அஸ்னால் போல்க்கியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஸ்னால் போல்க்கியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 அக்டோபர் 2012

அஸ்னால் போல்க்கியா புருணை சுல்தான்

(இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 15.10.2012 நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது)

ஒரே ஒரு விநாடி நேரம். இந்த உலகத்தில் ஒரு விநாடி நேரத்தில் என்ன என்ன நடக்கும். கண்ணை மூடிக் கொண்டு கொஞ்சம் நேரம் கற்பனை செய்து பாருங்கள். கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்கே இரண்டு விநாடிகள். அப்புறம் என்ன இதில் உலகத்தைக் கற்பனை செய்து பார்ப்பது என்று கேட்கிறீர்களா. பரவாயில்லை. சண்டை வேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன்.
புருணை சுல்தான்
ஒரு விநாடி நேரத்தில் மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு குழந்தை ஆசியாவில் பிறந்தால், இன்னும் ஒன்று ஆப்பிரிக்காவில் பிறக்கிறது. இன்னும் ஒன்று ஆர்டிக் துருவத்தில் பிறக்கிறது. இந்த இரண்டு வாசகங்களையும் படித்து முடிப்பதற்குள் முப்பது குழந்தைகள் பிறந்து விடுகின்றன. ஆக, ஒரு மணி நேரத்தில் 10,000 குழந்தைகள். ஒரு நாளைக்கு 250,000 குழந்தைகள். மிச்சத்தை நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அஸ்னால் போல்க்கியாவின் அரண்மனை
ஒரு விநாடியில் 12 கணினிகள் விற்கப்படுகின்றன. இரண்டு பிளேக் பெரி கைப்பேசிகள் விற்கப்படுகின்றன. 700 விரலிகள் எனும் Thumb Drives விற்கப்படுகின்றன. 15 ஐபோன்கள் விற்கப்படுகின்றன. 20 இலட்சம் பேர் பாலுணர்வுக் கிளர்ச்சிப் படங்களைப் பார்க்கிறார்கள். சராசரியாக ஒரு விநாடிக்கு ஓர் இறப்பு நடக்கிறது.

மகளின் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார்.
இதன் சக்கரங்கள் அசல் தங்கத்தால் செய்யப்பட்டவை.
ஒன்று. இரண்டு. மூன்று. நான்கு. ஐந்து, என்று சொல்லி முடிப்பதற்குள் உலகம் பூராவும் ஐம்பது கைப்பேசிகள் விற்கப்படுகிறன. ஒரு கார் விற்கப்படுகிறது. இருபது கோடி ரிங்கிட்டிற்கு போர் ஆயுதங்கள் பேரம் பேசப்படுகின்றன. பத்து இலடம் பேர் விமானத்தில் பறக்கிறார்கள்.

அஸ்னால் போல்க்கியாவின் மகள்
இன்னும் ஒரு வேதனையான செய்தி. ஒரு நாளைக்கு ஆப்பிரிக்காவில் மட்டும் 2000 குழந்தைகள் பசிப் பட்டினியால் செத்துப் போகின்றன. இங்கே நம்ப நாட்டில் சோற்றைப் போட்டு பிள்ளைகளைச் சாப்பிடச் சொல்லிக் கெஞ்ச வேண்டியதாக இருக்கிறது. கோலாலம்பூர், பெட்டாலிங் தெரு ஓரத்தில் ஒரு துண்டை விரித்துப் போட்டாலும் போதும். சொல்லி வைத்து இரண்டு மாதத்தில் ஒரு குட்டி ஆனந்தகிருஷ்ணனாகி விடலாம். நான் சொல்லவில்லை. சிலர் பேசிக் கொள்கிறார்கள்.

உலகில் இந்த மாதிரி 10 கார்கள் மட்டுமே உள்ளன.
அதை விடுங்கள். அதற்கு நேர்மாறாக சில வீடுகளில் ரொம்பவுமே நடக்கிறது. நொறுக்குத் தீனி எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். முப்பொழுதும் கைப்பேசிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அங்கேயே அதிலேயே  24 மணி நேரமும் தொங்கி வழிய வேண்டும். சீரியல் நாடகங்களைப் பார்த்துக் குடும்பமே அழுதுத் தொலைக்க வேண்டும். அது ஒரு நல்ல நவீனமான கலாசாரம் என்று சிலர் நினைத்துக் கொள்ளலாம். அப்படி நினைத்தால், அதைவிட ஒரு மோசமான அபச்சாரம் உலகத்தில் வேறு எதுவும் இருக்கவே முடியாது. விஷயத்திற்கு வருகிறேன்.
அரண்மனையின் உள்ளே
இதை எல்லாம் தாண்டி இன்னும் ஒரு விசயம் வருகிறது. நம்ப நாட்டிற்கு பக்கத்தில் ஒரு நாடு இருக்கிறது. அதன் பெயர் புருணை. அதன் அரசரின் பெயர் அஸ்னல் போல்க்கியா ஒரே ஒரு விநாடி நேரத்தில் . அவருடைய கணக்கில் எவ்வளவு பணம் சேர்கிறது தெரியுமா. சொன்னால் நம்பமாட்டீர்கள். விநாடிக்கு 450 ரிங்கிட். ஒரு நிமிடத்திற்கு 28 ஆயிரம் ரிங்கிட்.  ஒரு மணி நேரத்திற்கு 16 இலட்சம் ரிங்கிட். ஒரு நாளைக்கு நான்கு கோடி ரிங்கிட். தொண்டையைக் கொஞ்சம் நனைத்துக் கொள்ளுங்கள்.

தங்கத்தால் செய்யப்பட்ட கழிவறை
மனிதர்களில் சிலர் பிறக்கும் போதே பணக்காரர்களாகப் பிறந்து விடுகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இந்த அஸ்னல் போல்க்கியா. உலகப் பணக்காரர்களின் தலைமகன். செல்வம் கொழிக்கும் நாடான புருணையின் தலைவர். தவிர, அதிபர் பிரதமர் எல்லாம் அவரேதான். அவர் வைத்ததுதான் சட்டம். அவர் கிழித்தக் கோட்டைத் தாண்டிப் போக யாருக்கும் அங்கே துணிச்சல் இல்லை.

விமானத்தில் சுல்தானின் படுக்கை
அஸ்னல் போல்க்கியா  பயன்படுத்தும் பொருட்கள் எல்லாமே தங்கத்தால் ஆனவை. அவர் சாப்பிடப் பயன்படுத்தும் கரண்டி, கத்தி, தட்டு, தாம்பாளம் எல்லாமே தங்கத்தால் செய்யப்பட்டவை. அவர் போட்டு இருக்கிற சட்டை சிலுவார்கூட தங்க வெள்ளி இழைகளால் செய்யப்பட்டவை. அவர் பயன்படுத்தும் கழிவறை இருக்கிறதே, அதுகூட தங்கத்தால் செய்யப்பட்டது.

கழிவரையில் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் வாளி, குவளை எல்லாமே தங்கமோ தங்கம். பல் விலக்க தங்க பிரஷ். சீப்புகூட தங்கத்தால் செய்யப்பட்டது. ஆக, ஒன்றும் பேச வேண்டாம். பேசாமல் படியுங்கள்.

அவர் தங்கி இருக்கும் அரண்மனை உலகத்திலேயே அதிகமான செலவில் கட்டப்பட்டது. எத்தனை கோடி என்று எண்களால் எழுதினால், அதைப் படித்து முடிப்பதற்குள் தலை கிறுகிறுத்துப் போய்விடும். அந்த அரண்மனையில் 1888 அறைகள் உள்ளன. அவற்றில் 650 அறைகள், உயர் மகிழ்ச்சிக்கு வழிகாட்டும் பகட்டான சொகுசு அறைகள். ஒவ்வொரு சொகுசு அறையிலும் எட்டு இலட்சம் ரிங்கிட்டிற்கு அலங்காரப் பொருள்கள்.

ஆக, யாராவது ஒரு விருந்தாளி அங்கே போய்விட்டால், அந்த அரண்மனையின் எல்லா அறைகளையும் சுற்றிப் பார்க்க 24 மணி நேரம் பிடிக்கும் என்று கணக்குப் போட்டுச் சொல்கிறார்கள். அதுவும் ஓர் அறையில் முப்பது விநாடி நேரம் செல்வழித்து அரக்க பரக்க ஓடினாலும் முழுசாக ஒரு நாள் பிடித்துவிடுமாம்.  

அப்புறம் அந்த அரண்மனையில் தனித்தனி குளியலறைகள் என்றால் 257 அறைகள் உள்ளன. பெரும்பாலானவற்றின் உள்அலங்காரப் பொருள்கள் தங்கத்தால் இழைக்கப்பட்டவை. அந்த அரண்மனையின் கார் நிறுத்தும் இடத்தில் மட்டும் ஒரே சமயத்தில்  110 கார்களை நிறுத்தி வைக்க முடியும்.

சுல்தான் அஸ்னால் போக்கியாவின் மகளுடைய திருமணம் அண்மையில் நடைபெற்றது. ஒரு நாள் இரண்டு நாள் கல்யாணம் இல்லை. பதினான்கு நாள்களுக்குத் திருமண வைபோகம். 25 நாடுகளின் தலைவர்களும் குடும்பங்களும் வந்து கலந்து கொண்டன. அவர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி ரிங்கிட் செலவு செய்யப்பட்டது. இதுகூட பரவாயில்லை என்று நினைக்கிறேன்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், லட்சுமி மிட்டல் என்கிற இந்தியக் கோடீஸ்வரர் தன் மகளுக்கு லண்டனில் திருமணம் செய்து வைத்தார். மூன்று நாள் திருமணத் திருவிழாவிற்கு முப்பது கோடி செலவு செய்தாராம். இந்த லட்சுமி மிட்டல் நொடித்துப் போகும் இரும்பு தொழில்சாலைகளை அடிமாட்டு விலைக்கு வாங்குவார். அங்கே இங்கே பழுது பார்த்து அதை அப்படியே ஐஸ்வரியா மாதிரி அழகு படுத்தி ஜோடித்து, ஆஸ்திரேலியா மாட்டு விலைக்கு விற்றுப் பணம் பார்த்து விடுகிறார். இப்போது உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர். பில் கேட்ஸுக்கு அடுதத நிலை. நம்ப ஊர் ஆனந்தகிருஷணன் இருக்கிறாரே அவர் இவரிடம் கொஞ்சம் தள்ளியேதான் நிற்க வேண்டும்.

அஸ்னால் போல்க்கியாவிடம் இருக்கும் கார்களைப் பற்றிய ஒரு சின்ன தகவலையும் சொல்லிவிடுகிறேன். அவரிடம் 531 மெர்சிடிஸ்கள், 367 பெராரிகள், 362 பெண்ட்லிகள், 185 பி.எம்.டபிள்யூகள், 177 ஜாகுவார்கள், 160 போர்சேகள், 130 ரால்ஸ் ராய்கள், 20 லம்போஜினிகள் என்று மொத்தம் 1932 கார்கள் உள்ளன. இதில் ஒரு ரால்ஸ் ராய் காரின் உடம்புக்கூடு, 24 காரேட் தங்கத்தால் செய்யப்பட்டது. உலகத்திலேயே அதிக விலை உள்ள காரும் இங்கேதான் இருக்கிறது. பெயர் Star of India. அதன் மதிப்பு 42 மில்லியன் ரிங்கிட். 

இவரிடம் Mercedes-Benz CLK GTR எனும் ஒரு மெர்சிடிஸ் ரகக் கார் இருக்கிறது. இதுதான் உலகத்தில் அதிகமான விலை கொண்ட மெர்சிடிஸ் ஆகும். 612 குதிரை சக்தி கொண்டது. ஒரே ஒரு விநாடி நேரத்திற்குள் அதன் வேகம் 60 கிலோ மீட்டரைத் தாண்டிவிடும். பார்முலா ஓன் கார் பந்தயங்களில் பயன்படுத்தப்படும் கார்களையும் வாங்கி அடுக்கி வைத்து இருக்கிறார். அதில் ஒன்று F90 Ferrari Testarossa. இந்த ரகத்தில், உலகத்தில் ஆறே ஆறு கார்கள்தான் உள்ளன.

சேமிப்புக் கிடங்கில் இருக்கும் கார்களில் ஒரு நாளைக்கு ஒரு காரை ஓட்டினாலும் எல்லாக் கார்களையும் ஓட்டி முடிக்க ஐந்து வருடங்கள் பிடிக்குமாம். இந்தக் கார்கள் எல்லாம் இப்போது கார் சேமிப்புக் கிடங்கில் தூசி மண்டிக் கிடக்கின்றன என்பதுதான் வேதனையான செய்தி.

ஒரு கஞ்சில் காரை வாங்கி, அதற்கு ஒழுங்காய்ப் பெட்ரோல் ஊற்றி ஓட்டுவதற்கே இங்கே பலர் விழி பிதுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அங்கே பாருங்கள். விதம் விதமான கார்கள். எல்லாமே ஆடம்பரமான, அட்டகாசமான பகட்டுத்தனமான கார்கள். வாழ்ந்தால் அப்படி வாழ வேண்டும். பெருமூச்சு விட்டுக் கொள்வோம். வேறு என்னதான் செய்வது.

அஸ்னால் போக்கியா 1946 ஜூலை 15ஆம் தேதி பிறந்தவர். 1967ஆம் ஆண்டு புருணையின் சுல்தானாகப் பதவி ஏற்றார். இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். முதல் மனைவியின் பெயர் பெங்கீரான் அனாக் சலேஹா. இரண்டாவது மனைவி ஹஜ்ஜா மரியம். இவர் ஒரு விமானப் பணிப்பெண். 2003 ஆம் ஆண்டு மணவிலக்கு செய்துவிட்டார். 2005ஆம் ஆண்டில் நம்ம ஊர் டி.வி.3 நிகழ்ச்சித் தொகுப்பாளர் அஸ்ரினாஸ் மசார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 33 வயதுகள் வித்தியாசம். இந்தத் திருமணமும் சரிபட்டு வரவில்லை. 2010 இல் விவாகரத்தில் போய் முடிந்தது. இப்போது, அஸ்னால் போக்கியாவிற்கு 12 பிள்ளைகள். ஒன்பது பேரப்பிள்ளைகள்.

இவருடைய தம்பி ஜெப்ரி போல்க்கியாவை நம்பி 1200 கோடி ரிங்கிட் மோசம் செய்யப்பட்டார். அதனால் அவரை தன் குடும்பத்தில் இருந்தே விலக்கி வைத்தும் இருக்கிறார்.

ஆக, பாதாளம் வரையில் பணத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது என்று தெரியாமல், பாவம் மனிதர் தடுமாறிக் கொண்டு இருக்கிறார். உதவி செய்வதாக இருந்தால் சொல்லுங்கள். ஒரு புறாவைப் பிடித்து தூது அனுப்பி வைத்துப் பார்ப்போம். மற்றபடி புறா உயிரோடு திரும்பி வருமா வராதா என்பதற்கு அடியேன் உத்தரவாதம் வழங்க முடியாது.