உமர் தம்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உமர் தம்பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஜூலை 2019

உமர் தம்பி

தேனீ, வைகை, தமிழா, இ-கலப்பை... இவை என்ன என்று தெரிகிறதா. 2000-ஆம் ஆண்டுகளில் கணினியிலும் இணையத்திலும் தமிழைப் பயன்படுத்துவதற்கு உதவிய தமிழ்ச் செயலிகள். அதாவது புரகிரம்கள். இந்தத் தமிழ்ச் செயலிகளை உருவாக்கியவர் உமர் தம்பி. இ-கலப்பை, தமிழா போன்ற செயலிகளின் உருவாகத்தில் இவரின் பங்களிப்பு நிறையவே உள்ளன.



தமிழ் இணையச் சூழலில் நன்கு பரிச்சயமான பெயர். அவர் மறைந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. எதிர்வரும் (ஜுலை) 12-ஆம் தேதி அவரின் நினைவு நாள். 53 வயதில் இயற்கை எய்தினார்.

உமர் தம்பி, கணினித் தமிழின் முன்னோடி. தமிழ் இணையத்தின் அறிஞர். இணையத்தில் இப்போது தமிழ் அழகாகத் தவழ்ந்து வருவதற்கு பாடுபட்டவர்களில் மிக மிக முக்கியமானவர்.

ஓலைச் சுவடிகளில் உறைந்து கிடந்த தமிழ்ப் படிவங்களைக் கணினி மூலம் உலகம் எங்கும் கொண்டு சென்றவர். அவரை இந்தத் தமிழ் உலகம் மறக்கலாமா?




தமிழுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த அந்த அறிஞரை மறக்கலாமா? தமிழுக்காக உழைத்த அந்தத் தமிழ் மகனை இந்தத் தமிழ் உலகம் மறக்கலாமா?

ஆனால் மறந்து விட்டதே. விளம்பரத்தைத் தேடிப் போகாதவர் விளம்பரம் இல்லாமலேயே மறைந்தும் போனார். இப்போது விளம்பரம் இல்லாமலேயே துயில் கொள்கிறார்.

உமர் தம்பி எந்த கல்லூரிக்கும் போய் கணினித் தொழில் நுட்பத்தை பயிலவில்லை. துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களில் சொந்தமாகவே கணினி தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டார்.




2001-ஆம் ஆண்டு தமிழகம் வந்தார். தமிழ் உலகம் கணினியில் தடம் பதித்த காலத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

உலவிகளில் (Browser) செயல்படும் மைக்ரோசாப்ட் தொழில்நுட்பமான (WEFT) வெப்ட். இதை முதன் முதலாகத் தமிழில் அறிமுகம் செய்தார். தமிழ் எழுத்துருக்கள் கணினியில் நிறுவப்படாத காலம் அது.

இந்தக் கட்டத்தில் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களால் அமைந்த இணையத் தளங்களை மைக்ரோசாப்ட் உலவிகளில் படிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றினார். பல்வேறு இணையத் தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார்.

இன்று தமிழ் இணைய உலகில் பல்லாயிரம் பேர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைப்பதிவு செய்து வருகிறார்கள்.




2010-ஆம் ஆண்டில் யுனிகோட் பயன்பாட்டிற்கு வராத காலக் கட்டம். ஆளாளுக்கு எழுத்துருக்களை உருவாக்கி மார்தட்டிக் கொண்டு இருந்தார்கள். அடியேன் நானும் சும்மா இல்லை.

எனக்குத் தெரிந்த கணினி அறிவைக் கொண்டு ‘முத்து’ எனும் எழுத்துருவை உருவாக்கி உலவ விட்டேன். அப்போது அது பெரிய விசயம். ஒரு 50 பேர் வரை பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்போது அந்த எழுத்துரு என்ன ஆனது என்று கேட்க வேண்டாம். நானே மறந்து விட்டேன்.

ஓர் எடுத்துக்காட்டு. www.tamilmalar.com இணையத் தளத்தைக் கணிணியில் வாசிக்க வேண்டும் என்றால் தமிழ் மலர் இணையத் தளத்தில் நிறுவப்பட்டு இருக்கும் (Tamil Font) தமிழ் எழுத்துருவை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பின்னரே இணையத் தளத்தை வாசிக்க முடியும். அது அப்போது. இப்போது தான் யுனிகோட் வந்து விட்டதே. கவலையை விடுங்கள்.




அப்போது உமர் தம்பியின் தேனி தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தி எந்த இணையத் தளமாக இருந்தாலும் தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தாமலேயே வாசிக்கலாம். பெரிய சாதனை.

கணினித் தமிழின் முன்னோடியான உமர் தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்யப் பட்டது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் துபாய் உமர் தம்பி அரங்கம் எனும் கணினி அரங்கம் உருவாக்கப் பட்டு கணினி பற்றிய கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டன..




அது மட்டும் அல்ல. கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில் இப்போது வழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களைத் தொகுத்து தமிழ் இணைய அகராதியைக் கொண்டு வந்தவரும் உமர் தம்பி அவர்கள் தான்.

சின்னச் சின்ன மென்பொருள் நிரலிகளை உருவாக்கி அவற்றின் மூலம் ஆயிரக் கணக்கான வெள்ளிக்கு விலைபேசி விற்ற காலத்தில் தான் உமர் தம்பியும் வாழ்ந்தார். இருந்தாலும் காசு எதுவும் வாங்காமல் யுனிகோட் எழுத்துருக்களையும், பல மென்பொருள் நிரலிகளையும் உருவாக்கி உலகத் தமிழர்களுக்கு வழங்கி இருக்கிறார்.

அவர் மறைந்தாலும் தமிழ்க் கணினி உலகம் இருக்கும் வரை நினைத்துப் பார்க்கும் அளவிற்கு ஓர் அன்பளிப்பைச் செய்துவிட்டுப் போய் இருக்கிறார்.

இணைய உலகத்தில் தமிழைத் துரிதமாகக் கொண்டு வர வேண்டும் என்று ஆசைப் பட்டவர் உமர் தம்பி. அவர் எடுத்த முதல் முயற்சி தான் இன்று இலட்சக் கணக்கான தமிழ் வலைப் பதிவுகளுக்கு ஆணிவேராக அமைந்து உள்ளது.


உமர் தம்பி போன்று தமிழுக்காக உழைத்த உண்மையான தமிழர்களைத் தமிழ் மொழி மாநாடுகளும் கண்டு கொள்ளவில்லை. உலகத் தமிழராய்ச்சி மாநாடுகளும் கண்டு கொள்ளவில்லை. வேதனை.

நம் தாய்மொழி தமிழின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட, பாடுபடும் தமிழர்கள் கண்டு அறியப்பட வேண்டும். அவர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அதுவே தமிழ்கூறும் நல்லுகத்தின் எதிர்பார்ப்பு.
Umar Thambi - Forgotten father of Tamil computing

...................................................

உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும் கருவிகளும்:

1. AWC Phonetic Unicode Writer

2. Online RSS creator – can be used in offline as well

3. RSS Feed செய்தியோடை உருவாக்கி

4. எண்களாகத் தெரியும் ஒருங்குறி எழுத்துக்களைப் படிப்பதற்கான செயலி

5. தமிழை ASCII வடிவில் Database சேமிக்கும் கருவி

6. எல்லா வகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி

7. ஒருங்குறி மாற்றி

8. GNU (Linux) பொதுமக்கள் உரிம அடிப்படை எழுத்துருக்கள்

9. ’தேனீ ’ ஒருங்குறி எழுத்துரு

10. வலைப் பதிவுகள், வலைத் தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு

11. ’வைகை’ இயங்கு எழுத்துரு

12. தமிழ் மின்னஞ்சல்

13. ’தமிழ்’ ஒருங்குறி Toolbar உலவி

14. Uniwriter (உலவியில் Tools மெனு)


..................................
    M R Tanasegaran Rengasamy வாழும் பொழுதே வாழ்த்தும் பண்பை மறந்தே விடுகிறோம் நாம். இந்தப் பணி உமர் தம்பி அவர்களின் விசயத்திலும் தொடர்ந்திருப்பது வருத்தமளிக்கிறது. கணினி உலகிற்கு ஆற்றிய அரும் பணிக்காக உமர் தம்பியின் நாமம் என்றென்றும் தக்கார் மனங்களில் நிலைத்திருக்கும். வாழ்க .. வாழ்க..
  • Senthil Kumar இந்தக் கட்டுரையை அனைவருக்கும் பகிரச் செய்து உமர் தம்பியின் தமிழ்த் தொண்டை தெரியச் செய்வதே நாம் திரு உமர் தம்பிக்கு காட்டும் நன்றிக் கடன்
  • Letchumanan Nadason திரு. உமர் தம்பி அவர்கள் ஆற்றிய அரும் பணியை என்றென்றும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.
  • Raghavan Raman கணிணியில் தமிழை பயன்படுத்தும் ஒவவொருவரும் அவரை நினைவு கொள்வதுடன் மற்றவர்களும் இதனை அறியச் செய்வோம்.