மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 ஜூலை 2014

மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர்

[இந்தக் கட்டுரை மலேசியா மயில் ஜூலை மாத இதழில் பிரசுரிக்கப் பட்டது.] 

தென் தாய்லாந்தில், கோலோக் என்பது ஒரு சுற்றுலாச் சிறுநகர். அங்கே இருந்து 70 கி.மீ. தொலைவில் ஓர் அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்குள் பான் சுல்லாபோர்ன் (Ban Chulabkorn) என்கிற ஒரு காட்டுக் கிராமம். அங்கே 260 முன்னாள் மலாயாக் கம்யூனிஸ்டுகள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுடன் அவர்களின் மனைவி பிள்ளைகள், உறவினர்கள் என்று மொத்தம் 460 பேர் இருக்கின்றனர்.

மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டுத் தமிழர் ஆசீர்வாதம்
அந்தக் குடும்பங்களில் எஞ்சி இருப்பது ஒரே ஒரு தமிழர்க் குடும்பம். குடும்பத் தலைவரின் பெயர் ஆசிர்வாதம். வயது 75. பேராக் மாநிலத்தில் 1939-ஆம் ஆண்டு பிறந்தவர்.  ஒரு தாய்லாந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, அங்கேயே வாழ்ந்தும் வாழ்கிறார். இவர்தான் மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டுத் தமிழர்.

சொந்தக்காரர்கள் பார்க்க விரும்பவில்லை

சொந்த பந்தங்கள் எல்லாம் சுங்கை சிப்புட், தைப்பிங், கோலாகங்சார் பகுதிகளில் இருக்கின்றன. முன்பு மலாயா கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராக இருந்த ஒருவரை, சொந்தக்காரர் என்று சொல்லிக் கொள்ள, அவருடைய சொந்தக்காரர்களுக்கே விருப்பம் இல்லையாம். அதைப் பற்றி ஆசிர்வாதமும் கவலைப் படவில்லை.

Ban Chulabkorn welcomes you
கோலோக் நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் சுக்கிரின் (Sukhirin) எனும் ஒரு குறுநகரம் இருக்கிறது. அங்கு இருந்து 30 கி.மீ. தொலைவில் ஒரு பெரிய ஆழ்க் காடு. அந்தக் காட்டுக்குள் தான் அந்தச் சுல்லாபோர்ன் காட்டுக் கிராமம் இருக்கிறது. 

வெளியுலக மக்கள் அதிகம் போவது இல்லை

வெளியுலக மக்கள் அதிகம் போவது இல்லை. அப்படி ஒன்றும் அங்கே சுலபமாகப் போய் வந்து விடவும் முடியாது. கிராமத்திற்குப் போகும் மண் சடக்கில் மேடு பள்ளங்கள், குண்டு குழிகள், குட்டிக் குட்டி ஆறுகள், சின்ன பெரிய மண்சரிவுகள். இடை இடையே காட்டு யானைகளின் உருட்டல் மிரட்டல்கள். இவற்றை எல்லாம் தாண்டிப் போக மூன்று நான்கு மணி நேரம் பிடிக்கும். 

Ban Chulabkorn School
1989-ஆம் ஆண்டில், மலேசியா, தாய்லாந்து அரசாங்கங்களுடன் மலாயாக் கம்யூனிஸ்டு கட்சி ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி மலாயாக் கம்யூனிஸ்டுகள் தங்கி வாழ்வதற்கு தாய்லாந்து அரசாங்கம் ஒரு காட்டுப் பகுதியை ஒதுக்கிக் கொடுத்தது. அது இப்போது ஒரு கிராமமாக மாறிவிட்டது. அதுதான் இந்தச் சுல்லாபோர்ன் காட்டுக் கிராமம்.

ஆசீர்வாதம் பல முறை முயற்சிகள் செய்து விட்டார்

மலேசியாவிற்குத் திரும்பி, நிரந்தரமாகத் தங்குவதற்கு ஆசீர்வாதம் பல முறை முயற்சிகள் செய்து விட்டார். எல்லாமே தோல்வி. அவரிடம் சிவப்பு அடையாள அட்டை இருக்கிறது. அதை நீல நிறமாக மாற்றுவதற்கு முயற்சிகள் செய்து வருகிறார். 


அதற்காக வருடத்திற்கு ஒரு முறையாவது மலேசியாவிற்கு வந்து போகிறார். இதுவரையில் 10,000 ரிங்கிட்டிற்கு மேல் செலவு செய்து விட்டாராம். அவரே சொல்கிறார். இன்னும் நீலநிற அடையாள அட்டையும் கிடைக்கவில்லை. குடியுரிமையும் கிடைக்கவில்லை.

குடியுரிமை கிடைக்கவில்லை

மலாயாவை ஜப்பானியர்கள் கைபற்றிய போது, அவர்களை எதிர்ப்பதற்காக ஒரு விடுதலை முன்னணி உருவாக்கப்பட்டது. அதற்குப் பெயர், மலாயா விடுதலை முன்னணி. அந்த விடுதலை முன்னணியில், மலாயாவின் மூன்று இனங்களும் சரி சமமாகப் பங்கெடுத்துக் கொண்டன.

அன்றும் இன்றும்
ஜப்பானியர்களிடம் இருந்து மலாயாவை விடுவிக்க வேண்டும் என்று நிறைய கனவுகளுடன் சில பல இந்தியர்களும் போர்க் கொடி தூக்கினார்கள். இருந்தாலும், வரலாற்றுச் சுவடுகளில் இருந்து காணாமல் போனதுதான் மிச்சம்.

மலாயா விடுதலை முன்னணி

மலாயாவில் ஜப்பானியர்கள் சரண் அடைந்ததும், பிரிட்டிஷ்காரர்கள் வரும் வரையில், மலாயா விடுதலை முன்னணிதான், மலாயாவை 18 நாட்களுக்கு தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. ஆட்சியும் செய்தது. இந்த விஷயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். பிரிட்டிஷ்காரர்கள் மலாயாவிற்குத் திரும்பி வந்து ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். அந்தக் கட்டத்தில், மலாயா விடுதலை முன்னணி முற்றாகப் புறக்கணிக்கப் பட்டது. 


விரக்தி அடைந்த மலாயா விடுதலை முன்னணி, தன் பெயரை மலாயா கம்யூனிஸ்டு கட்சி என்று மாற்றிக் கொண்டது. மலாயாவைக் கைப்பற்ற பலப் பல போராட்டங்களைச் செய்தது. வெற்றி பெற முடியவில்லை. கடைசியில், அந்தக் கட்சியின் உறுப்பினர்கள், தென் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்தனர்.

1989-ஆம் ஆண்டு. மலாயாக் கம்யூனிஸ்டு கட்சியின் போராட்டம் ஓர் இறுதிக் கட்டத்திற்கு வந்தது. மலாயாக் கம்யூனிஸ்டு கட்சி, இனிமேல் ஆயுதங்களை எடுத்துப் போராட்டம் செய்யாது என்று அறிவித்தது. 

Asir with Reporters
தென் தாய்லாந்தில் ஹாட்ஞாய் எனும் நகரம் இருக்கிறது. அந்த நகரத்தில், மலேசிய தாய்லாந்து அரசாங்க அதிகாரிகளுக்கும், மலாயாக் கம்யூனிஸ்டு கட்சி அதிகாரிகளுக்கும் இடையே ஓர் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டது. 

அந்த ஒப்பந்தத்தில் ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது. மலாயாவைப் பூர்வீகமாகக் கொண்ட மலாயாக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள், மலேசியாவிற்குத் திரும்பலாம். நிரந்தரமாகத் தங்கலாம் என்பதே அந்த முக்கியமான அம்சம். அதை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டது.

ஆனால், அந்த அம்சம் சரியாக அமல்படுத்தப் பட்டதா என்பதுதான் ஒரு மில்லியன் டாலர் கேள்வி. சில பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்து இருக்கலாம். தெரியவில்லை. வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள்.

தள்ளாத வயதிலும் நீல நிற அடையாள அட்டைக்காக

அந்த வகையில் பாதிக்கப் பட்டவர்தான், மலாயாவின் கடைசி கம்யூனிஸ்டுத் தமிழர் ஆசீர்வாதம். தள்ளாத வயதிலும் நீல நிற அடையாள அட்டைக்காக அங்கேயும் இங்கேயும் அலைமோதிக் கொண்டு திரிகிறார். அரசியல்வாதிகள் கையை விரித்து விட்டனர். அரசாங்க அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதில், சொந்தக்காரர்கள் வேண்டாம் என்று வேறு சொல்லி விட்டார்கள். அதைப் பற்றி அவரும் கவலைப் படுவதாக இல்லை.
Siti Norkiah Mahmood Baginda (1920 - 07.04.2008)
முன்னாள் கம்யூனீஸ்டு மலாய்ப் பெண்
1952-ஆம் ஆண்டு. பேராக், சுங்கை சிப்புட் பகுதியில் பிறந்தவர் ஆசீர்வாதம். ஆனால், இப்போது சுல்லாபோர்ன் காட்டுக் கிராமத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இவருடைய மனைவி ஒரு தாய்லாந்து பெண். பெயர் ராஜம்மா சுலாங்போர்ன். உண்மையான தாய்லாந்து பெயர் சுலாங்போர்ன். திருமணத்திற்குப் பிறகு ராஜம்மா எனும் பெயரும் சேர்க்கப் பட்டது. ராஜம்மாவும் காட்டில் ஒரு கம்யூனிஸ்டாக அலைந்து திரிந்தவர்தான். 

இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். பெயர் சுமதி என்கிற திரேசா. இவர் ஒரு தாய்லாந்து பையனைத் திருமணம் செய்து கொண்டு, அதே சுல்லாபோர்ன் காட்டுக் கிராமத்தில்தான் வாழ்ந்து வருகிறார். ஆசீர்வாதம் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கை சிப்புட்டிற்கு வந்து போகிறார். அவர் வருவதும் போவதும் மலேசிய அரசாங்கத்திற்குத் தெரியும். அரசாங்கத்தால் மன்னிப்பு வழங்கப்பட்ட மனிதர் என்பது குடிநுழைவு அதிகாரிகளுக்கும் தெரியும்.

தன் வாழ்நாளில் 40 ஆண்டுகளைக் காடுகளில் கழித்தவர் இந்த ஆசீர்வாதம். அவர் சொல்கிறார். ‘பிரிட்டிஷ்காரர்களை விரட்ட வேண்டும். மலாயாவுக்குச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். அதுதான் என் இலட்சியமாக இருந்தது. அந்த இலட்சியத்தை அடைந்து விட்டேன்’. 

மலாயாக் காடுகளில் அவர் கால் படாத இடம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். பகாங் பிரேசர் மலைக் காடுகள், ரவூப் காடுகள், தம்பின் காடுகள், தஞ்சோங் மாலிம், சிலிம் ரீவர், தாப்பா, கேமரன்மலைக் காடுகள், தஞ்சோங் ரம்புத்தான், சிம்மோர், சுங்கை சிப்புட், பாகான் செராய், ஜாவி காடுகள், கிரிக் பெத்தோங் காடுகள் என்று அவருடைய காடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தென் தாய்லாந்துக் காடுகளில் நடந்த சண்டையில், காயம் அடைந்த போதுதான் தன் மனைவி சுலாங்போர்னைச் சந்தித்து இருக்கிறார்.

’துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டு நடக்க முடியாமல் கிடந்தேன். சாகப் போகிற நிலை. அப்போது என்னைக் கவனித்துக் கொள்ள சுலாங்போர்னை அனுப்பி வைத்தார்கள். நான் இப்போது உயிரோடு இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் மனைவிதான். 

இல்லை என்றால், காலில் சலம் வைத்து செத்துப் போய் இருப்பேன். தாக்குதல் நடந்த போது, என்னை முதுகில் சுமந்து கொண்டு காட்டுக்குள் ஓடி என் உயிரைக் காப்பாற்றினாள். இரண்டு மூன்று முறை துப்பாக்கிச் சூடுகள். உயிர் தப்பித்து விட்டோம். பிறகு, காட்டிலேயே திருமணம் செய்து கொண்டோம்’ என்கிறார் ஆசீர்வாதம்.

வயது என்னவோ அவருக்கு 70-க்கும் மேல் இருக்கலாம். ஆனால், தன் உடலை கட்டுக் கோப்பாக வைத்து இருக்கிறார். ஒவ்வொரு நாளும் காலையில் நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து விடுகிறார். பக்கத்தில் இருக்கும் அவருடைய ரப்பர் தோட்டத்தில் பால் மரம் சீவப் போய் விடுகிறார். 

சொந்தமாக ஆறு ஏக்கர் நிலம். ஏறக்குறைய 100 ரப்பர் மரங்கள். அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தில்தான் குடும்பம் நடக்கிறது. அந்த ஆறு ஏக்கர் நிலத்தை, தாய்லாந்து அரசாங்கம் 1990-இல் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது. அது ஒரு மனிதாபிமானத் தகவல்.

’என் மனைவி ஒரு தாய்லாந்து கம்யூனிஸ்டு. என்னோடு காட்டில் எதிரிகளுடன் சண்டை போட்டவர். பலமுறை சூடுபட்டு உயிர் தப்பி இருக்கிறார். எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இங்கே ஒரு தாய்லாந்துகாரரைத் திருமணம் செய்து கொண்டு, பக்கத்து வீட்டில்தான் இருக்கிறார்.’ 

’நான் ஓர் இந்தியராகப் பிறந்து வளர்ந்து இருந்தாலும், ஓர் இந்தியர் எப்படி வாழ்வார் என்பதை அடியோடு மறந்து விட்டேன். அது எனக்குத் தெரியாமலேயே போய் விட்டது. ஒரு கட்டத்தில் என்னுடன் பகாங் காட்டில் 85 இந்தியர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் இப்போது இல்லை. நான் மட்டும்தான் இருக்கிறேன். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. பலர் என் கண் முன்னாலேயே செத்துப் போனார்கள்.’ என்று ஆசீர்வாதம் சொல்கிறார்.

1989-ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, முன்னால் கம்யூனிஸ்டு உறுப்பினர்களுக்கு இரண்டு விதமான வாய்ப்புகள் வழங்கப் பட்டன.  முதல் வாய்ப்பு. மலேசியாவுக்குத் திரும்பிப் போகிறவர்கள் திரும்பிப் போகலாம். ஒரு மாதத்திற்கு முன்னூறு ரிங்கிட் வீதம் மூன்று வருடங்களுக்கு வாழ்க்கைப்படி கொடுக்கப்படும். அதற்குப் பிறகு அவர்களாகவே சொந்தமாக மலேசியாவில் வேலை தேடிக் கொள்ள வேண்டும். 

இரண்டாவது வாய்ப்பு. சுல்லாபோர்ன் காட்டுக் கிராமத்தில் தங்கிக் கொள்ள விரும்புகிறவர்கள், அங்கேயே நிரந்தரமாகத் தங்கிக் கொள்ளலாம். கிராமத்தில் தங்கிக் கொள்பவர்களுக்கு தாயலாந்து அரசாங்கம் ஒரு சலுகை வழங்கியது. மாதத்திற்கு 55 ரிங்கிட் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வாழ்க்கைப்படி கொடுக்கப்படும். அதே சமயத்தில் தங்குவதற்கு ஒரு வீடும், ஆறு ஏக்கர் நிலமும் வழங்கப்படும். இரண்டு வாய்ப்புகளில், ஏதாவது ஒன்றை அவர்கள் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

அதில் இரண்டாவதை ஆசீர்வாதம் தேர்ந்து எடுத்தார். அதனால்தான் அவருக்கு நீல நிற அடையாள அட்டை கிடைப்பதில் இப்போதைக்குப் பிரச்சினை. இந்தக் கிராமத்தில் வாழ்பவர்களுக்கு தாய்லாந்து அரசாங்கம் நிறைய உதவிகளைச் செய்து வருகிறது. 

ஆசீர்வாதம் தன் காட்டு வாழ்க்கையைச் சொல்கிறார். கேளுங்கள். ’எனக்கு பதினொரு வயது இருக்கும். என்னுடன் நான்கு பேர். எல்லோரும் சுங்கை சிப்புட்டில் உள்ளவர்கள். கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து கொண்டோம். காட்டுப் பெருமாள் வழங்கிய பிரசார ஏடுகளை வீடு வீடாகக் கொண்டு போய் போட்டு விட்டு வந்தோம். 

பிரிட்டிஷ்காரர்களின் நெருக்குதல் அதிகமானது. இனிமேல் சுங்கை சிப்புட்டில் இருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்தோம். அதனால், காட்டுப் பெருமாளுடன் சேர்ந்து கொண்டு, சிம்மோர் காட்டில் தஞ்சம் அடைந்தோம். கடைசியில் 5-வது ரெஜிமெண்டில் அடைக்கலம் ஆனோம். 
அந்தச் சமயத்தில், 85 இந்தியர்கள் இருந்தார்கள். நாங்கள் அனைவரும் ‘இந்தியன் பிளாட்டூன்’ எனும் பிரிவில் இருந்தோம். 

அத்தனை பேரிலும் எனக்குத்தான் வயது குறைவு. எங்கள் பிரிவிற்குத் தலைவராகக் காட்டு பெருமாள் இருந்தார். அங்கே முத்துசாமி என்பவர் பிரசார ஆசிரியராக இருந்தார். அவர் எங்களுக்கு ஒவ்வொரு நாளும் மார்க்சிசம் எனும் கார்ல் மார்க்ஸ் சித்தாந்ததைச் சொல்லிக் கொடுத்தார். 

திடீரென்று ஒருநாள், காட்டு பெருமாள் காணாமல் போய் விட்டார். ஒரு சண்டையில் சுட்டுக் கொல்லப் பட்டதாகப் பின்னர் கேள்வி பட்டேன். எங்கள் பிரிவில் நான் மட்டும்தான் வயதில் மிக மிகச் சிறியவன். பதினொரு வயது. 

எனக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். அதனால், கிரிக் பெத்தோங் ஆழ் காட்டில் இருந்த தலைமையகத்திற்கு, என்னைக் கூட்டிச் சென்றார்கள். பெத்தோங் காட்டில் 1952-ஆம் ஆண்டில் இருந்து 1959-ஆம் ஆண்டு வரை இருந்தேன்’ என்று ஆசீர்வாதம் சொல்கிறார்.

பிரிட்டிஷ்காரர்களுடன் பயங்கரமான சண்டை

1959-ஆம் ஆண்டு அவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. பிரிட்டிஷ்காரர்களுடன் பயங்கரமான சண்டை. அவருடைய நண்பர்கள் பலர் இறந்து போனார்கள். பெத்தோங் காடுகள் மலேசிய  தாய்லாந்து எல்லையில் இருக்கிறது. 

பெத்தோங் சம்பவத்திற்குப் பிறகு, பகாங் காட்டிற்கு ஆசீர்வாதம் அனுப்பப் பட்டார். அவருடன் ஆளவான் எனும் இன்னொரு தமிழரும் சேர்ந்து கொண்டார். பெத்தோங் காட்டில் இருந்து பகாங் காட்டிற்குச் சென்று சேர ஒரு மாதம் பிடித்தது. எல்லாமே காட்டுவழிப் பயணம். 

இப்போது பாம்பு கடித்தால் விஷம் ஏறுவது இல்லையாம்

பல உயரமான மலைகளை ஏறி இறங்க வேண்டும். பல ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும். அன்றாடம் மழை பெய்யும். அடைக் குளிரில் நடுங்கிக் கொண்டே நடக்க வேண்டும். 

தேள், பூரான், பாம்புகள் கடித்துவிடும். அட்டைகள் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கும். பலமுறை பாம்புகள் கொத்தி இருக்கின்றன. பாம்பு கடித்துக் கடித்து உடம்பு எல்லாம் மரத்துப் போய் விட்டது என்று சொல்கிறார். இப்போது பாம்பு கடித்தால் விஷம் ஏறுவது இல்லையாம். 

மலைப் பாம்புகளை சமைத்துச் சாப்பிட்டு இருக்கிறார்

காட்டில் சொந்தமாக உணவைத் தேடிக் கொள்ள வேண்டும். போகிற போக்கில் ஆற்றில் கிடைக்கும் மீன்களைப் பிடித்துச் சுட்டுச் சாப்பிடுவார்கள். சமயங்களில் மலைப் பாம்புகளையும் சமைத்துச் சாப்பிட்டு இருக்கிறார்கள். 

அடிக்கடி கரடி, காட்டு மாடு, காட்டுப் பன்றி, புலி, யானை போன்ற காட்டு விலங்குகளிடம் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து. அது மட்டும் இல்லை. பிரிட்டிஷ்காரர்களின் துப்பாக்கிகளிடம் இருந்தும் தப்பிக்க வேண்டும். ரொம்பவும் கஷடப்பட்டு இருக்கிறார்கள். 

எல்லாமே காட்டுப் பாதைகள்

காலப் போக்கில், பகாங் காட்டில் இருந்த இந்தியப் பிரிவு மொத்தமாக அழிக்கப் பட்டு விட்டது. ஒரு சிலர் மட்டுமே எஞ்சி இருந்தனர். அப்துல்லா சி.டி.யின் கீழ் இருந்த போது, ஆசீர்வாதத்திற்குச் செய்திப் பட்டுவாடா செய்யும் வேலை. அதாவது ஒரு காட்டில் இருந்து இன்னொரு காட்டிற்குச் செய்திகளைக் கொண்டு போகும் வேலை. மிகவும் ஆபத்தான வேலை. ஒரு செய்தியைக் கொண்டு போய்ச் சேர்க்க பல நாட்கள் பிடிக்கும்.

ரவூப் காட்டில் இருந்து பிரேசர் மலைக்குப் போக வேண்டும். அங்கு இருந்து தஞ்சோங் மாலிம் போக வேண்டும். சாலைகளைப் பயன்படுத்த முடியாது. எல்லாமே காட்டுப் பாதைகள்தான். அதுவும் தனி ஆளாகத்தான் போக வேண்டும். துணைக்கு யாரையும் அனுப்ப மாட்டார்கள். பிடிபட்டால் அல்லது கொல்லப் பட்டால் ஓர் உயிர்தான் போகும். அதனால் ஓர் உயிரோடு போகட்டும் என்று இரண்டு பேரை அனுப்ப மாட்டார்கள்.

பேராக் காடுகளில் பெரிய பெரிய மான்கள்

ஆசீர்வாதம் கொஞ்ச காலம் காட்டில் ’அலுவலகப் பையனாக’ பணி புரிந்தார். அதற்கு அப்புறம் காட்டு விலங்குகளை வேட்டையாடும் வேலை. அதாவது காட்டில் இருந்த மற்ற உறுப்பினர்களுக்காக உணவு தேடும் வேலை. இரண்டு மூன்று பேராகச் சேர்ந்து காட்டு விலங்குகளை வேட்டையாடப் போய் விடுவார்கள். 

ஓர் இரையைச் சுடுவதற்கு ஒரே ஒரு துப்பாக்கி ரவையை மட்டும்தான் பயன்படுத்த முடியும். அந்தச் சமயத்தில் பேராக் காடுகளில் பெரிய பெரிய மான்கள் இருந்ததாக ஆசீர்வாதம் சொல்கிறார்.

காட்டு விலங்குகளை வேட்டையாடும் போதுதான், துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் வித்தைகளையும் ஆசீர்வாதம் கற்றுக் கொண்டார். ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி அடைந்த பின்னர், சண்டைக் களத்தில் இறக்கப் பட்டார்.

ஏறக்குறைய 40 தடவைகளுக்கு மேல் துப்பாக்கிச் சண்டைகளில் ஈடுபட்டு இருக்கிறார். பெரும்பாலும் பிரிட்டிஷ்காரர்கள் அல்லது குர்க்கா படையினருடன் மோதல்கள். பல முறை காயம் பட்டு இருக்கிறார். உடல் முழுமையும் தளும்புகள் உள்ளன. அந்தத் தளும்புகள் வனவாசத்தின் வரலாறுகளைப் பாடிக் கொண்டு இருக்கின்றன.

‘நீங்கள் ஒரு தேசியவாதியா அல்லது பயங்கரவாதியா’ என்று கேட்ட போது ஆசீர்வாதம் கோபம் அடைகிறார். ‘சிலாங்கூர் பத்தாங் காலி எனும் இடத்தில், ஆங்கிலேயர்கள் பல அப்பாவி மக்களைக் கொன்றார்கள். கம்பார் நகரில் பல விவசாயிகளைச் சுட்டுக் கொன்றார்கள். சிலிம் ரிவர் எனும் இடத்தில் ஒரு கிராமத்தையே நெருப்பு வைத்து கொளுத்தினார்கள். 

அதனால், ஆங்கிலேயர்களைப் பயங்கரவாதிகள் என்று சொல்கிறார்களா. இல்லையே. பாவம் செய்தவர்கள் அவர்கள். ஆனால், பழியை எங்கள் மீது போட்டு விட்டார்கள். அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது. அதனால் தப்பித்துக் கொண்டார்கள்’ என்றார்.
 
‘ஒன்றை மட்டும் மறந்துவிட வேண்டாம். அது ஒரு போர்க் காலம். நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொள்ளவில்லை என்றால் நிச்சயமாக நாங்கள் கொல்லப் படுவோம். 

ஒரு நாட்டின் சுதந்திரத்திற்காக நாங்கள் சண்டை போட்டோம். ஆனால், ஆங்கிலேயர்கள் ஒரு காலனி நாடு சுதந்திரம் அடைவதைத் தடுத்து நிறுத்துவதற்காகப் போர் செய்தார்கள். 

ஒரு வேதனையான விஷயம் என்ன தெரியுமா. நான் நடந்து வந்த பாதையில் எவ்வளவோ வேதனையான கசப்புகள். எவ்வளவோ இரத்தம் சிந்தி இருக்கிறேன். 

ஆனால், அவை எல்லாம் என் நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்பு செய்யப் பட்டவை. யாரும் சுதந்திரத்தை ஒரு தட்டில் வைத்து, இந்தா எடுத்துக்கோ என்று சும்மா ஒன்றும் கொடுத்துவிட மாட்டார்கள். 

ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் சுதந்திரம் கிடைத்தது என்பது எல்லாம் சும்மா பேச்சு. நாங்கள் எங்கள் இரத்ததைச் சிந்தினோம். எங்களில் பல உயிர்களை இழந்து இருக்கிறோம். அதுதான் உண்மை. நாட்டின் வரலாறு மறுபடியும் திருத்தி எழுதப்பட வேண்டும்’ என்று பொங்கி எழுகிறார் ஆசீர்வாதம்.

சுங்கை சிப்புட்டிற்கு அடிக்கடி போய் வருகிறார். அவருடைய உறவினர்கள் அங்கே இருக்கிறார்கள். அங்கே உள்ளவர்களில் சிலர் அவரைப் பார்க்க இன்னும் பயப்படுகின்றனர். அரசாங்கமே பச்சைக் கொடி காட்டி விட்டது. அப்புறம் ஏன் இன்னும் பயந்து சாக வேண்டும் என்று ஆசீர்வாதம் புன்னகை செய்கிறார். 

அவருடைய கடைசி ஆசை என்ன. ஒன்றே ஒன்று. மலேசியாவின் நீலநிற அடையாள அட்டை கிடைக்க வேண்டும் என்பதே அந்தக் கடைசி ஆசை. ‘நான் ஒரு மலேசிய பிரஜை. நான் சுங்கை சிப்புட்டில் பிறந்தேன். அங்கேதான் வளர்ந்தேன். இருந்தாலும் எனக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை. 

பல அரசியல்வாதிகளைப் பார்த்து விட்டேன். பல அரசாங்க அதிகாரிகளையும் பார்த்து விட்டேன். ஆனால், பலன் இல்லை. எனக்கு மட்டும்தான் குடியுரிமை கிடைக்கவில்லை. மற்றவர்களுக்கு எல்லாம் கிடைத்து விட்டது.’ வேதனைப் படுகிறார் ஆசீர்வாதம். 

ஒன்று மட்டும் உண்மை. காலனித்துவ ஆட்சியில், யார் யார் பிரிட்டிஷ்காரர்களை ஆதரித்தார்களோ அவர்கள் எல்லாம் பாசமிகு பங்காளிகள் ஆனார்கள். யார் யார் அவர்களை எதிர்த்தார்களோ அவர்கள் எல்லாம் ஜென்மாந்திர விரோதிகளாக மாறினார்கள். அது பிரிட்டிஷ்காரர்கள் பிரியப் பட்ட சத்திய சோதனை.

ஆசீர்வாதம் என்கிற ஒரு சாமான்ய மனிதரை மலேசிய இந்தியர்களும் மறந்து விட்டார்கள். மலேசிய வரலாறும் மறந்துவிட்டது. காலத்தால் மறக்கப்பட்ட மனிதர்களில் ஆசீர்வாதமும் ஒருவர்.

என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆசீர்வாதம் என்பவர் ஒரு தேசியவாதியா இல்லை ஒரு பயங்கரவாதியா என்பதைக் காலம்தான் முடிவு செய்ய வேண்டும். 

இருந்தாலும், ஆசீர்வாதம் என்பவர் ஓர் இலட்சியத்திற்காக வாழ்ந்து இருக்கிறார். வாழ்நாளில் பெரும் பகுதியைக் காட்டில் கழித்து இருக்கிறார். நல்லதோ கெட்டதோ அவரோடு இருக்கட்டும். அவரோடு மறைந்தும் போகட்டும். மறுபடியும் ஓர் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கப் போவது இல்லை. ஒரு பழம் கட்டை ஒரு சகாப்தம் ஆகிறது.

[மலேசிய கினி இணைய ஊடகத்திற்கு, ஆசீர்வாதம் அளித்த பேட்டி ’யூடியூப்பில்’ இருக்கிறது. அதன் தலைப்பு: The last of CPM_s Indian communists.  இணைய முகவரி: http://www.youtube.com/watch?v=neQ3rXisNL0 அதை ஆதாரமாகக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப் பட்டது.]