மலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஜனவரி 2013

மலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர்

Perak State Speaker V.Sivakumar
 
மலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் எனும் பெருமைக்குரியவர் வி. சிவகுமார். மலேசிய இந்தியர்களின் அரசியல் வரலாற்றில் அரிய சாதனைகளைப் படைத்து வரும் ஓர் அற்புதமான இளைஞர். 

Sivakumar at Tronoh Market
துரோனோ சந்தையில் தன் தொகுதி மக்களுடன்

ஏழைகளின் தொண்டர் என்று ஏழை எளிய மக்களால் அன்பாக அழைக்கப்படுகின்றார். முழு மரியாதைக்குரிய சபாநாயகர் ஆடை அணிகலன்களுடன் அரியணையில் அமர்ந்து இருக்கும் போதே சட்டசபையில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்டவர். அந்த நிகழ்வு உலக மக்களிடையே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்னும் பேசப்பட்டு வருகிறது.

அந்த விசயம் ஊடகங்கள் வழியாக வெளி உலகத்திற்கும் தெரிய வந்தது. அவர் மீது மலேசிய மக்களின் அனுதாப அலைகள் பலமாக வீச ஆரம்பித்தன. இன்னும் வீசிக் கொண்டும் இருக்கின்றன.
 

சுத்தமான அநீதி
 
அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் சுத்தமான அநீதி செய்யப்பட்டதாக மலேசிய மக்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். பேராக் மாநில மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Perak State Speaker V.Sivakumar arrested by Malaysian Police
வி. சிவகுமார் எனும் இளம் இந்த இளைஞர், மலேசியா, பேராக் மாநிலச் சட்டசபையின் சபாநாயகராக வலம் வந்தவர். மலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் எனும் பெருமைக்கும் உரியவர். மலேசிய இந்தியர்களின் அரசியல் வரலாற்றில் சாதனைகளைப் படைத்து வரும் நல்ல ஓர் இளைஞர்.

2009 மே மாதம் 7 ஆம் தேதி, பேராக் மாநிலத்தில் அரசியல் கொந்தளிப்புகள் ஏற்பட்டன. இந்த கொந்தளிப்பை பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009 என்று அழைக்கிறார்கள். சிவகுமார் தன் பதவியை இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அதன் பின்னர், பேராக் மாநிலத்தின் சட்டசபை கலைக்கப்பட்டது. 


அதற்கு முன் அரசியல் வரலாற்றைக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். மலேசியாவின் 12 ஆவது பொதுத் தேர்தல் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அந்தத் தேர்தல், மலேசியாவின் அரசியலிலேயே மாபெரும் திருப்பத்தையே ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். 

நீதித் தத்துவத் துறை
 
தீபகற்ப மலேசியாவின் ஆறு மாநிலங்கள் எதிர்க் கட்சியின் கரங்களில் வீழ்ந்தன. அவற்றுள் ஒன்று பேராக் மாநிலம். மற்றவை பினாங்கு, கெடா, சிலாங்கூர், திரங்கானு, கிளாந்தான் மாநிலங்கள்.

People of all races joint hands to support V.Sivakumar
அதன் பிறகு, பேராக் மாநிலத்தின் சட்டசபைக்கு வி. சிவகுமார் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். மலேசியாவில் வாழும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வி. சிவகுமார் 5 டிசம்பர் 1970இல், ஈப்போவில் பிறந்தவர். நீதித் தத்துவத் துறை இளங்கலையிலும், வணிக நிர்வாகத் துறை முதுகலையிலும் பட்டம் பெற்றவர். 1997ஆம் ஆண்டு அரசியலில் காலடி எடுத்து வைத்தார். ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரனிடம் அரசியல் செயலாளராகச் சேவை செய்தவர்.

Riot Police controlling the crowd supporting Sivakumar
பின்னர், 2008ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் துரோனோ சட்டமன்றத் தொகுதியில், லீ கிம் சோய் என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். 2,571 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றியும் பெற்றார்.

பேராக் அரசியல் பேரலை

அதற்கு முன் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். 1957ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் அடைந்தது. அதில் இருந்து 2008ஆம் ஆண்டு வரை, பேராக் மாநிலத்தை தேசிய ஆளும் கட்சியான தேசிய முன்னணியே தன் இரும்புக் கரங்களினால் இறுக்கிப் பிடித்து வைத்து இருந்தது. மற்ற கட்சிகள் நசுக்கிப் போடப்பட்டன.

Sivakumar being carted away at the State Assembly
2008இல் ஏற்பட்ட மலேசிய அரசியல் சுனாமிப் பேரலையால், பேராக் மாநில ஆட்சி மக்கள் கூட்டணி எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியிடம் கைமாறியது. நம்முடைய கதாநாயகன் வி. சிவகுமார் சட்டசபையின் சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்தக் கட்டத்தில், பாரிசான் நேசனல் போட்டியாக ஜுனுஸ் வாகிட் என்பவரை தேசிய முன்னணி சபாநாயகராக நியமனம் செய்தது. இவர் ஏற்கனவே, பேராக் மாநிலச் சட்டசபையின் சபாநாயகராக இருந்தவர்தான். சட்டசபையில் தான் சார்ந்த கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத போது இந்த முறை மறுபடியும் அவரே நியமிக்கப்பட்டு இருந்தார். 



With his Tronoh people
இதைத் தொடர்ந்து, தேசிய முன்னணிக்கும் மக்கள் கூட்டணிக்கும் இடையே கரடுமுரடான வாக்குவாதங்கள். சட்டசபைக்கு வெளியே கைகலப்புகளும் நிகழ்ந்தன.

சபாநாயகர் யார்

ஜுனுஸ் வாகிட் சபாநாயகரா இல்லை வி. சிவகுமார் சபாநாயகரா என்பதை முடிவு செய்யும் ஒரு சட்டசபை வாக்கெடுப்பு, 2008 ஆகஸ்டு மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் வி. சிவகுமாருக்கு 31 வாக்குகள் கிடைத்தன. ஜுனுஸ் வாகிட்டிற்கு 28 வாக்குகள் கிடைத்தன. 



Ang Paw to Old Citizens
ஜனநாயக வாக்கெடுப்பின் முடிவின்படி வி. சிவகுமார் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். துணைச் சபாநாயகராக ஹீ இட் பூங் என்பவர் நியமிக்கப்பட்டார்.

ஹீ இட் பூங் என்பவர் ஒரு பெண். மகா பெரிய கில்லாடி. இவர் ஜெலாப்பாங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பணத்திற்காக விலை போன ஒரு மனுஷி. கொஞ்ச நஞ்ச காசு இல்லை. 30 மில்லியன் மலேசிய ரிங்கிட். அதாவது கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய். 



Listening to grievances of his constituency people
இவருடன் பேராங் சட்டமன்ற உறுப்பினர் ஜமாலுடின் முகமட் ராட்சி என்பவரும், சங்காட் ஜெரிங் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஒஸ்மான் முகமட் ஜைலு என்பவரும், மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் கேஷ்வந்தர் சிங் என்பவரும், ஒன்றாகச் சேர்ந்து கொண்டு மக்கள் கூட்டணியில் இருந்து, தேசிய முன்னணிக்கு ஆதரவாகக் கட்சி தாவினர். எல்லோருக்கும் மில்லியன் கணக்கில் காசு கொடுக்கப்பட்டது. ஆளும் மக்கள் கூட்டணியைக் கவிழ்த்துவிட்டனர்.

பேராக் அரசியல் சாசன நெருக்கடி

அதனை ஒரு கட்சித் தாவல் என்று தாராளமாய்ச் சொல்லலாம். பேராக் சட்டமன்றத்தில் மக்கள் கூட்டணி, பெரும்பான்மையை இழந்தது. அதுவே, பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009க்கு மூலகாரணமாகவும் அமைந்தது. அதன் தொடர்ச்சியாக, அரச சபாநாயகர் வி. சிவகுமாரும் பதவியைப் பறி கொடுக்க வேண்டியும் வந்தது.
At a Chinese Temple in Tronoh
இருப்பினும், 2009 பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி, சபாநாயகர் தகுதியில் இருக்கும் நிலையில், பேராக் மாநிலச் சட்டசபையின் அவசரக் கூட்டத்திற்கு வி. சிவகுமார் அழைப்பு விடுத்தார். அவருக்கு அந்த அரசு உரிமை இருந்தது. இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் அந்த அழைப்பில் கோடி காட்டினார்.

அவர் கொண்டு வந்த தீர்மானங்களில், முதல் தீர்மானம்: பேராக் முதலமைச்சர் முகமட் நிஜார் ஜமாலுடின் என்பவர்தான் சட்டபூர்வமான அரசு அதிகாரி என்பதாகும்.

சட்ட அறிவுரைஞர்

அடுத்து, பேராக் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாக ஒரு தேர்தலை நடத்தி ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்பது, அவருடைய இரண்டாவது தீர்மானம். சபாநாயகர் வி. சிவகுமாரின் சட்டசபை அவசரக் கூட்ட அழைப்பை பேராக் மாநில சட்ட அறிவுரைஞர் அகமட் கமால் முகமட் ஷாகிட் என்பவர் நிராகரித்தார்.

At a sundry market in Tronoh
மாநிலத்தின் அரச ஆளுநரின் அனுமதி இல்லாமல் சட்டசபை அவசரக் கூட்ட அழைப்பை விடுக்க முடியாது என்று அவர் காரணம் காட்டினார். அதாவது பேராக் மாநில சுல்தானின் அனுமதி இல்லாமல் சட்டசபை அவசரக் கூட்டத்தை நடத்த முடியாது என்று சட்ட நுணுக்கங்களை அடையாளம் காட்டினார். சும்மா இருப்பாரா சிவகுமார். படித்த பையன் ஆயிற்றே.

சிவகுமாரின் வழக்கறிஞர் அகஸ்டின் அந்தோனி என்பவர் மறுப்பு தெரிவித்தார். இங்கே ஒரு சட்டசபையின் கூட்டம்தான் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டசபை கலைக்கப்படவில்லை. 

Malays assembled to listen his speech
அதனால், சிவகுமாரின் சட்டசபை அவசரக் கூட்ட அழைப்பு செல்லத்தக்கது. அந்த அழைப்பிற்கு மாநில சுல்தானின் அனுமதி தேவை இல்லை என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

திடீர் அணுகுண்டு

சட்டசபை அவசரக் கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்னால், 2009 மார்ச் 2ஆம் தேதி மற்றோர் அதிர்ச்சியான திருப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டசபையின் கட்டிட வேலிக் கதவுகளுக்குப் பூட்டுகளைப் போட்டு பூட்டுமாறு பேராக் மாநிலச் செயலகம் கட்டளை பிறப்பித்தது. அது ஒரு திடீர் அணுகுண்டு.

Distributing rice packets to the needy people
அதே தினம் சிவகுமார் மற்றோர் அறிவிப்பையும் செய்தார். சட்டசபைச் செயலாளரைத் தான் பதவியில் இருந்து அகற்றுவதாகவும், மாநிலச் சட்டசபையின் அவசரக் கூட்டம் திட்டமிட்டபடி 2009 மார்ச் 3ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.

சபாநாயகர் சிவகுமாரின் ஆணையின்படி 2009 மார்ச் 3ஆம் தேதி சட்டசபை அவசரக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்களும் கட்டிட வளாகத்திற்குள் வந்து சேர்ந்தனர்.

A get togather party
இந்தக் கட்டத்தில், சட்டசபைக் கட்டிட வளாகத்தில் நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்கள் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டனர். மக்கள் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்டிடத்திற்குள் நுழைவதில் இருந்து தடுக்கப்பட்டனர்.

மரத்தின் கீழ் சட்டமன்ற அவசரக் கூட்டம்

சட்டசபை வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. இன்னும் இருக்கிறது. அந்த மரத்தின் அடியில் அவசர சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என்று சிவகுமார் உடனடியாக அறிவித்தார்.


சபாநாயகரின் முழு ஆடை அணிகலன்களுடன் இருந்த சிவகுமார், மரத்தின் அடியிலேயே சட்டசபைக் கூட்டத்தையும் நடத்தினார்.

அது மலேசிய வரலாற்றில என்றென்றும் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.
அதைப் பார்ப்பதற்கு பொதுமக்கள் ஆயிரக் கணக்கில் அங்கே வந்து கூடி விட்டனர். என்னையும் சேர்த்துதான். ஓர் உலக அதிசயமே நடக்கிது. பார்க்காமல் இருக்க முடியுமா. பொதுமக்கள் கைதட்டல்கள் மூலமாகத் தங்களின் ஆதரவுகளைத் தெரிவித்தனர்.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு இப்படி ஒரு நிலையா என்று அவர்கள் மிக மிக வேதனை அடைந்தனர். கலைந்து போகுமாறு பொதுமக்களைப் போலீஸார் உரக்கத் தொனியில் அதட்டிப் பார்த்தனர். ஒன்றும் நடக்கவில்லை. பொதுமக்கள் அசையவில்லை.

மூன்று தீர்மானங்கள்

மரத்தின் கீழ் நடைபெற்ற அந்த அவசர சட்டமன்றக் கூட்டத்தில், 27க்கு 0 எனும் வாக்குப் பெரும்பான்மையில், மூன்று தீர்மானங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட்டன.
  • முதல் தீர்மானம்: முகமட் நிஜார் ஜமாலுடின் என்பவர்தான், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பேராக் மாநிலத்தின் முதலமைச்சர். அவர்தான் முதலமைச்சராக இருப்பார்.
  • இரண்டாவது தீர்மானம்: பாரிசான் நேசனல் கூட்டணி அமைத்த மாநில அமைச்சரவை சட்டத்திற்குப் புறம்பானது. செல்லுபடியாகாது.
  • மூன்றாவது தீர்மானம்: மாநில சட்டசபை கலைக்கப்பட்டு உடனடியாக இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
பகிங்கரக் கண்டனம்

மரத்தின் கீழ் சிவகுமார் நடத்திய சட்டசபை அவசரக் கூட்டத்திற்கு எதிராக பாரிசான் நேசனல் ஒரு பகிங்கரக் கண்டனம் தெரிவித்தது. அந்தக் கூட்டத்தில் தங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்றும் அறிவித்தது.

இதற்கிடையில், மக்கள் கூட்டணியின் முதலமைச்சராக இருந்த முகமட் நிஜார் ஜமாலுடின், பேராக் மாநிலச் சட்டசபையைக் கலைத்து விடுமாறு பேராக் மாநில சுல்தான் ராஜா அஸ்லான் ஷா அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். ஆனால், அந்த வேண்டுகோள் நிறைவேற்றப்படவில்லை. இன்றுவரை காற்றில் பறந்து கொண்டு இருக்கிறது.

As a Perak State Speaker of the House
பேராக் மாநிலச் சட்டமன்ற வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்த அந்த மரத்திற்கு ‘மக்களாட்சி மரம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த மரத்தின் கீழ் ஒரு நினைவுப் பலகையும் வைக்கப்பட்டது. அதையும் பிடுங்கி எரிந்துவிட்டார்கள்.

சிவகுமாரும் சீனர்களும்

இப்போது சிவகுமாருக்கு வயது 42. இந்த இளம் வயதிலேயே ஒரு மாநிலத்தின் சபாநாயகராக அரியணை வீற்று சாதனை படைத்துள்ளார். இந்தக் காலக் கட்டத்தில், அவர் பேராக் மாநிலத்தின் சபாநாயகராக இல்லாவிட்டாலும், தன்னுடைய துரோனோ தொகுதி மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார். எல்லாவிதமான இன, சமய சடங்குகளிலும் கலந்து கொள்கிறார்.

Under Democracy Tree
பூர்வீகக் குடிமக்களின் திருமணங்களுக்குச் சென்று அவர்களில் ஒருவராக ஐக்கியமாகி விடுகிறார். துரோனோ நகரின் பிரதானக் காய்கறிச் சந்தைகளுக்குச் சென்று பொதுமக்களின் பிரச்னைகளைக் கண்டறிந்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.

வயதானவர்களின் இல்லங்களுக்குச் சென்று பண உதவிகளைச் செய்கின்றார். துரோனோ தொகுதிச் சீனர்கள் அவரை ஓர் இந்தியராக இனம் பிரித்துப் பார்ப்பது இல்லை. தங்களின் குடும்ப உறுப்பினராகப் பார்க்கின்றனர்.

அனுதாப அலைகள்

முழு மரியாதைக்குரிய சபாநாயகர் ஆடை அணிகலன்களுடன் இருக்கும் போது, சிவகுமார் சட்டசபையில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்டது மலேசிய மக்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர, ஊடகங்கள் வழியாக வெளியுலகத்திற்கும் தெரிய வந்துள்ளது.

With Ubah Banner
பொதுவாக, அவர் மீது மலேசிய மக்களின் அனுதாப அலைகள் இன்னும் பலமாக வீசிக் கொண்டு இருக்கின்றன. அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீங்கு விளைவிக்கப்பட்டதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

’உங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறேன். விக்கிப்பீடியாவிலும் வெளிவரும். நீங்கள் சபாநாயகர் அரசு உடைகளுடன் பிடித்த படம் ஒன்று வேண்டும். விக்கிப்பீடியாவில் பிரசுரிக்க வேண்டும்’ என்று சிவகுமாரை அழைத்து நேற்றிரவு பேசினேன். (21.01.2013)

ரொம்ப பிரபலப் படுத்த வேண்டாம் சார்

அதற்கு அவர், ‘ரொம்ப பிரபலப் படுத்த வேண்டாம் சார். தேர்தல் காலம். அமைதியாகப் போராடுவோம்’ என்றார். சபாநாயகர் எனும் தகுதியைத் தாண்டி, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் தாண்டிப் போய் என்னிடம் வெகுநேரம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார். என் மனதில் மழை பெய்தது.

At Tronoh Town with Chinese devotees
எதிர்வரும் 2013 ஏப்ரல் மாதம் மலேசியாவின் 13வது பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. வி.சிவகுமார் என்கிற இந்த இளைஞன், இதே துரோனோ தொகுதியில் மறுபடியும் தேர்தலில் நிற்கிறார். வெற்றி பெற வேண்டும். ஒரு தந்தையின் மனம் வேண்டிக் கொள்கிறது.

(விக்கிப்பீடியாவில் http://ta.wikipedia.org/s/2kgr எனும் முகவரியில் அவரைப் பற்றிய கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.)