மலேசிய அரசியல் அமைப்பில் தமிழ்ப்பள்ளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசிய அரசியல் அமைப்பில் தமிழ்ப்பள்ளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 நவம்பர் 2019

மலேசிய அரசியல் அமைப்பில் தமிழ்ப்பள்ளிகள்

மலேசிய இந்தியர்கள் மலேசிய நாட்டிற்காக உழைத்து உழைத்து உருக்குலைந்து போனவர்கள். பல நூறு ஆண்டுகளாய் வியர்வைச் சகதியில் குருதிப் புனல்களாய் தேய்ந்து காய்ந்து போனவர்கள். பல நூறு ஆண்டுகளாய் மலையூர் காடுகளை வெட்டித் திருத்தி வாடி வதங்கி வற்றிப் போனவர்கள். 


இருந்தாலும் இந்த மலையகத்துப் பச்சைக் கானகத்தைப் பயிர்விளையும் பூமியாய் மாற்றிக் காட்டினார்கள். செம்மண் சடக்குகளில் எலும்பும் தோலுமாய்ச் சிதைந்து போனாலும் சேதாரம் மறுத்துப் போனார்கள்.

இன்று வரையில் அடையாளத்தை இழக்காமல் உரிமைப் போராட்டம் செய்து வரும் வெள்ளந்தி ஜீவன்கள். வக்கிரம் காணா வாயில்லா பூச்சிகள்.

அவர்கள் தான் இந்த மலையகத்தின் கித்தா மரத்து பிள்ளைப் பூச்சிகள். உங்களையும் என்னையும் பெற்றுப் போட்ட மலையகத்துக் கித்தா மாலைகள். அந்த வகையில்...

தாய்மொழி என்பது மனிதர்களின் பிறப்பு உரிமை. தமிழ்மொழி என்பது தமிழர்களின் தாய் உரிமை. மலேசியத் தமிழர்களுக்கு அதுவே சிறப்பு உரிமை. அந்த உரிமைக்குப் போராட வேண்டியது என்னுடைய கடமை.

மலேசியத் தமிழர்கள் சட்டச் சடங்குகள் வழியாகத் தங்களின் தாய்மொழி உரிமைக்காகப் போராடி வருகிறார்கள். மலேசியத் தமிழர்களின் உரிமைகளுக்குச் சவால் வந்தால், அதற்கும் சரியான பதில் கொடுக்கும் காலக் கட்டத்திலும் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.
மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தின் 152-ஆவது பதிவில் (Article 152 Federal Constitution) தமிழ் மொழிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. சட்டப் படியான அங்கீகாரம். சட்ட ரீதியான அங்கீகாரம்.

நேற்று இன்றைக்கு வந்தவர்கள் எதிர்த்து நிற்கும் சட்டம் அல்ல. அன்றைக்கே எழுதி வைக்கப்பட்ட சட்டம். அந்தச் சட்டத்தை அசைக்க முடியாது. அசைத்துப் பார்க்கவும் முடியாது. விடவும் மாட்டோம்.

ஆகவே தமிழ் மொழியைப் பயன்படுத்த முடியாது அல்லது பயன்படுத்தக் கூடாது அல்லது தேவை இல்லை அல்லது தமிழ்ப் பள்ளிகள் தேவை என்று சொல்ல எவருக்கும் எந்த உரிமையும் இல்லை.

அப்படிச் சொன்னால் அது சட்டப்படி குற்றமாகும். மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தை அவமதிப்பது போலாகும். அது ஓர் அரச நிந்தனையாகும்.

மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தில் மாற்றம் அல்லது திருத்தம் செய்யாமல் தமிழ் மொழியின் உரிமைகளில் தலையிட முடியாது. அரசியலமைப்புச் சாசனத்தில் தமிழ் மொழிக்கு தனி உரிமை உண்டு. மறுபடியும் சொல்கிறேன். 


தமிழர்களின் தமிழ் மொழி உரிமையைத் தட்டிக் கேட்க எவருக்கும் உரிமை இல்லை.

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் 152-ஆவது பதிவில் தாய்மொழி உரிமை பற்றி நன்றாகவே தெளிவாகவே சொல்லப் பட்டு இருக்கிறது.

Constitution of Malaysia - Article 152

(1) The national language shall be the Malay language and shall be in such script as Parliament may by law provide: Provided that-

(a) no person shall be prohibited or prevented from using (otherwise than for official purposes), or from teaching or learning, any other language; and

(b) nothing in this Clause shall prejudice the right of the Federal Government or of any State Government to preserve and sustain the use and study of the language of any other community in the Federation.

புரியுதுங்களா.

மலாயாவில் தமிழர்கள் குடியேறிய காலத்தில் இருந்தே தமிழ் மொழியும் அவர்களுடன் இணைந்து வந்து இங்கே குடியேறியது. மெல்ல மெல்ல வேர்விட்டுப் பரவத் தொடங்கியது. ஆல விருச்சகமாய் விழுதுகள் பார்த்து வீர வசனங்கள் பேசியது. 


கால வெள்ளத்தில் பற்பல ஒதுக்கல்கள்; பற்பல பதுக்கல்கள்; பற்பல புறம்போக்குத் திட்டங்கள். அவற்றில் இருந்து தப்பித்துப் பிழைத்துக் கரையேறி மூச்சு விடுகிறது.

அதற்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளுக்காக அனுதினமும் போராட்டங்களைச் செய்தும் வருகிறது. அந்த மொழியைச் சார்ந்த இனத்தவரும் அதன் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். இன்றுவரை போராடியும் வருகிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நன்றாகவே தெரிய வரும்.

1912-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். தோட்டத் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் சட்டம். ஒரு தோட்டத்தில் பத்துக் குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப் பள்ளியை உருவாக்க வேண்டும் எனும் சட்டம்.

மறுபடியும் சொல்கிறேன். ஒரு தோட்டத்தில் 7 முதல் 14 வயது வரை பத்து குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப்பள்ளியை உருவாக்க வேண்டும் என்கிற சட்டம்.

இந்தச் சட்டம் அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது.

காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்கள் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தச் சட்டத்தை மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

மலாயாவில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை

1920-ஆம் ஆண்டில் 122.
1925-ஆம் ஆண்டில் 235.
1930-ஆம் ஆண்டில் 333
1938-ஆம் ஆண்டில் 524.
1942-ஆம் ஆண்டில் 644
1943-ஆம் ஆண்டில் 292
1950-ஆம் ஆண்டில் 888
1960-ஆம் ஆண்டில் 662
2018-ஆம் ஆண்டில் 525

2018-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி: மலேசியாவில் 525 தமிழ்ப்பள்ளிகள்; 10,328 தமிழாசிரியர்கள். 108,665 மாணவர்கள். 4514 வகுப்பு அறைகள்.

ஒரு மொழி அழிந்தால் ஓர் இனம் அழியும். தெரிந்த விசயம். ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழித்தால் போதும். அந்த இனம் ’ஆட்டோமெட்டிக்காக’ அழிந்துவிடும்.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இந்த உலகில் எத்தனையோ மொழிகள் அழிந்து விட்டன. அந்த மொழியைச் சார்ந்த இனங்களும் அழிந்து போய் விட்டன. மற்ற பிரதான மொழிகளின் ஆதிக்க வலிமையினால் பல ஆயிரம் சிறுபான்மை இனத்தவர்களின் மொழிகளும் அழிக்கப்பட்டு விட்டன.

அந்த உரிமைப் போராட்டம் தான் இப்போது இங்கே வேறு கோணத்தில் பயணிக்கின்றது.

அந்த மொழிச் சாரல்களின் தூரல்களில் தான் இப்போது பெர்காசா இப்ராகிம் அலியின் ஒரு பரிவட்டம்... சின்னதாய் ஒரு நர்த்தனம் ஆடுகின்றது.