இளவேனில் வளரிவான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளவேனில் வளரிவான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஆகஸ்ட் 2019

இளவேனில் வளரிவான்

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான் (Elavenil Valarivan). 


இவர் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்சமயம் குஜராத் அகமதாபாட் நகரில் வசித்து வருகிறார்.

பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனேரியோவில் (Rio de janeiro) ஐ.எஸ்.எஸ்.எப். (International Shooting Sport Federation) உலகக் கோப்பை சுடுதல் போட்டி 2019 ஆகஸ்டு மாதத்தில் நடந்து வருகிறது.

அந்தப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் (10 meter Air Rifle) பிரிவில் இளவேனில் வளரிவான் 251.7 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 


இவருக்கு அடுத்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த சியோனைட் மெக்கின்டோஷ் (Seonid Mcintosh). இவர் 250.6 புள்ளிகள் எடுத்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

மூன்றாம் நிலையில் தைவானைச் சேர்ந்த லின் யிங் ஷின் (Ying-Shin Lin) 229.9 புள்ளிகள் எடுத்து வெண்கலம் வென்றார்.

இவருக்கு முன்னர் இந்தியாவைச் சேர்ந்த அபுர்வி சண்டேலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகிய இரு வீராங்கனைகள் உலகக் கோப்பை 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்று இருக்கிறார்கள்.

இளவேனில் 1999 ஆகஸ்டு 2-ஆம் தேதி பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். வயது 20. இவர் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்சமயம் குஜராத் அகமதாபாத் நகரில் வசித்து வருகிறார். இரண்டு வயதிலேயே அவர் குஜராத்தில் குடியேறி விட்டார்.


இந்தப் போட்டியில் பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று உள்ளார். 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர், வீராங்கனைகள் இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கின்றனர்.

இந்தப் போட்டி 2020-ஆம் ஆண்டு தோக்கியோ நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தொடர் ஆகும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கலாம். 




இருந்தாலும் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் (10-metre Air Rifle) இருவரின் பெயர்களை இந்தியா ஏற்கனவே சமர்ப்பித்து விட்டது. அஞ்சும் முட்கில் (Anjum Moudgil); அபூர்வி சண்டேலா (Apurvi Chandela) எனும் இருவரின் பெயர்கள். இப்போது புதுத் திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. ஆகவே இப்போது தங்கம் வென்ற இளவேனில் பெயர் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கம் (National Rifle Association of India) விரைவில் இதற்கு இரு தீர்வு காணும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
(சான்று:https://www.thenewsminute.com/article/india-s-elavenil-valarivan-grabs-gold-medal-shooting-world-cup-108038)


கடந்த ஆண்டு 2018 மார்ச் மாதம் 19-ஆம் தேதியில் இருந்து 29-ஆம் தேதி வரையில் ஆஸ்திரேலியா, சிட்னியில் உலகக் கோப்பை ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்தது. அதிலும் இளவேனில் தங்கம் வென்று இருக்கிறார். அந்தப் போட்டியில் 249.8 புள்ளிகள் பெற்றார்.

அதே உலகக் கோப்பை ஜூனியர் குழுவினரின் துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் தங்கம் வென்றார். அவருடன் மேலும் இருவர் ஜீனா கீதா (Zeena Khitta); சிரேயா அகர்வால் (Shreya Agarawal) ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டனர். அது ஒரு குழுப் போட்டி.

(சான்று: https://en.wikipedia.org/wiki/2018_ISSF_Junior_World_Cup)




ஏற்கனவே ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கம் வென்று கொடுத்த இளம்பெண் இளவேனில், சீனியர் பிரிவிலும் இந்தியாவிற்குத் தங்கம் வென்று கொடுத்து உள்ளார்.

உலக கோப்பை துப்பாக்கிச்சூடு போட்டியில் நாட்டிற்கு தங்கம் வென்று பெருமை சேர்த்து கொடுத்த இளவேனில் வளரிவானுக்கு நம்முடைய வாழ்த்துகள்.