கம்போங் குவாந்தான் மின்மினிப் பூங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்போங் குவாந்தான் மின்மினிப் பூங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஜூன் 2020

கம்போங் குவாந்தான் மின்மினிப் பூங்கா

தமிழ் மலர் - 22.06.2020

மின்மினியின் மினுக்குகளில்
மெலிதாய் நெஞ்சமதில்
இலக்கியம் தடுமாறியதே
இலக்கணம் தமிழ் மாறியதே

கம்போங் குவாந்தான் வனப் பூங்காவில் எனக்குள் வழிந்த ஒரு கவிதை.


கோலாலம்பூரில் இருந்து 56 கி.மீ. தொலைவில் கோலா சிலாங்கூர். அங்கு இருந்து 7 கி.மீ. தொலைவில் கம்போங் குவாந்தான். நெல்வயல்களும் காண்டா மரக் காடுகளும் நிறைந்த ஒரு சின்னக் கிராமம். இந்தச் சதுப்புநிலக் கிராமம் தான் இன்றைக்கு ஓர் உலகச் சாதனையின் உறைவிடமாய் மிளிர்கின்றது.

கம்போங் குவாந்தான் மின்மினி வனப் பூங்கா தான் உலகிலேயே பெரியது. பல கோடி மின்மினிப் பூச்சிகள் குடியேறிய மிகப் பெரிய மின்மினிக் குடியேற்றச் சதுப்புக் காடு. ஒரே சமயத்தில் பல கோடி மின்மினிகள் சுடர்விட்டு ஒளி குமிழ்கின்ற ஒரு சொர்க்கவாசல். அதுவே பலருக்கும் தெரியாத ஒரு சொப்பன வாசல்.


 மின்மினிகளை மலாய் மொழியில் கிளிப் கிளிப் (Kelip-Kelip) என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் (Fireflies).

உலகில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே இந்த மாதிரி மிகப் பெரிய மின்மினிகளின் குடியேற்றப் பகுதிகள் உள்ளன. இன்னோர் இடம் அமெரிக்கா கலிபோர்னியா, சான் ஜசிந்தோ (San Jacinto) மலை அடிவாரத்தில் உள்ளது.

கோலா சிலாங்கூர், கம்போங் குவாந்தான் காண்டா காடுகளில் ஒளிரும் இந்த மின்மினிகளைப் பார்க்க மலேசியாவில் இருந்து மட்டும் அல்ல; உலகின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து போகிறார்கள். 


கம்போங் குவாந்தான் காண்டா மரங்களுக்கு சன்னெராட்டியா காசோலாரிஸ் (Sonneratia Casolaris) என்று பெயர். இந்தப் பூச்சிகள் பகலிலும் பிரகாசிக்க முடியும். ஆனால் மனிதர்களால் தான் அதைப் பார்க்க முடியாது.

மின்மினி வனப் பூங்காவைச் சுற்றிப் பார்க்க படகு வசதிகள் உள்ளன. பொழுது சாய்ந்ததும் படகுப் பயணங்கள் தொடங்குகின்றன. இரவு 10.30க்கு மேல் பயணங்கள் இல்லை. சிலாங்கூர் ஆற்றின் இரு மருங்கிலும் இந்த அதிசயங்கள் நிகழ்கின்றன.

மின்மினிப்பூச்சிகள் மட்டும் இல்லை. இந்த உலகில் உள்ள பல்வகைப் பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், பூச்சிகள், சில வகை மீன்கள் போன்றவை இயற்கையாகவே ஒளிரும் தன்மை கொண்டவை. 


மின்மினிப் பூச்சிகள் வண்டு வகையைச் சார்ந்த ஒரு பூச்சி இனம். உலகம் முழுதும் ஏறக்குறைய 2000 வகையான மின்மினி பூச்சிகள் உள்ளன.

பூச்சி வகைகளில் மின்மினி பூச்சிகள் முற்றிலும் மாறுப்பட்ட தன்மையைக் கொண்டவை. இரவில் ஒளியை உமிழும் (ஒளிரும்) மின்மினிப் பூச்சிக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது. எப்படி ஒளிர்கிறது? ஒன் மில்லியன் டாலர் கேள்வி.

இரவு நேரங்களில் மின்னிக் கொண்டே பறந்து செல்லும் சில பூச்சிகளை நாம் பார்த்து இருக்கிறோம். அவற்றை மின்மினிப்பூச்சிகள் என்று அழைக்கிறோம். மின்மினிப்பூச்சிகள் ஒரு சிக்கலான உயிர்வேதியியல் (Bio Chemical) முறையைக் கொண்டு இருக்கின்றன.


விலங்கினங்களைப் பொறுத்தவரை, ஒருசெல் உயிரியில் இருந்து ஆழ்கடல் மீன்கள் வரை பல்வேறு உயிரினங்கள் ஒளியை உமிழக் கூடிய ஆற்றல் பெற்றவையாக விளங்குன்றன.

அவற்றுள் மின்மினிப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக ஒளியை உமிழ்ந்து கொண்டு செல்வதைப் பார்க்க மிக அழகாக இருக்கும்.

மின்மினி ஒளியை உமிழ்வது உயிர் வேதியியல் செயலாகும். இந்தப் பூச்சிகள், சுவாசத் துளைகளின் வழியாகச் செல்லும் சுவாசக் குழல்கள் மூலம் சுவாசிக்கின்றன.

இவற்றின் அடிவயிற்றுப் பகுதியில் தனிச்சிறப்பு மிக்க செல்கள் காணப் படுகின்றன. இந்தச் செல்களில் லூஸிபெரின் என்ற வேதிப்பொருள் காணப் படுகிறது.


இந்தப் பூச்சிகள் பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு என பல்வேறு வகையான ஒளியை உமிழ்கின்றன.

இந்தப் மின்மினிப் பூச்சிகள் உயிர் ஒளிர்வு (Bioluminescence) சார்ந்த உயிரினம். ஒரு சிக்கலான உயிர்வேதியியல் (Bio Chemical) முறையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. மின்மினிப் பூச்சிக்கு வெளிச்சம் எப்படி வருகிறது. அதைப் பற்றி நினைத்துப் பார்த்து இருக்கிறீர்களா.

பொதுவாக ஒரு பொருள் ஒளி விடும் போது அதில் இருந்து வெப்பம் தான் அதிகமாக வெளியே வரும். அதாவது ஒரு மின்விளக்கு எரிகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். அந்த விளக்கில் இருந்து 90 விழுக்காடு வெப்பம் தான் அதிகமாக வெளியே வரும். 10 விழுக்காடு மட்டும் தான் ஒளி. அவ்வளவுதான். 


அப்படி என்றால் இந்தச் சின்னஞ் சிறியப் பூச்சி வெப்பத்தால் வெந்து கருகி கருவாடாகிப் போகாதா?

அதுதான் இல்லை. மின்மினியின் உடலில் உருவாகும் ஒளி குளிர் ஒளி (Cold Light) ஆகும். அதாவது உயிர் ஒளி (bioluminescence).

இதற்குக் காரணம் இந்தப் பூச்சிகளின் வயிற்றில் உள்ள ஒளியைத் தரும் ஒரு வகையான சிறப்பு செல்கள் உள்ளன. அவை முழுக்க முழுக்க ஒளியை மட்டுமே தரும். கொஞ்சம்கூட வெப்பம் தருவது இல்லை. 


அதாவது மின்மினிப் பூச்சியில் இருந்து வரும் ஒளியில் 100 விழுக்காடு குளிரான ஒளி ஆகும். வெப்பம் சுழியம் பாகைக்கும் குறைவாகத் தான் இருக்கும். அந்த வகையில் மின்மினியின் வயிற்றுப் பகுதியில் ஒளியை உருவாக்கும் சிறப்பு ஒளி செல்கள் உள்ளன.

அவற்றை லூசிபெரின் (luciferin) என்று அழைக்கிறார்கள். ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இந்த லூசிபெரின் பூச்சியின் உள்ளே இருக்கும் ஒளி உமிழ் உறுப்பில் (Light emitting organ) நிறைந்து இருக்கிறது.

இந்த லூசிபெரின் மின்மினிப்பூச்சசி சுவாசிக்கும் உயிர்க் காற்றுடன் (Oxygen) சேரும் போது ஒளி உண்டாகிறது.


சரி. இந்த மின்மினிப்பூச்சி விட்டு விட்டு ஒளிர்வதற்கும் காரணம் இருக்கிறது. அதன் ஒளி உமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (Nerve impulses) விட்டு விட்டு தொடர்பு அற்றுச் செல்கின்றன. அதுதான் காரணம்.
   
மீண்டும் சொல்கிறேன். இந்த ஒளி உமிழ்வின் போது வெப்பம் எதுவும் வெளியிடப்படுவது இல்லை. இந்த ஒளி உமிழ்வு இயற்கையாகவே பூச்சியின் உள்ளே இருந்து ஏற்படுகிறது.

பெண் மின்மினிப் பூச்சிகள் மண்ணில் முட்டையிடும் தன்மை கொண்டது. 4 வாரங்களில் முட்டையில் இருந்து இளம் புழு வெளியாகும். இந்தப் புழு வெயில் காலத்திலும், வேனில் காலத்திலும் நன்றாகச் சாப்பிட்டுப் பெரிதாக வளரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கு அடியில் ஒளிந்து கொள்ளும்.


பொழுது சாயும் நேரத்தில் கம்போங் குவாந்தான் மின்மினிப் பூச்சிகள் சதுப்பு நிலக்காடுகளில் ஒன்று கூடுகின்றன. ஆயிரம் பூச்சிகள் அல்ல. இலட்சங்களும் அல்ல. கோடிகளில் கூடுகின்றன. மரப் பட்டைகளின் சாறுகளை உறிஞ்சுகின்றன.

துணையை ஈர்ப்பதற்காக ஒளிர்கின்றன. ஆண் பெண் இரு இனங்களும் ஒளிரும் என்றாலும் ஆண் பூச்சிகளே அதிகமாக ஒளியை வெளியாக்குகின்றன.
ஆண் பூச்சி 5.8 விநாடிகளுக்கு ஒருமுறை ஒளியால் பெண் பூச்சிகளுக்கு சைகை அனுப்புகிறது. ஆண்பூச்சியின் சைகைக்கு 2.1 விநாடிகளுக்கு பின் பெண் பூச்சி பதில் சைகை செய்கிறது. என்னே ஆண் பெண் ஒற்றுமை. 


ஆண் பூச்சி சிக்னல் கொடுத்ததும் பெண் பூச்சி மாரியாதைக்கு சிக்னல் கொடுக்கிறது. நம்ப மனித இனத்தில் அப்படியா நடக்கிறது.

சில இடங்களில் ஆண் பூச்சி மாதிரி இளைஞர்கள் சிக்னல் கொடுக்கும் போது, பெண் பூச்சி மாதிரி சிக்னல் வருவது இல்லை. சிலிப்பர் சிக்னல் தான் வருகிறதாம். நல்லவேளை. மின்மினிப் பூச்சிகளுக்கு சட்டை சிலுவார்; சப்பாத்து சிலிப்பர் இல்லை. இருந்து இருந்தால்... இருந்து இருந்தால்... நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அந்தக் கற்பனையில் எலி அம்மணமாய் ஓடுவதை மட்டும் கற்பனை செய்து கொள்ள வேண்டாமே. ஏன் என்றால் பக்கத்து வீட்டு நயன்தாரா எலியிடம் ’அப்பாயின்ட்மெண்ட்’ வாங்கி இருக்கலாம். சரி. மின்மினிப் பூச்சிகளின் கதைக்கு வருவோம். ஊர் பொல்லாப்பு வேண்டாம்.


மின்மினிப் பூச்சிகளுக்குப் பிடித்தமான உணவு சிறுசிறு நத்தைகள்; மண்புழுக்கள். இந்தப் பூச்சிகள் இரையை எடுத்துக் கொள்ளும் விதமே சற்று வித்தியாசமாக இருக்கும்.

முதலில் இரையை மயக்கம் அடையச் செய்கிறது. அப்புறம் தன் முகப் பகுதியில் இருக்கும் கத்தி போன்ற கொடுக்கைப் பயன்படுத்துகிறது. கொடுக்கின் மூலம் எதிரியை மயக்கம் அடையச் செய்யக் கூடிய வேதிப் பொருள் மின்மினிப் பூச்சிகளிடம் உள்ளது.

ஒரு சில மணி நேரத்தில் மின்மினிப் பூச்சியின் இரை கூழ்மமாக மாறிவிடுகிறது. அந்த இரையைச் சுற்றி வரும் மின்மினிப் புழுக்கள் அந்தக் கூழை உறிஞ்சி எடுத்துக் கொள்கின்றன. இந்த நிலையில் புழுக்களின்  அடிவயிற்றுப் பகுயின் முடிவில் விளக்குப் போன்ற வெளிச்சம் உருவாகிறது.


இந்தப் பூச்சிகளின் வெளிச்சத் தன்மையால் ஒரு சில பறவைகள் அவற்றைப் பிடித்துக் கொண்டு போவதும் உண்டு. பறவைகளின் கூடுகளில் வெளிச்சத்திற்காக இந்த மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வைத்துக் கொள்கின்றன.

இயற்கையின் அதிசயங்கள் தான் எத்தனை எத்தனை பாருங்கள். விந்தைமிக்க உயிரினங்களின் இயல்புகளை அறிந்து கொள்ளும் போது நமக்கே சில சமயங்களில் வியப்பு, விந்தை, ஆச்சரியம், பிரமிப்பு, திகைப்பு, மலைப்பு. அனைத்தும் சேர்ந்த அற்புத உணர்வுகள்.

அந்த வகையில் இயற்கையில் ஒளி உமிழும் உடலமைப்பைக் கொண்ட இந்த மின்மினி பூச்சிகளும் வருகின்றன. 


1970-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஒரு உள்ளூர் தொழிலதிபர் அந்த மின்மினிப் பூச்சிகளின் சாகசங்களைப் பத்திரிக்கைகளில் எழுதினார். அந்தப் பூச்சிகளின் அதிசயத்தை வணிகமாக மாற்றிக் காட்டலாம் என்று எழுதினார். அதுவே நடந்து விட்டது.

இந்தப் பூச்சிகளின் உறைவிடம் ஓர் உலக அதிசயமாக மாறி வருகிறது. இப்போது கொரோனா காலம். அதனால் அந்தப் பூங்காவை அடைத்து வைத்து இருக்கிறார்கள்.

ஒரு சில ஆண்டுளுக்கு முன்னர் இந்த வனப்பூங்காவின் பொறுப்பு கோலா சிலாங்கூர் மாவட்டக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் 27 சிறிய படகுகள் வாங்கப் பட்டன. அதன் மூலம் வனப்பூங்கா சுற்றுலா வேகமாக விரிவு அடைந்து உள்ளது.


இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக நானும் அந்த இடத்திற்குச் சென்றேன். இரவு நேரச் சுற்றுப் பயணம். ஆச்சரியமாக மாயாஜாலம் போல இருந்தது. சிலாங்கூர் ஆற்றில் ஒரு பகுதி. சிறிய ஆறுதான்.

அங்குள்ள படகுகள் முற்றிலும் அமைதியாக மின்கலத்தில் (பேட்டரி) இயங்குகின்றன. இந்த மின்மினிப் பூச்சிகளின் சரணாலயத்தின் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் முன் ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள்.

முதலில், அவ்வளவு மின்மினிப் பூச்சிகளைப் பார்க்க முடியவில்லை. ஆனால் போகப் போக பூச்சிகளின் வர்ணஜாலங்கள் கூடத் தொடங்கின. ஒவ்வொரு காண்டா மரத்திலும் ஆயிரக் கணக்கான மின்மினிப் பூச்சிகள். வியப்பில் திகைப்பு.

அந்த அற்புதமான சூழ்நிலையை அனுபவிக்க சிறிது நேரம் அப்படியே அங்கேயே ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து விட்டேன். நிலவொளி இரவு நேரம். வாழ்க்கையில் மறக்க முடியாத பூச்சிகளின் ஜொலிப்புகள்.