கண்ணீர் மழையில் காஷ்மீர் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணீர் மழையில் காஷ்மீர் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 மார்ச் 2019

கண்ணீர் மழையில் காஷ்மீர் - 2

வட இந்தியாவில் 1801-ஆம் ஆண்டில் சீக்கியப் பேரரசை உருவாக்கியவர் ரஞ்சித் சிங். பாயும் சிங்கமாக விளங்கியவர். வீறு கொண்ட ராஜாவாக வாழ்ந்து காட்டியவர். பஞ்சாப் சிங்கம் என்று பாரத மக்களால் புகழப்பட்டவர்.

Maharaja Ranjit Singh, the Lion of Punjab

1830-ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களுக்கும் ரஞ்சித் சிங்கிற்கும் மோதல். அதுவே ஆங்கிலேய – சீக்கியப் போராக விஸ்வரூபம் எடுத்தது. 

 


ஆங்கிலேயப் பீரங்கிப் படைகளுக்கு முன்னால் சீக்கியர்களின் கத்தி முனைகள் மழுங்கிப் போயின. ரஞ்சித் சிங் தோற்கடிக்கப் பட்டார்.

அவரைத் தோற்கடிக்க குலாப் சிங் என்பவர்தான் ஆங்கிலேயர்களுக்கு இரகசியமாக உதவிகள் செய்தார். அதற்கு நன்றிக் கடனாகக் குலாப் சிங்கிற்குக் காஷ்மீர் ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டது. ஆக இப்படித் தான் ஆங்கிலேயர்களின் பிடிக்குள் காஷ்மீர் சிக்கியது.

1857-ஆம் ஆண்டு காஷ்மீர் மன்மத ராசா குலாப் சிங் மரணம் அடைந்தார். அவருக்குப் பின்னர் அவருடைய மகன் ரன்பீர் சிங் என்பவர் 1857 முதல் 1885 வரை காஷ்மீரை ஆட்சி செய்தார். அதற்குப் பின்னர் ரன்பீர் சிங்கின் மகன் பிரதாப் சிங் 1925-ஆம் ஆண்டு வரையிலும் ஆட்சி செய்தார். 




தாத்தா, மகன், பேரனைத் தொடர்ந்து அந்த வரிசையில் குலாப் சிங்கின் கொள்ளுப் பேரன் ஹரி சிங் வருகிறார். 1925-ஆம் ஆண்டில் இருந்து 1948 வரை இவருடைய ஆட்சி நீடித்தது. அது ஒரு சர்வாதிகார ஆட்சி.

ஹரி சிங் ஆட்சி காலத்தில் காஷ்மீரில் 80 விழுக்காட்டு மக்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள். எஞ்சிய 20 விழுக்காட்டினர் சீக்கியர்கள், இந்துக்கள், பௌத்தர்கள் ஆகும். 




அந்தக் காலக் கட்டத்தில் காஷ்மீரை ஆட்சி செய்த சீக்கிய மன்னர்கள் ஒரு வகையில் சர்வாதிகார மன்னர்களாகவே ஆட்சி செய்து வந்து இருக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்குப் பாதகமாகப் பல சட்டதிட்டங்களைக் கொண்டு வந்தார்கள். பெருநாள் காலங்களில் மாடுகளை வெட்டினால் வெட்டியவர்களுக்கு மரண தண்டனை. ஸ்ரீநகரில் இருந்த ஜாமியா பள்ளிவாசலைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை உத்தரவு. காலையில் பள்ளிவாசல்களின் அசான் தொழுகை ஒலிகளுக்கும் தடை. 




இப்படி நிறைய சமூகச் சமய உரிமை மீறல்கள். இவை மக்களிடையே பெரும் கொந்தளிப்புகளை உண்டாக்கின. மன்னர் ஹரி சிங்கின் ஆட்சியில் மக்களுக்கு வெறுப்பும் ஏற்பட்டது.

அதன் எதிரொலியாக 1931-ஆம் ஆண்டு காஷ்மீரில் ஒரு மக்கள் கிளர்ச்சி. அந்தக் கிளர்ச்சியை மன்னர் ஹரி சிங் இராணுவத்தைப் பயன்படுத்திப் பலவந்தமாக அடக்கி ஒடுக்கினார். இருந்தாலும் அந்த அடக்குமுறை தான் பின்நாட்களில் காஷ்மீரில் ஜனநாயகக் காற்று வீசுவதற்கு ஜன்னலைத் திறந்து விட்டது. 




இந்தக் கட்டத்தில் ஜன்னலைத் திற காற்று வரட்டும் என்று உலகப் புகழ்பெற்ற சாமியார் ஒருவர் சொன்னது நினைவிற்கு வருகிறது. மனோ ரஞ்சிதமான வாசகம். ஜன்னலைத் திற என்று சொன்னதும் அந்த நினைப்பு தான் வருகிறது. என்ன செய்வது. அந்தக் காப்பரெட் சாமியாரை நினைத்ததும் வந்துத் தொலைக்கிறதே. சரி விடுங்கள். நாம் காஷ்மீருக்கே போய் விடுவோம். எங்கே விட்டேன். ஆங். ஹரி சிங்.

காஷ்மீரில் சர்வாதிகாரப் பிரச்சினைகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன். அந்தச் சமயம் பார்த்து மன்னர் ஹரி சிங்கிற்கு இங்கிலாந்து அரசு ’சர்’ பட்டம் கொடுத்து கௌரவிப்பு செய்தது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது மாதிரியாகிப் போனது.




மக்களை அடக்கி வரி மீது வரியைச் சுமத்தினால்தான் மன்னர்கள் பேர் போட முடியும். அது காலாகாலத்துச் சித்தாந்தம். அப்போது மட்டும் அல்ல. எப்போதும் நடக்கிற விசயம்தான்.

அப்போது மன்னர்கள் செய்தார்கள். இப்போது நாட்டுத் தலைவர்கள் பலர் செய்து கொண்டு இருக்கிறார்கள். பழைய அரசாங்கம் போய் புதிய அரசாங்கம் வந்தாலும் வரியும் கிஸ்தியும் கையைக் கடிக்கவே செய்கின்றன. அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக மாறாமல் இருந்தால் சரி. என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

காஷ்மீர் மக்களின் கிளர்ச்சியை முன் எடுத்து நடத்துவதற்கு ஒரு தலைமைத்துவம் தேவைப் பட்டது. அப்போது இந்தியாவில் காந்தியடிகளின் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வந்த நேரம். சுதந்திரப் போராட்டத்தின் அனல் அலைகள் வீசிய நேரம். ஆக அந்த அனல் அலைகளின் தாக்கமும் காஷ்மீரிலும் பட்டுத் தெறித்தது. 





அதை இப்படியும் சொல்லலாம். இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சி. அதுவே காஷ்மீரில் மன்னராட்சிக்கு எதிரான கிளர்ச்சி. எதிரிகள் வேறு வேறாக இருந்தாலும் பிரச்சனை என்று பார்த்தால் இரண்டும் ஒன்றுதான்.

1932-ஆம் ஆண்டு அனைத்து ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டுக் கட்சி உருவாக்கப்பட்டது.

Kashmir Muslim Conference

காஷ்மீர் சிங்கம் என்று வர்ணிக்கப் பட்ட ஷேக் அப்துல்லா என்பவர்தான் அந்தக் கட்சியை உருவாக்கியவர்.

Sher-e-Kashmir - Lion of Kashmir

பொதுச் செயலாளராகச் சவுத்திரி குலாம் அபாஸ். ஆறு ஆண்டுகளாக அந்த இயக்கம் மக்களின் ஆதரவைத் திரட்டியது. அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடாக 1939-ஆம் ஆண்டில் தேசிய மாநாட்டுக் கட்சி பரிணாமம் அடைந்தது. இன்று வரையிலும் அந்தக் கட்சி தான் காஷ்மீர் அரசியலில் வலுவான ஓர் இடத்தில் நின்று ஒரு நிலைப்பாட்டையும் பேசி வருகிறது.





காஷ்மீர் மக்களின் எழுச்சியைக் கண்டு பதறிப் போன மன்னர் ஹரி சிங் தன்னுடைய சர்வாதிகார நடவடிக்கைகளில் இருந்து கொஞ்சம் கீழே இறங்கி வந்தார். 1934-ஆம் ஆண்டு சற்றே குறைந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு சட்டசபையை அமைத்துக் கொடுத்தார். 1939-ஆம் ஆண்டு காஷ்மீர் நீதித் துறையும் உருவாக்கப்பட்டது.

இருப்பினும் இறுதியான முடிவு எடுக்கும் அதிகாரம் தன்னிடம் இருக்கும் படி ஹரி சிங் பக்குவமாகப் பார்த்துக் கொண்டார். அது தான் அவர் ஆகக் கடைசியாக்க காஷ்மீர் மக்களுக்கு வழங்கிய குறைந்தபட்ச ஜனநாயகம் ஆகும். அதாவது துருப்புச் சீட்டு எப்போதுமே தன் கையில் இருக்கிற மாதிரி ஹரி சிங் பார்த்துக் கொண்டார்.




இந்தச் சமயத்தில் கீழே டில்லியில் இந்தியாவின் விடுதலைப் போராட்ட உணர்வுகள் உச்சத்தைத் தொட்டுக் கொண்டு இருந்தன. இந்திய அரசியல் வானில் காந்தி, அலி ஜின்னா, நேதாஜி, அம்பேத்கர் என நான்கு நட்சத்திரங்கள் நான்கு மையங்களாக மின்னிக் கொண்டு இருந்தனர். அதே அந்தச் சமயத்தில்தான் இந்தியத் துணைக் கண்டம் பிளவுபட்டுப் போய்க் கொண்டும் இருந்தது.

இந்தியத் துணைக் கண்டம் பிளவுபட்டுப் போனதற்கு மூன்று முக்கியக் காரணங்களைச் சொல்லலாம்.

முதலாவது: இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் இறுக்கமான இந்துவாதத் தீவிரப் போக்கு.

இரண்டாவது: இந்திய பாஸிச அமைப்புகளின் முஸ்லிம் விரோதப் போக்கு.

மூன்றாவது: முகமது அலி ஜின்னாவின் அரசியல் பிடிவாதம். 




இந்த மூன்று காரணங்களினாலேயே இந்தியத் துணைக் கண்டம் பிளவுபட்டது என்று நான் இன்றைக்கும் என்றைக்கும் துணிந்து சொல்வேன்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அங்கே இங்கிலாந்திலும் பெரிய பெரிய ஆட்சி மாற்றங்கள்; பெரிய பெரிய தடுமாற்றங்கள். தன்னுடைய ஆக்கிரமிப்பில் இருந்த நாடுகளுக்கு விடுதலை
கொடுத்துவிட்டு கைகழுவிக் கொள்வோம் என்று இங்கிலாந்து திட்டம் போட்டுக் கொண்டு இருந்த நேரம்.


அந்தச் சமயத்தில் இங்கிலாந்திற்கு ரொம்ப ரொம்ப தலைவலி கொடுத்த ஒரு நாடு இருந்தது என்றால் அது இந்தியாவாகத் தான் இருக்க முடியும். அப்பேர்ப்பட்ட தலைவலிக் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டு இருந்தது.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தால் பாகிஸ்தான் என்கிற ஒரு புதிய நாடு உருவாவதைத் தவிர்க்க முடியாது என்பதை ஆங்கிலேயர்கள் திட்டவட்டமாகத் தெரிந்து கொண்டார்கள்.

இந்தியாவில் பாகிஸ்தான் என்கிற ஒரு புதிய நாடு உருவாகிற ஒரு பதட்டமான நிலை. இந்தக் கட்டத்தில் இந்தியா பிளவுபடுவதைக் காந்திஜி விரும்பவில்லை. அதில் அவருக்கு உடன்பாடே இல்லை. இந்தியா பிளவுபடுவதைத் தடுத்து நிறுத்த எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தார்.




இருந்தாலும் இந்தியாவின் தலையெழுத்தை யாராலும் தடுக்கவும் முடியவில்லை. நிறுத்தவும் முடியவில்லை. காந்திஜியின் விருப்பத்திற்கு எதிராக இந்தியத் துணைக் கண்டம் இரண்டாகப் பிரிக்கப் பட்டது.

1947 ஆகஸ்ட் 14-ஆம் தேதி பாகிஸ்தான் என்கிற ஒரு புதிய நாடு உருவானது. மறுநாள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

ஒன்று சொல்வேன். நன்றாகக் கேளுங்கள். ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா, ராஜாஜி எனும் ராஜகோபாலாச்சாரியார், வல்லபாய் பட்டேல் ஆகிய நான்கு பேரும் இந்திய அரசியல் கூண்டில் சர்க்கஸ் வித்தை காட்டிய பலே கில்லாடிகள். இந்திய வரலாற்றில் இணைபிரியா நான்கு கில்லாடிகள் என்றுகூட சொல்லலாம். 




1969-ஆம் ஆண்டு நான்கு கில்லாடிகள் எனும் ஒரு திரைப்படம் வெளியானது. அதில் ஜெயசங்கர், மனோகர், தேங்காய் ஸ்ரீநிவாசன், சுருளி ராஜன் ஆகிய நான்கு பேர் நடித்து இருந்தார்கள். நான்கு பேரும் நடிப்பரசு நாயகர்களாக நன்றாக நடித்து இருந்தார்கள்.

ஆனால் இவர்களுக்கு முன்னாலேயே; 20 ஆண்டுகளுக்கு முன்னாலேயே வேறு நான்கு கில்லாடிகள் பக்காவாக நடித்து நல்ல ஒரு நாடகத்தை அரங்கேற்றம் செய்து விட்டார்கள். அந்த நாடகத்தின் பெயர் தான் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை.

அந்த நால்வரின் அரசியல் சுயநலக் காரணங்களுக்கு முன்னால் காந்திஜியின் சத்தியமான சமாதானம் அடிபட்டுப் போனது. மனித நேயம், மனித உரிமைகள், சகோதரத்துவம் என்று சொல்கிற எல்லாமே அந்த நேரத்தில் பலிக்கடாவாகிப் போயின. 




இந்தக் கட்டத்தில் காஷ்மீர் தனிமையில் தடுமாறிக் கொண்டு இருந்த நேரம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு காஷ்மீர் என்கிற கிளியைப் பிடித்துக் கிளி ஜோசியம் பார்க்கலாம். கொஞ்சம் காசு பணத்தைப் பார்க்கலாம் என்று இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே கட்சி கட்டின. தோள்களை உயர்த்தி நின்றன.

அப்புறம் என்ன. ஒன்றுக்கு ஒன்று தெரிந்தே சதித் திட்டங்களைத் தீட்டின. அப்போது உருவான அந்த அரசியல் சிக்கல்தான் இப்போதைய காஷ்மீரில் இன்று வரையில் முகாரி ராகங்களை இடைவிடாமல் பாடிக் கொண்டு இருக்கிறது. புரியுதுங்களா.

காஷ்மீர் எனும் நிலப்பகுதி மொத்தத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக், பூஞ்ச், கில்கிட், பல்கிஸ்தான் என ஆறு பகுதிகளைக் கொண்டது. 1947-ஆம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்து போகும் போது ’நாங்கள் யார் பக்கமும் சேர மாட்டோம். தனித்தே இருப்போம்’ என காஷ்மீர் மன்னர் ஹரி சிங் சொல்லி இருக்கிறார். 




காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அதனால் ஹரி சிங்கிற்குப் பாகிஸ்தான் மீது எப்போதுமே ஒரு பயம். அதே சமயத்தில் இந்தியாவின் மீது இனம் தெரியாத பாசமும் நேசமும் வளர்ந்து கொண்டு வந்தன. ரோசாப்பூ மன்மத ராசா நேருவிற்கும் காஷ்மீரின் காதல் கடிதங்கள் போய்க் கொண்டுதான் இருந்தன.

இந்த விசயம் பாகிஸ்தானுக்கும் தெரியும். ஆனால் ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு புன்னகை செய்தது. அந்தப் புன்னகைதான் மண்ணாசை வடிவத்தின் மறு பிறவி. இதன் தொடர்ச்சியை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.










(தொடரும்)

சான்றுகள்

1. Lafont, Jean-Marie Maharaja Ranjit Singh, Lord of the Five Rivers. Oxford: Oxford University Press, 2002 ISBN 0-19-566111-7

2. Maharaja Ranjit Singh and his times, by J. S. Grewal, Indu Banga. Published by Dept. of History, Guru Nanak Dev University, 1980.

3. Khushwant Singh (2008). Ranjit Singh. Penguin Books. pp. 25–26. ISBN 978-0-14-306543-2.

4. Snedden, Christopher (2013), Kashmir: The Unwritten History. HarperCollins India. ISBN 9350298988.

5. Government of Azad Jammu and Kashmir; http://www.ajk.gov.pk/