ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 14 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 14 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஜூன் 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 14

பெண் போராளி ஊர்மிளாவிற்கும் விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த உமா மகேஸ்வரனுக்கும் காதல் பிரச்சினை என்கிற செய்தி இலண்டனில் இருக்கும் அண்டன் பாலசிங்கத்திற்குப் போய்ச் சேர்கிறது.


அண்டன் பாலசிங்கம் புலிகளின் அறிவுத் தந்தை. அதாவது காட் பாதர். இன்னும் ஒரு விசயம். விடுதலைப் புலிகளுக்குத் தலைவராக இருந்தவர் உமா மகேஸ்வரன். தளபதியாக இருந்தவர் பிரபாகரன்.

ஆக இருவருமே தலையாய பதவிகளை வகித்து வந்தனர். இவர்கள் இருவரும் சென்னை; யாழ்ப்பாணம் என இரு இடங்களில் இருந்து செயல்பட்டு வந்தனர்.

இவர்கள் இருவருக்கும் அறிவுத் தந்தையாக இருந்தவர் அண்டன் பாலசிங்கம். இவர் இலண்டனில் இருந்து அறிவுரை கூறி வந்தார். 



பாலசிங்கத்திற்குச் செய்தி போனதும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இவர் பிரபாகரனுக்கு அறிமுகமாகி ரொம்ப நாட்கள் ஆகவில்லை.

பாலசிங்கத்திடம் தீர்வு காணச் சொல்லி கொடுக்கப்பட்ட முதல் பிரச்சினை ஒரு காதல் பிரச்சினை. விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முதல் விசித்திரம்; முதல் வியப்பு. எனக்குக்கூட அப்படித்தான் தோன்றியது.

ஏற்கனவே போன கட்டுரையில் சொல்லி இருக்கிறேன். காதல் பிரச்சினை என்பது விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் ஒரு கொசுக்கடி பிரச்சினை. இதற்கு போய் இப்படி அலட்டிக் கொள்கிறார்களே என்றும் எனக்கும் லேசான வருத்தம். ஆனால் அதற்குள் ஒரு பெரிய வில்லங்கம் இருப்பது போகப் போகத் தான் தெரிய வந்தது. தொடர்ந்து படியுங்கள்.



பாலசிங்கம் தன் மனைவி அடேலுடன் சென்னைக்கு வந்து சேர்ந்தார். ஊர்மிளா உமா மகேஸ்வரன் காதல் பிரச்னையின் முழு விவரங்கள் அவருக்குச் சொல்லப் பட்டன. உமா மகேஸ்வரனை அழைத்து விசாரிக்கிறார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றுகிறது.

இதற்கு இடையில் பிரபாகரன் பொறுமை இழக்கிறார். இயக்கத்தை விட்டு வெளியேறுமாறு உமா மகேஸ்வரனிடம் சொல்கிறார்.

அற்பமான காதல் விசயம் தானே. ஏன் இவ்வளவு பெரிய பிரச்சினையாகப் பிரபாகரன் பெரிது படுத்துகிறார் என இயக்கத்தில் இருந்த சிலரும் முணுமுணுத்துக் கொண்டார்கள்.

விடுதலைப் புலிகளின் இலண்டன் பிரதிநிதிகள் இந்த மோதலை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சார்பாக கிருஷ்ணன் என்பவரும் ராமச்சந்திரன் என்பவரும் சென்னைக்கு வந்து பிரபாகரனைச் சந்தித்தனர்.

“உமா மகேஸ்வரன் பெரிய தவறு எதுவும் செய்யவில்லை. காதல் தானே... விட்டு விடுங்கள்” என்று பிரபாகரனிடம் பரிந்துரை செய்தனர்.



விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பெண் உறுப்பினர் ஊர்மிளா. அவரோடு புலிகளின் இயக்கத் தலைவர் படுக்கையைப் பகிர்ந்து கொண்டார் என்பது தெரிய வந்தால்... யாரும் இனிமேல் இயக்கத்துக்கு தங்களுடைய சகோதரியையும் அனுப்ப மாட்டார்கள்; மகளையும் அனுப்ப மாட்டார்கள் என்று பிரபாகரன் கூறிய போது இலண்டன் பிரதிநிதிகளால் பதில் சொல்ல முடியவில்லை.

மோதல் முற்றியது. 1980-ஆம் ஆண்டு உமா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப் பட்டார்.

அப்புறம் என்ன. பிரபாகரன் வசமாக மாட்டிக் கொண்டார். அவர் மீது உமா மகேஸ்வரன் சரமாரியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஜனநாயகச் சுதந்திரமே இல்லை. எல்லா முடிவுகளையும் பிரபாகரன் ஒருவரே எடுக்கிறார். அவர் ஒரு சர்வாதிகாரி. அவர் ஒரு இட்லர் என்று விலாசித் தள்ளினார்.

பிரபாகரன் மறுக்கவில்லை. ஆமாம். நான் சர்வாதிகாரி தான். இல்லை என்று சொல்லவில்லை. முடிவுகளை நான் தான் எடுப்பேன். விருப்பம் உள்ளவர்கள் இயக்கத்தில் இருந்தால் போதும். அவர்களை வைத்து தமிழர்களின் இலட்சியத்தை நிறைவேற்றிக் காட்டுவேன் என்று பிரபாகரனின் பதில் வருகிறது.



இந்தக் காலக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரிவினை. “பிரபாகரன் குழு” என்றும் “உமா மகேஸ்வரன் குழு” என்றும் இரண்டு பிரிவுகளாக விடுதலைப் புலிகள் இயக்கம் பிரிந்து குழப்பத்தில் மூழ்குகின்றது.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலக் கட்டங்களில் பல இயக்கங்கள் செயல்பட்டு வந்து உள்ளன.

1. தமிழீழ விடுதலைப் புலிகள்

2. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)

3. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்

4. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி

5. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்

6. தமிழீழ விடுதலை இயக்கம் 

7. தமிழர் விடுதலைக் கூட்டனி (அரசியல் கட்சி)

8. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்


இந்த இயக்கங்கள் அனைத்துமே தனித் தமிழீழம் தோன்ற வேண்டும் என்று போராடிய குழுக்கள் ஆகும். சரி. உமா மகேஸ்வரன் பிரச்சினைக்கு வருவோம்.



உமா மகேஸ்வரனுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் பிரச்சனை பெரிதாக வெடித்தது. உமா மேஸ்வரன் சில இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டு புலிகளுக்கு எதிரான பிரசாரங்களைச் செய்யத் தொடங்கினார்.

இது யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்களிடையே பெரிய கவலையை உண்டாக்கியது. புலிகளுக்குள் சண்டையாம் என்று பேசும் அளவிற்கு விவகாரம் பெரிதாகிப் போனது.

இதற்கு இடையில் விடுதலைப் புலிகளின் மத்தியச் செயற்குழு இரு முறை கூடி விவாதித்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மக்கள் இயக்கமாக அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.

பிரபாகரன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. விடுதலைப் புலிகளின் இயக்கம் ஓர் இராணுவ இயக்கமாக இருக்க வேண்டும்; இயங்க வேண்டும் என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு.




இருந்தாலும் மத்திய குழு விட்டுக் கொடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் எனும் கருத்தையே தொடர்ந்து முன் வைத்தது.

பிரபாகரனுக்குக் கோபம் வந்துவிட்டது. சரி. பிரச்சினை இல்லை. உங்கள் விருப்பப்படியே செய்து கொள்ளுங்கள். என் பேச்சுக்கு மரியாதை இல்லாத இடத்தில் எனக்கும் வேலை இல்லை என்று சொல்லி இயக்கத்தை விட்டு வெளியேறினார். பலரும் தடுத்தார்கள். பிரபாகரன் கேட்கவில்லை.

இயக்கத்தை விட்டு வெளியேறியதும் வீட்டிற்குச் செல்லவில்லை. போலீஸ் தேடி வரும் என்று தெரியும். அதனால் வல்வெட்டித் துறையில் இருந்த மாமா வீட்டிற்குச் சென்றார். கொஞ்ச காலம் அங்கு தங்கி இருந்தார். ஆனாலும் அவருக்கு மன அமைதி இல்லை. இயக்கம் அழிந்து விடலாம் என்கிற பயம் இருந்தது.

அதனை உணர்ந்த பிரபாகரனின் மாமா (அக்காள் கணவர்) தக்க தருணத்தில் ஒரு முடிவு எடுத்தார். அப்போது டெலோ அமைப்பின் தலைவராகத் தங்கதுரை குட்டிமணி என்பவர் இருந்தார். அவரைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்தார்.

தங்கதுரையும் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் தமிழகம் திருச்சியில் இருந்த டெலோ அமைப்பின் பயிற்சிப் பொறுப்பாளராகப் பிரபாகரன் நியமிக்கப் பட்டார்.



தமிழகம் வந்த பிரபாகரன் டெலோ அமைப்பின் உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார், ஆனாலும் பிரபாகரனுக்கு அதில் முழுமையான விருப்பம் இல்லை. ஒரு கட்டுக் கோப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே பிரபாகரனின் கனவு.

இறுதியில் யாழ்ப்பாணத்துப்  போராளிகளின் கட்டாயத்தின் பேரில் 1980-ஆம் ஆண்டில் புலிகள் அமைப்பில் பிரபாகரன் மீண்டும் சேர்ந்தார். அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

அப்படி இப்படி கோபதாபங்கள் இருக்கவே செய்தன. அதாவது சின்னச் சின்ன சண்டைகள் போட்டு பிரபாகரன் விலகிக் கொண்டதைத் தான் சொல்ல வருகிறேன்.

1981-ஆம் ஆண்டில் பிரபாகரன் தமிழகத்திற்கு வந்தார். தமிழகத்தில் வேதாரண்யத்தில் தங்கினார், புலிகள் இயக்கத்தை பலப் படுத்துவதிலும் பயிற்சிகளை வழங்குவதிலும் தீவிரமாக இருந்தார்.

இதற்கு இடையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்ட உமா மகேஸ்வரன் புலிகளுக்கு எதிராக செயல்படத் தொடங்கினார். 



புளொட் என்னும் இயக்கத்தைத் தொடங்கினார். அது மட்டும் இல்லை. தென் இலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களுடன் உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டார். யாரை எதிரிகள் என்று நினைத்தார்களோ அவர்களிடமே கொஞ்சிக் குலவ ஆரம்பித்தார்.

அத்துடன் பிராகரனின் பெயரைக் களங்கப் படுத்த வேண்டும் என்பதற்காகப் புதியபாதை எனும் ஒரு பத்திரிக்கையையும் உமா மகேஸ்வரன் தொடங்கினார். புலிகளைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் அவதூறுகளை எழுதி வந்தார்.

புலிகள் ஆத்திரம் அடைந்தார்கள். அனைத்துலக ரீதியில் தமிழர்ப் போராட்டத்திற்கு பின்னடைவு ஏற்படும் என்பதைப் புலிகள் உணர்ந்தார்கள். ஊடகத்தின் மூலம் தமிழர்களின் போராட்டம் கொச்சைப் படுத்தப் படுவதைப் புலிகள் விரும்பவில்லை.

புதிய பாதை பத்திரிகையின் பொறுப்பாளரும் உமா மகேஸ்கரனின் வலது கரமான சுந்தரம் என்பவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்கள். புலிகளின் குழு தான் அந்த முடிவை எடுத்தது. அந்த வகையில் சுந்தரத்தை சார்ல்ஸ் அந்தோனி என்கிற சீலன் சுட்டுக் கொன்றார்.

இது உமா மகேஸ்வரனுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. பிரபாகரனைப் பழிவாங்க வேண்டும் என உமா மகேஸ்வரன் வெறி கொண்டு அலைந்தார்.

அந்த நேரத்தில் பிரபாகரன் தமிழகத்தில் இருந்தார். பகை உச்சக் கட்டமாக முற்றியது.

இதற்கிடையில் உமா மகேஸ்வரனும் 1982 பெப்ரவரி 25-ஆம் தேதி சென்னை வந்து சேர்ந்தார். தமிழகம் வந்த உமா மகேஸ்வரன் கவிஞர் பெரும்சித்தனார் வீட்டில் தங்கி இருந்தார்.



பிரபாகரன் தமிழகத்தில் இருப்பது உமா மகேஸ்வரனுக்கு நன்றாகவே தெரியும். பிரபாகரனைத் தீர்த்துக் கட்டத் தான் உமா மகேஸ்வரன் தமிழகத்திற்கே வந்தார்.

இன்னும் ஒரு விசயம். ஒரு காலக் கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழர்களின் விடுதலை இயக்கங்களின் உறைவிடமாகச் சென்னை மாநகரம் விளங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகள்; தமிழீழ விடுதலை இயக்கம்; ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி; தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய நான்கு இயக்கங்களும் சென்னையின் நான்கு இடங்களில் உறைவிடங்கள் இருந்தன. அங்கு இருந்து வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற்று வந்தன.

ஒரு குழுவினர் இருக்கும் இடத்திற்கு இன்னொரு குழுவினர் போக மாட்டார்கள். அது அவர்களுக்குள் எழுதப் படாத ஒரு சாசனம். அந்த வகையில் பிரபாகரனுக்கு அடையாறு தான் அவரிருடைய பேட்டை. சரி.

இந்த இயக்கங்களின் தலைவர்களை இலங்கை அரசாங்கம் அங்கே யாழ்ப்பாணத்தில் வலை போட்டுத் தேடிக் கொண்டு இருந்தது. இருந்தாலும் இவர்கள் தேங்காய் எண்ணெய்யை நன்றாகக் கரைத்துக் கடைந்து ஊற்றிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.

நம்ப விவேக் இப்போது தான் திரையில் வசனங்கள் பேசி கலாய்க்கிறார். ஆனால் அதற்கு முன்னாடியே பிரபாகரன் போன்ற தலைவர்கள் பேர் போன கில்லாடிகள்.

ஆக அதில் இருந்து தப்பிக்கவே பிராபகரன் சென்னையில் தற்காலிகமாகத் தஞ்சம் அடைந்து இருந்தார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த பதவி மோகக் கொலைகளுக்குத் தூபம் போட்டது தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தான். சொல்லி இருக்கிறேன். அதை இங்கே விரிவாகவும் எழுத முடியாது. எழுதவும் விரும்பவில்லை.

இருந்தாலும் கட்டுரையைத் தொடர்ந்து படித்தால் அந்தத் தலைவர்கள் யார் யார் என்பது உங்களுக்கும் தெரிய வரும். அந்தத் தலைவர்களுக்கு எல்லாம் அப்பால் பட்டவர் எம்.ஜி.ஆர்.

செத்தும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். இறந்து கொண்டு இருக்கும் போதும் இலங்கைத் தமிழர்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அவர் மட்டும் இன்னும் கொஞ்ச நாட்கள் உயிரோடு இருந்து இருந்தால் தமிழீழ வரலாறே வேறு மாதிரியாய் எழுதப்பட்டு இருக்கும்.

(தொடரும்)