ராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 செப்டம்பர் 2019

ராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி

ராசம்மா பூபாலன். மலேசியப் பெண்ணுரிமைப் போராட்டவாதி. மலேசியப் போதைப் பொருள் தடுப்பு இயக்கத்தின் முன்னோடி. நேதாஜியின் ஜான்சி ராணி படையின் போராளி. மலேசியப் பெண்களின் சம உரிமைக்காகப் போராட்டங்கள் நடத்திய பெண்ணியவாதி. நாடு போற்றும் தலை சிறந்த கல்வியாளர்களில் ஒருவர். நல்ல ஒரு மலேசியச் சமூகச் சேவகி. வாழ்த்துகிறோம் அழகிய மலேசிய மகளே.

1943-ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவத்தை நேதாஜி தொடங்கினார். அதில் ஒரு பிரிவு ஜான்சி ராணி படை. அதில் ராசம்மா தன்னை இணைத்துக் கொண்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது இந்திய - மியான்மார் எல்லையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் துப்பாக்கிகளைத் தூக்கினார். ஆஸ்திரேலிய அமெரிக்க விமானத் தாக்குதல்களிலிருந்து தப்பித்து உயிர் பிழைத்து வந்தார்.

ஒரே வார்த்தையில் சொன்னால் ராசம்மா பூபாலன் (Rasammah Bhupalan) என்பவர் மலேசிய நாடு போற்றும் பெண்ணுரிமை போராளி. அப்படித் தான் சொல்லவும் முடிகிறது. வேறு வார்த்தை இல்லை.



இலங்கைத் தமிழர் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தவர். ஓர் அடக்கமான மிதவாதக் குடும்பப் பழக்க வழக்கங்களில் வளர்ந்தவர். பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாக இளவயதுக் கல்வியைத் தொடர்ந்தவர்.

1927 மே மாதம் முதல் தேதி பிறந்தவர். இவருக்கு இப்போது வயது 92. வயது பெரிது அல்ல என்பதற்கு முன்மாதிரியாய்த் திகழ்கிறார். இன்றும் அதே அழகிய பல்லவியில் அமைதியாய்ப் பயணிக்கின்றார். இயன்ற அளவு சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். வெளிப்புற நடவடிக்கைகளில் அர்ப்பணித்துக் கொள்வதால் இன்றும் இளமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மீண்டும் வாழ்த்துகிறோம்.

இவருடைய முழுமையான பெயர் ராசம்மா நாவோமி பூபாலன் (Rasammah Naomi Bhupalan).



அன்றைய மலாயாவில் 1941-ஆம் ஆண்டிலிருந்து 1945-ஆம் ஆண்டுவரையில் ஜப்பானியர்களின் அடக்கு முறை ஆட்சி.

மற்ற மற்ற மலேசியர்களைப் போலவே அந்த அடக்கு முறைகளினால் ஈப்போவில் இருந்த ராசம்மா பூபாலனின் குடும்பமும் பாதிக்கப் பட்டது.

1942-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு விடுதலை வேண்டும் என்று சொல்லி இந்திய தேசிய இயக்கம் தோற்றுவிக்கப் பட்டது. அந்தக் கட்டத்தில் உலக இந்தியர்களின் மனங்களில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மகா மனிதர். இந்திய விடுதலைப் போராட்ட உணர்வுகளை உலக மக்களின் மனங்களில் மணக்கச் செய்தார்.

அந்த உணர்வுகள் இரு இளம் சகோதரிகளையும் பாதிக்கவே செய்தன. ராசம்மாவும் அவருடைய சகோதரி பொன்னம்மாவும் ஜான்சி ராணிப் படையில் சேர்ந்தார்கள். 



சிங்கப்பூரில் தோற்றுவிக்கப்பட்ட ஜான்சி ராணி படையில் இருவரும் சேர்ந்து பயிற்சிகளைப் பெற்றார்கள். இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் களம் இறங்கினார்கள். முதல் கட்டமாகச் சயாம் மரண இரயில் பாதையின் வழியாகப் பர்மாவிற்குப் பயணம்.

இந்தியா பர்மா எல்லையில் இம்பால், கோகிமா அடர்ந்த காடுகள். அந்தக் காடுகளின் மத்தியில் ஜான்சி ராணி படையினர் கூடாரங்களை அமைத்தார்கள். இந்திய எல்லைக்குள் செல்லத் தங்களைத் தயார்ப் படுத்திக் கொண்டார்கள்.

அந்தச் சமயத்தில் இந்திய தேசிய இராணுவத்தினர் (ஐ.என்.ஏ - Indian National Army) இந்திய எல்லைப் போர் முனையில் பிரிட்டிஷாரின் விமானப் படை; காலாட் படைகளுடன் எதிர்த்துப் போரிட்டு வந்தார்கள்.



பெண்கள் பிரிவிற்கு இலட்சுமி சுவாமிநாதன் (கேப்டன் இலட்சுமி), ஜானகி ஆதிநாகப்பன் இருவரும் தலைமை தாங்கினார்கள். அடர்ந்த காடுகளில் வெள்ளையர்களுக்கு எதிராக ஜான்சி ராணி படையினர் துப்பாக்கிகளைத் தூக்கி சண்டை போட்டார்கள்.

இம்பால், கோகிமா காடுகளில் பாம்புக்கடி, பூரான்கடி, தேள் கடி, மலேரியாக் கொசுக் கடிகள். ஒரு பக்கம் மலைப் பாம்புகள்; இன்னொரு பக்கம் கரடிகள்; காட்டுப் பன்றிகள்; மற்றொரு பக்கம் பாய்ந்து வரும் பர்மா புலிகள்.

இவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் மனித இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்க காத்து நிற்கும் எருமை மாட்டு அட்டைகள். கலர் கலரான அந்த வேதனைகளிலிருந்து தப்பித்து வந்தார்கள். தவிர சயாம் பர்மா இரயில் பாதை அமெரிக்க ஆஸ்திரேலிய விமானங்களால் குண்டு போட்டுத் தகர்ப்பட்டு வந்தன. 



அதனால் ஜான்சி ராணி படையினருக்கும்; ஐ.என்.ஏ. இராணுவத்தினருக்கும் போய்ச் சேர வேண்டிய உணவுப் பொருட்கள்; மருந்துப் பொருட்கள்  முறையாகப் போய்ச் சேரவில்லை.

இதில் தொடர்ந்து பெய்யும் மலைக்காட்டு மழையின் கூத்துக் கும்மாளங்கள். அப்படியே கரை புரண்டு ஓடும் காட்டு ஆறுகளின் வெள்ளக் காட்டு வளாகங்கள். இயற்கையின் நீயா நானா போட்டியில் ஜான்சி ராணி பெண்கள் பலர் ஆற்றோடு அடித்துக் கொண்டு போகப் பட்டார்கள். மறைக்கப்பட்ட செய்திகளில் இதுவும் ஒன்று. மன்னிக்கவும்.

தொடர்ந்தால் போலப் பல நாட்களுக்குப் பசி பட்டினி. காட்டுத் தாவரங்களைச் சாப்பிட்டுக் காலனுக்குப் பலியானவர்கள் பலர். உருக்குலைந்து உடல் கூனிக் குறுகி வேதனையின் உச்சிக்கே போய் வந்தார்கள்.



ராசம்மாவுடன் அப்போது கூடவே இருந்தவர்கள் கோவிந்தம்மாள் முனுசாமி. இவரைப் பற்றி ஒரு சின்னத் தகவல். இவர் தமிழகம் வட ஆற்காடைச் சேர்ந்தவர்.  மலேசியத் தமிழர். நேதாஜி படையின் உயரிய சேவை விருதான லாண்ட்ஸ் நாயக் விருதைப் பெற்றவர்.

1945-ஆம் ஆண்டு ஜான்சி ராணி படை கலைக்கப் பட்டதும் 1949-ஆம் ஆண்டு கணவர் குழந்தைகளுடன் தமிழகம் சென்றார். இந்திய மத்திய அரசு இவருக்கு ஓய்வு ஊதியம் தர மறுத்து விட்டது.

இருந்தாலும் 1970-ஆம் ஆண்டிலிருந்து தமிழக அரசு சொற்ப ஓய்வூதியம் அளித்தது. 14.8.1960-ஆம் தேதி நடந்த ஒரு சாலை விபத்தில் கணவரை இழந்தார். பின்னர் தன் 4 மகள்கள் மற்றும் 2 மகன்களையும் கூலி வேலைகள் செய்து படிக்க வைத்தார். அவர்களுக்குத் திருமணமும் செய்து வைத்தார்.



ஒரு கட்டத்தில் வயோதிகம் காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது. மாநில அரசு வழங்கும் சொற்ப ஓய்வூதியத்தைப் பெற்று வாழ்ந்து வந்தார். வறுமையில் வாடிய கோவிந்தம்மாள் முதுமை காரணமாக 01.12.2016-ஆம் தேதி காலமானார்.

மலாயாவில் இருந்த தன் சொத்துக்களை எல்லாம் இந்திய விடுதலைக்காக அர்ப்பணிப்பு செய்தவர். ஆனால் தமிழ் நாட்டில் கடைசி வரையில் ஒரு சொந்த வீடு இல்லாமலே வாழ்ந்து மறைந்தார். பாவம் கோவிந்தம்மாள் முனுசாமி. இவரும் ஒரு தியாகியே. இவரைப் பற்றி வேறொரு கட்டுரையில் முழுமையாகத் தகவல்களைத் தருகிறேன். சரி. 

ராசம்மா பூபாலனுடன் அப்போது இந்திய - மியான்மார் எல்லையில் கூடவே இருந்த மற்றும் ஒரு பெண்மணி இராமு தேவர். இவர் இந்திய தேசிய இராணுவத்தில் ஒற்றராகச் சேவை செய்தவர். 



இந்திய - மியான்மார் எல்லையில் ஆஸ்திரேலியர்கள், அமெரிக்கர்கள், பிரிட்டிஷாரின் தொடர் தாக்குதல்களைச் சமாளிக்க முடியவில்லை. ஜான்சி ராணிப் படை பல சேதங்களை அடைந்தது. முன்னேற முடியவில்லை.

ஒரு சில வாரங்களுக்கு மறைந்து மறைந்து வாழ்ந்தார்கள். பர்மா காடுகளில் தொடர்ந்தால் போலப் பற்பல வேதனைகள். சொல்லில் மாளா இன்னல்களுக்குப் பின்னர் மலாயாவுக்கே திரும்பி வந்தார்கள்.

ஜான்சி ராணி படையில் கிடைத்த அனுபவங்கள் ராசம்மாவின் பிற்கால வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியாய் அமைந்தன.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் தோல்வி அடைந்தார்கள். மலாயாவிலிருந்து வெளியேறினார்கள். பிரிட்டிஷாரின் ஆட்சி வழக்க நிலைக்குத் திரும்பியது. ராசம்மா விட்டுப் போன தன் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். ராசம்மா படிப்பில் கெட்டிக்காரப் பெண்.



1955-ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்றார். அப்போது மலாயாப் பல்கலைக்கழகம் சிஙகப்பூரில் இயங்கி வந்தது. அந்தக் காலக் கட்டத்தில் பிரதமர் டாக்டர் மகாதீர் அவர்களும்; சித்தி ஹஸ்மா அவர்களும் இதே பல்கலைக்கழகத்தில் தான் மருத்துவப் பட்டம் பெற்றார்கள். நினைவில் கொள்வோம்.

பின்னர் பினாங்கு மெதடிஸ்ட் பள்ளியில் ஆசிரியர் பணியில் ராசம்மா  நியமிக்கப் பட்டார். ஆசிரியர் பணியில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து இறுதியில் கோலாலம்பூர் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளியின் தலைமை ஆசிரியையாகப் பதவி உயர்வு பெற்றார். சரி.

அதற்கு முன்னர் அவர் ஒரு சாதாரண ஆசிரியராக இருந்தபோது பெண் ஆசிரியைகளுக்காகக் குரல் கொடுத்தவர். அதை மறந்துவிட வேண்டாமே.



1960-ஆம் ஆண்டுகளில் மலேசியக் கல்வித் துறையில் ஆண் ஆசிரியர்களுக்கும் பெண் ஆசிரியைகளுக்கும் ஊதியம் சமமாக இல்லை. ஆண்களுக்குக் கூடுதலான சம்பளம். ஏன் இந்தப் பாகுபாடு என்று ராசம்மா கேள்விமேல் கேள்விகள் எழுப்பி வந்தார்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே வேலை. ஆனால் சம்பளத்தில் மட்டும் குறைச்சல். (Keadilan Untuk Perempuan Kerja Sama - Gaji Sama). என்ன இது… ஏன் இந்த ஓரவஞ்சனை என்று முழக்கங்கள் செய்து வந்தார். யாரும் கண்டு கொண்டதாக இல்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்த ராசம்மா ஆசிரியைகளுக்காக ஒரு தேசிய சங்கத்தையே உருவாக்கினார். அதன் பெயர் பெண்கள் ஆசிரியர் சங்கம் (Kesatuan Guru - Guru Perempuan Persekutuan Tanah Melayu - Women Teacher's Union).



நாடு முழுவதும் பயணம் செய்து ஆசிரியைகள் சங்கத்திற்கு ஆதரவு திரட்டினார். சில ஆண்டுகள் தீவிரமான முயற்சிகள். பிறகு சம்பளப் பாகுபாட்டிற்கு ஒரு முடிவு கட்டப் பட்டது. அரசாங்கமே இறங்கி வந்தது. ஆசிரியர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் சரிசமமான சம்பளம் வழங்க மலேசிய அரசு ஒப்புக் கொண்டது.

ராசம்மாவின் பொது வாழ்க்கையில் அதுவே சிகரம் என்றாலும் தம்முடைய பிற்கால வாழ்க்கையில் அவர் வேறுபல துறைகளிலும் தம் கவனத்தைச் செலுத்தி சேவைகள் புரிந்து இருக்கிறார். கோலாலும்பூர் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளியை மலேசியாவிலேயே தலை சிறந்த பள்ளியாக உருவாக்கிக் காட்டியதும் அவருடைய ஆக்ககரமான செயல் திறன்களில் ஒன்றாகும்.

உலகக் கல்விப் பணியாளர்களின் சம்மேளனத்தில் (World Confederation of Organisations of the Teaching Profession) இவர் செயற்குழு உறுப்பினராகவும் சேவை செய்து இருக்கிறார். 1963-ஆம் ஆண்டு ராசம்மாவின் முயற்சியில் மகளிர் சங்கங்களின் தேசிய மன்றம் (National Council of Women's Organisation (NCWO) அமைந்தது. அதன் அமைப்புக் குழுவிற்குத் தலைவராகப் பொறுப்பேற்றார். 

1986-ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கம் அவருக்கு ‘ஆசிரிய ஞானி’ (Tokoh Guru) விருதை வழங்கிச் சிறப்பு செய்தது.

ராசம்மா பூபாலனைப் பற்றி Footprints on The Sands of Time, Rasammah Bhupalan: A Life of Purpose எனும் வாழ்க்கை வரலாற்று நூல் 2006 நவம்பர் 21ஆம் தேதி மலேசியக் கலை கலாசார, சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் ராயிஸ் யாத்திம் வெளியிட்டார்.

இந்த நூலுக்கான செலவுத் தொகையைத் தேசிய ஆவணக் காப்பகம், மலேசியக் கலை கலாசார, சுற்றுலாத் துறை அமைச்சு, தேசிய இளம் கிறிஸ்த்துவப் பெண்கள் ஆகிய அமைப்புகள் ஏற்றுக் கொண்டன.

2009 ஆகஸ்டு 18-ஆம் தேதி, மலேசியாவுக்கான இந்தியத் தூதரகம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மலேசிய இந்தியர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்தது. அந்தக் கௌரவிப்பில் ராசம்மா பூபாலனும் சிறப்பிக்கப் பட்டார்.

மக்களின் நலன்களுக்காகப் போராடிய ராசம்மா போன்றவர்களை அடையாளப் படுத்த வேண்டியது நம் கடமையாகும். அவர்களின் உலகளாவிய சேவைகளையும் சாதனைகளையும் உலகம் அறியச் செய்ய வேண்டியதும் நம் கடைமையாகும்.

அடுத்து வரும் நம் சந்ததியினர் அவர்களைப் பற்றித் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். ராசம்மா போன்றவர்களின் சாதனைகள் உலகத் தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்க வேண்டும். அதுவே நம் விருப்பம்.

மலேசிய தேசிய விடுதலைக்காக ராசம்மா ஆற்றிய அரிய சேவைகள் முழுமையாகக் கவனிக்கப் படவில்லை என்பது ஒரு சிலரின் கருத்து. அவருக்கு முறையான அங்கீகாரங்கள் கிடைக்கவில்லை என்பதும் பலரின் கருத்து. அதுவே என்னுடைய தாழ்மையான கருத்து.

மலேசிய இந்தியர்களின் உரிமைப் போராட்டங்களில் ராசம்மா ஓர் ஆனந்த பைரவி. அந்த ராகங்களில் அவர் நீண்ட நாட்களுக்குப் பூபாலம் இசைக்க வேண்டும். வாழ்க அந்த அழகியப் பெண்மணி. வாழிய வாழியவே.

12 பிப்ரவரி 2012

ராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி

ராசம்மா பூபாலன், (பிறப்பு: 1927) என்பவர் மலேசிய விடுதலைப் போராளி, மலேசியப் பெண்ணுரிமை போராட்டவாதி, ஜான்சி ராணி படைப் போராளி, மலேசிய சமூக சேவகி, கல்வியாளர். 1943-இல் நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி படையில் இணைந்து இரண்டாம் உலகப் போரின் பர்மா போரில் சேவை செய்தவர்.

ராசம்மா பூபாலன் ‘தி ஸ்டார்’ நாளிதழுக்கு பேட்டி அளிக்கிறார்.

இந்திய-மியான்மார் எல்லையில் பிரித்தானியர்களின் விமானத் தாக்குதல்களில் இருந்து உயிர் பிழைத்து வந்தவர். ராசம்மா பூபாலன் மலேசிய ஆசிரியைகளுக்காக ஒரு தேசிய சங்கத்தை உருவாக்கி, அவர்களின் சம ஊதியத்துக்காக போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றவர்.பெற்றோருக்கு அடங்கிய பிள்ளை

ராசம்மா பூபாலன், நடுத்தர வர்க்க இலங்கைத் தமிழர் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தவர். ஓர் அடக்கமான மிதவாதக் குடும்பப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாக தன் இளவயதுக் கல்வியைத் தொடர்ந்தார்.


மலேசியாவில் ஆசிரியைகளுக்கு ஒரு சங்கம் தேவை எனும் மேடைப்பேச்சு.

பிற மலேசியர்களைப் போலவே சப்பானியர் காலத்து அடக்கு முறைகளினால் ராசம்மா பூபாலனின் குடும்பமும் பாதிக்கப்பட்டது. 1942இல் இந்திய தேசிய இயக்கம் விடுதலை கோரி எழுந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உலக இந்தியர்கள் அனைவரின் மனங்களிலும் இந்திய விடுதலைப் போராட்ட உணர்வுகளைக் கொந்தளிக்கச் செய்தார்.

ஜான்சி ராணிப் படையில்

அந்த உணர்வுகள் ஈப்போவில் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இரண்டு இளம் சகோதரிகளையும் பாதித்தன. அந்தப் பாதிப்புத் தன்மையைத் தாளமுடியாமல் ராசம்மாவும் அவருடைய சகோதரி பொன்னம்மாவும் ஜான்சி ராணிப் படையில் சேர்ந்தனர். பயிற்சிகளையும் பெற்றனர்.


மலேசிய மைந்தர்கள் புகைப்பட விழாவில் ராசம்மா பூபாலன் தன்னைப் பற்றிய படக்காட்சிக்கு விளக்கம் கொடுக்கிறார்.

அடிப்படைப் பயிற்சியை மலாயாவிலேயே முடித்தனர். பின்னர், இந்திய விடுதலைக்காக பிரித்தானிய இராணுவத்துக்கு எதிராகப் போரிட அவர்கள் ரங்கூனுக்கு தொடருந்து மார்க்கமாக அனுப்பப்பட்டனர். சயாம் மரண ரயில்வேயின் வழியாகப் பிரயாணம் செய்த அனுபவத்தை தனது வாழ்க்கை வரலாற்று நூலில் ராசம்மா பூபாலன் பதிவு செய்து இருக்கிறார்.

அந்தப் பிரயாணத்தின் இறுதியில் ரங்கூனை அடைந்தனர். அங்கு அடர்ந்த காடுகளின் மத்தியில் கூடாரம் அமைத்து இந்திய எல்லைக்குச் செல்ல தயாராக இருந்தனர்.

மியான்மார் காடுகளில் இன்னல்கள்

ஆனால் பிரித்தானியரின் தாக்குதல்களில் இந்திய தேசிய ராணுவம் பல சேதங்களை அடைந்தது. ஜான்சி ராணிப் படையினரால் முன்னேற முடியவில்லை. அதன் பின்னர் ஒரு சில வாரங்கள் அங்கேயே தங்கினர். மியான்மார் காடுகளில் பல வேதனைகளை அவர் எதிர்நோக்கினார். பல இன்னல்களுக்கு பிறகு மலாயாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.


ராசம்மா பூபாலன் மலேசியக் கோபுரத் தலைவர்களில் ஒருவர்.

ஜான்சி ராணி படையில் கிடைத்த அனுபவங்கள் ராசம்மாவின் பிற்கால வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. இரண்டாம் உலகப் போரில் சப்பானியர்கள் தோல்வியுற்றனர். மலாயாவிலிருந்து வெளியேறினர். பிரித்தானிய ஆட்சியில் வழக்கநிலை வந்தது. பிறகு ராசம்மா தனது இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார்.

கல்வி

1955ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்றுத் துறையில் பட்டமும் பெற்றார். அப்போது மலாயாப் பல்கலைக்கழகம் சிஙகப்பூரில் இயங்கி வந்தது. பினாங்கு மெதடிஸ்ட் பள்ளியில் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டார். ஆசிரியர் பணியில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து கோலாலம்பூர் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்றார்.

பெண்களுக்குச் சம சம்பளப் போராட்டம்

மலேசியக் கல்வித் துறையில் ஆண் ஆசிரியர்களுக்கும் பெண் ஆசிரியைகளுக்கும் ஊதியம் சமமாக இல்லை என்பது குறித்து ராசம்மா ஆசிரியர் சங்கங்களின் மூலமாகக் கேள்விகள் எழுப்பினார். நீண்ட காலமாகியும் அதற்குச் சரியான தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே ராசம்மா ஆசிரியைகளுக்கான தேசிய சங்கம் ஒன்றினை அமைத்தார்.


மலேசியாவுக்கான இந்தியத் தூதரக நிகழ்ச்சியில் மலேசிய ஆள்பல தொழிலாளர் அமைச்சர் டத்தோ எஸ்.சுப்பிரமணியன் அவர்களுடன்.

நாடு முழுவதும் சுற்றி அதற்கான ஆதரவைத் திரட்டினார். சில ஆண்டுகள் தீவிரமான முயற்சிக்குப் பிறகு ஆசிரியர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் சரிசமமான சம்பளம் கொடுக்க மலேசிய அரசு ஒப்புக்கொண்டது.

கோலாலம்பூர் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளி

ராசம்மாவின் பொது வாழ்க்கையில் இதுவே சிகரம் என்றாலும் தமது பிற்கால வாழ்க்கையில் அவர் வேறு பல துறைகளிலும் தம் கவனத்தைச் செலுத்தி சேவைகள் புரிந்து இருக்கிறார். கோலாலும்பூர் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளியை மலேசியாவிலேயே தலை சிறந்த பள்ளியாக உருவாக்கிக் காட்டியதும் அவருடைய ஆக்ககரமான செயல்முறைகளில் ஒன்றாகும்.

அது மட்டும் அல்ல. கல்விப் பணியாளர்களின் உலக சம்மேளனத்தில் அவர் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து இருக்கிறார். 1963இல் ராசம்மாவின் முயற்சியில் மகளிர் சங்கங்களின் தேசிய மன்றம் ஒன்றும் அமைந்தது. அதன்அமைப்புக் குழுவில் தலைவராகப் பொறுப்பேற்றார். பின் சங்கம் பதிவு பெற்ற போது அதன் செயலாளராக பணியாற்றினார்.

வாழ்க்கை வரலாற்று நூல்

சாரணியர் இயக்கத்திலும் அவர் தலைமைப் பொறுப்புக்கள் வகித்து இருகிறார். உலகின் ஏராளமான நாடுகளில் அவர் மலேசியாவைப் பிரதிநிதித்து இருக்கிறார்.


மலேசியாவில் தலை சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ‘தோக்கோ குரு’ எனும் உயரிய ஆசிரிய ஞானி விருது.

ராசம்மா பூபாலன், தம்முடைய 85 வயதிலும், அரச மலேசிய போதைப் பொருள் ஒழிப்பு சங்கத்தில் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

டத்தோ டாக்டர் ராயிஸ் யாத்திம்

ராசம்மா பூபாலனைப் பற்றி Footprints on The Sands of Time, Rasammah Bhupalan: A Life of Purpose எனும் வாழ்க்கை வரலாற்று நூல் 2006 நவம்பர் 21ஆம் தேதி மலேசியக் கலை கலாசார, சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் ராயிஸ் யாத்திம் வெளியிட்டார்.

அந்த நூலை மலாயாப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் டாக்டர் அருணா கோபிநாத் என்பவர் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியிடப்படுவதற்கான செலவுத் தொகையை தேசிய ஆவணக் காப்பகம், மலேசியக் கலை கலாசார, சுற்றுலாத்துறை அமைச்சு, தேசிய இளம் கிறிஸ்த்துவப் பெண்கள் ஆகிய அமைப்புகள் ஏற்றுக் கொண்டன.

சாதனைகள்
  • மலாயாக் கூட்டரசு பெண் ஆசிரியர்கள் சங்கம்: நிறுவனர், தலைவர் (1960).
  • மலாயா ஆசிரியர் தேசிய காங்கிரஸ்: பொதுச் செயலாளர்.
  • கல்விப் பணியாளர்களின் உலகச் சம்மேளனம்: செயற்குழு உறுப்பினர்.
  • மலேசிய மெதடிஸ்ட் கல்லூரி: நிறுவனர், தலைவர் (1983).
  • மலேசிய அரசாங்கத்தின் ‘ஆசிரிய ஞானி’ (Tokoh Guru) விருது (1986).
  • பெண்கள் சங்கங்களின் தேசிய மன்றம் National Council of Women’s Organisations (NCWO): முதல் பொதுச் செயலாளர்.
  • பெண்களுக்கான சட்ட, மனித உரிமை அமைப்புகளின் தேசிய மன்றம் (National Council of Women’s Organisations’ Law and Human Rights Commission): தலைவர்
  • கோலாலம்பூர் இளம் கிறிஸ்த்துவப் பெண்கள் அமைப்பு: தலைவர்
  • மெதடிஸ்ட் கல்வி அறவாரியம்: நிர்வாகி
மலேசிய விடுதலைப் போராட்டவாதி சித்தி ரகிமாவுடன்.

பொது

மலேசிய தேசிய விடுதலைக்காக ராசம்மா ஆற்றிய அரிய சேவைகள் கவனிக்கப்படவில்லை. அவற்றிற்கு முறையான அங்கீகாரங்கள் வழங்கப்படவில்லை எனும் பரவலான கருத்தும் மலேசியர்களிடையே நிலவி வருகிறது. இதைப்பற்றி மலேசிய ஆங்கில நாளேடு ஒரு செய்தியையும் வெளியிட்டுள்ளது.

2009 ஆகஸ்டு 18ஆம் தேதி மலேசியாவுக்கான இந்தியத் தூதரகம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மலேசிய இந்தியர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்தது. அந்தக் கௌரவிப்பில் ராசம்மா பூபாலனும் ஒருவராகச் சிறப்பிக்கப்பட்டார்.

(இந்தக் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்பட்டுள்ளது)