ஜாவா பீடபூமியில் அர்ஜுனா அபிமன்யு ஆலயங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாவா பீடபூமியில் அர்ஜுனா அபிமன்யு ஆலயங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 ஜூலை 2020

ஜாவா பீடபூமியில் அர்ஜுனா அபிமன்யு ஆலயங்கள்

தமிழ் மலர் - 13.07.2020

இந்தோனேசியாவின் ஆலயங்கள் என்று சொல்லும் போது பாலித் தீவில் உள்ள ஆலயங்கள் முதலில் தெரிய வரும். அடுத்து யோக்ஜாகர்த்தாவில் உள்ள பிரம்பனான் (Prambanan) ஆலயம் தெரிய வரும். அடுத்து அதன் அருகில் இருக்கும் போரோபுதூர் (Borobudur) ஆலயம் தெரிய வரும்.


ஆனால் இந்த ஆலயங்களுக்கு எல்லாம் தலைவாசல் வைக்கும் ஓர் ஆலய வளாகம் இருக்கிறது. அதைப் பற்றி பலருக்கும் தெரியாது. அதுதான் தாயாங் பீடபூமி ஆலயங்கள் (Dieng Plateau Temples). 400-க்கும் மேற்பட்ட ஆலயங்கள்.

உண்மையில் இந்தத் தாயாங் ஆலயங்கள் (Dieng Temples) தான் இந்தோனேசியாவிலேயே மிக மிகப் பழமையான ஆலயங்கள் ஆகும். பிரம்பனான் ஆலயம்; போரோபுதூர் ஆலயம்; பாலித் தீவு ஆலயங்கள் (Bali Island Temples) வருவதற்கு முன்னதாகவே தாயாங் பீடபூமி ஆலயங்கள் உருவாகி விட்டன.

1000 ஆண்டுகளுக்கு முன்னர் தாயாங் பீடபூமியில் ஒரே இடத்தில் 400 ஆலயங்கள் இருந்து இருக்கின்றன. ஆனால் இப்போது 8 ஆலயங்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. மற்றவை இயற்கையின் சீற்றத்தில் சிதைந்த மரபு அணுக்களாகி விட்டன.




எரிமலை வெடிப்புகளினால் பல ஆலயங்கள் அழிந்து போயின. இன்னும் பல ஆலயங்களின் கற்களும் கற்பாறைகளும் கிராமவாசிகளால் எடுத்துச் செல்லப் பட்டன. நிலநடுக்கம்; இயற்கைப் பேரிடர்களினால் மேலும் பல ஆலயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு போயின. 1000 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட கால வரலாறு.

எஞ்சிய எட்டு ஆலயங்களையும் இந்தோனேசிய அரசாங்கம் பத்திரமாய்ப் பாதுகாத்து நெகிழ வருகிறது.

மத்திய ஜாவாவில் வோனோசோபோ (Wonosobo) நகருக்கு அருகில் தாயாங் பீடபூமி உள்ளது. மலைப்பாங்கான பகுதி. முதன்முதலில் கலிங்கா பேரரசின் (Kalingga Kingdom) அரசர்கள் 7-ஆம் நூற்றாண்டில் அந்த ஆலயங்களைக் கட்டி இருக்கிறார்கள்.


அடுத்து 8-ஆம் நூற்றாண்டில் மத்தாரம் பேரரசு (Mataram Kingdom) ஆட்சியாளர்கள் கட்டி இருக்கிறார்கள். இவர்கள் சஞ்சய வம்சாவளியைச் (Sanjaya Dynasty) சேர்ந்தவர்கள். பெரும்பாலான ஆலயங்களை மத்தாரம் அரசர்கள் தான் கட்டினார்கள். ஏற்கனவே சொன்னது போல 400 ஆலயங்கள். போட்டிப் போட்டுக் கொண்டு கட்டி இருக்கிறார்கள்.

ஜாவாவில் இதுவரை கட்டப்பட்ட மிகப் பழமையான மதக் கட்டமைப்புகள்;  அல்லது ஆரம்பகால இந்து ஆலயங்களில் தாயாங் ஆலய வளாகம் தான் பழைமையானது என்று சொல்லலாம். 

இந்தியாவின் இந்து ஆலயக் கட்டிடக் கலையின் பல அம்சங்களை இந்தத் தாயாங் ஆலயங்கள் பறைசாற்றுகின்றன.



கம்போடியா அங்கோர் வாட் ஆலய வளாகத்திலும் இப்படித்தான் நிகழ்ந்து இருக்கிறது. ராஜவர்மன் (Rajavarman); சூரியவர்மன் (Suriavarman) பரம்பரையினர் நீயா நானா என்று போட்டிப் போட்டுக் கொண்டு மூலைக்கு மூலை ஆலயங்களைக் கட்டிப் போட்டு இருக்கிறார்கள்.

தாயாங் ஆலயங்கள் கடல் மட்டத்தில் இருந்து 2000 மீட்டர் அல்லது 6500 அடி உயரத்தில் உள்ளன. எவ்வளவு உயரத்தில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்வோம்.

கோயில்களின் உண்மையான பெயர், வரலாறு மற்றும் இந்தக் கோயில்களின் கட்டுமானத்திற்குப் பொறுப்பான மன்னர்கள் யார் எவர் என்று சரியாகத் தெரியவில்லை. ஏனென்றால் இந்த ஆலயங்களின் கட்டுமானத்துடன் தொடர்புடைய தகவல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை.



ஒன்று மட்டும் உண்மை. தாயாங் ஆலயங்கள் அனைத்தும் 7-ஆம் - 8-ஆம் நூற்றாண்டுகளில், ஒரே காலக் கட்டத்தில் கட்டப் பட்டவை ஆகும். இவற்றின் கட்டுமானப் பாணியில் ஜாவாவில் காணப்படும் மற்ற மற்ற கட்டுமான அமைப்புகளுடன் ஒத்துப் போகின்றன.

வட மத்திய ஜாவானிய கட்டுமான அமைப்பு (Northern Central Javanese); கிழக்கு ஜாவானிய பதுட் கோயில் கட்டுமான அமைப்பு (East Javanese Badut Temple); கெடாங் சாங்கோ கோயில்கள் கட்டுமான அமைப்பு (Gedong Songo Temples); மேற்கு ஜாவானிய கங்குவாங் (West Javanese Cangkuang) கட்டுமான அமைப்பு; பூஜோங் மிஞ்சா கட்டுமான அமைப்பு (Bojongmenje) ஆகிய அமைப்புகளுடன் ஒத்துப் போகின்றன.



1814-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஒருவரால் தாயாங் ஆலயங்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. ஏற்கனவே அந்தப் பகுதியில் வாழ்ந்த ஜாவானிய கிராமவாசிகள் அந்த ஆலயங்களைப் பற்றி அறிந்து வைத்து இருந்தார்கள்.

இந்த ஆலயங்கள் கட்டப்படும் போது அதன் மேற்பரப்பு ஒரு சமவெளிதான். குளங்கள் எதுவும் இல்லை. அந்த இடத்தில் மட்டும் 400 ஆலயங்கள் இருந்து இருக்கின்றன. அத்தனை ஆலயங்களும் பல நூறாண்டுகளாக அந்த ஏரிக்குள் மூழ்கிப் போய் இருந்து இருக்கின்றன.

எரிமலை வெடிப்பினால் ஒரு பெரிய பள்ளம் உண்டாகி அதில் நீர் நிரம்பி அந்த ஆலயங்கள் மூழ்கிப் போய் விட்டன.



பல நூறு ஆண்டுகளுக்கு வெளியுலகத்திற்குத் தெரியாமலேயே அந்த ஆலயங்கள் குளத்திற்குள் மூழ்கி இருந்து இருக்கின்றன. அந்தக் குளத்தின் நீரை அகற்றியதும் கோயில்களின் கட்டுமானங்கள் தெரிய வந்தன.

1856-ஆம் ஆண்டில், குளத்தின் நீரை வெளியேற்றும் முயற்சிகள் நடைபெற்றன.  ஐசிடோர் கின்ஸ்பெர்கன் (Isidore van Kinsbergen) எனும் ஒரு டச்சுக்காரர் அந்த முயற்சிகளில் இறங்கினார். 

1864-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய டச்சு அரசாங்கம் (Dutch East Indies Government) புனரமைப்புத் திட்டத்தைத் தொடங்கியது. அந்தக் கோயில்களுக்கு இந்து காப்பியமான மகாபாரதத்தின் கதாமாந்தர்களின் பெயர்கள் வைக்கப் பட்டன.


பொதுவாகவே தாயாங் ஆலயங்கள் அனைத்தும் தென்னிந்தியாவின் பல்லவ பாணி ஆலயங்களுடன் தொடர்பு உடையவை ஆகும்.

தாயாங் ஆலய வளாகத்தில் அர்ஜுனா கோயிலுக்கு (Arjuna temple) அருகே ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கி.பி 808 - 809 என பொறிக்கப்பட்டு இருந்தது.

(An inscription discovered near Arjuna temple in Dieng was dated circa 808-809 CE, it was the oldest surviving specimen of old Javanese script, which revealed that the Dieng temple is continuously inhabited from mid 7th to early 9th century.)

உள்ளூர் ஜாவானிய மக்கள் ஒவ்வோர் ஆலயத்திற்கும் அவர்களின் ஜாவானிய காப்பியக் கதாபாத்திரங்களின்படி பெயரிட்டு உள்ளனர். பெரும்பாலும் மகாபாரத காவியத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்கள்.



இந்தத் தாயாங் ஆலயங்களுக்கு என்று ஓர் அருங்காட்சியகத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் கைலாசா அருங்காட்சியகம் (Kailasa Museum). தாயாங் ஆலயங்களில் இருந்து அகற்றப்பட்ட பல சிற்பங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

தாயாங் என்றால் பழைய ஜாவானிய காவி (Old Javanese Kawi) மொழியில் தெய்வங்கள் தங்குமிடம் (Abode of Gods) என்று பொருள்.

தாயாங் ஆலயங்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.

1. அர்ஜுனா (Arjuna) ஆலயங்கள்;

2. கடோற்கஜன் (Gatotkaca) ஆலயங்கள்;

3. திரௌபதி (Dwarawati) ஆலயங்கள்;

4. பீமா (Bima) ஆலயம்.

(The temples are clustered around three groups; Arjuna, Dwarawati and Gatotkaca clusters, while Bima temple was constructed as a separate single temple.)



முதலாவது: அர்ஜுனா ஆலயக் குழுமத்தில் அர்ஜுனா ஆலயம் தான் பிரதான ஆலயம். அந்தக் குழுமத்தில் நான்கு ஆலயங்கள் உள்ளன. அவற்றைச் சுற்றிலும் கொத்து கொத்தாக மலைகள். அந்த மலைகளுக்கு மத்தியில் அர்ஜுனா ஆலயங்களின் சமவெளி. தலைக் கோயிலாக அர்ஜுனா ஆலயம்; தென் பகுதியில் ஸ்ரீகண்டி (Srikandi) ஆலயம்; புந்ததேவா (Puntadewa) ஆலயம்; செம்பத்திரா (Sembadra) ஆலயம்; மற்றும் செமர் (Semar) ஆலயம்.

இரண்டாவது: கடோற்கஜன் ஆலயக் குழுமத்தில் ஐந்து ஆலயங்கள் உள்ளன. கடோற்கஜன் ஆலயம் (Gatotkaca); சாத்தியகி ஆலயம் (Setyaki); நகுலன் ஆலயம் (Nakula); சகாதேவா ஆலயம் (Sadewa); கர்ணன் (Gareng) ஆலயம்.

அந்தக் குழுமத்தில் இன்று கடோற்கஜன் ஆலயம் மட்டுமே தனியாய் நிற்கின்றது. மற்ற நான்கு ஆலயங்களும் நிலநடுக்கங்களினால் இடிந்து விழுந்து சிதைந்து விட்டன என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.



மூன்றாவது: திரௌபதி ஆலயக் குழுமத்தில் நான்கு ஆலயங்கள் இருந்தன. திரௌபதி (Dwarawati) ஆலயம்; அபிமன்யு (Abiyasa) ஆலயம்; பாண்டு (Pandu) ஆலயம்; மார்க்கண்டேயர் (Margasari) ஆலயம் என நான்கு ஆலயங்கள்.

இருப்பினும் அவற்றில் தற்போது திரௌபதி ஆலயம் மட்டுமே அப்படியே உள்ளது. மற்றபடி மற்ற மூன்று ஆலயங்களும் இடிந்து போய் விட்டன. இடிபாடுகள் மட்டுமே உள்ளன. அவற்றைப் புனரமைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

அதற்காக இந்தோனேசிய அரசாங்கம் ஒரு வரலாற்று ஆய்வுக் குழுவை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் இருந்து அறிஞர்களையும் வரவழைத்து உள்ளது.



நான்காவது: பீமா (Bima) ஆலயம் அல்லது பீமர் ஆலயம். மற்ற ஆலயங்களில் இருந்து தனியாக வேறு ஒரு மலைப் பகுதியில் உள்ளது.

தாயாங் ஆலய வளாகத்தில் பீமா ஆலயம் தான் மிகப் பெரிய ஆலயம். மிக உயரமான ஆலயம். இந்த ஆலயத்தின் வடிவம் மத்திய ஜாவாவில் உள்ள மற்ற மற்ற கோயில்களில் இருந்து மாறுபட்டது.

இந்தியாவில் இருக்கும் ஆலயங்களுடன் மிகவும் நெருக்கமாக தொடர்பு உடையது. குறிப்பாக கி.பி. 650-ஆம் ஆண்டில் ஒடிசா, புவனேஸ்வரில் கட்டப்பட்ட பரசுராமேஸ்வரர் ஆலயம் (Parashurameshvara Temple); கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் சத்தீஸ்கர் (Chhattisgarh), சிர்பூரில் (Sirpur) கட்டப்பட்ட இலட்சுமன் ஆலயங்களுடன் சற்று நெருக்கமாக உள்ளது.



இந்த ஆலயங்களுக்கு இந்தோனேசியர்கள் தான் அதிகமாக வருகை புரிகிறார்கள். தங்களின் மூதாதையரின் கலை வடிவங்கள் என்று சொல்லிப் பெருமைப் படுகிறார்கள். படம் பிடித்துக் கொள்கிறார்கள். சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அது மட்டும் அல்ல. இந்த ஆலயங்களை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். ஆலய வளாகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள். சுற்று வட்டாரங்களில் அழகு அழகாய் மரங்களை நட்டு வைத்து அழகு பார்க்கிறார்கள்.

சுற்றுலாப் பயணிகள் ஆயிரக் கணக்கில் வருகிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கு ஓரளவிற்கு வருமானமும் வருகிறது. இந்த தாயாங் அர்ஜுனா அபிமன்யு ஆலயங்களில் மட்டும் இருபது பேர் வேலை செய்கிறார்கள்.



இந்தோனேசியவில் உள்ள கோயில்களில் ஏறக்குறைய இரண்டு இலட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்புகள் கிடைத்து உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் உள்ளன.

ஆனால் இந்த ஆலயங்களின் பக்கத்து நாட்டில் எல்லாமே தலைகீழாக நடக்கிறது. முடிந்த வரையில் இருக்கிற கோயில்களை எல்லாம் இல்லாமல் ஆக்குவதில் மிகச் சிறப்பாக; மிகப் பொறுப்பாக நடந்து கொள்கிறார்கள். இரவோடு இரவாக வந்து கணக் கச்சிதமாகக் கடாசி விட்டுப் போய் விடுகிறார்கள். என்னே ஜிம்கானா அக்கினிப் பிரவேசங்கள். டேவிட் காப்பர்பீல்ட் தோற்றார் போங்கள்.

இன்று போய் நாளை வா என்பது எல்லாம் இல்லை. இன்று இருக்கும் நாளை இருக்காது என்று தேய்பிறை இரவுகளின் தேய்மானங்களாய்ச் சிலாகித்து விட்டுப் போய் விடுகிறார்கள். மதவாதத்தில் கோணலாகிப் போன சில மக்குச் சாம்பிராணிகள். மன்னிக்கவும். மன வேதனையின் இரத்த வடிக்காலைப் பார்த்து தாயாங் ஆலயங்களும் தலை குனிகின்றன.

சான்றுகள்:

1. Dumarcay, J and Miksic J. Temples of the Dieng Plateau in Miksic, John 1996

2. Witton, Patrick (2003). Indonesia (7th edition). Melbourne: Lonely Planet. pp. 209–211.

3. https://en.wikipedia.org/wiki/Dieng_temples

4. Hindu Council UK: "Great Expectations: Hindu Revival Movements in Java and other parts of Indonesia" by Thomas Reuter

5. The Hinduization of Indonesia Reconsidered – The Far Eastern Quarterly, Vol. 11, No. 1. (Nov., 1951)

6. Ann Kinney (2003), Worshiping Siva and Buddha: The Temple Art of East Java, University of Hawaii Press, ISBN 978-0824827793

7. Jan Gonda, The Indian Religions in Pre-Islamic Indonesia and their survival in Bali, p. 1, at Google Books