப் புன்னகைகளில் ஒருவர் பூஜாங் நடராஜா. நடமாடும் ஒரு வரலாற்றுக் களஞ்சியம். வாழ்த்துகிறோம் ஐயா.

சான்றுகள்:


1. (சான்று: http://www.thestar.com.my/…/candi-lembah-bujang-destroying…/ - Datuk V. Nadarajan, chairman of the Bujang Valley Study Circle non-governmental organisation.)

2. Zakharov, Anton O. (August 2012). The Sailendras Reconsidered (PDF). Institute of Southeast Asian Studies. Singapore.

3. Majumdar, R. C. (1937). Ancient Indian colonies in the Far East. 2: Suvarnadvipa. Dacca: Ashok Kumar Majumdar. pp. 167–190.