கறுப்பு தாஜ்மகால் - 7 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கறுப்பு தாஜ்மகால் - 7 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 மே 2019

கறுப்பு தாஜ்மகால் - 7

தமிழ் மலர் - 16.05.2019

தாஜ் மகால் கட்டப்படும் போது ஷா ஜகானுக்கு மக்களின் நலன்கள் பெரிதாகத் தெரியவில்லை. மக்களின் சுகதுக்கங்கள் பெரிதாகத் தெரியவில்லை. மக்களின் வறுமை சிறுமைகள் பெரிதாகத் தெரியவில்லை. தாஜ் மகால் மட்டுமே பெரிதாகத் தெரிந்தது. 



அவருடைய ஊன் உறக்கம்; மூச்சு காற்று; நாடி நரம்புகள் எல்லாமே தாஜ் மகால் தான். பல இரவுகள் தூக்கம் இல்லாமல் தாஜ் மகாலைச் சுற்றிச் சுற்றி வந்து இருக்கிறார்.

மக்களைக் கவனிக்காமல் தாஜ் மகால் கட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஷா ஜகானின் போக்கு ஒளரங்கசிப்பிற்குக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. மக்களுக்குச் சுமையைத் தரும் அப்படிப்பட்ட ஒரு நினைவுச் சின்னம் தேவைதானா என்றும் நினைத்தார்.

ஆனால் அந்தச் சின்ன வயதில் தன் தகப்பனாரை எதிர்த்துப் பேச முடியவில்லை. எதிர்த்துப் போகவும் முடியவில்லை. ஆத்திரம் மட்டும் வாய்விட்டுப் பேச முடியாத ஆழ்கடல் போல ஆர்ப்பரித்துக் கொண்டு இருந்தது.

1632-ஆம் ஆண்டு ஆரம்பித்த தாஜ்மகால் கட்டுமானப் பணிகள் 1648-ஆம் ஆண்டு ஓரளவிற்கு முடிவு பெறும் நிலையில் இருந்தன. மும்தாஜ் மகாலின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் ஷா ஜகான் கண்ணீர் மல்கி கலங்கி நின்றார்.



ஆனால் பொது மக்கள் அப்படி இல்லையே. வறுமையினால் கண்ணீர் விட்டு அழுதார்கள். அதுதான் உண்மை. தாஜ் மகால் கட்டப் படுவதற்காக பற்பல வரிகள் போடப் பட்டன. ஏழை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத வரிச் சுமைகள். 

தாஜ் மகாலுக்காக அப்போது செலவு செய்யப் பட்ட தொகை 32 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அது குத்துமதிப்பான செலவு. ஆனால் உண்மையான செலவுத் தொகையைக் கணக்குப் போட்டுச் சொல்ல முடியாது என்று பல வரலாற்று அறிஞர்கள் இன்று வரை சொல்லி வருகிறார்கள். இப்போதைய கணக்குப்படி தாஜ் மகாலுக்கான செலவுத் தொகை 800 கோடி ரிங்கிட்.

எளிமைத் தனத்தை விரும்பிய ஒளரங்கசிப்பிற்குத் தாஜ் மகால் பெரிதாகத் தெரியவில்லை. தன் அம்மாவிற்காகக் கட்டப் பட்டாலும் அவ்வளவு பணம் செலவு செய்து அப்படி ஒரு நினைவுச் சின்னத்தைக் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று ஒளரங்கசிப் நினைத்தார். 



மக்களின் பணம் அநியாயமாக விரயமாக்கப் படுகிறதே என்பதுதான் அவருக்குப் பெரிதாகத் தெரிந்தது. அதுதான் அவருடைய கவலை. பணச் செலவின் வடிவமே பெரிதாகத் தெரிந்தது. மேலும் ஒரு தகவல் அவரை மேலும் வேதனைப் படுத்தியது.

ஷா ஜகானுக்கும் அவருடைய மூத்த மகன் தாரா சுகோவுக்கும் இடையே நடந்த ஓர் உரையாடல். அதைப் பற்றிக் கேள்விப் பட்டதும் ஒளரங்கசிப் ரொம்பவுமே அதிர்ச்சி அடைந்து போனார்.

ஷா ஜகான் தன் மூத்த மகன் தாரா சுகோவிடம் சொல்கிறார். 'உன் அம்மா ஆசைப்பட்ட மாதிரி தாஜ் மகாலைக் கட்டி விட்டேன். நான் உயிரோடு இருக்கும் வரையில் அதைப் பார்த்துக் கொண்டு இருப்பேன். அது போதும். இனிமேல் இந்த ஆக்ராவை விட்டு நான் வேறு எங்கேயும் போக மாட்டேன். போக விருப்பமும் இல்லை. ஆனால் நான் இறந்த பிறகு என்ன செய்யப் போகிறேன். அதுதான் எனக்கு இப்போது ரொம்பவும் கவலையாக இருக்கிறது' என்றார்.

அதற்கு தாரா சுகோ 'கவலை வேண்டாம் அப்பா. உங்களுடைய ஆசை என்ன என்று என்னிடம் சொல்லுங்கள். நான் நிறைவேற்றிக் காட்டுகிறேன். அது என் கடமை' என்றார்.



'உன் அம்மாவுக்காக இந்த வெள்ளை மாளிகையைக் கட்டினேன். இருந்தாலும் என்னுடைய இறப்பிற்குப் பின்னர் உன் அம்மாவுக்கு அருகிலேயே நானும் இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை. அதற்காக வெள்ளை மாளிகைக்கு அருகிலேயே ஒரு கறுப்பு மாளிகையை உருவாக்க வேண்டும். அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும். முடியுமா' என்று கேட்டார் ஷா ஜகான்.

அதற்கு தாரா சுகோ 'கண்டிப்பாகச் செய்வேன் அப்பா. உங்கள் ஆசையை நிறைவேற்றி வைப்பது என் கடமை அப்பா. அதுவே என் இலட்சியம் அப்பா' என்று பதில் சொன்னார்.

ஒரு தாஜ் மகால் கட்டியதற்கே இவ்வளவு செலவுகள். இவ்வளவு இழப்புகள். இவ்வளவு வேதனைகள். இதில் இன்னொரு கறுப்பு தாஜ் மகால் கட்டினால் இந்த நாடு என்னவாகும். ஒளரங்கசிப்பிற்குச் சரியான ஆத்திரம்.

மறுபடியும் சொல்கிறேன். ஷா ஜகானின் மூத்த மகன் தாரா சுகோவிற்கும் மூன்றாவது மகன் ஒளரங்கசிப்பிற்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். இருவருக்கும் ஒத்து வராது. எப்போதுமே சடக்கு முடக்குத் தகராறுகள்.



தாரா சுகோ இருக்கிறாரே இவர் அவரின் கொள்ளு தாத்தா அக்பரைப் போல ஒரு மிதவாதி. ஆனால் ஒளரங்கசிப் அப்படி அல்ல. இவர் ஒரு தீவிரமான சமயவாதி.

ஒரு கட்டத்தில் ஒளரங்கசிப் அரண்மனைக்கு வெளியே போய் ஒரு பிச்சைக்காரரைப் போல நடமாடத் தொடங்கினார். அப்படியே தெரு ஓரங்களில் படுத்துத் தூங்கினார். அதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அரண்மனையில் ஒரு பெரிய களேபரமே நடந்தது.

1636-ஆம் ஆண்டு. ஒளரங்கசிப் தக்காணத்தின் கவர்னராக நியமிக்கப் பட்டார். அப்போது அவருக்கு வயது 18.

தக்காணம் என்பது தக்காணப் பீடபூமி. இந்தியாவின் மையப் பகுதியில் உள்ளது. தென்பகுதியில் தமிழ் நாடு வரை நீண்டு போகிறது. அது ஒரு தலைகீழ் முக்கோணம். இந்தத் தக்காணத்திற்குக் கவர்னராக நியமிக்கப் படுவதற்கு முன்னால் ஒளரங்கசிப்பிற்கு லேசான மனநோய் ஏற்பட்டதாகவும் சொல்லப் படுகிறது.

தன்னை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று ஒளரங்கசிப் பித்துப் பிடித்து அலைந்ததாகவும் சொல்லப் படுகிறது. அது ஒரு வகையில் உண்மையாகத் தான் தெரிகிறது. ஒரு பிச்சைக்காரரைப் போல நடமாடிக் கொண்டு அப்படியே தெரு ஓரங்களில் படுத்துத் தூங்கியதைத் தான் சொல்ல வருகிறேன்.



தாரா என்ன செய்தாலும் அவருடைய செயல்களுக்கு ஷா ஜகான் எவ்வித எதிர்ப்பும் தெரிவிப்பது இல்லை. மாறாக முழுமையான ஆதரவு அளித்து வந்தார். அவையே ஒளரங்கசிப்பின் பார்வையில் சமய விரோதச் செயல்களாகத் தெரிந்தன.

இந்த மாதிரி பற்பல விசயங்கள். ஒளரங்கசிப்பிற்கும் ஷா ஜகானுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளியை உருவாக்கி வந்தன. தாராவுக்கும் ஒளரங்கசிப்பிற்கும் இடையே தீராத பகைமையும் உண்டாக்கி வந்தன.

மூத்த மகன் தாராவின் பேச்சைக் கொண்டு ஒளரங்கசிப்பை ஷா ஜகான் ஒதுக்கி வந்தார். அதுவே நாளடைவில் தந்தை மகன் பாசப் பிணைப்பில் பெரிய ஒரு விரிசலை ஏற்படுத்தியது.

ஒளரங்கசிப் ஒரு பிச்சைக்காரரைப் போல நடமாடிக் கொண்டு இருப்பதைக் கேள்விப்பட்ட ஷா ஜகான் இப்படியே விட்டால் சரிபட்டு வராது என்று ஒளரங்கசிப்பைத் தக்காணத்திற்கு அனுப்பி வைத்தார். அப்போது தக்காணம் வளம் பொருந்திய ஒரு பகுதியாக இல்லை. அங்கே பல்வேறு விதமான பிரச்சனைகள். நிர்வாகம் தெரியாதவர்கள் பேர் போட முடியாது. அந்த மாதிரியான இடம்.



தக்காணம் நிறைய போர்களைப் பார்த்த இடம். ஔரங்கசிப் தக்காணத்தின் கவர்னராக ஆன நான்கு ஆண்டுகளில் அதாவது 1637-ஆம் ஆண்டில் நவாப் பாய் பேகம் எனும் ராஜபுத்திர இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது ஔரங்கசிப்பிற்கு வயது 19.

அதற்கு அடுத்து பாரசீக அரச குடும்பத்தைச் சேர்ந்த தில்ராஸ் பானு பேகம் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார்.

இந்தச் சமயத்தில் ஆக்ராவில் ஷா ஜகானுக்கு மிகவும் வேண்டிய பிள்ளையாகத் தாரா தன்னை வளர்த்துக் கொண்டு வந்தார். எந்த விசயத்திலும் தனக்கு மட்டும் முதல் உரிமை கிடைக்கும்படி பக்காவாகப் பார்த்துக் கொண்டார். வேறு எந்தச் சகோதரரையும் நெருங்க விடவில்லை.

ஔரங்கசிப் பொறுப்பு ஏற்றதும் வருமானமே இல்லாமல் இருந்த தக்காணப் பகுதிகளில் வருமானம் வர ஆரம்பித்தது. ஔரங்கசிப் நன்றாகவே நிர்வாகம் செய்தார்.

இருந்தாலும் தக்காணத்தில் அப்போது ஏகப்பட்ட பிரச்சினைகள். எப்போது வேண்டும் என்றாலும் எவராவது போருக்குக் கிளம்பி வரலாம். ஒரு தர்மசங்கடமான நிலைமை. தக்காணம் அப்படிப்பட்ட ஓர் இடம். ஆக தன் மன அமைதிக்காக ஒளரங்கசிப் ஆன்மீகத்தை தேர்ந்து எடுத்தார். ஐந்து வேளை தவறாமல் தொழுகை மேற்கொண்டார்.

நேரம் கிடைக்கும் போது எல்லாம் புனித குர்-ஆன் படிப்பது ஒரு வழக்கமானது. சிறு வயதிலேயே அவருக்கு குர்-ஆன் மீது தனிப் பிரியம் இருந்தது. தன் அழகான கையெழுத்தால் குர்-ஆன் முழுவதையும் எழுதுவது அவருக்கு மிகவும் பிடித்தமான விசயமாகவும் இருந்தது.



ஒளரங்கசிப் என்பவர் ஓர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்; சக்தி வாய்ந்த தளபதியாக இருந்தாலும்; ஆடம்பரம் என்பதை மட்டும் கொஞ்சமும் விரும்பவில்லை.

தன் சமய வழக்கப்படி மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்பினார். சில சமயங்களில் பிச்சைக்காரரைப் போல சுற்றித் திரிந்தார். இருந்தாலும் நிர்வாக விசயத்தில் முறையாகச் செயல் பட்டு வந்தார். அதில் எந்தக் குறையையும் வைக்கவில்லை.

1644-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி. ஆக்ரா மாளிகையில் இளவரசி ஜஹானாரா மெழுகுவர்த்தி ஏந்திச் சென்று கொண்டு இருந்தார். திடீரென்று மெழுகுவர்த்திக் கலயம் தவறி கீழே விழுந்தது. திடீரென்று ஜஹனாராவின் ஆடை தீப்பற்றிக் கொண்டது. நல்லவேளை. அருகில் இருந்த பணியாளர்கள் ஓடி வந்து தீயை அணைத்து விட்டார்கள். உடலில் சில பல இடங்களில் தீக்காயங்கள். ஆறுவதற்குப் பல மாதங்கள் பிடித்தன.

ஒளரங்கசிப்பிற்கு இந்த விசயம் மெதுவாகத் தான் தெரிய வந்தது. கேள்விப் பட்டதும் உடனே ஆக்ராவுக்கு கிளம்பி வந்தார். அக்கா ஜஹனாராவைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது தன் தந்தை ஷா ஜகானையும் சந்தித்தார். தக்காணப் பகுதியின் நிலவரங்களை எல்லாம் விரிவாகச் சொன்னார். இருந்தாலும் ஷா ஜகான் முகம் கொடுத்துப் பேசவில்லை.



'அப்பா உங்களுக்கு என்ன ஆனது' என்று ஒளரங்கசிப் கேட்டார். 'என்ன ஆனதா. உன் அக்காவுக்கு இப்படி ஒரு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. நடந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் படாமல் சர்வ சாதாரணமாக உன் அக்காவைப் பார்க்க வந்து இருக்கிறாய். நீ எல்லாம் ஒரு தம்பியா’ என்று முறைப்புடன் கேட்டார்.

அதற்கு ஒளரங்கசிப் பதில் எதுவும் சொல்லவில்லை. என்ன சொன்னாலும் எடுபடாது என்பது ஒளரங்கசிப்பிற்குத் தெரிந்த விசயம். மௌனமாக அங்கு இருந்து கிளம்பினார். அந்த நேரத்தில் ஒளரங்கசிப்பின் அண்ணன் தாரா வந்தார். தந்தையார் ஷா ஜகானிடம் பணி தொடர்பாகப் பேச வந்தார்.

'அப்பா நீங்கள் ஒளரங்கசிப்பை நம்பி தக்காணத்தின் நிர்வாகப் பொறுப்பைக் கொடுத்து இருக்கிறீர்கள். ஆனால் அவனோ அங்கே ஒரு பிச்சைக்காரன் போல அலைந்து திரிகிறானாம். அவனுக்கு கவர்னர் பதவி பிடிக்கவில்லையாம். சமயத் துறவியாக மாறப் போகிறானாம். அவனுடைய நண்பர்கள் என்னிடம் வந்து சொன்னார்கள். அவன் இப்படி பொறுப்பு இல்லாமல் இருந்தால் எப்படிப்பா நம்முடைய நாட்டைக் காப்பாற்ற முடியும். சொல்லுங்கள்' என்று சொல்லி சூடம் கொளுத்தி சாம்பராணி போட்டான்.

அவ்வளவுதான். ஷா ஜகானுக்கு ஆத்திரம் தலைக்கு மேலே தாண்டவம் ஆடியது. உடனே ஒளரங்கசிப்பைக் கவர்னர் பதவியில் இருந்து நீக்கினார். விசயம் அறிந்த ஒளரங்கசிப் மிகவும் வருந்தினார். அவருடைய மனநிலை ரொம்பவும் பாதிக்கப்பட்டது. இன்னும் ஒரு நிகழ்ச்சி. 



மூத்த மகன் தாரா ஒரு புதிய மாளிகை கட்டிக் கொள்ள ஆசைப் பட்டார். அதற்கு ஷா ஜகான் நிறைய பணம் கொடுத்தார். தாராவும் தன் விருப்பப்படி அழகான மாளிகை ஒன்றைக் கட்டிக் கொண்டார். அதைக் காட்ட தன் தந்தையார், தன் சகோதர சகோதரிகள் எல்லாரையும் அழைத்தார். வந்தவர்கள் ஒவ்வோர் அறையாகப் பார்த்து ரசித்து வந்தார்கள்.

ஓர் அறையில் முழுக்க முழுக்க பெரிய நிலைக் கண்ணாடிகள். அந்த அறைக்குள் எல்லோரையும் தாரா அழைத்தார். எல்லோரும் சென்று கண்ணாடி பிம்பங்களைப் பார்த்து மகிழ்ந்தார்கள். ஆனால் ஒளரங்கசிப் மட்டும் அறையின் வாசலிலேயே உட்கார்ந்து விட்டார். உள்ளே போகவில்லை.

இது தாராவுக்குக் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. 'ஒளரங்கசிப்பைப் பார்த்தீர்களா. என்னையும் உங்களையும் அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காகவே வாசலிலேயே உட்கார்ந்து இருக்கிறான் என்று தந்தையிடம் புகார் செய்தான். அதைப் பார்த்த ஷா ஜகானுக்கும் கோபம்தான்.

ஒளரங்கசிப் அந்தக் கண்ணாடி அறைக்குள் நுழையாமல் ஏன் வெளியே உட்கார்ந்து விட்டார் என்பதில் ஒரு பெரிய ‘கிளைமக்ஸ்’ இருக்கிறது. அப்படியே ஒளரங்கசிப் அந்த அறைக்குள் நுழைந்து இருந்தால் மொகலாய வரலாறு வேறு மாதிரியாக எழுதப்பட்டு இருக்கலாம். அதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)