லிம் லியான் கியோக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லிம் லியான் கியோக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 நவம்பர் 2011

லிம் லியான் கியோக்

(இந்தக் கட்டுரை தமிழ் இணையக் கலைக் கள்ஞ்சியமான விக்கிப்பீடியாவில் பிரசுரிக்கப் பட்டுள்ளது. அதன் முகவரி: http://ta.wikipedia.org/wiki/லிம்_லியான்_கியோக்)

தமிழ்மொழி தாய்மொழி இல்லை என்று சொல்லும் தமிழர்கள் வாழும் இந்த உலகில், அந்தத் தமிழ்மொழிக்காக ஒரு மலேசியச் சீனர் உண்ணாவிரதம் இருந்து தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பு செய்து இருக்கிறார் என்பது உலகத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் அதிசயமான செய்தி.


இன மொழி போராட்டவாதி லிம் லியான் கியோக்

லிம் லியான் கியோக் (Lim Lian Geok) மலேசியாவைச் சேர்ந்த ஒரு சமூக நீதி செயல்பாட்டாளர். சமூக நீதிக்கும், இன ஒற்றுமைக்கும் போராடியவர். அவர் ஒரு சீனராக இருந்தாலும் சீன மொழியுடன் தமிழ் மொழியின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர். அந்தச் சமயத்தில் எந்த ஒரு தமிழரும் அந்த உரிமைப் போராட்டங்களுக்கு முன் வரவில்லை. ஆனால், துன் சம்பந்தன் அவர்கள் மறைமுகமாகப் பொருளுதவிகள் செய்து உள்ளார்.

சீன, தமிழ் மொழிப் பள்ளிகளை மலேசியா அரசாங்கம் பாரபட்சம் இல்லாமல் சமமாக நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்.

லிம் லியான் கியோக் நூல் வெளியீட்டு விழாவில்
மலேசியத் தமிழறிஞர் ஆ.சோதிநாதன் அவர்கள்

சீன, தமிழ் மொழிகள் மலேசியாவில் அதிகாரப் பூர்வமான மொழிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தவர். அதனால், 1961 ஆம் ஆண்டு அவருடைய குடியுரிமை பறிக்கப்பட்டது. அவருடைய ஆசிரியர் தொழிலும் பறிக்கப் பட்டது.

லிம் லியான் கியோக், தான் வாழ்ந்த அந்த மலேசிய நாட்டிலேயே நாடற்றவராக இறந்து போனார்.

லிம் லியான் கியோக் இறந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2011 ஆம் ஆண்டில் மலேசியாவில் உள்ள சீனர்களும், தமிழர்களும் அவருக்கு 'இறப்பிற்குப் பின் குடியுரிமை' வழங்கிச் சிறப்பிக்கப் பட வேண்டும் எனறு உணர்ச்சிக் குரல்களை உயர்த்தி வருகின்றனர். அது தொடர்பாக, மலேசியப் பேரரசரிடம் மகஜர்கள் வழங்கப் பட்டுள்ளன.

லிம் லியான் கியோக் 1901 ஆகஸ்டு மாதம் 19ஆம் தேதி யோங் சுன் , பூஜியான் சீனாவில் பிறந்தவர். தன் முயற்சியால் கல்வி கற்ற பின்னர், 1930-களில் மலாயாவிற்கு வந்தார். ஆசிரியர் பணியில் ஆர்வமாகி, அந்தச் சேவையில் தன்னை முழுமையாக ஐக்கியப் படுத்திக் கொண்டார்.

மலேசியா, பிரித்தானியர்களிடம் இருந்து விடுதலை பெற்ற போது கல்வி சட்டங்கள் சீரமைக்கப் பட்டன. அந்தச் சீரமைப்புகள் சீன, தமிழ் தாய் மொழிகளுக்குப் பாதகமாக இருந்தன. கோலாலம்பூர் ஆசிரியர் சங்கத்துடன் தாய்மொழிக் கல்விக்கான உரிமைகளைப் பற்றி பேசினார்.

பின்னர், 1955-இல் சீன, இந்திய இனங்களின் உரிமைகள் குறித்து பிரதமர் துங்குவுடன் நடந்த ‘மலாக்கா பேச்சில்’ சீனர் அமைப்புகளுக்குத் தலைமை தாங்கியவர் அவர்.

பிறகு, 1956 ரசாக் திட்டத்தின் போதும், 1961 ஆம் ஆண்டு ரஹ்மான் திட்டம் அமல் படுத்தப் பட்ட போது தாய் மொழிகளின் கல்விக்கு நேர்ந்த பின்னடைவுகளைச் சரி செய்யச் சொல்லி அரசைத் தொடர்ந்து வலியுறுத்தினார். இதன் காரணமாக அவரது குடியுரிமையை அன்றைய பிரித்தானிய அரசு தடை செய்தது.

இத்தனைக்கும் லிம் மலாயா நாட்டில் சீன இனம் மற்ற இனங்களோடு இணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டுமென விரும்பியவர். அவரது எதிர்ப்புகளைக் கூட சாத்வீகமான முறையில் முன் வைத்தவர் அவர்.

1961-இல் குடியுரிமையும் பணியுரிமமும் பறிக்கப்பட்ட பிறகு பலர் உதவ முன்வந்தனர். ஆனால், அவர் கோலாலம்பூரில் இருந்த சீனர் தனியார்ப் பள்ளிகளில் ஆசிரியர் வேலை செய்தார். மிக எளிமையாக வாழ்ந்தார்.

1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாத 18 ஆம் இதயம் பாதிக்கப் பட்டு தேதி இறந்து போனார். அவர் இறக்கும் வரை நாடற்றவராகவே வாழ்ந்தார்.

மலேசியாவில் இதுவரை நடந்த இறுதி ஊர்வலங்களில் லிம் லியான் கியோக்கிற்குத் தான்  ஆகப் பெரிய ஊர்வலம் நடைபெற்றது. மலேசியச் சீனர்களின் ஆத்மா என்று சீனப்பள்ளி ஆசிரியர்கள் புகழாரம் செய்கின்றனர்.

ஆனால், எந்த ஒரு மனிதரின் போராட்டத்தினால், தமிழ் சீன மொழிப் பள்ளிகள் உயிர் பெற்று உலா வருகின்றனவோ, அதே அந்தப் பள்ளியில் ஆசிரியர்களாக இருக்கும் இப்போதைய இளம் தமிழர்கள், லிம் லியான் கியோக் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர்.

அதைவிட அவரைப் பற்றி தெரிந்து கொள்வதில் அக்கறை இல்லை என்று சொன்னால் மிகச் சரியாக இருக்கும்.