யமுனா சங்கரசிவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யமுனா சங்கரசிவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 மார்ச் 2019

யமுனா சங்கரசிவம்

 மைக்கல் ஜாக்சனுடன் நடனம் ஆடிய தமிழ்ப்பெண்

நடனச் சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்சன். அனைவரும் அறிந்த அற்புதமான பிறவிக் கலைஞன். துள்ளிசை உலகில் முடிசூடா துள்ளல் மன்னன். கோடிக் கோடியான மக்களைத் துள்ள வைத்த துள்ளிசைக் காவியன். 


நளினமான உடல் வாகு. நளினமான உடல் அசைவுகள். கண்களில் மிதந்து வரும் நெருப்பு துண்டங்கள். அறுந்த பட்டத்தின் வால் முனைகளாய்த் துவண்டு விழும் துள்ளல் நயனங்கள். அந்தச் செல்லப் பிள்ளையை உச்சத்திற்கே கொண்டு போய் சிகரம் பார்க்க வைத்தன.

ஒரே வார்த்தையில் சொல்கிறேன். சாகாவரம் பெற்ற சகாப்தங்களில் அவருக்கு நிகர் அவராகவே வாழ்ந்து காட்டியவர். ஆனாலும் வாழ்ந்து கெட்ட மனிதராக மறைந்து போனார். அதுதான் வேதனையிலும் வேதனையான விசயம். பாவம் அவர்.



அவருடன் ஒரு தமிழ்ப்பெண் நடனம் ஆடி இருக்கிறார். இந்த விசயம் சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது. இது 1991-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி.

அந்தத் தமிழ்ப்பெண் நயனங்களின் கலை விருந்தாய்; மிக நளினமாய் நடனம் ஆடி தமிழ் உலகத்தையே ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். அவர் தான் யமுனா சங்கரசிவம்.

Yamuna Sangarasivam


இந்தியாவில் பல தீர்த்த நதிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் யமுனா என்கிற அழகிய தேவதை.

யமுனா என்றதும் பொம்மலாட்டம், பொன்னூஞ்சல் சீரியல்கள் முடிந்து யமுனா என்கிற ஒரு சீரியல் வந்ததே. ஞாபகம் இருக்கிறதா. அந்த யமுனா இல்லை. அது சீரியல் யமுனா. அந்த யமுனா இங்கே வேண்டாம். நான் சொல்வது புனிதமான யமுனா. புண்ணியம் செய்யும் யமுனா. அந்தப் புண்ணியப் புனித நதியின் பெயர் தான் இவருக்கும் வைக்கப் பட்டது.

யமுனா சின்ன வயதிலேயே நடனம் ஆடுவதில் அதீத நாட்டம் காட்டி வந்தார். அதனால் அவரின் பெற்றோர் பரத நாட்டிய வகுப்புகளுக்கு அவரை அனுப்பி வைத்தார்கள். அதன் பின்னர் ஓடிசி நாட்டியத்திலும் நன்கு பயிற்சி பெற்றார். தேர்ச்சியும் பெற்றார்.



யமுனா 1964-ஆம் ஆண்டு மே மாதம் 6-ஆம் தேதி வட இலங்கைப் பகுதியில் பிறந்தவர். அங்கேயே வளர்ந்தவர். அங்கேயே தொடக்கப் பள்ளிக்குச் சென்றவர். உயர்நிலைக் கல்வியைத் தலைநகர் கொழும்புவில் மேற்கொண்டார்.

நாட்டியத்தில் அதிக தீவிரம் காட்டியதால் அதைப் பற்றியே மேற்கல்வியையும் தொடர்ந்தார். பல்கலைக்கழகப் படிப்பை அமெரிக்காவில் தொடர்ந்தார். அங்கே அவர் படித்துக் கொண்டு இருக்கும் போது தான் மைக்கல் ஜாக்சன் மூலமாக ஓர் அரிய வாய்ப்பு அவரின் வாசல் கதவைத் தட்டியது. 



1991-ஆம் ஆண்டில் பிளேக் ஆர் வாயிட் (Black or White) எனும் காணொலியைத் தயாரிக்க மைக்கேல் ஜாக்சன் திட்டம் வகுத்து இருந்தார். அந்தக் காணொலிப் படத்தில் நடிப்பதற்கும் நடனங்கள் ஆடுவதற்கும் கலைஞர்கள் தேவைப் பட்டார்கள். பத்திரிகைகள் வாயிலாக விளம்பரங்கள் செய்யப் பட்டன.

மைக்கேல் ஜாக்சன் நிகழ்ச்சி என்றால் சும்மாவா. பல்லாயிரம் பேர் விண்ணப்பம் செய்தார்கள். அவர்களில் 3000 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் பட்டார்கள் அவர்களில் ஒருவர் யமுனா. இவரும் பேட்டிக்குச் சென்றார். சில நிமிடங்கள் பேட்டி. 



அத்தனை ஆயிரம் பேர் பேட்டிக்குப் போய் இருந்தாலும் யமுனா மட்டுமே தேர்வு செய்யப் பட்டார். அவருடைய நாட்டிய நளினங்கள் தேர்வாளர்களைப் பெரிதும் கவர்ந்து விட்டது.

ஆனால் அந்தப் பேட்டியின் மூலமாக அவர் ஒரே நாளில் ஆசிய ஐரோப்பிய நாடுகளில் புகழ் பெறுவார் என்று அவரே நினைத்துப் பார்க்கவில்லை.

உலகப் புகழ் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் விரைவுசாலைப் பகுதியில் 14 மணி நேரம் படப்பிடிப்பு நடந்தது. அந்தச் சமயத்தில் யமுனா லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனிதவியல் துறையில் மாஸ்டர்ஸ் பட்டத்திற்குப்  படித்துக் கொண்டு இருந்தார்.



லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிறுவனம் அங்கே தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வந்தது. அதன் பெயர் எம்.டி.வி. தொலைக்காட்சி நிறுவனம். ஏற்கனவே மைக்கல் ஜாக்சனின் திரில்லர்; பில்லி ஜீன்; பீட் இட்; ரோக் வித் யூ போன்ற வீடியோ தொகுப்புகளை ஒளிபரப்பு செய்து இருக்கிறது.

அதே அந்த நிறுவனம் தான் மைக்கல் ஜாக்சனின் இந்த பிளேக் ஆர் வாயிட் எனும்  காணொலியையும் ஒளிபரப்பு செய்ய உரிமம் பெற்று இருந்தது. பிளேக் ஆர் வாயிட் காட்சித் தொகுப்பில் தான் யமுனா நடனம் ஆடி இருந்தார். தொலைக்காட்சியின் வழியாக பிளேக் ஆர் வாயிட் ஒளிபரப்பானது. முதல்னாள் ஒளிபரப்பில் 500 மில்லியன் பேர் பார்த்து ரசித்து இருக்கிறார்கள்.

அதன் பின்னர் யமுனாவைப் பற்றி பலருக்கும் தெரிய வந்தது. கொஞ்ச நேரக் காட்சிகள் தான். இருந்தாலும் உலகப் புகழ் பெற்றுவிட்டாரே. அதுதானே பெரிய விசயம். 



பார்ப்பவர்கள் எல்லாம் அவரைச் சுழ்ந்து கொண்டார்கள். புன்னகை செய்தார்கள். நீங்களா அவர் (Are you the one) என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள்.

பிளேக் ஆர் வாயிட் காணொலி பல நாடுகளின் நடனங்களை ஒன்றிணைத்துப் பிரதிபலிக்கும் ஒரு காணொலிக் காட்சியாகப் படமாக்கப் பட்டது. அதில் மைக்கல் ஜாக்சனுடன் யமுனா ஒடிசி நடனம் ஆடினார்.

யமுனா ஆறு வயதில் நடனம் கற்றுக் கொண்டாலும் இன்றைய வரைக்கும் ஒடிசி, பரத நடனங்களை அவர் மறக்கவில்லை. உலகின் பல நாடுகளின் முக்கிய நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி இருக்கிறார். இப்போது அவருக்கு வயது 55. ஆடுவதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு வருகிறார்.



முதலில் அவர் படித்தது பரதநாட்டியம் தான். அதன் பிறகு தான் ஒரிசாவிற்குச் சென்ரார். ஒடிசி நடனத்தையும் கற்றுக் கொண்டார். ஒரிசா என்பது இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாகும். ஆந்திரப் பிரதேசத்திற்கு வடக்கே உள்ளது. இதன் உண்மையான பெயர் ஒடிசா.

இந்த ஒடிசா எனும் பெயரில் இருந்துதான் ஒடிசி எனும் நாட்டியப் பெயரும் வந்தது. ஒரு செருகல். மலேசியாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் ராம்லியும் இங்கே தான் ஒடிசியைக் கற்றுக் கொண்டார்.

ஒடிசி என்பது இந்தியாவில் இருக்கும் ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய நடனமாகும். முன்பு காலங்களில் இந்த ஒடிசி நடனம் கோயில்களில் பழக்கத்தில் இருந்த ஒரு நடனக் கலையாகும். 



17-ஆம் நூற்றாண்டில் ஒரிசாவில் கோட்டிப் புகழ் என்று அழைக்கப்பட்ட சிறுவர்கள் இருந்தார்கள். இவர்கள் தான் பெண்களின் உடை அணிந்து கோயில்களில் ஆடி வந்தார்கள்.

அண்மைய காலங்களில் வட இந்தியாவில் ஒடிசி நடனத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள் கிடைத்து இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள கல்வெட்டுகள். அந்தக் கல்வெட்டுகளில் ஒடிசி பற்றிய தகவல்கள் நிறையவே பதிவு செய்யப்பட்டு உள்ளன.

அதைத் தவிர முன்பு காலத்தில் ஒரிசாவின் மலைக் குகைகளிலும் நடன வகுப்புகள் நடந்து இருக்கின்றன. ராணி கும்பா என்பது ஒரு பெரிய குகை. அந்தக் குகையில் காணப்படும் சிற்பங்களின் வடிவங்களும் ஒடிசி நடனங்களைப் பிரதிபலிப்பதாய் உள்ளன. 



ஒடிசி நடனம் படிக்க ஒரிசாவிற்குப் போகிறவர்கள் இந்த ராணிக் கும்பா குகைக்குச் சென்று குரு வணக்கம் செய்து ஆசீர்வாதம் பெற்று வருவது வழக்கம்.

இன்னும் ஒரு விசயம். ஒடிசி நடனம் என்பது பரத நாட்டியம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய ஒரு நடனமாகக்கூட இருக்கலாம். வரலாற்று அறிஞர்கள் சிலர் கருத்து கூறுகிறார்கள். இதைப் பற்றி இன்னும் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தின் பரத நாட்டியம் போல ஒடிசியும் பற்பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மைக்கல் ஜாக்சனின் இந்த பிளேக் ஆர் வாயிட் பாடலில் இசைக்கப்படும் இசையில் மென்மையான கர்நாடக இசை சேர்க்கப்பட்டு உள்ளது. அதையும் கவனிக்க வேண்டும். அதோடு ஒரிசா மாநிலத்தின் பழங்குடியினரின் இசையையும் கொஞ்சமாய்ச் சேர்த்து இருக்கிறார்கள்.

ஆனால் கித்தார் இசைக்கு முக்கியத்துவம் வழங்கி இருக்கிறார்கள். பக்கவாத்தியங்களில் மஞ்சீரா, சித்தார் போன்ற இசைக் கருவிகளின் நளினங்களும் சேர்க்கப்பட்டு உள்ளன. அதையும் கவனியுங்கள். பாடலைக் கேட்டுப் பாருங்களேன். யூடியூப் முகவரியைக் கீழே இணைத்து உள்ளேன்.



யுக்ரேயின் நாட்டு நாட்டியம்; அமெரிக்கப் பூர்வீகக் குடிமக்களின் நாட்டியம்; ஆப்பிரிக்கா சூலு மக்களின் நாட்டியம்; தாய்லாந்து நாட்டின் கலாசார நடனம்; ஒடிசி நடனம் போன்றவை அந்தக் பிளேக் ஆர் வாயிட் வீடியோவில் சேர்க்கப்பட்டு உள்ளன.

பிளேக் ஆர் வாயிட் காணொலி எபிக் இசைத்தட்டு நிறுவனத்தினால் (Epic Records) 1991 நவம்பர் 11-ஆம் தேதி வெளியீடு செய்யப்பட்டது. இசைத்தட்டு வெளியான முதல் வாரத்திலேயே உலக அளவில் பாக்ஸ்-ஆபீஸ் முதல் நிலையை அடைந்தது. இந்த வீடியோவைத் தயாரிக்க 54 மில்லியன் அமெரிக்க டாலர் செலவானது. ஆனால் ஒரு சில வாரங்களிலேயே 250 மில்லியனைச் சம்பாதித்துக் கொடுத்து விட்டது.

பிளேக் ஆர் வாயிட் காணொலியில் நடிக்க நடனம் ஆட யமுனாவிற்கு 15 ஆயிரம் அமெரிக்க டாலர் ஊதியமாக வழங்கப்பட்டது. அது மட்டும் அல்ல. அவருடைய பல்கலைக்கழகப் படிப்பிற்கான எல்லா செலவுகளையும் எம்.டி.வி. தொலைக்காட்சி நிறுவனம் ஏற்றுக் கொண்டது.

யமுனா சங்கரசிவம் தற்சமயம் அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள நாசராத் கல்லூரியில் மனிதவியல் சமூகவியல் துறையின் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அவர் தங்கி இருந்த விடுதியில் கைது செய்யப் பட்டார். அவர் ஒரு தமிழர். அதனால் அவர் விடுதலைப் புலிகளின் விசுவாசியாக இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டார். உடல் முழுக்கப் பரிசோதிக்கப் பட்டார். சான்றுகள் இல்லாததால் விடுவிக்கப் பட்டார்.

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள் இருக்கின்றன. அது போல யமுனாவின் வாழ்க்கையிலும் பற்பல திருப்பங்கள் பற்பல ஏற்றத் தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை நான் விவாதிக்க விரும்பவில்லை. என் பேஸ்புக் நண்பர்களில் ஒருவராக இருக்கிறார்.

மிகவும் எளிமையான பெண். எப்போதும் சிரித்த முகம். சிரித்துக் கொண்டே பதில்களும் வரும். ஆங்கில மொழியிலேயே வாழ்க்கை ஓடினாலும் தமிழில் நன்றாகப் பேசக் கூடியவர். அண்மையில் மலேசியாவிற்கு வந்து சென்றார். சரி.

மைக்கல் ஜாக்சனைப் பற்றி சின்ன தகவல்.



மைக்கல் ஜாக்சன் 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதி தன்னுடைய 51-ஆவது வயதில் காலமானார். கறுப்பு இனக் குடும்பத்தில் பிறந்த மைக்கேல் ஜாக்சனுக்குத் தன் கறுமை நிறம் குறித்து எப்போதுமே தாழ்வு மனப்பான்மை. தான் ஏன் கறுப்பாகப் பிறந்தேன் என்று வருத்தப்பட்டு இருக்கிறார்..

அதனால் பல அறுவை சிகிச்சைகளைச் செய்து கொண்டார். தன் நிறத்தை மாற்றி அமைத்தும் கொண்டார். அவருக்கு மூன்று மனைவிகள். ஒருவர் பின் ஒருவராக மணவிலக்கு பெற்றுக் கொண்டார்கள். அவருடைய மனைவிகள் மூன்று பேரினால் அவருக்குப் பிரச்சினைகள் தான் அதிகம். மூவருமே அவரை விட்டுப் பிரிந்தாலும் தனக்குப் பிறந்த இரு குழந்தைகளையும் கடைசி வரையில் அவரே வளர்த்து எடுத்தார்.

மைக்கேல் ஜாக்சன் சம்பாதித்த சொத்துகள் மட்டும் 250 கோடி ரிங்கிட். ஆனால் அவருக்கு ஏற்பட்ட கடன் தொகை 250 கோடியைத் தாண்டிப் போய் விட்டது. அனைத்தும் ஆடம்பரச் செலவுகள். நம்ப 1எம்.டி.பி. நிதி மோசடியில் ஜோ லோ என்கிற ஒரு ஜொள்ளுவாய் இருந்தாரே. அந்த மாதிரி தான் மைக்கேல் ஜாக்சனும் கண்மண் தெரியாமல் காசைக் கரியாக்கி இருக்கிறார்.

அமெரிக்க வங்கிகளிடம் கோடிக் கணக்கில் கடன் வாங்கி செலவு செய்து இருக்கிறார். அதையும் ஒரு கட்டத்தில் கட்ட முடியாமல் தன் வீடு வாசல்களை விற்று இருக்கிறார்.

எங்கு போனாலும் அவருடன் 20 உதவியாளர்கள் கூடவே இருப்பார்கள். எங்கு போனாலும் அவருக்கு என இரண்டு தனி விமானங்கள். ஒரு நாட்டின் அதிபரைப் போலவே வாழ்ந்து இருக்கிறார். கடைசியில் ஒரு கடன்காராக; யாரும் இல்லாத ஓர் அனாதையாக இறந்து போய் இருக்கிறார். மூன்று பெண்களுக்குக் கணவராக வாழ்ந்தும் அவரின் கடைசி காலத்தில் ஒரு பெண்ணும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. பாவம் அவர்.

ஆண்டுகள் பல கடந்து போனாலும் மன்மத ராசா மைக்கேல் ஜாக்சனை மறக்க முடியவில்லை. ஆடலழகி யமுனாவின் அந்த ஒடிசி நடனத்தையும் மறக்க முடியவில்லை. உலக மக்களின் நினைவுகளில் இருந்து அந்த இரு காலச் சுவடுகளும் மறையப் போவதும் இல்லை.

யமுனாவின் நாட்டியக் காணொலி யூடியூப்பில் உள்ளது. அதன் முகவரி:

https://youtu.be/wXoA6jajTJY


சான்றுகள்

1. Campbell, Lisa (1993). Michael Jackson: The King of Pop. Branden Books. p. 301. ISBN 0-8283-1957-X.

2. Adrian Grant (2009). Music Sales Group, ed. Michael Jackson: The Visual Documentary. ISBN 978-0857122124.

3. Yamuna Sangarasivam Odissi Dancer Who Danced with Michael Jackson-2017; https://www.nuaodisha.com/ContentDetails.aspx?cid=21387&todo=news

4. Deccan Chronicle 10 Sep 2017; Black or White by Michael Jackson broke all records.

5. Yama Sangarasivam. Professor of Anthropology in Sociology & Anthropology. Director of the Women and Gender Studies Program in Women and Gender Studies.