சங்காட் சாலாக் தோட்டம் - 1906 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்காட் சாலாக் தோட்டம் - 1906 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 மே 2020

சங்காட் சாலாக் தோட்டம் - 1906

சங்காட் சாலாக் தோட்டம், கோலாகங்சார் அரச நகரில் இருந்து ஒன்பது மைல் தொலைவில் உள்ளது. 1906-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. இங்கிலாந்தில் கிலாஸ்கோ (Glasgow) நகரில் இருந்த சங்காட் சாலாக் நிறுவனத்திற்குச் (Chungkat Salak Syndicate) சொந்தமானது. 3,900 ஏக்கர் பரப்பளவு.


1906-ஆம் ஆண்டு மலாயா பிரிட்டிஷ் அரசாங்கம் ஹில் (Mr. Hill) என்பவருக்கு 10,000 ஏக்கர் நிலத்தை வழங்கியது. அந்த நிலம் சாலாக் இரயில்வே நிலையத்திற்கு (Salak North railway station) அருகில் இருந்தது. அந்த நிலத்தில் தான் சங்காட் சாலாக் தோட்டம் (Changkat Salak Estate) உருவாக்கப் பட்டது.

இந்தத் தோட்டத்திற்கு 1907 பிப்ரவரி மாதம், டே (E. H. F. Day) என்பவர் நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்றார்.

1906-ஆம் ஆண்டில் 120 ஏக்கரில் முதன்முதலாக ரப்பர் நடவு. முதலில் 23.000 இளம் ரப்பர் கன்றுகள். இந்தக் கன்றுகள் 15 மாதங்களில் 25 அடி உயரத்திற்கு வளர்ந்து விட்டன.
 

1907-ஆம் ஆண்டு மேலும் 1000 ஏக்கரில் ரப்பர் நடவு. தவிர 380 ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு. சங்காட் சாலாக் தோட்டத்தைச் சுற்றிலும் நிறைய ஈய லம்பங்கள் திறக்கப் பட்டன. நூற்றுக் கணக்கான சீனர்கள் வேலை செய்தார்கள்.

பின்னர் 1907-ஆம் ஆண்டில் நான்கு மைல் தூரத்திற்கு அரசாங்கம் மாட்டு வண்டிச் சாலையை உருவாக்கிக் கொடுத்தது. இந்தச் செம்மண் சாலை சங்காட் சாலாக் தோட்டத்தையும் சாலாக் இரயில் நிலையத்தையும் இணைத்தது.

நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்ற டே என்பவர், இலங்கை, இந்தியாவில் விவசாய அனுபவம் பெற்றவர். அங்கு அவர் பதினைந்து ஆண்டுகள் தேயிலை, காபி, மிளகு, சிஞ்சோனா (cinchona) தோட்டங்களில் பணியாற்றியவர்.
 

சிஞ்சோனா தெரியும் தானே. மலேரியா காய்ச்சலுக்கு இந்த மரத்தின் பட்டைகளில் இருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது.

சங்காட் சாலாக் தோட்டம் திறக்கப்பட்ட போது 90 தமிழர்கள் வேலை செய்தார்கள். பின்னர் மேலும் தொழிலாளர்களை ஆள் சேர்ப்பு செய்வதற்காக ஓர் ஐரோப்பியத் துணை நிர்வாகி இந்தியாவுக்கு அனுப்பப் பட்டார்.

கங்காணி எவரும் அனுப்பபடவில்லை. ஏன் என்றால் கங்காணி முறை அந்தக் கட்டத்தில் மலாயாவில் அமல்படுத்தப் படவில்லை.

தமிழ் நாட்டுக்குப் போன அந்த வெள்ளைக்காரர் 1907-ஆம் ஆண்டில் 350 தமிழர்களைச் சங்காட் சாலாக் தோட்டத்திற்குக் கொண்டு வந்தார். நான்கே மாதங்களில் அந்தத் தோட்டத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 90--இல் இருந்து 430-ஆக உயர்ந்தது.

தவிர 60 ஜாவானியர்களும் கொண்டு வரப் பட்டார்கள். ஜாவானியர்கள் அதிகம் இல்லை. அத்துடன் அவர்களைக் கொண்டு வருவதற்கு செலவுகள் அதிகம். ஒரு ஜாவானிய தொழிலாளரைக் கொண்டு வருவதற்கு 50 டாலர்கள்.
 

ஆனாலும் ஜாவானிய தொழிலாளரிடம் இருந்து 21 டாலர்களை மட்டுமே அவரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய முடிந்தது. அதனால் தமிழர்களை அதிகமாகக் கொண்டு வந்தார்கள். அத்துடன் ஜாவானியர்கள் அக்கம் பக்கத்தில் இருந்த கம்பங்களில் தங்க ஆரம்பித்தார்கள்.

வேலைக்கு நினைத்தால் வருவது எனும் போக்கைக் கடைப் பிடித்தார்கள். ஆனால் தமிழர்கள் அப்படி அல்ல. தாங்கள் உண்டு; தங்கள் வேலை உண்டு என்று தோட்ட நிர்வாகத்திற்கு விசுவாசமாக இருந்தார்கள். அதுவே வெள்ளைக்காரர்களுக்கு அதிகமாய்ப் பிடித்துப் போனது.

பின்னர் அந்தத் தோட்டம் கத்தரி நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்தத் தோட்டத்திற்குப் பக்கத்தில் காமிரி (Kamiri) தோட்டம் உள்ளது. 2002-ஆம் ஆண்டில் இந்தத் தோட்டங்கள் விற்கப் பட்டன. அதனால் அங்கு உள்ளவர்கள் வேலைகளை இழந்தார்கள். நஷ்டயீடு கோரி வழக்கு தொடர்ந்தார்கள். ஒரு சமரசம் செய்யப் பட்டது.

சான்றுகள்:

1. Wright, Arnold; Twentieth century impressions of British Malaya; Page 384. Britain Publishing Company, 1908, pg 384

2. http://seasiavisions.library.cornell.edu/catalog/seapage:233_390

3. https://www.malaysiakini.com/opinions/21820

தயாரிப்பு:

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
16.05.2020


பேஸ்புக் பதிவுகள்

Sheila Mohan : அற்புதம்... ஒவ்வொரு தோட்டங்கள் பற்றிய கட்டுரை.. நன்றிங்க சார்...

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Sheila Mohan >>> Muthukrishnan Ipoh : ஆசிரியர் தின வாழ்த்துகள் சார்..

Sivakumar Muthusamy :
மிக்க நன்றி, பெரியவரே 🙏 நான் பிறந்த மண், என் தோட்டம் ..

Muthukrishnan Ipoh >>> Sivakumar Muthusamy : மகிழ்ச்சி ஐயா...

Muthukrishnan Ipoh >>> Sheila Mohan : நன்றி... வாழ்த்துகள்

Kumaran Mari : என் தாயார் பிறந்த மண் இந்த செங்கட் சாலாக் தோட்டம் ஐயா. தொடக்கக் கல்வியை, முதல் ஈராண்டுகள் இங்கேதான் கற்றேன். பின்னர், கெர்லிங் தோட்டத்தில் உங்களிடம் கல்வி ஞானம் பெற்றேன். அரிய தகவல்களைக் கொடுத்தமைக்கு நன்றிங்க ஐயா.

Muthukrishnan Ipoh :
மகிழ்ச்சி... இவ்வளவு நாளும் கெர்லிங்கில் பிறந்து வளர்ந்தவர் என்றுதான் நினைத்தேன்... என்னுடம் தமிழ் பயின்ற மாணவர் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது...

தங்களின் தமிழ் மொழி நடை... உங்கள் கட்டுரைகளையும் பதிவுகளையும் நிறைய படித்து இருக்கிறேன்... வாழ்த்துகள்...

Melur Manoharan : "அருமையான" பதிவு ஐயா...!

Maha Lingam : நன்றி.ஐயா.. தங்களின் இந்த சரித்திர பணி தொடர வேண்டுகிறேன்... வாழ்த்துகள்...

Sharma Muthusamy : Valga valmudan Anna (வாழ்க வளமுடன்)

Sharma Muthusamy

Sherwin KingMaker


Vani Sree : Nan pirantha man enga ooru sir ☺ (நான் பிறந்த மண்... எங்க ஊரு சார்)

Thanirmalai Muthusamy : மலையக மண்ணின் அத்தனை தோட்டங்களும், உங்கள் தேடலில் வரும் சாத்தியம் உண்டா சார்...?

Kali Kali Dasan :
Yen magan angu ta pailkiran 4gam handu maanavan (என் மகன் அங்குதான் பயில்கிறான். நான்காம் ஆண்டு மாணவன்)

Kogilan Muthiah : சொல்ல மறந்த வரலாறு பயணம் தொடரட்டும் ஐயா

Kody Sivasubramaniam : அப்போதைய விசுவாசத்தின் இப்போதய மதிப்பீடு pendatang

Nanda Kumar : என் தோட்டம்.. நன்றி... 👍

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி...

TF Muru : யார் இந்த ஜாவானியர்கள்... சற்று விளக்கவும்.. அய்யா

Muthukrishnan Ipoh : இந்தோனேசியா ஜாவாவில் இருந்து வந்தவர்கள்...

Nadarajah Nagu : Great

Muthukrishnan Ipoh : மகி்ழ்ச்சி...

Thinagar Raman : அருமையான பதிவு

Muthukrishnan Ipoh :
வாழ்த்துகள்

Banu Banu


Thana Balan : அருமையான பதிவு ஐயா... நான் பிறந்த மண் செங்கட் சாலாக் தோட்டம்.