வைரஸ் என்றால் என்ன? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைரஸ் என்றால் என்ன? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 மார்ச் 2020

வைரஸ் என்றால் என்ன?

வைரஸ் என்பது மிக நுண்ணியப் புரதங்களைக் கொண்ட ஓர் உயிர்ப் பொருள். ஒரு நச்சுயிரி. தாவரம் அல்லது விலங்குகள் அல்லது மனிதர்களின் செல்களில் மட்டுமே வாழக் கூடியவை. செல் (Cell) என்றால் நம் உடலில் இருக்கும் உயிர் அணுக்கள்.

சொந்தமாக வாழ்வது இல்லை. சொந்தமாக இனப் பெருக்கம் செய்வதும் இல்லை. மற்ற உயிர்களின் மூலமாக உயிர் வாழும் ஒட்டு உயிர்கள்.

இந்த வைரஸ் நச்சு உயிரிகள் இன்னோர் உயிரினத்தின் உயிர் அணுக்களை முதலில் தாக்கிச் சிதைக்கின்றன. பின்னர் அந்த உயிர் அணுக்களைப் பயன்படுத்திக் கொண்டு தம் இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன.

உலகில் மில்லியன் கணக்கான வைரஸ் இனங்கள் உள்ளன. இதுவரையில் 5000 வைரஸ் கிருமிகளை அடையாளம் கண்டு இருக்கிறார்கள். இன்றைய காலத்தில் நமக்கு அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இந்த வைரஸ் கிருமிகளால் ஏற்படுபவை தான்.

வைரஸ் என்பதைத் தமிழில் தீநுண்மி அல்லது நச்சுயிரி அல்லது நச்சுநுண்மம் என்று அழைக்கலாம். மிக மிக நுண்ணியமானது. 20-300 நானோமீட்டர் (Nanometer) அளவு கொண்டது. 



நானோமீட்டர் என்றால் ஒரு மீட்டர் நீளத்தின் ஒரு பில்லியனில் ஒரு பங்கைக் குறிக்கும். அதாவது 0.000000001 மீட்டர். கற்பனை செய்து கொள்ளுங்கள்.

சில வகையான வைரஸ்கள் நேரடியாகவே ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்குப் பரவும். எயிட்ஸ் HIV போன்ற வைரஸ், பெரும்பாலும் பாலியல் உறவு மூலமாகப் பரவுகிறது.

1892-ஆம் ஆண்டு திமித்ரி இவனோவ்சுகி (Dmitri Ivanovsky) என்பவர் ரஷ்ய நாட்டில் புகழ்பெற்ற தாவரவியலாளர். பாக்டீரியா அல்லாத ஒரு கிருமி புகையிலைப் பயிர்களைத் தாக்குகிறது என்று கண்டுபிடித்துச் சொன்னார். 



பின்னர் மார்டினஸ் (Martinus Beijerinck) எனும் டச்சு அறிவியலாளர் அந்தக் கிருமி தான் மொசாயிக் (Tobacco mosaic virus) எனும் வைரஸ் என்று கண்டுபிடித்துச் சொன்னார்.

வைரஸ் கிருமிகள் பரவுதலை மூன்று வகையாகப் பிரிக்கலாம். எண்டமிக் (Endemic); எபிடமிக் (Epidemic); பாண்டமிக் (Pandemic).

எண்டமிக் (Endemic) என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எந்த நேரத்திலும் பரவக் கூடியது. எடுத்துக்காட்டாக சின்னம்மை நோயைச் சொல்லலாம். பெரியம்மை அல்ல.

சின்னம்மைக்கு ஆங்கிலத்தில் ‘சிக்கன்பாக்ஸ்’ (Chickenpox) என்று பெயர். பெரியம்மைக்கு ‘ஸ்மால்பாக்ஸ்’ (Smallpox) என்று பெயர்.



பெரியம்மை நோயை 1977-ஆம் ஆண்டிலேயே உலகத்தில் இருந்து அழித்து விட்டார்கள்.

இருந்தாலும் கடந்த 100 ஆண்டுகளில் 50 கோடி பேரைப் பழி வாங்கி விட்டுத்தான் போனது. இதற்கு மருந்து கண்டு பிடித்த மனிதத் தெய்வம் எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner).

அதே போல மலேரியா காய்ச்சலையும் எண்டமிக் என்பதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

எபிடமிக் (Epidemic) என்றால் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் மட்டும் அதிகமாகப் பரவக் கூடிய நோயாக இருக்கும். மழைக் காலத்தில் பலருக்கும் காய்ச்சல் வரும். பார்த்து இருப்பீர்கள். அதன் பிறகு அந்த வைரஸ் காய்ச்சல் சன்னம் சன்னமாய்க் குறைந்துவிடும். இந்த மாதிரியான தொற்றலுக்கு எபிடமிக் என்று பெயர். 



பாண்டமிக் (Pandemic) என்றால் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக் கூடியது. ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்கு பயணிக்கும் மனிதர்கள் மூலமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா ஒரு வகையான பாண்டமிக் நோய். சரி.

வைரஸ் கிருமி வகைகளைப் பல உள்ளன. அதில் இபோலா வைரஸ் (Ebola Virus) ஒரு வகை. இதை இபோலா தீநுண்ம நோய் (Ebola virus disease, EVD) அல்லது இபோலா இரத்த இழப்புச் சோகைக் காய்ச்சல் (Ebola hemorrhagic fever, EHF) என்றும் சொல்வார்கள்.

கிருமித் தொற்று ஏற்பட்ட இரண்டு நாட்களில் இருந்து மூன்று வாரங்களில் காய்ச்சல், கரகரப்பான தொண்டை, தசை வலிகள் (Myalgia–muscle pains), வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும். சிகிச்சை அளிக்கா விட்டால் உயிருக்கு ஆபத்து.

இபோலா வைரஸ், பழந்தின்னி வௌவால்கள், மனிதக் குரங்குகள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. பின்னர் அதே அந்த மனிதரிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கும் பரவுகிறது. 



1976-ஆம் ஆண்டு முதன்முதலாகத் தென் சூடான்; காங்கோ ஆகிய இரு நாடுகளில் இந்த இபோலா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

காங்கோ நாட்டில் இபோலா என்கிற நதி அருகே உள்ள ஒரு கிராமத்தை இந்த வைரஸ் முதன்முதலில் தாக்கியது. அதனால் அதற்கு இபோலா வைரஸ் என்று பெயர் வைத்தார்கள். இது வரையில் 11,300 பேர் பலியாகி உள்ளனர்.

அடுத்து வருவது சார்ஸ் (SARS). Severe Acute Respiratory Syndrome என்பதின் சுருக்கம். தீவிர சுவாசப் பிரச்சனைக்கான நோய்க்குறி என்று அர்த்தம். 21-ஆம் நூற்றாண்டில் மிக மோசமான நோய் என பெயர் பெற்றது. இருந்தாலும் இப்போது கொரோனா முன்னுக்கு நிற்கிறது.

மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் சார்ஸ் வைரஸ் கிருமியும், கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த தொற்றுக் கிருமி தான். ஒன்றுவிட்டச் சகோதரர்கள்.

2000-ஆம் ஆண்டு தென் சீனா, குவாங்டாங்க் மாநிலத்தில் முதன்முதலில் இந்தச் சார்ஸ் தொற்றுக் கிருமி கண்டு அறியப் பட்டது. சார்ஸ் வைரஸால் 916 பேர் உயிரிழந்து உள்ளனர். நோய் உண்டான சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு இந்த நோய் பரவியது. கொரோனா மாதிரி தான்.

2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு, சார்ஸ் வைரஸால் எந்த மனிதருக்கும் சார்ஸ் நோய் ஏற்படவில்லை. இருந்தாலும் பெரியம்மை போல இந்த நோய் முற்றிலும் அழிக்கப் பட்டதாகக் கூற இயலாது. விலங்கு இனங்களில் சார்ஸ் வைரஸ் இன்னும் இருக்கிறது.

எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் சார்ஸ் வைரஸ் மனிதருக்குத் தொற்றலாம். வாய்ப்பு உண்டு. எந்த நேரத்திலும் மறுபடியும் படை எடுக்கலாம். இந்தக் கிருமிகளிடம் இருந்து எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். சுத்தம் சுகாதாரமாக இருந்தால் வைரஸ் கிருமிகளிடம் இருந்து தப்பிக்கலாம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.03.2020