ஆர். முத்தழகன், கம்போங் சிமி, ஈப்போ, பேராக்
கே: ஒவ்வொரு கணினியிலும் Anti Virus போட்டிருக்க வேண்டுமா?
ப: வைரஸ் என்றால் கிருமி. கணினி வைரஸ் என்றால் கணினிக் கிருமி என்று பொருள். மனிதர்களைத் தாக்கும் கிருமி என்பது மனிதக் கிருமி. அதைப் போல கணினியைத் தாக்கும் கிருமிக்குப் பெயர் கணினிக் கிருமி. இருந்தாலும், கணினிக் கிருமி என்பது மனிதனைத் தாக்கும் மனிதக் கிருமி மாதிரி அல்ல. அப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. கணினிக் கிருமி என்பது வேறு. மனிதக் கிருமி என்பது வேறு.
மனிதர்களைத் தாக்கும் கிருமிக்கு உயிர் இருக்கிறது. ஆனால், கணினியைத் தாக்கும் கிருமிக்கு உயிர் இல்லை. கணினிக் கிருமி அல்லது கணினி வைரஸ் என்பது ஒரு வகையான சின்ன மென்பொருட்கள். அதாவது சின்ன ஒரு நிரலி. (Program)
கணினி வைரஸ் கணினிக்குள் நுழைந்ததும் நாம் சேகரித்து வைத்து இருக்கும் செய்திகள், படங்கள், ஆவணங்கள், செயலிகள் போன்றவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக நாசம் செய்துவிடும். அதனால் கணினிக் கிருமிக்கு தமிழில் கணினி அழிவி என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் Anti Virus. ’ஏண்டி வைரஸ்’ என்று அழைப்பதை விட கணினி அழிவி என்று சுத்தமான தமிழில் அழைக்கலாமே.
அடுத்து, இந்தக் கணினி அழிவியைக் கணினிக்குள் வரவிடாமல் தடை செய்யும் ஒரு நிரலிக்குப் பெயர்தான் Anti Virus. தமிழில் நச்சுநிரல் தடுப்பி என்று அழைக்கலாம். அல்லது கணினிக் கிருமித் தடுப்பி என்றும் அழைக்கலாம். அந்தக் கணினி அழிவிகள் கணினிக்குள் போய் விட்டாலும் அவற்றை அழிக்கும் ஆற்றலும் அந்த நச்சுநிரல் தடுப்பிக்கு இருக்கிறது.
இந்த அழிவிகள் எப்படி உருவாக்கப் படுகின்றன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு கணினியைச் செயல் படுத்துவதற்கு செயலிகள் தேவை. அதாவது Programs. இந்தச் செயலிகளை எழுதித் தயாரிக்கும் கணினி நிபுணர்களே, இந்தக் கணினி அழிவிகளையும் எழுதுகிறார்கள்.
தங்களுடைய திறமைகளைக் காட்ட வேண்டும் என்பதற்காக அப்படி செய்கிறார்கள். சிலர் விளையாட்டுக்காகவும் எழுதுவார்கள். அதனால் மற்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறோம் என்பது அவர்களுக்கும் தெரியும்.
பக்கத்து வீட்டில் இருக்கும் பார்வதியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, இந்த வீட்டு ஒல்லிப் பிச்சான், பட்டம் விடுவதை நீங்களும் பார்த்து இருக்கலாம். அந்த மாதிரிதான் இந்த கணினி விஷயத்திலும் நடக்கிறது.. மற்றவர்கள் புகழ வேண்டும் என்பதற்காக, கணினி அழிவியைத் தயாரித்து ஏற்றுமதி செய்கிறார்கள்.
எந்த நேரத்தில் அழிவிகள் உங்கள் கணினியைத் தாக்கும் என்று உங்களுக்கே தெரியாது. அதனால் உடனடியாக Anti Virus எனும் தடுப்பு நிரலியைக் கணினியில் பதித்துக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்பாக அணை போடுங்கள். AVG, Avast, Avira, Comodo, Kaspersky, Trend Micro, Panda, Eset, Ashampoo, Zone Alarm, BitDefender, McAfee போன்ற தடுப்பு நிரலிகள் இலவசமாகக் கிடைக்கின்றன.
இந்தத் தடுப்பு நிரலிகளில் எது சிறந்தது என்று கேட்டால், எல்லாமே சிறந்தவைதான். முதலில் இலவசம் என்று சொல்வார்கள். அப்புறம் காசு கொடுத்து வாங்கச் சொல்லி நச்சரிப்பார்கள். அவற்றின் இணையத் தளங்களுக்குச் சென்று இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். என்னுடைய தேர்வு Avast.
இந்தத் தடுப்பு நிரலிகளின் இணைய முகவரிகள் நீளமானவை. இங்கே எழுத முடியாது. அதனால், என்னுடைய வலைப்பதிவிற்குப் போய், அங்கு இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். எப்படி என்று தெரியும் தானே. ’கூகிள்’ தேடல் இயந்திரத்தில் ksmuthu என்று தட்டச்சு செய்தால் போதும். நிறைய தொடர்புகள் கிடைக்கும். ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து என்னுடைய வலைப் பதிவிற்குச் செல்லுங்கள். அங்கே நேரடியான தொடர்புகள் உள்ளன.