கொரோனா கோவிட் வைரஸ் உள்கட்டமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா கோவிட் வைரஸ் உள்கட்டமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 மார்ச் 2020

கொரோனா கோவிட் வைரஸ் உள்கட்டமைப்பு

கொரோனா கோவிட் 19 வைரஸ் கிருமிக்கு மரபணு (Gene) உள்ளது. அந்த மரபணுவைக் கொண்டு, மருத்துவ வல்லுநர்கள் கொரோனா மரபணு வார்ப்புருவை (Genetic Template) அமைத்து விட்டார்கள். பின்னர் அந்த வார்ப்புருவைத் துல்லியமாக ஆய்வு செய்து பார்த்தார்கள். 



கொரோனா வைரஸைச் சுற்றி இருக்கும் மேல் ஓட்டுப் பகுதியில் கூர்மையான புரதங்கள் இருந்தன. கொரோனாவின் இந்தக் கூர்மையான புரதங்கள் தான் மனிதர்களின் உயிரணுக்களைக் குத்திக் கிழிக்கின்றன. அதன் பின்னர் கொரோனா வைரஸ்கள் மனித உயிரணுக்களின் உள்ளே சென்று தம் நாச வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கின்றன.

அதையும் தாண்டிய நிலையில் கொரோனா வைரஸ் கிருமியின் கூர்மையான புரதங்களுக்குக் கூர்மையான கொக்கிகளும் இருக்கிறன. இந்தக் கொக்கிகள் தான் மனித மரபணுக்களைக் கிழிப்பதற்கு உதவியாய் இருக்கின்றன. அந்த வகையில் மனித மரபணுகளுக்குள் கொரோனா வைரஸ்கள் உள்ளே செல்ல வழி அமைத்தும் கொடுக்கின்றன. 




சென்ற 2019-ஆம் ஆண்டு இறுதி வாக்கில், சீனா வூஹான் நகரில் கொரோனா கோவிட் 19 வைரஸ் பரவல் தீவிரம் அடைந்தது. அதைத் தொடர்ந்து SARS-CoV-2 எனும் கொரோனா கிருமியின் மரபுரேகை வரிசை முறையை (Genome sequencing) சீனா அறிவியலாளர்கள் வெளியிட்டார்கள்.

மரபுரேகைகள் வரிசை வரிசையாக அடுக்கப்பட்டு இருக்கும் வரிசை முறையை மரபு அகராதி என்கிறோம். அதாவது கொரோனா வைரஸின் மரபணுக் குறியீடு. புரியும் என்று நினைக்கிறேன்.

சீனா வெளியிட்ட கொரோனா கோவிட் 19 வைரஸின் மரபுரேகை வரிசை முறை, உலக நாடுகளில் உள்ள அனைத்து மருத்துவ ஆய்வுக் கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப் பட்டது. அதை வைத்துக் கொண்டு கொரோனா கோவிட் 19 வைரஸ் பற்றி மேலும் ஆழமாக தீவிரமாக ஆய்வுகள் செய்தார்கள். 




இந்திய மருத்துவ அறிவியலாளர்களும் ஆய்வு செய்தார்கள். கொரோனா வைரஸின் மரபு வரிசையைக் கண்டுபிடித்த உலக நாடுகளில், இந்தியாவும் தனி ஓர் இடத்தை வகிக்கிறது. ஏற்கனவே ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா, சீனா நாடுகளின் மருத்துவ வல்லுநர்கள் அந்த மரபு வரிசையை கண்டுபிடித்து விட்டார்கள்.

கொரோனா வைரஸின் மரபு அணுவைப் பிரிப்பதன் மூலம் அதன் இயல்புகளைக் கண்டுபிடித்து விடலாம். அதைக் கொண்டு அந்தக் கொரோனா வைரஸிற்குத் தடுப்பு மருந்தை உருவாக்கி விடலாம். அதைத்தான் இந்திய மருத்துவ வல்லுநர்களும், உலக வல்லுநர்களும் செய்து கொண்டு வருகிறார்கள். வாழ்த்துவோம்.



Credit: Dinakaran Tamil daily

தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலக நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு அல்லும் பகலும் உழைக்கின்றன. என்னதான் அவசரப் பட்டாலும்... என்னதான் போட்டி போட்டாலும்... ஒரு முழுமையான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிக்க எப்படியும் இன்னும் 12 -18 மாதங்கள் பிடிக்கலாம்.

அதுவரை பொறுமை... பொறுமை... அது வரையிலும் மனிதர்கள் வீட்டிற்கு உள்ளேயே அடக்கி வாசிக்க வேண்டும் என்பது கொரோனா மனிதர்களுக்கு எழுதிச் சென்ற ஒரு கிறுக்கல் கடிதம்.

அந்தக் கடிதத்தின் இரகசியக் குறியீடுகள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும். கொஞ்ச காலம் பிடிக்கும். என்ன... அதுவரையில் மனுக்குலம் மேலும் சில உயிர்களைத் தாரை வார்க்க வேண்டி வரலாம். வேதனையாக உள்ளது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.03.2020