கேமரன் மலை சாகுவாரோ கற்றாழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேமரன் மலை சாகுவாரோ கற்றாழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 மே 2020

கேமரன் மலை சாகுவாரோ கற்றாழை

தமிழ் மலர் - 28.05.2020

கற்றாழைகளில் பல வகைகள். பல இனங்கள். தெரிந்த கற்றாழைகளைவிட தெரியாத கற்றாழைகள் தான் அதிகம். சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை. இவை எல்லாம் தெரிந்த கற்றாழைகள்.
 
சாகுவாரோ கற்றாழை

குர்குவா கற்றாழை; இழை வார் கற்றாழை; புலி கற்றாழை; கௌதாரி கற்றாழை; நரிக்கற்றாழை; கொசவக் கற்றாழை. இவை நாம் கேள்விப்படாத கற்றாழைகள். ஆக கற்றாழை இனத்தில் ஏறக்குறைய 500 இனங்கள் உள்ளன.

சாகுவாரோ (Saguaro) கற்றாழை. இதைப் பற்றித் தான் கூடுதலான தகவல்களைத் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இது ஒரு வகையான கள்ளிச்செடி. ஒரு வகையான மலர் என்றுகூட சொல்லலாம். அமெரிக்கா அரிசோனா பாலவனத்தில் காணப்படும் அரிதிலும் அரிதான மலர். இது பாதுகாக்கப்பட்ட அமெரிக்கத் தேசியத் தாவரம்.

அறிவியல் பெயர் Carnegiea gigantea. 60 அடி உயரம் வரை வளரும். 300 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது. அரிசோனா மாநிலத்தின் மாநில மலராகப் பிரகடனம் செய்து இருக்கிறார்கள்.
 

இந்தச் சாகுவாரோ கற்றாழையைக் கேமரன் மலையில் முதலில் பயிர் செய்து பார்த்தார்கள். அமெரிக்கா அரிசோனாவில் இருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரவே மிகவும் சிரமப் பட்டுப் போனார்கள். 1970-களில் நடந்த நிகழ்ச்சி.

அரிசோனா அரசாங்கமும் மலேசிய அரசாங்கமும் வெள்ளைப் பேபரில் கையெழுத்துப் போட்ட பிறகு தான், சாகுவாரோ கற்றாழை கேமரன் மலைக்கு கொண்டு வரப்பட்டது.

முதலில் ரிங்லெட் பகுதியில் வளர்த்துப் பார்த்தார்கள். ஆரம்பத்தில் ஓகே. போகப் போக இந்தக் கற்றாழை, மாவீரர் செகுவாரா மாதிரி அடம் பிடிக்கத் தொடங்கி விட்டது.
 

கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஐந்தே ஐந்து அடி வளர்ந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் சொல்வது அதாவது அசல் சாகுவாரோ கற்றாழை. அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்றாழை. ஐம்பது ஆண்டுகளில் ஐந்தே ஐந்து அடி தான் வளர்ந்து இருக்கிறதாம். இன்னும் ஒரு விசயம்.

கேமரன் மலையில் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் கற்றாழைகள். தெரியும் தானே. வழுக்கி விழும் இடங்களில் எல்லாம் கற்றாழைகள். தெரியும் தானே.

அந்தச் சறுக்கல்களிலும் வழுக்கல்களிலும் கேமரன் மலையில் போலியான சாகுவாரோ கற்றாழைகள் நிறைய உள்ளன என்பதும் ஒரு வழுக்கல் செய்தி தான்.

கற்றாழைகளில் இப்போது மினி மினி கற்றாழைகள் எல்லாம் வந்துவிட்டன. பெரும்பாலும் மரபணு மாற்றங்கள் செய்யப் பட்டவை.

அசல் கற்றாழை விற்கப் படுவதை அமெரிக்காவில் தடை செய்து இருக்கிறார்கள். அங்கே  இந்தக் கற்றாழையை வெட்டி எடுப்பதும் குற்றம். தோண்டி எடுப்பதும் குற்றம். விற்பதும் குற்றம். வளர்ப்பதும் குற்றம்.

இருந்தாலும் கற்றாழையை அவ்வளவு சுலபத்தில் தோண்டி எடுத்துவிட முடியாது. இதன் எடை சமயங்களில் 500 கிலோ கிராம் வரை தாண்டிப் போகும். அதாவது அரை டன். எப்படி உங்கள் வசதி.

அப்படித் தான் 1982-ஆம் ஆண்டு. டேவிட் குருண்ட்மேன் என்பவர் ஒரு பாலைவனத்தில் இந்த மாதிரி ஒரு கற்றாழையைத் தோண்டி இருக்கிறார். அது ஒரு பெரிய கற்றாழை. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது மாதிரி தான்.
 

அதன் அடிப்பாகத்தைத் தோண்டிக் கொண்டு இருக்கும் போது, அதன் கிளைப் பாகம் ’படார்’ என்று உடைந்து ’டபார்’ என்று அவர் மேலேயே விழுந்து இருக்கிறது.

கற்றாழைக்கு அவர் மீது சரியான கோபம் வந்து இருக்கலாம். சொல்ல முடியாது. ஆள் அங்கேயே அபேஸ்.

அதன் எடை 230 கிலோ. அவரையும் நசுக்கி அவரின் காரையும் நசுக்கிப் போட்டு விட்டது. மரத்தின் ஒரு கிளை விழுந்ததற்கே மனுசன் செத்துப் போகிறான் என்றால் மரம் விழுந்து இருந்தால் என்ன ஆகி இருக்கும். வெங்காயச் சட்ணி தான். இல்லை... இல்லை... கற்றாழைச் சட்ணி.

தொட்டால் சிணுங்கி என்று சொல்வார்களே அந்த மாதிரி தான், கற்றாழை செல்லமாக வளரும். மெதுவாகத் தான் வளரும். கொஞ்சம் வெப்பம் குறைந்தாலும் இறந்து விடும். கூடினாலும் இறந்து விடும். ரொம்பவும் செல்லம்.
 

கடல் மட்டத்தில் இருந்து 4000 அடி உயரத்தில் நன்றாக வளரும். சரியான தட்ப வெப்ப நிலை தேவை. அது வளரும் காலத்தில் முதல் 75 ஆண்டுகள் வரை அதற்கு கிளைகள் முளைக்காது.

இந்தச் செடியைப் பயிர் செய்தவரின் வாரிசுகள் இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பின்னர் தான் அது கிளைவிடுவதையே பார்க்க முடியும். ஆக இந்தக் கற்றாழையைச் சாகுவாரா என்பதற்குப் பதிலாக சாகாவேரா எனப் பெயரிட்டு இருக்கலாம். நண்பர் தனசேகரன் சொல்கிறார்.

இந்தக் கற்றாழையை மரபணு மாற்றங்கள் மூலமாகச் சின்னச் சின்னதாக வடிவ மாற்றம் செய்து விட்டார்கள். தைவான் நாட்டில் முதலில் செய்து இருக்கிறார்கள். அதையே சீனா கடத்திக் கொண்டு போய் பெரிய அளவில் காசு பார்த்துக் கொண்டு இருக்கிறது.
 

கேமரன் மலையில் சாகுவாரா கற்றாழைகளை அதிகமாகக் காணலாம். அதுமட்டும் அல்ல. கைக்கு அடக்கமாகச் சின்ன சின்னப் பிளாஸ்டிக் குப்பியிலும் குட்டி குட்டிக் கற்றாழைகளைப் பெரிய பெரிய பேரங்காடிகளில் கூட விற்பனை செய்கிறார்கள். இப்படி கேமரன் மலை அன்பர் சத்தியா ராமன் சொல்கிறார். இவர் சின்ன வயதில் போ தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்தவர்.

நம் தமிழர்கள் வாஸ்துப்படி கற்றாழை தொடர்பாகச் சில குழப்பங்கள். சில கருத்துக்கள். கற்றாழைச் செடியை வீட்டில் வளர்த்தால் புனிதமான தூய்மையான சக்திகள் வீட்டிற்குள் வராது என்கிறார்கள். இது எந்த அள்விற்கு உண்மை என்றும் தெரியவில்லை.

இன்னொரு கருத்து. கற்றாழையை வளர்ப்பதால் காத்து கருப்பு கிட்ட வராது. கண் திருஷ்டி எட்டிப் போகும். பேய் பிசாசுகள் பிச்சுக் கொண்டு ஒடி விடும். இப்படி எதிர்மறையான கருத்துகள். எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.
 

குளோனிங் முறையில் மரபணு மாற்றங்கள் பற்றி ஒரு வார்த்தை. இந்தக் குளோனிங் முறையைத் தாவரங்களுக்கும் பயன்படுத்தப் படுத்துவது பாதகமானச் செயல் என்றும் பலர் சொல்கிறார்கள்.

மரபணு மாற்றங்கள் என்றால் என்ன என்பதைப் பற்றி பலருக்கும் தெரியும்.

ஒட்டு கட்டிப் பழகிய அதே மனிதர்கள் தான் அடுத்தக் கட்டமாய் மரபணு முறைக்கு மாறினார்கள். அதனால் நிறைய பணம் பார்க்கிறார்கள். என்ன செய்வது. மனிதன் மாறி விட்டான். பணத்தில் மூழ்கி விட்டான்.

எதுவாக இருந்தாலும் உலகச் சட்டாம் பிள்ளையான அமெரிக்க இந்த ஒரிஜினல் கற்றாழைச் செடியை மிகுந்த பாதுகாப்புடன் பாதுகாத்து வருகின்றது. அவ்வளவு சுலபத்தில் அங்கே இருந்து கடத்திக் கொண்டு வந்துவிட முடியாது.
 

கற்றாழை விசயத்தில் சீனாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதில் இருந்து மெலாமைன் (Melamine) போன்ற இரசாயனங்களைத் தயாரிக்க முடியும் என்பதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

சின்ன ஒரு செருகல். சில ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகளின் பால்பவுடரில் மெலாமைன் இரசாயனம் கலந்து விற்கப் பட்டது. அதனால்  150 குழந்தைகள் இறந்து போனார்கள்.

மெலாமைன் பயன்படுத்தி உலகத்தையே கதிகலங்கச் செய்த ஊழல் விவகாரத்திற்கு ’2008-ஆம் ஆண்டு சீனாவின் பால் ஊழல்’ (2008 Chinese milk scandal) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

சீனாவில் மட்டும் 300,000 பேர் பாதிப்பு அடைந்தார்கள். ஆறு குழந்தைகளுக்குச் சிறுநீரகக் கற்களினால் இறப்பு. 54 ஆயிரம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள்.
 

கற்றாழை என்று சொல்லும் போது, இதயத்தை உறைய வைத்த அந்தச் சம்பவம் நினைவுக்கு வருகிறது. மனித நாகரீகங்கள் இயந்திரங்களால் உருவாக்கப் பட்டவை அல்ல. மாறாக நல்ல பண்பாளர்களால் உருவானவை.

மனசாட்சி இல்லாத வணிகர்கள் மலிந்து விட்ட ஒரு சில நாடுகளில் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. சரி.

மரபணு மாற்றங்கள் செய்யப்பட்ட கற்றாழைகளைக் கேமரன் மலை, தானா ராத்தா, பிரிஞ்சாங் பகுதியில் விற்கிறார்கள்.

அங்கே மட்டும் அல்ல. மலேசியா பூராவும் விற்கிறார்கள். விலை 20 ரிங்கிட். ஈப்போவில் ஜாலான் கோலகங்சார் சாலையில் மரபணு செய்யப்பட்ட கற்றாழைகளைப் பார்க்கலாம்.
 

அண்மைய காலங்களில் பெரும்பாலான தாவர உற்பத்திப் பொருள்களில் மரபணு மாற்றங்கள் செய்யப் படுகின்றன. இன்னும் கொஞ்ச காலத்தில் ஓரிஜினல் நமக்குக் கிடைக்கவே கிடைக்காது என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டு போகிறது.

மரபணு மாற்றங்கள் என்று சொல்லும் போது ‘எதைத் தான் விட்டு வைத்தார்கள்’ எனும் பொன் மொழியும் நினைவிற்கு வருகிறது. பணம் என்று வந்தால் மனுசனையே மடித்துச் சுருட்டு மாதிரி சுருட்டி Buy one Free One என்று விற்று விடுவார்கள்.

நல்ல வேளை. அமெரிக்காவில் இருக்கும் அமெரிக்கா கற்றாழைகள் செய்த புண்ணியம். அரசியல்வாதிகளின் கண்களில் அதிகமாய்ப் படவில்லை. மலேசிய அரசியல்வாதிகளைச் சொல்லவில்லை. ரொம்ப ரொம்ப நல்லவர்களைப் பற்றி விமர்சனம் செய்வது பாவம் இல்லையா?

சான்றுகள்:

1. The IUCN Red List of Threatened Species". IUCN Red List of Threatened Species.

2. (https://en.wikipedia.org/wiki/Saguaro)

3. Life Cycle of the Saguaro" (PDF). Arizona-Sonora Desert Museum.