பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 செப்டம்பர் 2017

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2

மலாக்காவைக் கண்டுபிடித்தது பரமேஸ்வரன் என்பவரா? இல்லை ஸ்ரீ இஸ்கந்தார் ஷா என்பவரா? இல்லை சுல்கார்னாயின் ஷா எனும் மகா அலெக்ஸாண்டரா? உள்நாட்டு வரலாறுகளில் இந்தச் சர்ச்சை ஒரு மெகா சீரியலாக இன்னும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. 


பரமேஸ்வரன் எனும் சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து தருவிக்கப் பட்ட ஒரு தமிழ்ச் சொல். பரமா எனும் சொல்லும் ஈசுவரன் எனும் சொல்லும் இணைந்து பெற்றதே பரமேசுவரன் எனும் சொல் ஆகும். இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈசுவரன்.

முதலில் பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தைக் கொஞ்சம் பார்த்து விடுவோம்.

* 1344 - ஸ்ரீ ராணா வீரா கர்மா என்பவர் சிங்கப்பூர் ராஜாவாக இருந்தவர். அவருக்குப் பரமேஸ்வரா மகனாகப் பிறந்தார்.

* 1399 - தந்தையின் இறப்பிற்குப் பின் ஸ்ரீ மகாராஜா பரமேசுவரா எனும் பெயரில் துமாசிக்கில் அரியணை ஏறினார். துமாசிக் என்பது சிங்கப்பூரின் பழைய பெயர்.

* 1401 - துமாசிக்கில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

* 1401 - மலாக்காவைத் தோற்றுவித்தார்.

* 1405 - சீனாவிற்குச் சென்று மிங் அரசரின் ஆதரவைப் பெற்றார்.

* 1409 - சுமத்திராவின் ஒரு பகுதியாக இருந்த பாசாய் சிற்றரசின் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார்.

* 1411 - சீனாவிற்கு மறுபடியும் சென்று மிங் அரசரிடம் பாதுகாப்பை நாடினார்.

* 1414 - பரமேஸ்வரா தன்னுடைய 69 அல்லது 70 ஆவது வயதில் காலமானார்.

ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜாவாவை ஸ்ரீ விஜயா எனும் பேரரசு ஆண்டு வந்தது. 13-ஆம் நூற்றாண்டில் அந்தப் பேரரசின் செல்வாக்கு படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

அதே சமயத்தில் மலாய்த் தீவுக் கூட்டங்களில் (Malay Archipelago) இருந்த சிற்றரசர்களின் அச்சுறுத்தல்களும் அதிகரித்த வண்ணம் இருந்தன.

ஸ்ரீ விஜய பேரரசு ஜாவாத் தீவின் வரலாற்றில் மங்காதப் புகழைப் பெற்ற ஒரு மாபெரும் பேரரசு. சுற்று வட்டார தென்கிழக்காசிய அரசுகள் அனைத்தும் ஸ்ரீ விஜய பேரரசிடம் திறை செலுத்தி வந்தன.

ஸ்ரீ விஜய பேரரசின் புகழ் கி.பி. 1290 ஆம் ஆண்டில் ஜாவாவில் மங்கத் தொடங்கியது. கி.பி. 1025 ஆம் ஆண்டில் இந்த ஸ்ரீ விஜய பேரரசு தமிழகத்தின் ராஜேந்திர சோழனால் தாக்கப்பட்டது என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

அதன் பின்னர் ஜாவாவில் சிங்கசாரி எனும் ஒரு புதிய அரசு உருவானது.  அடுத்து ஸ்ரீ விஜய பேரரசின் செல்வாக்கும் சன்னம் சன்னமாய் மேலும் குறையத் தொடங்கியது. தொடர்ந்து சிங்கசாரி அரசு வலிமை வாய்ந்த ஒரு பெரிய அரசாகவும் உருமாற்றம் கண்டது.

சிங்கசாரி அரசு என்பது மஜாபாகிட் பேரரசின் வழித் தோன்றல் ஆகும். இந்தக் காலக் கட்டத்தில் பலேம்பாங் எனும் இடத்தில் ஸ்ரீ விஜய பேரரசின் அரண்மனை இருந்தது.

ஸ்ரீ விஜய பேரரசின் அரண்மனையைப் புதிதாகத் தோன்றிய சிங்கசாரி அரசு பல முறை தாக்கிச் சேதங்களை ஏறபடுத்தியது. அதனால் ஸ்ரீ விஜய பேரரசு தன்னுடைய தலைநகரத்தையும் அரண்மனையையும் பலேம்பாங்கில் இருந்து ஜாம்பிக்கு மாற்றியது.

ஜாம்பி எனும் இடத்தின் பழைய பெயர் மலாயு. புதிய தலைநகரம் உருவாக்கப் பட்டாலும் பலேம்பாங் முக்கியமான அரச நகரமாகவே விளங்கி வந்தது.

14-ஆம் நூற்றாண்டில் பலேம்பாங் அரச நகரமும் மஜாபாகித் பேரரசின் கரங்களில் வீழ்ந்தது. அத்துடன் மாபெரும் ஸ்ரீ விஜய பேரரசின் 1000 ஆண்டுகள் ஆளுமைக்கு ஒரு முற்றுப் புள்ளியும் வைக்கப் பட்டது. ஒரு சகாப்தம் வீழ்ந்தது. (தொடரும்)