மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 அக்டோபர் 2017

மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1

தென் தாய்லாந்தில் கோலோக் என்பது ஒரு சுற்றுலா சிறுநகர். அங்கே இருந்து 70 கி.மீ. தொலைவில் ஓர் அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்குள் ஒரு குட்டிக் கிராமம். பெயர் சுல்லாபோர்ன் காட்டுக் கிராமம் (Kampung Chulaborn). அங்கே 260 முன்னாள் மலாயா கம்யூனிஸ்டுகள் வாழ்ந்து வருகிறார்கள். 
 

அனைவரும் முன்னாள் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள். இவர்களுடன் அவர்களின் மனைவி பிள்ளைகள், உறவினர்கள் என மொத்தம் 460 பேர் இருக்கின்றனர்.

அந்தக் குடும்பங்களில் எஞ்சி இருப்பது ஒரே ஒரு தமிழர்க் குடும்பம். குடும்பத் தலைவரின் பெயர் ஆசிர்வாதம். (பாதுகாப்பு காரணங்களுக்காகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது). வயது 75.

இவர் பேராக் மாநிலத்தில் 1939-ஆம் ஆண்டு பிறந்தவர். ஒரு தாய்லாந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, அங்கேயே இப்போது வாழ்ந்தும் வருகிறார்.

சொந்த பந்தங்கள் எல்லாம் சுங்கை சிப்புட், தைப்பிங், கோலாகங்சார் பகுதிகளில் இருக்கின்றன. முன்பு மலாயா கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராக இருந்த ஒருவரைத் தங்களின் சொந்தக்காரர் என்று சொல்லிக் கொள்ள அவருடைய சொந்தக்காரர்களுக்கே விருப்பம் இல்லையாம். அதைப் பற்றி ஆசிர்வாதமும் கவலைப் படவில்லை.

மலேசிய அரசாங்கம் இன்னும் ஆசிர்வாதத்திற்கு குடியுரிமை வழங்கவில்லை. அவரிடம் சிவப்பு அடையாளக் கார்டு இருக்கிறது. அதை நீல நிறமாக மாற்ற முயற்சி செய்து கொண்டு வருகிறார்.

அதற்காக வருடத்திற்கு ஒரு முறையாவது மலேசியாவிற்குள் வந்து போகிறார். மனைவி ராஜம்மா சுலாங்போர்ன். தாய்லாந்து பிரஜை. இன்றையக் கட்டுரை மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் ஆசிர்வாதத்தைப் பற்றியது.
(சான்று: https://www.malaysiakini.com/news/111797 - The last of CPM's Indian communists)

படியுங்கள். மலேசியத் தமிழர்களும் சரி உலகத் தமிழர்களும் சரி அவரை நினைவில் கொள்ள வேண்டும்.

கோலோக் (Golok) என்பது ஒரு சிறுநகரம் தான். கேள்விப்பட்டு இருப்பீர்கள். அப்பா அம்மாவைத் தவிர மற்ற எல்லாமே அங்கே கிடைக்கும். புரிந்து கொள்ளுங்கள். நான் சொல்லவில்லை. போய் வந்தவர்கள் சொல்கிறார்கள்.

முன்பு எல்லாம் ஆண்கள் சிலர் அங்கே சென்று வருவது வழக்கம். நானும் என் நண்பர்களும் இருமுறை போய் வந்து இருக்கிறோம்.

அதில் எந்த இனத்து ஆண்கள் அதிகம் போய் வருகிறார்கள் என்று கேட்க வேண்டாம். சமரசம் உலாவும் இடத்தில் இன மொழி உணர்வுப் பண்புகள் எல்லாமே அடிபட்டுப் போய் விடுகின்றன.

அங்கே இருந்து சிபிலிஸ், கொனோரியா போன்ற பாலியல் நோய்களைக் காசு கொடுத்து வாங்கி வந்தவர்களும் இருக்கிறார்கள். இப்போது கோலோக் சமாசாரம் குறைந்து விட்டது.

அதுதான் அடிவாசலில் மேல்நாட்டு ரம்பைகளும் ஊர்வசிகளும் அணிவகுத்து நிற்கிறார்களே. அப்புறம் ஏன் அங்கே போக வேண்டும். ஆக கோலோக் இரவு யாத்திரை குறைந்து போனதில் நியாயம் இருப்பதில் நியாயம் தெரிகிறது.
ஒரு முக்கியமான விசயம். கோலோக் நகரத்திற்கும் நாடு கடந்து வாழும் முன்னாள் கம்யூனிஸ்டுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்கள் பாட்டுக்கு அவர்கள் வேறு ஒரு பக்கத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.

சுல்லாபோர்ன் காட்டுக் கிராமத்தை, பால் சுல்லாபோர்ன் பட்டனா (Ban Chulaborn Patana 12) என்றும் அழைப்பார்கள். கோலோக் நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் சுக்கிரின் எனும் ஒரு குறுநகரம் இருக்கிறது. அங்கு இருந்து 30 கி.மீ. தொலைவில் ஒரு பெரிய ஆழ்க் காடு. அந்தக் காட்டுக்குள் அந்தச் சுல்லாபோர்ன் காட்டுக் கிராமம் இருக்கிறது.

வெளியுலக மக்கள் அதிகம் போவது இல்லை. அப்படி ஒன்றும் அங்கே சுலபமாகப் போய் வந்துவிடவும் முடியாது. தெரியாதவர்கள் யாரையும் அந்தக் கிராமத்திற்குள் விடவும் மாட்டார்கள்.

தவிர கிராமத்திற்குப் போகும் மண் சடக்கில் மேடு பள்ளங்கள், குண்டு குழிகள், குட்டிக் குட்டி ஆறுகள், சின்னப் பெரிய மண்சரிவுகள். இடை இடையே காட்டு யானைகளின் உருட்டல் மிரட்டல்கள். இவற்றை எல்லாம் தாண்டிப் போக மூன்று நான்கு மணி நேரம் பிடிக்கும்.

மறுபடியும் சொல்கிறேன். இந்தக் கிராமத்தில் வாழ்கின்றவர்கள் அனைவரும், முன்னாள் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் 10-ஆவது ரெஜிமெண்டைச் (10th Regiment of the Communist Party of Malaya (CPM)) சேர்ந்தவர்களின் குடும்பங்கள். அவர்களின் உறவினர்கள்.

இவர்களுக்கு அப்துல்லா சி.டி. (Abdullah CD) என்பவர் தலைவராக இருக்கிறார். துணையாக அவருடைய மனைவி சுராய்னி அப்துல்லா (Suriani Abdullah) என்பவரும் உதவிகள் செய்து வருகிறார்.

முன்னாள் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்தான் அப்துல்லா சி.டி. மலேசிய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற மனிதர். ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தியவர். மலாயாக் காடுகளில் 45 ஆண்டுகால வாழ்க்கை.
இவரைத் தவிர சின் பெங் (Chin Peng), ரசீட் மைடின் (Abdul Rashid bin Maidin), சம்சியா பாக்கே (Shamsiah Fakeh), மூசா அமாட் போன்றவர்களும் அந்தக் கிராமத்தில் இருந்தார்கள். வாழ்ந்தார்கள்.

இவர்களில் சின் பெங்கைத் தவிர மற்றவர்களுக்கு மலேசியாவிற்குள் திரும்பி வர அனுமதி வழங்கப் பட்டது. ரசீட் மைடின் என்பவருக்கு தாய்லாந்து அரசாங்கம் குடியுரிமை வழங்கி இருக்கிறது.

மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான சின் பெங்கிற்கு தாய்லாந்து குடியுரிமையும் கிடைக்கவில்லை. மலேசியக் குடியுரிமையும் கிடைக்கவில்லை. பேராக், சித்தியவான் நகரில் பிறந்தவர். கடைசியில் அவர் நாடற்றவராக அண்மையில் இறந்து போனார்.

1989-ஆம் ஆண்டில், மலேசியா, தாய்லாந்து அரசாங்கங்களுடன் மலாயா கம்யூனிஸ்டு கட்சி ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதாவது இனிமேல் மலேசியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம் எனும் ஒப்பந்தம். 

அதன்படி இந்தக் கம்யூனிஸ்டுகள் தங்கி வாழ்வதற்கு தாய்லாந்து அரசாங்கம் ஒரு காட்டுப் பகுதியை ஒதுக்கிக் கொடுத்தது. அது இப்போது ஒரு கிராமமாக மாறிவிட்டது.
(சான்று: http://bersamajeli.blogspot.my/2012/11/lawatan-ke-ban-chulabhorn-patna-12.html - LAWATAN KE BAN CHULABHORN PATNA 12)

ஆரம்பத்தில் 260 பேராக இருந்த கிராமம் சென்ற ஆண்டு 460-ஆக பெருகி நிற்கிறது. அங்கே வாழ்பவர்களில் ஒருவர்தான் ஆசீர்வாதம்.

மலேசியாவிற்குள் திரும்பி வருவதற்கு ஆசீர்வாதம் பல முறை முயற்சிகள் மேற்கொண்டார். வெற்றி பெற முடியவில்லை. அவரிடம் மலேசிய சிவப்பு அடையாள அட்டை மட்டுமே இருக்கிறது. அதை நீல நிறமாக மாற்றுவதற்கு முயற்சிகள் செய்து வருகிறார்.

அதற்காக வருடத்திற்கு ஒரு முறை மலேசியாவிற்கு வந்து போகிறார். இதுவரையில் 10,000 ரிங்கிட்டிற்கு மேல் செலவு செய்து விட்டதாகவும் சொல்கிறார். இன்னும் நீலநிற அடையாள அட்டையும் கிடைக்கவில்லை. குடியுரிமையும் கிடைக்கவில்லை.

சரி. அதற்கு முன் மலாயா கம்யூனிஸ்டு கட்சியைப் பற்றி கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.

மலாயாவை ஜப்பானியர்கள் கைபற்றிய போது அவர்களை எதிர்ப்பதற்காக ஒரு விடுதலை முன்னணி உருவாக்கப் பட்டது. அந்த விடுதலை முன்னணிக்கு பிரிட்டிஷ்காரர்கள் ஆயுதங்களைக் கொடுத்து உதவினார்கள். நிதியுதவியும் செய்தார்கள். ஒரு சிலருக்கு விருதுகளைக் கொடுத்து விளம்பரமும் செய்து இருக்கிறார்கள்.

அந்த விடுதலை முன்னணிக்குப் பெயர் மலாயா விடுதலை முன்னணி. ஆங்கிலத்தில் Malayan People's Anti-Japanese Army என்று சொல்வார்கள். அந்த விடுதலை முன்னணியில், மலாயாவின் மூன்று இனங்களும் சரி சமமாகப் பங்கெடுத்துக் கொண்டன.

மலாயாவை ஜப்பானியர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நிறைய கனவுகளுடன் இந்தியர்களும் போர்க் கொடி தூக்கி இருக்கிறார்கள். அந்தப் போராட்ட வீரர்களில் முதலில் வருபவர் ஜப்பானிய எதிர்ப்பாளர் சிபில் கார்த்திகேசு.

இவர் ஆயிரக் கணக்கான சீனர்களுக்கு உதவிகள் செய்தவர். கடைசியில் மனிதச் சித்ரவதைகளின் சிகரத்தில் அனாதையாகிச் செத்தும் போனார். அவரைப் போல இந்தியர்கள் பலர் மலாயா மக்களுக்காகப் போராடி இருக்கிறார்கள். வரலாற்றுச் சுவடுகளில் இருந்து காணாமல் போனது தான் மிச்சம்.

அவர்களில் ஒருவர் மலாயா கணபதி. இந்தியத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். கடைசியில் ஆங்கிலேயர்கள் அவரைத் தூக்கில் தொங்கப் போட்டு தொடை தட்டிக் கொண்டார்கள். 
அகில மலாயாத் தொழிற்சங்கச் சம்மேளனத் தலைவர் பி. வீரசேனன். சின்ன வயதில் பெரிய இலட்சியவாதி. பகாங் காராக் பகுதியில் இவரை சுட்டே கொன்றார்கள்.

மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் துணைத் தலைவர் கம்பார் ஆர்.ஜி.பாலன். அந்தக் கட்சியில் ஆக உயர்ந்த பதவி வகித்த ஒரே தமிழர். இவர் வந்தார் என்றால் கம்பார் நகரமே நடுங்கும் என்றும் சொல்வார்கள். 

இவருக்கு ஆங்கிலேயர்கள் தங்கப் பதக்கம் கொடுத்து உச்சி முகர்ந்தார்கள். தங்கப் பதக்கம் பெற்ற இவர் என்ன ஆனார் என்பது இன்று வரை ஒரு பெரிய ரகசியம். தங்கமலை ரகசியம் தோற்றது போங்கள்.

இன்னும் ஒருவர் இருக்கிறார். 1940-களில் கிள்ளான் தொழிற்சங்கப் போராட்டவாதியாக இருந்த ஆர். எச். நாதன். இவரை இந்தியாவிற்கு நாடு கடத்தினார்கள். மனைவி மக்களை விட்டு கண்ணீர் வடித்துக் கொண்டு போனவர்.

கடைசி வரை அவர் மலாயாவுக்குள் திரும்பி வரவே முடியவில்லை. கடைசி வரை வெள்ளைக்காரர்கள் அவரை மலாயாவுக்குள் விடவே இல்லை. இவர் இந்தியாவிலேயே இறந்து போனார். இவருடைய வாரிசுகள் இப்போது கிள்ளானில் இருக்கிறார்கள்.

மலாயா மக்களின் நலன்களுக்காகப் போராடிய இவர்களை மலேசிய இந்தியர்களும் மறந்து விட்டார்கள். மலேசிய வரலாறும் மறந்து விட்டது. அதே போலத்தான் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆசீர்வாதம். இவரையும் மறந்து விட்டார்கள். காலத்தால் மறக்கப்பட்ட மனிதர்களில் ஆசீர்வாதம் என்பவரும் ஒருவர்.

மலாயா விடுதலை முன்னணி கதைக்கு மறுபடியும் வருவோம். ஜப்பானியர்கள் சரண் அடைந்ததும் வெள்ளைக்காரர்கள் வரும் வரையில் அந்த மலாயா விடுதலை முன்னணி தான் மலாயாவை 18 நாட்களுக்கு தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. ஆட்சியும் செய்தது.

இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். அதாவது நாம் வாழும் இந்த மலேசியாவை கம்யூனிஸ்டுகள் 18 நாட்களுக்கு ஆட்சி செய்து இருக்கிறார்கள். இது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. மலாயா வரலாற்றைப் படித்துப் பாருங்கள். இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. ரொம்ப வேண்டாம்.

சிலாங்கூரில் இருக்கும் ரவாங் நகரத்தை இந்தியர்கள் சில நாட்கள் ஆட்சி செய்தார்கள். இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.