சீரழிக்கும் சீரியல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீரழிக்கும் சீரியல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 ஆகஸ்ட் 2014

பெண்களைச் சீரழிக்கும் சீரியல்கள்

 [மலேசியா தினக்குரல் நாளிதழில் ஒவ்வொரு நாளும் கட்டுரைகள் எழுதி வருகிறேன். அவற்றை நூல் தொகுப்புகளாக வெளியிட்ட பின்னர், இப்பகுதியில் எல்லாக் கட்டுரைகளையும் பதிவேற்றம் செய்கிறேன். இது 30.07.2014 நாளிதழில் வெளிவந்த கட்டுரை.]

விடியல் காலை. தூக்கம் கலைந்து எழுகிறாள் மனைவி. மடிப்புக் கலையாத பட்டுச் சேலை. புதிதாக வைத்துக் கொண்ட ஒரு சரம் மல்லிகைப் பூ. ஐம்பது காசு நெற்றிப் பொட்டு. அதற்கு மேலே இன்னும் ஓர் இருபது காசு பொட்டு. உதட்டிலே கால் கிலோ சிவப்புச் சாயம். முகத்திலே முக்கால் கிலோ சந்தனப் பவுடர். கையிலே காபித் தட்டு. 
 

புருசனை எழுப்புகிறாள். சோம்பல் முறிக்கிறான் புருசன்காரன். அப்புறம் மனைவியின் கைகளைப் பிடித்து வருடிப் பார்க்கிறான். அவள் சிணுங்குகிறாள். அதற்குள் மாமியார்காரி வந்து கதவைத் தட்டுகிறாள். ஒரு மெகா சீரியல் தொடங்குகிறது.


தெரியாமல்தான் கேட்கிறேன். உலகத்தில் எத்தனைத் தமிழ்ப் பெண்கள் இந்த மாதிரி புருசனுக்கு காலை உபசரிப்பு செய்கிறார்கள். காலங் காத்தாலே புருசனின் காலைத் தொட்டுக் கும்பிடுகிறார்கள். சொல்லுங்கள். இருக்கலாம். எங்கோ ஒன்று இரண்டு இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை.

பிழைப்புக்காக நடிப்பு

அப்படியே இருந்தாலும், எங்கேயோ கோளாறு நடந்து கொண்டு இருக்கிறது. தெரிந்து கொள்ளுங்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அது பிழைப்புக்காக நடக்கும் ஒரு நடிப்பு. காசுக்காக முந்தானையை விரிக்கும் ஒரு படக்காட்சி. அது அவர்கள் பிழைப்பு. காசு கிடைக்கிறது. நடிக்கிறார்கள். அந்த மாதிரி தேவலோக உபசரிப்பை இந்தக் காலத்து புருசன்காரன் எதிர்பார்க்க முடியுமா. சொல்லுங்கள்.



அந்த மாதிரி கம்பராமாயணத்தில் இருந்தது. கலிங்கத்துப் பரணியில் இருந்தது. கண்ணகியிடம் இருந்தது. மாதவியிடம் இருந்தது. ராமாயணத்தில் எழுதப்பட்டது. இராவணனும் எதிர்பார்த்தான். ஆனால், இந்தக் காலத்துக் கலியுகத்தில் அதை எல்லாம் சாமான்யர்களான நாம் எதிர்பார்க்க முடியுமா.

அப்படியே எதிர்பார்த்தால் அவ்வளவுதான். அடுத்த நாளே ‘டைவர்ஸ்’ கடிதம் வந்து, வீட்டுக் கதவைத் தட்டும். மனைவியை ஒரு நண்பராக நினைத்துப் பழகும் ஒரு காலக் கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.



மனைவியை ஒரு நண்பராக நினைத்துப் பழகுவதுதான் ஒரு நல்ல ஆரோக்கியமான தாம்பத்தியம். ஓர் இயல்பான வாழ்க்கை நிலை. அதையே வழக்கநிலை மீறிய வாழ்க்கை நிலையாகக் காட்டுவது மெகா தொடர்களின் பணம் சம்பாதிக்கும் சாணக்கிய நிலை.

இரக்கச் சிந்தனைகளைச் செல்லரிக்கச் செய்கின்றன

தொலைக்காட்சி என்பது ஒரு பொழுது போக்குச் சாதனம். அதில் வரும் நிகழ்ச்சிகள் மக்களின் மன அழுத்தங்களைக் குறைக்க வேண்டும். ஒரு மனநிறைவான மனநிலையையும் உருவாக்க வேண்டும். ஆனால், இன்றைய காலத்தில் ஒளிபரப்பாகி வரும் தமிழ்த் தொடர்களைப் பாருங்கள். அப்படியா இருக்கிறது. நிலைமையை மோசமாகிக் கொண்டு வருகின்றன.



ஒற்றுமையாக இருக்கும் குடும்பங்களைப் பிரிக்கின்றன. தாயிடம் இருந்து மகனைப் பிரிக்கின்றன. அப்பா மகள் உறவு முறையைப் பிளவு படுத்துகின்றன. கணவன் மனைவி உறவைக் கொச்சைப் படுத்துகின்றன. சொந்த பந்தங்களைக் கொலை செய்யத் தூண்டுகின்றன. கள்ள உறவிற்கு வழிகாட்டுகின்றன. இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்து, ஒட்டு மொத்த இளம் சமுதாயத்தையே குட்டிச் சுவராக்கி வருகின்றன. எல்லாமே வேறு வேறு மாதிரியானப் பயணங்கள்.


பொதுவாகவே, நம் தமிழ்ப் பெண்கள் ஈவு இரக்கம் உள்ள நல்ல ஜீவநதிகள். அதை யாராலும் மறுக்க முடியாது. எங்கோ ஒன்று இரண்டு குறை பட்டுப் போய் இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இந்த மெகா தொடர்கள், நம் பெண்களின் அந்த நல்ல இரக்கச் சிந்தனைகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் செல்லரிக்கச் செய்கின்றன.
ஆயிரம் கிலோ மன உலைச்சல்கள்

நல்ல பல வெள்ளந்தி மனங்களைக் கெடுத்தும் வருகின்றன. மல்லிகைப் பூக்களாய் இருந்தவர்கள் கள்ளிப் பூக்களாய் மாறி வருகின்றனர். இது ஒரு வகையான மன நோய் என்றுதான் எனக்குப் படுகின்றது. முன்பு மலையகத்தில் இருந்த காவேரிகள் இப்போது வற்றிக் கொண்டே போகின்றன.



ஒரு தொடர் முடிந்த பிறகு, யாராவது சிரித்தபடி சந்தோஷமாக வீட்டு வேலையைப் பார்க்கப் போகிறார்களா? சொல்லுங்கள். இல்லவே இல்லை. மனசிலே கவலை. சட்டிப் பானைகளை உருட்டும் போது, அதே எண்ணங்கள். தொடரும் என்று போட்டு இருக்கிறார்கள்.


நாளைக்கு என்ன நடக்குமோ என்கிற ஒருவித எதிர்பார்ப்பு. அதைப் பற்றியே சுற்றிச் சுற்றி வரும் கற்பனைகள். இவள் ஏன் அப்படி செய்தாள். அவள் நல்லவள்தானே. அவளுக்கு என்ன வந்தது. பைத்தியம் பிடித்துப் போச்சா. இப்படி ஆயிரம் கிலோ மன உலைச்சல்கள்.
இடக்கு முடக்காய்க் கள்ளக் காதல்கள்

இரண்டு மனைவி விஷயம். தெரியும் தானே. இப்போது எல்லாத் தொடர்களிலும் இரண்டு மனைவி பிரச்சினை, சர்வ சாதாரணமாகப் புழங்குகிறது. அந்தத் தொடர்களில் எந்த ஒரு புருசன் பெண்சாதியாவது சந்தோஷமாய் நன்றாக இருப்பதைப் பார்த்து இருக்கிறீர்களா? எல்லாவற்றிலும் கள்ளத்தனம். இடக்கு முடக்காய்க் கள்ளக் காதல்கள்.



நெஞ்சத்தைப் பிழியும் வக்கிர மோசடிகள். மர்மமான கொலைகள். திடீர் திடீர் மோடி மஸ்தான்கள். ஜேம்ஸ் பாண்ட் படங்கள் கெட்டது போங்கள். 

பெண் தியாகம் செய்கிறாள் என்று காட்டுவது இயற்கையான எதார்த்தம். சரி. ஆனால், அப்படிச் சொல்லிக் கொண்டு, சீரியல்களில் அவர்கள் காட்டும் தியாகத்தின் உச்சக் கட்டம் இருக்கிறதே, ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அதைப் பார்த்தால் நரவேட்டை நாயகன் இடி அமினே வாய்விட்டு அழுவார். ஆக, அந்த மாதிரியான சீரியல்கள், ஒரு சாமான்யப் பெண்ணின் உண்மையான தியாக உணர்வுகளைச் சிதைத்து விடுகிறது. அப்படித் தான் சொல்லவும் முடிகின்றது. 
 
குடும்பப் பெண்களின் மனநிலைகள்

இப்போது ஒளியேறிக் கொண்டு இருக்கும் தொடர்களில் வம்சம் தொடரை மட்டும் நான் பார்க்கிறேன். அதில் வரும் பூமிகா எனும் கதாமாந்தரை அதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். மேடம் ரம்யா, கொஞ்சம் இறங்கி வாங்க. பிளீஸ்!



எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தையும் நாம் குறை சொல்லவில்லை. அது நம் நோக்கம் அல்ல. ஆனால், தங்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக தாம் சார்ந்த சமூகத்தையே விற்றுப் படம் தயாரிக்கிறார்களே, அவர்களைத்தான் குறையாகப் பார்க்கிறோம். அந்தப் படங்களை இங்கே வரவழைத்து ஒளிபரப்பு செய்வதற்கு சிபாரிசு


செய்கிறார்களே, அவர்களின் மனசாட்சிகளையும் குறையாகப் பார்க்கிறோம். அதனால் எத்தனைக் குடும்பப் பெண்களின் மனநிலைகள் பாதிக்கப் படுகின்றன என்பதையும் பெரிதாகப் பார்க்கிறோம்.

கணவனை இழந்த பெண் ஒருத்தி
 
மெகா சீரியல்களை இங்கே இறக்குமதி செய்யும் போது, நல்ல ஒரு சமூக சிந்தனை வேண்டும். நல்ல ஒரு சமூகக் கடப்பாடு இருக்க வேண்டும். அவைதான் நம்முடைய எதிர்பார்ப்புகள்.



ஒரு தொடரில் நடந்த காட்சிகள். ஒரு கதாபாத்திரம் இறந்து விடுகிறார். மூன்று நான்கு நாட்களுக்கு இறந்தவரின் சடங்குகளைக் காட்டிக் காட்டி உயிரை வாங்கி விட்டார்கள். அந்த வாரம் ஆறு நாட்களுக்கும் அழுகை. அழுகை. அழுகை.


எப்படித்தான் அந்த மாதிரி அழுகை வருகிறதோ தெரியவில்லை. கிளிசரின் மிஞ்சிய அழுகைகள். சில நாட்களுக்கு பிறகு, மறுபடியும் ஒரு தொடர். கணவனை இழந்த பெண் ஒருத்தி. அவளுக்குச் செய்யும் சடங்குகள். அட ராமா...  பக்கத்து வீட்டில் ஏதோ ஒரு துயரச் சம்பவம் நடந்தது போல இருந்தது.


எங்களுடைய நெருங்கிய உறவுக்காரப் பெண், ரொம்பவுமே வேதனைப் பட்டுப் போனாள். அவளுடைய கணவர் இறந்ததும் அவளுக்குத் துணையாக அமைந்தவை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான். மன அமைதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. 
 
குடும்ப உறவுகளில் விரிசல்கள்

ஆனால், அதற்குப் பதிலாக சீரியல்களே வேதனைத் தூறல்களாகச் கண்ணீர் சிந்தின. நேஷனல் ஜியாகிராபிக், டிஸ்கவரி சேனல் போன்றவை எடுபடவில்லை. இரண்டு மூன்று தடவைகள் டிகோடர் கார்டை எடுத்து மறைத்து வைத்தேன். நல்லது நடக்கும் எனும் எதிர்ப்பார்ப்பு. ஆனால், நன்றாகப் போய்க் கொண்டு இருந்த குடும்ப உறவுகளில் விரிசல்கள் தான் மிஞ்சிப் போயின. ஆக, நிலைமை அந்த மாதிரி போய்க் கொண்டு இருக்கிறது.


முன்பு எல்லாம்  பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் நகமும் சதையும் என்று சொல்வார்கள். இப்பொழுது அப்படி இல்லை. யாரிடமாவது அந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். மெகா தொடர்களும், பெண்களும் என்றுதான் சொல்வார்கள்.

அந்த அளவிற்கு இன்றைய தமிழ்ப் பெண்களில் பலர், தொலைக்காட்சித் தொடர்களுக்கு அடிமைகளாக மாறி வருகிறார்கள். எல்லாப் பெண்களையும் சொல்லவில்லை. ஒரு சில பெண்களுக்குப் பைத்தியமே பிடித்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது.

தொலைக்காட்சி என்பது தொல்லைக் காட்சியா
 
இன்னும் தெளிவாகச் சொன்னால், சீரியல் தொடர்களைப் பார்க்காமல் வாழ முடியாது என்கிற ஒரு நிலைமை உருவாகி விட்டது என்றே சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் தொலைக்காட்சி என்பது அறிவு வளர்க்கும் சாதனமாக இருந்தது. குடும்பமாக உட்கார்ந்து பார்த்தார்கள். பார்க்கவும் முடிந்தது. இப்போது அப்படியா முடிகிறது.


பிள்ளைகளை வைத்துக் கொண்டு பார்க்க முடியவில்லை. சமயங்களில் பேரப் பிள்ளைகள் வந்து மடியில் உட்கார்ந்து விடுகிறார்கள். தர்மசங்கடமாக இருக்கும்.

தொலைக்காட்சி என்பது தொல்லைக் காட்சியாக மாறி விடக் கூடாது என்பதே கடந்த தலைமுறையினரின் எதிர்பார்ப்புகள். இப்போது வரும் சீரியல் கதாபாத்திரங்கள், நம் பெண்களின் சொந்த வாழ்க்கையிலேயே நடமாடும் ஓர் உறவுப் பாத்திரமாக மாறிப் போய் விடுகின்றன.

எதார்த்தமான பாச நெருடல்கள்

பெண்களில் பலர் தங்களுடைய குடும்பங்களைப் பற்றி கவலைப் படுகிறார்களோ இல்லையோ, நாடகங்களில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றித் தான் ரொம்பவும் கவலைப் படுகிறார்கள். ரொம்பவும் அலட்டிக் கொள்கிறார்கள். அவர்களைக் குறை சொல்ல முடியாது. அப்படி ஒரு தாக்கம் சன்னம் சன்னமாய் வேர்விட்டு விட்டது. It is not TOO late!



நாடகத்தில் நடிக்கும் பெண்கள் நன்றாகவே அழுகிறார்கள். எப்படி அழுவது என்பதற்கு ஆறு ஏழு மாதம் டிரேயினிங் எடுத்து இருக்கலாம். சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் அழுவதைப் பார்த்து வீட்டில் இருக்கும் பெண்களும் சேர்ந்து கொண்டு அழுகின்றார்களே. அதைப் பார்த்தால் தானே எனக்கும் அழுகை வருகிறது.

அது ஒரு எதார்த்தமான பாச நெருடல்களாக இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், அந்த நடிகைகள் பணத்தை வாங்கிக் கொண்டு தானே அழுகின்றார்கள். ஆனால், இங்கே வீட்டிலே காசைக் கொடுத்து விட்டு அல்லவா அழுகிறார்கள். அது தானே வேதனையாக இருக்கிறது.

 
ஒரு பானைக்கு ஒரு சோறு போதும்
 
கிளிசரின் போட்டால் கண்களில் நீர் தாரையாக் கொட்டும் என்பது நம் பெண்களில் பலருக்குத் இன்னும் தெரியாமல் இருக்கிறது. இந்த விஷயத்தில் என் மனைவி எவ்வளவோ தேவலாம். வீட்டில் எல்லா சேனல்கள் இருந்தாலும் இரண்டு மூன்று நாடகங்களோடு முடித்துக் கொள்வாள். அதுவரையில் அவரைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

இப்போது வரும் நாடகங்களில் ஒரு புதிய கலாசாரம், பூஞ்சக் காளான் மாதிரி கிளம்பி இருக்கிறது. அதாவது திருமணம் செய்த பெண், தன்னுடைய கணவனுக்குத் தெரியாமல் இன்னொருவனைக் காதலிப்பது. அப்புறம் அவனோடு ஊர் சுற்றுவது, அப்புறம் தன்னுடைய கணவனுக்கு வேறு ஒரு பெண்ணை ’ரிகமண்ட்’ செய்வது. நல்ல ஒரு கூத்து போங்கள். தெரியாத பெண்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் கலாசாரம்.



இன்னும் ஒன்று. ஒரு குடும்பத்தில் ஒரு பெண். அவளை மாமியார் கொடுமை செய்வது. அதற்கு மருமகள் வீறுகொண்டு எழுவது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் மாமியாரை நல்லவராகக் காட்டும் நாடகங்கள் எதுவுமே இல்லை. நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் ஏதாவது ஒரு நாடகத்தைப் பாருங்கள். ஒரு பானைக்கு ஒரு சோறு போதும்.
 
தவறான உறவுகள், தகாத வார்த்தைகள்

இப்போது எல்லாம், மெகா சீரியல்களைத் தயாரிப்பவர்கள், முன்பு பிரபலமாக இருந்த சினிமா நடிகைகளை எப்படியாவது இழுத்துக் கொண்டு வந்தார்கள். முதலில் நடிகை ரேவதி வந்தார். அதன்பிறகு சுஹாசினி வந்தார். அடுத்து சுகன்யா வந்தார். அப்புறம் பானுப்பிரியா, கவுதமி, குஷ்பு, தேவயாணி, மீனா, கௌசல்யா, ரம்யா கிருஷ்ணன் என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இன்னும் நீளும்.

ரொம்ப வேண்டாம். இன்னும் ஓர் ஐந்து ஆண்டுகள் கழித்துப் பாருங்கள். நயன்தாரா, அசின், சிரேயா பட்டாள்ம் வந்தாலும் வரலாம். அப்புறம் நம்முடைய பேரன் பேத்திகளும், சீரியல்களில் நடிக்கப் போகிறேன் என்று போர்க் கொடிகளைத் தூக்கினாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. 

 
தமிழ்ச் சமூகத்திற்கு தேவையா

சீரியல் தொடர்களில் காண்பிக்கப்படும் குடும்பச் சண்டைகள், சீதனக் கொடுமைகள், தவறான உறவுகள், தகாத வார்த்தைகள். இவை அனைத்தும் ஒட்டு மொத்தமாகத் தமிழ் பேசும் உலகச் சமூகத்திற்கே பொருத்தம் இல்லாதவை.

அதையும் தாண்டிய நிலையில், மலேசியத் தமிழ்ச் சமூகத்திற்கு தேவையே இல்லாதவை. என்ன செய்யலாம். அதிபர் ஒபாமாவிற்கு கடிதம் எழுதி அமெரிக்கத் துணைக் கோளங்களைப் பயன்படுத்தி, சீரியல் நாடகங்களுக்கு ஒளித் தடை செய்யலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.