எம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 ஆகஸ்ட் 2015

எம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள்

மலேசியா தினக்குரல் 05.08.2015 நாளிதழில் எழுதப்பட்டது

 
கணவனை இழந்து கதறும் மலேசியச் சீனப் பெண்
உலக விண்வழி வாசலில் பலவிதமான மர்மங்கள். பலவிதமான மாயங்கள். மனித மனங்களைத் திகைக்க வைக்கும் மாயஜாலங்கள். அந்த வான்வெளியில் இதுவரை ஒன்பது விமானங்கள் மாயமாய் மறைந்து போய் இருக்கின்றன. சில நாட்கள் காணாமல் போனவை இருக்கின்றன.

சில மாதங்கள் காணாமல் போனவை இருக்கின்றன. சில பல ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட விமானங்கள் இருக்கின்றன. கடைசி வரை கண்டுபிடிக்க முடியாமல் போனவையும் இருக்கின்றன. அத்தனையும் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியவை. மனித மனங்களில் அதிசய ராகங்களைப் பாடச் செய்தவை.



MH 370 Phillipines Children
பிலிப்பைன்ஸ் குழந்தைகள் பிரார்த்தனை

அவற்றுள் மாஸ் எம்.எச்.370 விமானம் மாயமாய் மறைந்து போனதுதான் விண்வழி மர்மங்களின் தலைவாசல். உலகத்தையே திகைக்க வைக்கும் ஒரு பயங்கரமான மர்ம நிகழ்ச்சி. இன்னும் நீடிக்கின்றது. இதுவரையிலும் இந்த மாதிரியாக, இப்படி ஒரு விமானம் மாயமாய் மறைந்து போனதும் கிடையாது. மாயஜாலம் காட்டியதும் கிடையாது. உலக மக்களைத் திணற வைத்ததும் கிடையாது.

ரியூனியன் தீவில் கரை ஒதுங்கிய சிதை பாகம்


இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ரியூனியன் தீவில் கரை ஒதுங்கி இருக்கும் ஒரு விமானத்தின் சிதைப் பாகம், காணாமல் போன எம்.எச். 370 விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அந்தச் சிதைப் பாகங்கள் எம்.எச். 370 விமானத்திற்கு உரியதா எனும் ஆய்வு பிரான்ஸ் தோலோஸ் நகரத்தில் மேற்கொள்ளப் படவிருக்கிறது.


MH 370 Malaysian Women Pray
மலேசியப் பெண்களின் பிரார்த்தனை

இருப்பினும் கண்டெடுக்கப்பட்ட உடைந்த பாகம் போயிங் 777 ரக விமானத்தின் உடைந்த பாகம் தான் என்பது உறுதியாகத் தெரிய வந்துள்ளது. எம்.எச். 370 விமானமும் அதே போயிங் 777 ரக விமானத்தைச் சேர்ந்ததாகும்.

கண்டு எடுக்கப்பட்ட போயிங் 777 ரக விமானச் சிதை பாகம், விமானத்தின் இறக்கைப் பகுதியில் உள்ளதாகும். அதை விமான தொங்குமடிப்பு (Flaperon) என்று அழைக்கிறார்கள். எம்.எச். 370 விமானம் காணாமல் போய் ஏறக்குறைய ஐநூறு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன.



கோலாலம்பூர் மாரியம்மன் ஆலயத்தில் பிரார்த்தனை

இந்த எம்.எச். 370 விமானத்தைத் தேடும் பணிகளில், அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், ஈரான், கத்தார் போன்ற நாடுகள் ஈடுபட்டன. மொத்தம் 13 நாடுகள். நவீனமான தொழிநுட்பங்கள் பயன்படுத்தப் பட்டன. அதிநுட்பமான வான்கோளங்களைப் பயன்படுத்தி ஒவ்வோர் அடி அங்குலத்தையும் அளந்து பார்த்தார்கள்.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா

கடைசியாக, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் களம் இறங்கியது. இந்த ஆய்வு நிறுவனம் அப்போலோ, ஜெமினி வான்கோலங்களை விண்ணுக்கு அனுப்பி வைத்தது. மனிதனைச் சந்திர மண்டலத்தில் நடக்க வைத்தது. அந்த நிறுவனமும் தன்னுடைய துணைக்கோளங்களைப் பயன்படுத்தியது. பூமிக்கு 200 மைல்கள் உயரத்தில் இருந்து இந்தியப் பெருங்கடலைப் படம் பிடித்துப் பார்த்தது. 


கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் புத்த ஆலயத்தில் பிரார்த்தனை

63 கப்பல்கள் 58 விமானங்களைக் கொண்டு கடல் காடுகளை அலசிப் பார்த்து விட்டார்கள். ஆனால், காணாமல் போன அந்த மாஸ் எம்.எச்.370 விமானம் மட்டும் இன்னும் கண்ணில் தென்படுவதாக இல்லை. இப்போது அதன் இறக்கைப் பாகம் கிடைத்து இருப்பதாகச் சொல்லப் படுகிறது. ஆய்வு முடிவு என்னவாக இருக்கும். பொறுமையாக இருப்போம்.

இந்தியாவின் பெரும் பங்களிப்புகள்

இந்தியப் பெருங்கடலில் எங்கோ ஒரு தீவுக் கூட்டத்தில், எம்.எச்.370 விமானத்தைத் தரை இறக்கி இருக்கலாம் என்று அமெரிக்க புலனாய்வாளர் ஒருவர் சொன்னார். ஆனால், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தரை இறங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று இந்தியா சொல்கிறது. போயிங் 777 போன்ற ஓர் இராட்சச விமானத்தை, அந்தமான் தீவில் இருக்கும் போர்ட் பிளேயர் விமானத் திடலில் தரை இறக்க முடியாது என்று இந்தியக் கடற் படை சொல்லி வருகிறது. 



இந்தியா பூனாவைச் சேர்ந்த கிராந்தி சிர்சாத்
Kranti Shirsath from Pune, four other Indians — Chandrika Sharma (51), Vinod Kolekar (59), Chetna Kolekar (55) and Swanand Kolekar (23) — were aboard the flight, in addition to 154 Chinese, 38 Malaysians, seven Indonesians, six Australians, four Americans and two Canadians.

இந்தியா இதுவரை எட்டு போர்க் கப்பல்கள், ஐந்து கடுங் கண்காணிப்பு விமானங்களைக் களம் இறக்கி இருக்கிறது. அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் இருந்து சென்னை வரையில், 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குத் தேடல் பணிகள் நடைபெற்றன.

பி-81 ரக நீர்மூழ்கிக் கப்பல் விமானங்கள், சி-130ஜே சிறப்பு ஜெட் விமானங்கள், ருக்மணி விமானம் தாங்கிக் கப்பல் போன்றவை களத்தில் இறங்கி இருக்கின்றன. இந்தியாவின் ஜிஎஸ்ஜேடி-7 கடற்படை துணைக்கோளங்களும் பயன்படுத்தப் பட்டன.

ராஜா போமோ இப்ராஹிம் மாட் சின்

உலக மக்கள் இனம், மொழி, சமய உறவுகளைத் தாண்டி வழிபாடுகளை நட்த்தி வருகின்றனர். தவிர, ராஜா போமோ இப்ராஹிம் மாட் சின் என்பவர் வேறு, கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிரார்த்தனைகள் செய்தார். பலிக்கட்டும் என்று வேண்டினோம். ஆனால், பலிக்கவில்லை. 



MH 370 Bomoh
கோலாலம்பூர் விமான நிலையத்தில்
ராஜா போமோ இப்ராஹிம் மாட் சின் பிரார்த்தனை

கோடிக் கோடியாகப் பணம் செலவு செய்து விட்டார்கள். இருந்தாலும் காணாமல் போன விமானம் காணாமல் போய் 500 நாட்கள் ஆகிவிட்டன. இன்னமும் கண்ணாமூச்சி காட்டுகின்றது.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி பின்னிரவு 1.31-க்கு ராடார் திரையில் இருந்து மாஸ் எம்.எச்.370 விமானம் காணாமல் போனது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 40 நிமிடங்கள். அப்புறம் எந்த ஒரு தகவலும் இல்லை. என்ன ஆனது, எங்கே இருக்கிறது என்று எதுவுமே தெரியவே இல்லை.

ஆகக் கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, அந்த விமானம் இந்தியப் பெருங்கடலை நோக்கிப் பயணம் செய்ததாகச் சொல்லப் படுகிறது. ராடார் தொடர்புகள் துண்டிக்கப் பட்ட பின்னர், நான்கு மணி நேரம் பறந்து கொண்டே இருந்து இருக்கிறது.

டி கார்சியா தீவுக் கூட்டம்

புலனாய்வாளர்களின் கணக்குப் படி, அந்த விமானம் பாகிஸ்தான் அல்லது ஆஸ்திரேலியா வரை போய் இருக்கலாம். இந்தியப் பெருங்கடலின் மேல் போய் இருந்தால் 2000 மைல்கள் கடந்து போய் இருக்க வேண்டும். விமானத்தில் இருந்த எரிபொருள் நான்கு மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும். அதுவரை அந்த விமானம் பறந்து கொண்டே இருக்கலாம்.

MH370 Puspanathan Banting
மலேசியா கிள்ளானைச் சேர்ந்த புஸ்பநாதன், மறைந்தவர்களில் ஒருவர்

தேடும் முயற்சிகள் இந்தியப் பெருங்கடல் பக்கம் திசை திருப்பப் பட்டன. இந்தியப் பெருங்கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டங்களுக்கு கீழே, டி கார்சியா எனும் தீவுக் கூட்டம் இருக்கிறது. அங்கே அமெரிக்காவின் கப்பற்படை தளம் ஒன்று இருக்கிறது. அங்கே இருக்கும் கப்பல்களும் விமானங்களும் தேடல் பணிகளில் ஈடுபட்டன.  சரி. அது அப்படியே இருக்கட்டும்.

உலக விண்வழி வரலாற்றில் ஒன்பது விமானங்கள் மாயமாய் மறைந்து போய் இருக்கின்றன. அந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். அவற்றுக்கு எல்லாம் தலைமை வகிப்பது நம்முடைய மாஸ் எம்.எச்.370 விமானம்தான். கொஞ்ச நேரத்திற்கு அதைத் தவிர்த்து விடுவோம். மற்ற மற்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

2009 - ஏர் பிரான்ஸ் 447

இந்த நிகழ்ச்சி 2009 மே மாதம் 31-ஆம் தேதி நடைபெற்றது. அது ஓர் ஏர்பஸ் ஏ-330 ரக விமானம். ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது. 228 பயணிகள். தென் அமெரிக்கா ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸ் நகரத்திற்கு விடியல் காலை 1.33-க்கு பயணத்தை மேற்கொண்டது. ஜூன் 1-ஆம் தேதி அட்லாண்டிக் கடலில் பறந்து கொண்டு இருக்கும் போது காணாமல் போய் விட்டது. பிரேசில் அட்லாண்டிக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் கடைசியாகத் தொடர்பு கொண்டு இருக்கிறது.



அதன் பிறகு அதற்கு என்ன ஆனது, எங்கே இருக்கிறது என்று எதுவுமே தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. அட்லாண்டிக் கடலில் எங்கோ ஓர் இடத்தில் விழுந்து இருக்கிறது. அந்த அனுமானத்தில் விமானத்தைத் தேட ஆரம்பித்தார்கள்.

அட்லாண்டிக் மாக்கடலில்

இந்தப் பக்கம் தென் அமெரிக்காவின் பிரேசில். அந்தப் பக்கம் ஆப்பிரிக்காவின் செனாகால் நாடு. நடுவில் அட்லாண்டிக் மாக்கடல். அதன் அகலம் 3,450 மைல்கள். பரப்பளவு 41 மில்லியன் சதுர மைல்கள். சராசரி ஆழம் 3.2 கிலோமீட்டர்கள். எவ்வளவு ஆழம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதில் அந்த விமானத்தை எங்கே போய் தேடுவது. இருந்தாலும் தேடும் முயற்சிகள் கைவிடப் படவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப் பட்டது. பிரேசில் நாட்டு வடப் பகுதியின் கடற்கரையில் இருந்து 600 மைகள் தள்ளி அந்த விமானம் கண்டுபிடிக்கப் பட்டது. பயணம் செய்த 228 பேரும் இறந்து விட்டார்கள். கறுப்புப் பெட்டி, மற்ற ஒலிப்பதிவு கருவிகளை மீட்டு எடுத்தார்கள்.



விமான விபத்தைப் பற்றிய முழு அறிக்கை, 2012-ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது. ஒவ்வொரு விமானத்திலும் தானியங்கு விமானி ஓட்டி என்று ஒரு சாதனம் இருக்கும். அதை ஆங்கிலத்தில் (autopilot) என்று சொல்வார்கள். ஒரு விமானம் 30,000 அடிகளுக்கும் மேலே போனதும், இந்தத் தானியங்கு விமானி ஓட்டியை முடுக்கி விடுவார்கள்.

அதன் பின்னர் விமானம் சொந்தமாகவே பறக்க ஆரம்பித்து விடும். அதாவது விமானியின் கட்டுப்பாடு இல்லாமல் விமானம் தானாக இயங்கிக் கொண்டு இருக்கும். அந்தச் சமயத்தில் விமானிகள் ஓய்வு எடுத்துக் கொள்வார்கள்.

நிலைகுத்திப் போன விமானம்

ஆனால், அன்றைய தினம், இந்த ஏர்பஸ் ஏ330 ரக விமானத்தின் வெளித் தொடர்புக் கருவிகளை பனித் திட்டுகள் மூடி விட்டன. அதனால் தானியங்கு விமானி ஓட்டியின் செயல்பாடுகளில் தடுமாற்றம். விமானத்தை இயல்பான நிலைக்கு கொண்டு வருவதற்கு விமானிகளும் அவசரம் அவசரமாக சில முயற்சிகளைச் செய்து இருக்கின்றார்கள். அத்தனையும் வீண். 



விமானத்தின் மூக்குப் பகுதி கீழே வருவதற்குப் பதிலாக மேல் நோக்கிப் போய் இருக்கின்றது. அதனால் விமானம் நிலைகுத்திப் போய், அப்படியே கடலில் விழுந்து இருக்கிறது. கடலில் கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன ஆகும்.

அந்த மாதிரி 10 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து விமானம் கீழே கடலில் விழுந்து இருக்கிறது. விமானத்தின் மூக்குப் பகுதியைக் கீழ்ப் பக்கமாகத் தாழ்த்தி இருந்தால், விபத்தைத் தவர்த்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 

2003 போயிங் 727

இந்த நிகழ்ச்சி 2003 மே மாதம் 25-ஆம் தேதி நடைபெற்றது. ஆப்பிரிக்காவில் இருக்கும் அங்கோலா நாட்டின் தலைநகரமான லுவாண்டாவிற்கு அருகில் அந்த விமானம் காணாமல் போனது. புர்க்கினா பாசோ நகரை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் போது ராடார் திரையில் இருந்து விமானம் காணாமல் போனது. 




விமானத்தில் 12 பேர் இருந்தனர். இந்த விமானம் என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. பெரிய மர்மமாகவே இருக்கிறது. பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், அது ஒரு பெரிய செய்தியாகத் தெரியவில்லை. உலக மக்களும் மறந்து விட்டார்கள்.  

1999 எகிப்திய விமானம் 990


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் 1999 அக்டோபர் மாதம் நடந்தது. இது ஒரு போயிங் 767 ரக விமானம். நியூயார்க் நகரத்தில் இருந்து கெய்ரோ நகரத்திற்குப் பயணம். அட்லாண்டிக் பெருங் கடலில் 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது, திடீரென்று தலைக் குப்புற விழுந்தது. 14,000 அடி உயரத்தை 36 விநாடி நேரத்தில் கீழ் நோக்கி இறங்கி குப்புற விழுந்து இருக்கிறது. 



பயணம் செய்த 217 பேரும் இறந்து போனார்கள். விமானத்தின் சிதைபாடுகள் பின்னர் கண்டு எடுக்கப்பட்டன. விமானி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று அறிவிக்கப் பட்டது. விமானிக்கும் துணை விமானிக்கும் இடையே போராட்டங்கள் நடந்து இருக்கின்றன.

கறுப்புப் பெட்டியின் உரையாடல்கள் மூலம் கண்டு அறியப் பட்டது. இருந்தாலும், இயந்திரக் கோளாற்றினால் விமானம் விழுந்து விட்டது என்று எகிப்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்தது. போயிங் விமானம் இல்லை என்று இன்று வரையிலும் மறுத்து வருகிறது. 

1996 டி.டபுள்யூ.ஏ. 800

டிரான்ஸ் ஓர்ல்ட் ஏர்லைன்ஸ் (Trans World Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 747-100 ரக விமானம். 1996 ஜூலை 17-ஆம் தேதி நியூயார்க் ஜான் கென்னடி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ரோம் நகரை நோக்கிப் புறப்பட்ட அந்த விமானம் 12-வது நிமிடத்தில், வானத்தில் வெடித்து அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது. பயணம் செய்த 230 பேரும் இறந்து போனார்கள்.

அமெரிக்க விண்வழி வரலாற்றில் மூன்றாவது மிக மோசமான விமான விபத்து என்று சொல்லப் படுகின்றது. பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்து இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், எரிபொருள் சேமிப்புக் களனில் ஏற்பட்ட குறுஞ்சுற்று (short circuit) கோளாற்றினால் வெடிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று புலனாய்வுகள் சொல்கின்றன.

இருந்தாலும், அது ஒரு சதிநாச வேலை என்று பல ஆய்வாளர்கள் இன்றும் சொல்கின்றனர். ஓர் உயிர் இல்லை. இரண்டு உயிர் இல்லை. 230 உயிர்கள். ஆக, அந்த விமானம் வெடித்துச் சிதறியதற்கு யார் காரணம் என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். 

1947 ஸ்டார்டஸ்ட்

67 ஆண்டுகளுக்கு முன்னால் 1947 ஆகஸ்டு மாதம் 2-ஆம் தேதி நடந்த விபத்து. விமானத்தின் பெயர் ஸ்டார்டஸ்ட். தென் அமெரிக்கா போனஸ் ஏர்ஸ் நகரில் இருந்து சிலி நாட்டிற்குப் போன விமானம். திடீரென்று காணாமல் போய் விட்டது. அந்த விமானத்திற்கு ஏன்ன ஆனது ஏது ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. பயணம் செய்த 11 பேரும் இறந்து போனார்கள்.

சதிநாச வேலையாக இருக்கலாம். வேறு கிரகவாசிகள் வந்து பழி வாங்கி இருக்கலாம் என்றும் பேசிக் கொண்டார்கள். இருந்தாலும் 2000-ஆம் ஆண்டில் அந்த விமானத்தின் சிதைபாடுகள் கிடைத்தன. ஆழமான ஒரு பனிக்கட்டி ஆற்றில் மூழ்கிக் கிடப்பது கண்டுபிடிக்கப் பட்டது. பயணிகளின் உடல்கள் அழுகிப் போகாமல் அப்படியே அசலாக இருந்தன. 67 ஆண்டுகள் ஆகிப் போனதால் அந்த உடல்களுக்குச் சொந்தம் கொண்டாட யாரும் வரவில்லை. இப்படியும் சில உயிர்கள் சொந்தம் இல்லாமல் மறைந்து போகின்றன. நம்ப உயிர் எப்படியோ தெரியவில்லை.

1937 ஏமேலியா இயர்ஹார்ட்

உலக விண்வழி வரலாற்றில், இந்த ஏமேலியா இயர்ஹார்ட் (Amelia Earhart) மறைவுதான் மிக மிகச் சோகமான நிகழ்ச்சியாகும். மக்கள் மனதைக் கவர்ந்த ஒரு பெண்மணி. சின்ன வயதிலேயே சிறகொடிந்து போனார். அவர் இறந்து போனது இன்னும் தீர்க்கப்படாத ஒரு மர்மமாகவே நீடிக்கின்றது. உலகத்தை விமானத்தின் மூலம் முதன்முதலாகச் சுற்றி வந்த பெண்மணி என்று சாதனை படைக்க ஆசைப் பட்டவர்தான் இந்த ஏமேலியா இயர்ஹார்ட். 



இவர் நிறைய சாதனைகளைச் செய்தவர். நிறைய நூல்களை எழுதி இருக்கிறார். உலகலேயே பெண்களுக்காக முதன்முதலில் பெண் விமானிகள் சங்கத்தை உருவாக்கியவர். இவரைப் பற்றி ஒரு தனிக் கட்டுரையையே எழுத வேண்டும். இவரைப் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் ஒரு விஷயம். 
 
அமெரிக்க கற்றுப்பினப் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். உலகப் பெண்கள் எல்லோருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று போராடியவர். பெண்களால் எதையும் செய்ய முடியும் என்று சாதித்தும் காட்டியவர். ஒரு பெண்ணால், தன்னந் தனியாக உலகைச் சுற்றி வர முடியும் என்று செய்து காட்டியவர். ஆனால், விதி விளையாடி விட்டது. இது நடந்தது 1937-ஆம் ஆண்டு.

சாதனைப் பெண்மணி

விமானம் என்ற ஒரு பொருள் வானத்தில் பறந்து ஒரு இருபது வருடங்கள்தான் ஆகி இருக்கும். அப்போதே சாதனை படைக்கக் கிளம்பி விட்டார் இந்தப் பெண்மணி. அப்போது அவருக்கு வயது 39. அவர் பயன்படுத்தியது சாதாரண ஒரு காற்றாடி விமானம்தான். அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு முக்கால்வாசி உலகத்தைச் சுற்றி வந்து விட்டார். இன்னும் 7000 மைல்கள்தான் இருந்தன.

விமானத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் அவசரமாகத் தரை இறங்க வேண்டிய கட்டம். பசிபிக் பெருங்கடலில் இருக்கும் ஹாவ்லாண்ட் தீவில் தரை இறங்க முயற்சி செய்து இருக்கிறார். அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவருடைய விமானம் மாயமாய் மறைந்து விட்டது. இது நடந்தது 1937 ஜூலை மாதம் 2-ஆம் தேதி. அவர் கடைசியாக பேசிய வார்த்தைகள். `வடக்கேயும் தெற்கேயும் பறந்து கொண்டு இருக்கிறேன்`. அதோடு சரி. அந்த மனுஷி உலக வரலாற்றில் இருந்து மறைந்து போய் விட்டார்.

பிரார்த்தனை செய்வோம்

அவரைத் தேடுவதற்கு அமெரிக்கா ஒரு கப்பல் படையையே அனுப்பி வைத்தது. ஒரு சுவடும் கிடைக்கவில்லை. 250,000 சதுர மைல்கள் தேடி விட்டார்கள். இதுவரையில் ஒரு விவரமும் கிடைக்கவில்லை. 2002-ஆம் ஆண்டில் இருந்து 2006-ஆம் ஆண்டு வரையில் 14 மில்லியன் டாலர்கள் செலவு செய்து விட்டார்கள். 2007-ஆம் ஆண்டு தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன. 


MH 370 Chinese Pray

இருந்தாலும் அந்தப் பெண்மணியின் எலும்புக் கூடுகள், பசிபிக் பெருங்கடலில் எங்கோ ஓர் ஆழ்ப்பகுதியில் இன்னும் வீர வசனங்கள் பேசிக் கொண்டு இருக்கின்றன. நம்முடைய மாஸ் விமான பயணிகளுக்காகவும் இந்த அரிய வீரப் பெண்மணிக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.

MH 370 Multi Religion
மலேசிய அனைத்துலக விமான நிலையத்தில் பிரார்த்தனை

கட்டுரையை எழுதி முடிக்கும் போது மனசு லேசாக வலிக்கின்றது. காணாமல் போன மாஸ் எம்.எச்.370 விமானத்தின் எல்லா உயிர்களுக்காகவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.