மலாக்கா செட்டிகள் 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலாக்கா செட்டிகள் 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

04 ஜூலை 2017

மலாக்கா செட்டிகள் 1

காலத்தின் பேரலையில் தாய்மொழியைத் தொலைத்துவிட்ட ஒரு சமூகம் தனித்து நிற்கின்றது. இருந்தாலும் அந்தச் சமூகம் தங்களின் கலை, கலாசாரங்களை மறக்கவில்லை. சார்ந்து வளர்ந்த சமயத்தையும் மறக்கவில்லை. 



அந்தச் சமூகத்தினருக்கு மலேசியாவிலேயே மிக மிகப் பழமையான இந்துக் கோயிலைக் கட்டிய பெருமை. இந்துக்களின் பெருமைகளில் இனிய ஓர் இதிகாசத்தைச் சேர்க்கும் மலாக்கா ஸ்ரீ பொய்யாத விநாயகர் ஆலயத்தின் மகிமை. அந்த ஆலயத்தைப் பார்த்துப் பார்த்து புளகாங்கிதம் அடைகிறது அந்தச் சமூகம். நாமும் பெருமைப் படுவோம்.

மலாக்கா செட்டிகள். இவர்கள் தான் நான் சொல்லும் அந்தச் சமூகம். உலகம் போற்றும் ஓர் உன்னதமான சமூகம். ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் அமைதியான மனிதர்கள். ஆர்ப்பாட்டம் இல்லாத மலாக்கா தமிழர்கள்.

உழைப்பால் முன்னேறிய பழம் பெரும் மூத்தச் சமூகத்தவர்கள். இந்து சமயத்திற்காக இருப்பதை எல்லாம் அள்ளிக் கொடுக்கும் நல்ல உள்ளங்களின் அவதாரங்கள். பாராட்டுவோம். வாழ்த்துவோம். 




1880-களில் மலாயா ரப்பர்த் தோட்டங்களில் வேலை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட சஞ்சித் தொழிலாளர்கள் வேறு. தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் என மூன்று பங்காளிகளும் ஒரே கப்பலில் ஒரே பாய் விரிப்பில் ஒன்றாகப் படுத்துப் புரண்டவர்கள்.

ஒன்றாகவே பினாங்கு புறமலையில் அடைக்கலமாகி அங்கே இருந்து தீபகற்ப மலேசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பிரிந்து சென்றவர்கள்..

அவர்கள் தான் சஞ்சித் தொழிலாளர்கள். இவர்கள் வேறு. மலாக்கா செட்டிகள் என்பவர்கள் வேறு. இரு தரப்பினரும் வேறு வேறு தமிழர்ச் சமுதாயங்கள்.

மலாக்கா செட்டிகள் அனைவருமே தமிழர்கள் தான். பெரும்பாலோர் இந்து சமயத்தவர்கள். ஒரு சிலர் இஸ்லாம் சமயத்தையும், வேறு சிலர் கிறிஸ்தவ சமயத்தையும் பின்பற்றி வருகின்றனர்.

மலாக்கா செட்டிகள் தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளில் இருந்து வியாபாரம் செய்ய மலாக்காவிற்கு வந்தவர்கள். 




அவர்கள் இங்கு வந்து ஏறக்குறைய 600 ஆண்டுகள் ஆகின்றன. எத்தனை ஆண்டுகள் என்பதைப் பாருங்கள். 600 ஆண்டுகள். ஆக காலத்தால் மூத்த ஒரு சமூகம். வரலாற்றில் மதிக்கப்பட வேண்டிய ஒரு சமூகம். ஆனால் இப்போது காலத்தால் மறக்கப்பட்ட ஒரு சமூகம்.
(சான்று: http://m.himalmag.com/the-indian-peranakans-of-malaysia/ - Unknown to many Malaysians, for the last 600 years a small community known as the Melaka Chittys)

அதே மாதிரி சஞ்சிக்கூலிகள் எனும் பெயரில் வந்த தமிழர்கள் மலாக்காவிற்கு வந்து 200 ஆண்டுகள் ஆகின்றன. இவர்கள் மலாயா காபி, ரப்பர்த் தோட்டங்களில் வேலை செய்ய வந்தவர்கள்.

ஆகவே மலாக்கா செட்டிகளை 19-ஆம் நூற்றாண்டுச் சஞ்சித் தமிழர்களின்  பட்டியலில் சேர்க்க வேண்டாம்.

மலாக்கா செட்டிகள் என்று அழைக்கப்படும் இந்தச் சமூகம், மக்கள் தொகையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மலாக்காவில் மட்டும் அல்ல. மலேசிய அளவிலும்தான். அவர்களின் மக்கள் தொகை ஏறக்குறைய 700. அவ்வளவுதான்.

மலேசிய இந்தியச் சமுதாயத்தின் எண்ணிக்கை எப்படி குறைந்து கொண்டே வருகிறதோ அதே போல மலாக்கா செட்டிகளின் மக்கள் தொகையும் குறைந்து கொண்டே வருகிறது.




முன்பு காலத்தில் மலாயாவுக்கு வந்தவர்கள் சின்ன வயதிலேயே கல்யாணம் செய்து கொண்டார்கள். சின்ன வயதிலேயே நிறையவே பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டார்கள். முப்பது வயதில் ஆறு ஏழு பிள்ளைகளுக்குத் தாய் தகப்பன் ஆனார்கள்.

ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லையே. எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாகப் பெற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்று நினைக்கிறார்கள். சரி.

மலாக்கா செட்டிகளின் வாரிசுகள் வேலைகளைத் தேடி ஈப்போ, பினாங்கு, கோலாலம்பூர், சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு இடம் மாறிச் செல்கின்றனர். ஒரு சிலர் தான் நிரந்தரமாக மலாக்காவிலேயே தங்கி விடுகின்றனர். ஆக மலாக்கா செட்டிகள் என்பவர்கள் மலேசியச் செட்டிகளாக மாறி வருகின்றனர்.

மலாக்கா செட்டிகளைப் பார்த்தால் தோற்றத்தில் இந்தியர்களைப் போலத் தான் இருப்பார்கள். ஆனால் அவர்கள் அணியும் ஆடை ஆபரணங்கள் எல்லாம் மலாய்க்காரர்களின் அணிகலன்களாக இருக்கும்.

பெரும்பாலும் மலாய் மொழியில் தான் பேசுவார்கள். இப்போது நாகரிகமான மேற்கத்திய உடைகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

அண்மைய காலங்களில் மலாக்கா செட்டிகள் பலர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்கின்றனர். மலாக்கா செட்டிப் பெண்களும் தமிழ் இளைஞர்களைத் திருமணம்  செய்து கொள்கின்றனர். ஒரு கலப்புத் திருமணச் சமுதாயம் மலாக்காவில் உருவாகி வருகிறது. அவர்களுடைய நடை உடை பாவனைகளும் மாறி வருகின்றன. 




இருந்தாலும் இன்னும் சிலருக்கு அந்தப் பழைய பாரம்பரிய உணர்வுகள் மேலோங்கி நிற்கின்றன. மலாக்கா செட்டிச் சமூகத்தைச் சார்ந்தவர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற அழுத்தத்தையும் கொடுத்து வருகின்றனர். வற்புறுத்தியும் வருகின்றனர்.

சரி. மலாக்கா செட்டிகள் என்பவர்கள் யார்? அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மலாக்கா செட்டிகள் 14-ஆம் நூற்றாண்டில் தென் இந்தியாவின் கரையோரப் பகுதிகளில் இருந்து வர்த்தகம் செய்ய வந்தவர்கள். இவர்களில் பெரும்பாலோர் பண்ணை எனும் கலிங்கப் பட்டணத்தில் இருந்து வந்தவர்கள்.
(சான்று: https://en.wikipedia.org/wiki/Chitty#History - Historical records stated that the Tamil traders from Panai in Tamil Nadu settled down in Malacca during the sovereignty of the Sultanate of Malacca.)

மற்ற தமிழ் நாட்டுத் துறைமுகங்களில் இருந்தும் வந்தனர். பாய்மரக் கப்பல்களைப் பயன்படுத்தினார்கள்.

வந்த புதிதில் ‘மலாக்கா செட்டி’ (Malacca Chetti) என்று அழைக்கப் படவில்லை. சரி. அப்புறம் எப்படி மலாக்கா செட்டி என்ற பெயர் வந்தது. 




19-ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் லேவாதேவி தொழில் செய்வதற்காக நகரத்தார்கள் எனும் ஒரு புதிய தமிழர்ச் சமூகம் மலாக்காவிற்கு வந்தது. அவர்களைச் செட்டியார்கள் என்று அழைத்தார்கள். இவர்களும் தமிழ்நாட்டின் காரைக்குடி, திருச்சி, இராமநாதபுரம் போன்ற நகரங்களில் இருந்து வந்தவர்கள் தான்.

ஆனால் அதற்கு முன்னரே வேறு ஒரு தமிழர்ச் சமூகம் மலாக்காவில் பேர் போட்டு விட்டது. அதுதான் மலாக்கா செட்டி என்கிற சமூகம்.

அதனால் வட்டித் தொழில் செய்ய வந்த நகரத்தார்களை அங்கு இருந்த மலாய் சீனச் சமூகத்தவர்கள் அவர்களைச் செட்டியார்கள் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

ஏற்கனவே காலம் காலமாக வாழ்ந்து விட்ட தமிழர்ச் சமூகத்தை மலாக்கா செட்டிகள் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

அதாவது மலாக்காவில் இரு செட்டியார்ச் சமூகங்கள் இருக்கின்றன. இந்த இரு சமூகத்தினருக்கும் இடையே உள்ள கால இடைவெளி நானூறு ஆண்டுகள் ஆகும். அதை நாம் மறந்துவிடக் கூடாது..

சுருங்கச் சொன்னால் ஒரு சமூகத்தினர் செட்டியார்கள் என்று அழைக்கப் படுகின்றனர். இன்னொரு சமூகத்தினர் மலாக்கா செட்டிகள் என்று அழைக்கப் படுகின்றனர்.

இதில் முதலாவதாக வந்தவர்கள் மலாக்கா செட்டியார்கள். இரண்டாவதாக வந்தவர்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள். இரண்டாவதாக வந்தவர்கள் தான் செட்டியார்கள் ஆனார்கள். புரியும் என்று நினைக்கிறேன்.

ஆக முதன்முதலில் வந்த மலாக்கா செட்டியார்கள் எனும் சொல் வழக்கம் பின்னர் காலத்தில் மலாக்கா செட்டிகள் என்று பெயர் மாற்றம் கண்டது.




செட்டி எனும் சொல்லின் பொருள் வியாபாரி என்பதாகும். மலாய் மொழியிலும் அப்படித் தான் பொருள் படுகிறது.

அப்படிப் பார்க்கும் போது சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மலாயாவுக்கு வணிகம் செய்ய வந்து இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. இவர்களின் எண்ணிக்கை குறைவு. அப்படி வந்த வணிகர்களில் மலாக்கா செட்டிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

1400-ஆம் ஆண்டுகளிலேயே பரமேஸ்வரா காலத்திலேயே மலாக்கா செட்டிகள் மலாக்காவில் வணிகம் செய்ய வந்து இருக்கிறார்கள்.

இந்த மலாக்கா செட்டிகள் என்பவர்கள் இப்போதைய மலாயாத் தமிழர்களின் தலைமுறைக் காலங்களுக்கு முந்தியவர்கள். மலாக்கா செட்டிகள் மிகப் பழமையானவர்கள்.

பரமேஸ்வரா மலாக்காவை ஆட்சி செய்த போது அவருடைய அரண்மனையில் மலாக்கா செட்டிகள் நல்ல நல்ல பதவிகளில் இருந்து இருக்கின்றனர்.

தலைமை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் தளபதிகள், படைத் தளபதிகள் போன்ற பதவிகளில் இருந்து இருக்கிறார்கள். (சான்று: Shiv Shanker Tiwary & P.S. Choudhary (2009). Encyclopaedia Of Southeast Asia And Its Tribes (Set Of 3 Vols.)

இருந்தாலும் இப்போதைய நிலையில் மலாக்கா செட்டிகள் தங்களின் அடையாளத்தை இழக்கும் ஓர் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

1414-ஆம் ஆண்டுகளுக்கு முன்பே மலாக்கா மாநிலத்தில் வாணிகம் செய்ய வந்த இந்த மலாக்கா செட்டிகள் இங்குள்ள மலாய் மக்களைத் திருமணம் செய்து கொண்டனர். அப்படியே தனி அடையாளத்துடன் வாழ்ந்தும் வருகின்றனர்.

பார்ப்பதற்கு மலாய் இனத்தவரைப் போன்று காட்சி அளிக்கும் செட்டி மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்.





தங்களுக்கு என்று தனி ஓர் அடையாளத்தைக் கொண்டுள்ள இவர்கள் அதே பாரம்பரியத்துடன் கலைகளை வளர்த்தும் வருகின்றனர். போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷார், ஜப்பானியர் போன்றவர்களால் மலாக்கா ஆளப்பட்டு இருந்தாலும் மலாக்கா செட்டிகள் இன்னும் அவர்களின் அடையாளத்தை இழக்காமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பரமேஸ்வரா காலத்தில் மலாக்கா செட்டிகள் தங்களுக்கு என்று ஒரு சிறிய கோயிலை மலாக்கா புறநகர்ப் பகுதியில் கட்டிக் கொண்டார்கள். அதற்கு கஜபதி அம்மான் கோயில் என்று பெயரும் வைத்தார்கள்.

கஜபதி என்பதை கஜபேரம் என்றும் அழைத்தார்கள். கஜம் என்றால் யானை. கஜம் எனும் சொல்லில் இருந்து தான் Gajah எனும் சொல்லே உருவானது.

கஜ புரம் (Gajah Puram) எனும் சொற்கள் மருவி காஜா பூராங் (Gajah Berang) ஆனது. பின்னர் மலாக்கா காஜா பேராங் (Malacca Gajah Berang) ஆனது. இப்போது சொல்கிறார்களே காஜா பேராங் அது கஜபதி எ(Gajah Pathy) னும் சொல் தொடரில் இருந்து உருவானது. புரியுதுங்களா.
(சான்று: Peranakan Indians of Singapore and Melaka: Indian Babas and Nonyas—Chitty ... By Samuel S. Dhoraisingam)




வரலாற்றை எப்படித் திருப்பிப் போட்டு எழுதினாலும் இந்த உண்மையை யாராலும் மறைக்க முடியாது. நம்மிடம் சரியான வலுவான சான்றுகள் இருக்கின்றன. எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் சான்றுகளைத் தூக்கிப் போட முடியும்.

லண்டன் வரலாற்றுப் பழஞ்சுவடிக் காப்பகத்திலும் சீனா பெய்ஜிங் பழஞ்சுவடிக் காப்பகத்திலும் அந்தச் சான்றுகள் பத்திரமாக இருக்கின்றன. அந்தக் காப்பங்களில் டிஜிட்டல் முறையில் அந்தச் சான்றுகளைப் பத்திரப் படுத்தி வைத்து இருக்கிறார்கள்.

பரமேஸ்வரா காலத்திலேயே கடல்படை தளபதிகளாகவும் நிதி அமைச்சர்களாகவும் இருந்த மலாக்கா செட்டிகளுக்கு பூமிபுத்ரா தகுதி மிக அண்மையில் தான் வழங்கப்பட்டது. அதாவது 58 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற 2015-ஆம் ஆண்டு தான் வழங்கப்பட்டது.

மலாக்கா பண்டார் ஹிலிர் பகுதியில் உள்ள போர்த்துக்கிசியத் தலைமுறையினருக்கு 2005-ஆம் ஆண்டிலேயே பூமிபுத்ரா அந்தஸ்தை வழங்கி இருக்கிறார்கள். மலாக்கா செட்டிகளுக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை.

எனக்குள் ஓர் ஆதங்கம். மலாக்கா செட்டிகளுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து கொடுக்கப்பட்டு இருந்தாலும் மண் உரிமைச் சலுகைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

நிலம், வீடு வாங்குவதில் எந்தச் சிறப்புச் சலுகையும் இல்லை. எப்படிப் பார்த்தாலும் சராசரி இந்தியர்களின் நிலை தான்! பெயருக்குத் தான் பூமிபுத்ரா எனும் தகுதி. ஆனால் சிறப்பு உரிமைகள் எதுவும் இல்லை.

மலாக்கா பண்டார் ஹிலிர் பகுதியில் உள்ள போர்த்துக்கிசியத் தலைமுறையினருக்கு மலாக்காவில் மட்டும் நிலம் வாங்கும் உரிமை உண்டு. மற்ற மாநிலங்களில் அதுவும் இல்லை! மற்றபடி எந்தச் சிறப்புச் சலுகையும் வழங்கப் படவில்லை!

மலாக்கா செட்டிகள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பற்றி முதல் அமைச்சரிடம் விடாமல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சரியான பதில் இன்னும் கிடைக்கவில்லை. Who wants to be a Millionaire எனும் ராகத்தில் அதுவும் பெரிய ஒரு கேள்வி.

தற்பொழுது மலாக்காவில் வசித்து வரும் மலாக்கா செட்டி சமூகத்தவர்கள் ஐந்தாவது தலை முறையைச் சேர்ந்தவர்கள். தங்கள் வழிபாட்டிற்காகக் காஜா பேராங் புறந்கர்ப் பகுதியில் சில இந்துக் கோயில்களை அமைத்து வழிபட்டனர். மிகப் பழமை வாய்ந்த சில கோயில்கள்.

மலாக்கா செட்டிகள் நிறுவிய கோயில்கள் பின்வருமாறு:


• ஸ்ரீ அம்மன் ஆலயம், காஜா பேராங் (1770)
• தர்மராஜா ஆலயம், காஜா பேராங் (1770)
• ஸ்ரீ அம்மன் ஆலயம், காஜா பேராங் (1770)
• தர்மராஜா ஆலயம், காஜா பேராங் (1770)
• ஸ்ரீ பொய்யாத விநாயகர் மூர்த்தி ஆலயம், ஜாலான் துக்காங் இமாஸ் (1781)
• ஸ்ரீ காளியம்மன் ஆலயம், பாச்சாங் (1804)
• ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், காஜா பேராங் (1822)
• ஸ்ரீ கைலாசநாதர் சிவன் ஆலயம், காஜா பேராங் (1887)
• ஸ்ரீ அங்காளம்மன் பரமேசுவரி ஆலயம், காஜா பேராங் (1888)
• லிங்காதரியம்மன், காஜா பேராங்
• கட்டையம்மன் ஆலயம்
• ஸ்ரீ அய்யனார் ஆலயம், பாச்சாங்
• ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயம், காஜா பேராங்


இருந்தாலும் தற்போது இந்த ஆலயங்கில் சிலற்ற மலாக்கா  இலங்கைத் தமிழர்கள் நிர்வகித்து வருகின்றனர்.

(தொடரும்)