ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஜூலை 2015

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 3

[பாகம்: 3]

(மலேசியா தினக்குரல் நாளிதழில் 16.06.2015-இல் எழுதப்பட்டது.) 



தமிழீழ விடுதலைத் தலைவர் பிரபாகரன், இந்தியாவின் தலைவர்களுக்காக இரண்டு முறை கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். இந்திரா காந்தி இறந்த போது முதல் முறையாக அழுதார். அடுத்து எம்.ஜி.ஆர். இறந்த போது இரண்டாவது முறையாகக் கண்ணீர் விட்டு கதறி அழுது இருக்கிறார். வேறு யாருக்கும் பிரபாகரன் அந்த மாதிரி கண்ணீர் விட்டு அழுதது இல்லை. ஆக, இந்த இரு தலைவர்களும் எங்கே நிற்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சரி. தமிழீழப் போராட்டக் குழுக்களை இந்தியா ஆதரித்தது என்கிற விஷயத்திற்கு வருவோம். இந்தியா ஆதரித்தது என்கிற விஷயம், தமிழீழ விடுதலைப் போராட்டக் குழுக்களுக்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்து போனது. இந்தியா என்கிற ஒரு மாப்ரும் வல்லரசே நமது குழுவை ஆதரிக்கும் போது, ஏன் மற்ற மற்றக் குழுக்களுடன் வலிய போய் நாம் சேர வேண்டும். ஏன் நமது கௌரவத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிற நினைப்பு. தவிர, கௌரவப் பிரச்சினையும் கூடவே வந்து தொலைத்தது.

தமிழீழப் போராட்டக் குழுக்களுக்கு இடையே பதவிப் போட்டிகள் ஏற்பட்டதற்கு இதையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள். கௌரவப் பிரச்சினை என்பது இரண்டாவது பிரச்சினை.

மூன்றாவது பிரச்சினை இப்படி வருகிறது. போராட்டக் குழுக்களுக்குள் சாதிப் பிரச்சினைகள். தொடக்கத்தில் கொஞ்சமாய் இருந்தது. பின்னர் பூதமாய் வெடித்த்து. நீ பெரிசா நான் பெரிசா என்று அடிக்கடி அவர்களின் தலைகளை உருட்டிக் கொண்டார்கள். எல்லோருமே தமிழர்கள் தான். இருந்தாலும், தான் மட்டுமே மற்றவர்களைக் காட்டிலும் கொஞ்சம் ஒசத்தி என்கிற கௌரவப் பிரச்சினை. என்ன செய்வது.

மீனவர்கள் பிரிவைச் சேர்ந்த கரையர்கள்

தமிழன் எங்கே போனாலும் அவனுடைய மீசையும் போகாது. அவன் சுட்ட தோசையும் போகாது. கூடவே அந்த மசாலா தோசை என்கிற சாதியும் போகாது. செம்மறியாடு மாதிரி உரசிக் கொண்டே வரும். உரசிக் கொண்டே போகும்.


மீனவர்கள் பிரிவைச் சேர்ந்த கரையர்கள் ஒரு பக்கம். வசதி படைத்த வன்னியர்கள் ஒரு பக்கம். இவர்களுக்குள் யார் உயர்ந்தவர் என்கிற பிரச்சினை இன்னொரு பக்கம். பிரபாகரன் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர். கருணாகரன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவருக்கும் இடையே பிரிவினை ஏற்பட்டதற்கு மூல காரணமே, இந்தச் சாதி என்கிற பிரச்சினை தான்.

அவர்கள் பிரிந்து போனதற்கு இதுவும் ஒரு காரணம். காட்டிக் கொடுத்த கருணா, தமிழர்களை விட்டுப் பிரிந்ததற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அதை அடுத்த அடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.

போராட்டக் குழுக்களின் விட்டுக் கொடுக்காத தன்மை

இப்போது, இந்தக் காலத்தில் தமிழீழ மக்களிடையே சாதிப் பிரச்சினைகள் ஏறக்குறைய மறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எந்தக் காலத்திலும் சாதி வந்து சமரசம் பேசாது என்பதை இப்போது புரிந்து கொண்டார்கள். இருந்தாலும் அந்தச் சாதி வாதங்கள் தானே, ஓர் இனம் பாதிக்கப் பட்டதற்கு ஒரு பெரிய காரணமாக இருந்தது. அதை மறந்து விடலாமா. இது மூன்றாவது காரணம்.


ஆக, தமிழீழ மக்களின் விடுதலைக்காகப் புறப்பட்ட தமிழ் ஈழ விடுதலை அமைப்புகள், கொள்கை முரண்பாடு காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. 1982 இறுதி வாக்கில் இந்தச் சகோதரப் படுகொலைகள் உச்சத்தை அடைந்தன. இந்த விடுதலைக் குழுக்கள் எப்போதும் பிரிந்தே இருக்க வேண்டும் என்பதற்கு, மேலே இருந்த இந்திய வல்லரசின் உளவுத் துறையும் முக்கியப் பங்கு வகித்தது. எங்கே வருகிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அந்த உளவுத் துறையை ‘ரா’ (Research and Analysis Wing) என்று அழைப்பார்கள். இந்தக் கட்டத்தில் போராட்டக் குழுக்களின் விட்டுக் கொடுக்காத தன்மையும் சேர்ந்து கொண்டது. அடுத்து வந்தது அதிகார மோகம். இந்த இரண்டும் சேர்ந்து அடிமட்ட போராளிகளின் உயிர்களைத் தான் பெரிய அளவில் காவு கொண்டன. ஆக, இவைதான் அந்தக் காரணங்கள்.

தமிழ் விடுதலைப் புலிகளுக்கு முழுமையாக உதவி செய்யத் தொடங்கிய காலக் கட்டத்தில் தான், இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப் பட்டார். விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவரும் இந்திரா காந்தி தான்.


உண்மையிலேயே தமிழீழ மக்களுக்கு உதவி செய்வது என்று அவர் முழு மூச்சாக இறங்கி விட்டார். இறங்கி வேலை செய்யவும் தொடங்கி விட்டார். அதற்குள் அவருடைய மெய்க்காவலர்களே அவரை அநியாயமாகச் சுட்டுக் கொன்று விட்டார்கள்.

தமிழீழப் போராட்டக் குழுக்களை, இந்திரா காந்தி தனித் தனியாகப் பிரித்து வைத்துப் பார்த்தார். உண்மைதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதே சமயத்தில் தமிழீழ மக்களின் விடுதலைக்கு, தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்கினார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

’ரா’ என்பது இந்திய உளவுத் துறை

இந்திய நாட்டின் நலன்களுக்காக, ’ரா’ என்கிற இந்திய உளவுத் துறையை அமைத்தவர் வேறு யாரும் இல்லை. இந்திரா என்கிற இரும்புப் பெண்மணி தான். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால், அதே சமயத்தில் தமிழீழ மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அவசரப் பட்டார் என்பதையும் நாம் மறைத்து வைக்க முடியாது.

எம்.ஜி.ஆர். மாதிரி அவருக்கும் தமிழீழ மக்கள் மீது ஆசாபாசங்கள் நிறைந்து இருந்தன. வாஞ்சை நேயங்கள் நிறைந்து இருந்தன. தமிழீழ மக்களின் அவசர நேரங்களில், இந்தியக் கடல்படை மூலமாக உணவு, மருந்து, அத்தியாவசியத் தளவாடப் பொருட்களை, இந்திரா காந்தி அனுப்பி வைத்து இருக்கிறார்.


அந்த உதவிகள் கன்னியாகுமரி வழியாகப் போய் இருக்கிறது. திரிகோணமலை வழியாகவும் போய் இருக்கிறது. இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா. அப்படி பாச உறவுகளில் பாலம் போடும் போது தான், அவருக்கு இறப்பு என்கிற அகாலத் தந்தியின் அழைப்பு வந்து சேர்ந்தது.

ஆனால், அவருடைய மகன் ராஜீவ் காந்தி அப்படி அல்ல. அம்மா யோசித்துச் செய்தார். மகன் யோசிக்காமல் செய்தார். கேட்பார் பேச்சைக் கேட்டு, தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டார். அவ்வளவு தான். சின்ன வயதில் பெரிய பதவி. தமிழர்களுக்கு உதவி செய்வதாகச் சொல்லித் திரிந்த சில புல்லுருவிகளும் அவர் கூடவே இருந்தன. அதில் ஒரு முக்கியப் புள்ளி, டிக்சீட். இவரை ஒரு நேபாளி என்று பலர் நினைப்பது உண்டு. அது தவறு.  அவர் ஒரு கேரளாவாசி.

தனி மாநிலம் கிடைப்பதை டிக்சீட் விரும்பவில்லை

1985 ஜூலை 8-ஆம் தேதி, பூட்டான் நாட்டுத் தலைநகர் திம்பு நகரில், இலங்கை அரசாங்கத்திற்கும் ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்கும் இடையே அமைதிப் பேச்சு நடந்தது. அது முக்கியமான பேச்சு. அதில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் டிக்சீட் என்பவர் கலந்து கொண்டார். அவர் ஈழத்துத் தமிழர்களுக்கு உதவி செய்வதாகச் சொன்னாரே தவிர செய்யவே இல்லை. தமிழர்களுக்குத் தனி ஒரு மாநிலம் கிடைப்பதை இந்த மனிதர் விரும்பவே இல்லை. பல குழப்படிகளைச் செய்தார்.


அந்தப் பூட்டான் அமைதிப் பேச்சில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பொது மனிதரை நியமித்து இருக்க வேண்டும். அதுவும் அவர் ஒரு தமிழராக இருந்து இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நடுநிலைமை கிடைத்து இருக்கும். நேபாளப் பெண்ணை மூன்றாம் தாரமாகக் கல்யாணம் செய்த ஒரு மனிதருக்கு தமிழர்களின் தராதரங்கள் எப்படிங்க தெரியும். அந்தப் பட்டியலில் டிக்சீட் போன்ற மூன்றாம் தர இனவெறியர்களையும் சேர்க்கலாம்.

இந்த மனிதர் மீது எல்லாத் தமிழர்களுக்கும் ஆத்திரம். தமிழர்கள் பிரிந்து போனதற்கு இந்த டிக்சீட் ஒரு காரணம். அண்டல் பாலசிங்கத்தைக் காலை வாரி விட்டவர் என்றுகூட சொல்வார்கள்.

திம்பு அமைதிப் பேச்சு தோல்வி அடைந்ததற்கு விடுதலைப் புலிகளின் பிடிவாதமே காரணம் என்று இந்திய நடுவண் அரசு அடம் பிடித்தது. அப்போது இலங்கையின் அதிபராக ஜெயவர்த்தனா இருந்தார். இந்தியாவின் பிரதமராக ராஜீவ் இருந்தார். திம்பு வட்டமேசையில் தமிழர் தரப்பின் ஒற்றுமையை உடைப்பதற்கு சதித் திட்டங்கள் தீட்டப் பட்டன என்பது தான் உண்மை. அது காலம் தாழ்ந்து அறியப் பட்ட ஒரு பெரிய உண்மை.

அமைதிப் பேச்சு கைகூடி இருந்தால்

திம்பு அமைதிப் பேச்சு தோல்வி அடைந்ததற்கு  ராஜீவ் காந்தியுடன் இருந்த சில புல்லுருவிகள் தான் காரணம் என்று நான் உறுதியாகச் சொல்வேன். அந்த அமைதிப் பேச்சு கைகூடி இருந்து இருந்தால், தமிழ் ஈழ மக்களுக்கு விமோசனம் கிடைத்து இருக்கும். சொர்க்கத்தில் இருக்கும் எம்.ஜி.ஆரும் மிகப் பெரிய சந்தோஷம் அடைந்து இருப்பார். இந்திரா காந்தியும் நிம்மதி பெருமூச்சு விட்டு இருப்பார்.

ஆக, தமிழீழத் தமிழர்கள் விஷயத்தில், ராஜீவ் காந்தி தீர்க்கமான ஒரு முடிவை எடுக்காமல் கோட்டை விட்டார். அது அவருடைய பெரிய தவறு. கடைசியில் என்ன ஆனது. ஸ்ரீ பெரம்பலூரில் தன்னையே பலிகடா ஆக்கிக் கொண்டார். சொல்லும் போது மனசிற்கு கஷ்டமாக இருக்கிறது.


ஆனால், அவருடைய அம்மா அப்படி இல்லை. அந்த மனுஷி   இன்னும் கொஞ்ச நாட்களுக்கு உயிரோடு இருந்து இருக்க வேண்டும். நீங்கள் நம்பினாலும் சரி. நம்பாவிட்டாலும் பரவாயில்லை. ஒன்று மட்டும் என் மனதில் படுகிறது. பட்டதைச் சொல்கிறேன். இந்திரா காந்தி மட்டும் உயிரோடு இருந்து இருந்தால், தனி ஈழம் கிடைப்பதற்கு ஏதாவது எப்படியாவது ஒரு வழி செய்து இருப்பார்.

வரிந்து கட்டி, கிழக்குப் பாகிஸ்தானைப் பிடுங்கி எடுத்தது மாதிரி, அந்த மனுஷி, தடி எடுத்து தனி ஈழத்தை அடித்துப் பிடித்து வாங்கி இருப்பார். என் உள்மனம் சொல்கிறது. இத்தனை ஆயிரம் அப்பாவி ஜீவன்களும் செத்துப் போய் இருக்க மாட்டார்கள். பல ஆயிரம் ஜீவன்களும் ஊனமாகிப் போய் இருக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு நல்ல வழி கிடைத்து இருக்கும். என்ன செய்வது. எழுதிச் செல்லும் விதியின் கைகள் வேறு மாதிரி எழுதிச் சென்று விட்டன.

அப்பாவி ஜீவன்களின் வெம்பல்களும் விசும்பல்களும்

அடுத்து வருபவர் எம்.ஜி.ஆர். இவரும் இன்னும் கொஞ்ச நாட்கள் உயிரோடு இருந்து இருக்க வேண்டும். ஈழ மக்கள் இப்படி இந்த மாதிரி அவதிபட்டு இருக்க மாட்டார்கள். இவ்வளவு பெரிய மோசமான பாதிப்புகளும் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்காது. இவரும் ஏதாவது ஒரு வழி பண்ணி இருப்பார்.

தமிழகத்துச் சகோதரர்கள் கடைசி நேரத்தில் வந்து உதவி செய்வார்கள் என்கிற ஏக்கத்தில், தமிழக மண்ணைப் பார்த்தவாறே பல்லாயிரம் ஜீவன்கள் யாழ்ப்பாணத்தில் உயிரை விட்டு இருக்கின்றன. ஓர் உயிர், இரண்டு உயிர் இல்லீங்க. பல லட்சம் உயிர்கள். அத்தனையும் நம்ப மாதிரி மனித உயிருங்க.

அந்தப் பல்லாயிரம் உயிர்களின் சப்தநாடிகள் இன்னும் சத்தம் இல்லாமல் சன்னமாய்த் தங்களின் ஈனக் குரல்களைச் எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. வன்னியிலும் மன்னாரிலும் முல்லிவாய்க் கடல்காடுகளிலும் அந்த அப்பாவி ஜீவன்களின் வெம்பல்களும் விசும்பல்களும் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. உங்களுக்குக் கேட்கிறதோ இல்லையோ எனக்கு எப்போதும் கேட்கும்.

சத்தியமாகச் சொல்கிறேன். தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்தவர்களையும், அந்தத் துரோகிகளின் வாரிசுகளையும் தமிழ் ஈழ மக்களின் பாவம் சும்மா விடாது. கூண்டோடு அழித்துவிடும். பாவத்தின் முதல் தூறல்கள் ஆரம்பித்து விட்டன.

உங்களுக்கு ஒருவர் வேண்டப் பட்டவராக இருக்கலாம். ஆனால், அவர் செய்த துரோகத்தை உங்களால் மறக்க முடியுமா. சொல்லுங்கள். அப்படியே அந்தத் துரோகத்தை மறந்து வக்காளத்து வாங்கினால் அதைவிட கேவலம் வேறு எதுவுமே இருக்க முடியாது.

ஆக, தமிழ் ஈழ மக்களின் நெஞ்சங்களில் இன்றும் நிலைத்து வாழ்பவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் யார் என்றால் ஒருவர் ஈழத்துத் தமிழ்த் தந்தை செல்வா. அடுத்தவர் தமிழகத்து கருணை மனிதர் எம்.ஜி.ஆர். அதற்கும் அடுத்து வருபவர் இரும்பு மனுஷி இந்திரா காந்தி.

எம்.ஜி.ஆர். அளித்த வெளிப்படையான ஆதரவு

ஈழத் தமிழர்களுக்கு, ஒரு தனி நாடு அமைய வேண்டும் என்று எம்.ஜி.ஆர்.  கனவு கண்டவர். எம்.ஜி.ஆருக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையே இருந்த பிணைப்பு இருக்கிறதே அது ஒரு வகையான பாச உணர்வு. ஈழப் போராட்டத்துக்கு எம்.ஜி.ஆர். அளித்த வெளிப்படையான ஆதரவு இருக்கிறதே அது இன்னொரு வகையான வாய்மை உணர்வு.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் வெற்றி பெற ஆயுதங்கள் தேவைப் பட்டன. அதற்கு எம்.ஜி.ஆர். தன் சொந்தப் பணத்தில் முதலில் ஏழு கோடி ரூபாய் வழங்கினார். அதனால் மத்திய இந்திய அரசாங்கத்திடம் இருந்து  தொல்லைகள் வரும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தும் அதைப் பற்றி எம்.ஜி.ஆர்.  கொஞ்சமும் கவலைப் படவில்லை.

என் ஆட்சி போனாலும் பரவாயில்லை. ஈழத் தமிழர்களுக்கு ஒரு தனி மாநிலம் கிடைக்க வேண்டும் என்று துணிந்து நின்றார். அப்படியே சொல்லி வந்தார். செய்தும் காட்டினார். நாளைய கட்டுரையில் இன்னும் பல ரகசியங்கள் வருகின்றன. படிக்கத் தவற வேண்டாம்.


முந்திய பதிவுகள்:

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2