இன்றைய சிந்தனை 25.09.2019 - வீரத் தமிழ்ப் பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்றைய சிந்தனை 25.09.2019 - வீரத் தமிழ்ப் பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 செப்டம்பர் 2019

இன்றைய சிந்தனை 25.09.2019 - வீரத் தமிழ்ப் பெண்கள்

இன்றையக் காலக் கட்டத்தில் பெண்களில் முன்னேற்றம் இமயம் பார்க்கின்றது. அந்த வகையில் பெண்ணின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் ஒரு நாடு தான், இப்போதைக்கு இந்த உலகில் உயர்ந்து உச்சம் பார்க்கிறது.

ஆண்களுக்குச் சமமாக... மன்னிக்கவும்... ஆண்களை விட அதிகமாகவே முன்னேறியும் வருகின்றார்கள். அது மட்டும் அல்ல. பெண்களைப் பார்த்து ஆண்களே பொறாமைப் படும் அளவிற்கு ஒரு நவீன மயத்தில் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். எனக்கும் கொஞ்சம் பொறாமை தான். மன்னிக்கவும். ரொம்பவும் இல்லை.


புராண காலத்தில் காரைக்கால் அம்மையார், நளாயினி, சாவித்திரி, சந்திரமதி, தாரா, மண்டோதரி, சீதா போன்ற பெண்ணரசிகள். இவர்களை மறக்க முடியுமா.

சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி... இவர்களை மறக்க முடியுமா.

சங்க காலத்தில் ஒளவையார், காவல் பெண்டு, பாரிமகளிர், குறமகள் இளவெயினி, வெண்ணிக் குயத்தியார், நன்முல்லையார், வெண்பூதியார், காக்கை பாடினியார், நச்செள்ளையார்... இவர்களை மறக்க முடியுமா.

போர்க்களத்து வீர மங்கையர்கள்... இராணி மங்கம்மாள்; ஜான்சிராணி; சிவகங்கை வேலு நாச்சியார்; ராணி சென்னம்மா; தில்லையாடி வள்ளியம்மை; சரோஜினி நாயுடு; கோதை நாயகி அம்மாள்; கேப்டன் லெட்சுமி; டத்தின் ஆதி நாகப்பன்; சிபில் கார்த்திகேசு; இவர்களை மறக்க முடியுமா?

பெண்கள் பல்துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். கொடி கட்டிப் பறக்கின்றார்கள். பெருமையாக உள்ளது. பெண்களால் நாட்டிற்கும் பெருமை; வீட்டிற்கும் பெருமை.

நாட்டை ஆட்சி செய்வதற்கு ஓர் அரசர் வேண்டும். அதைப் போல ஒரு வீட்டை ஆட்சி செய்வதற்கு ஒரு பெண் வேண்டும். இதை எவராலும் மறுக்க முடியாது.

பெண்கள் இல்லாமல் இந்தக் காலத்து ஆண்களுக்கு ரொம்பவும் சிரமம்... ரொம்பவும் சிக்கல். இதையும் ஆண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆக... பெண் உரிமையைக் காப்போம். பெண்ணியத்தைக் காப்போம். பெண் இனத்தைப் போற்றுவோம்.

ஓர் ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை மறக்காமல் இருந்தால் சரி. அதே சமயத்தில் பெண்களை ரொம்பவும் புகழ்ந்து விட்டதாக ஆண்கள் என்னிடம் சண்டைக்கு வராமல் இருந்தாலும் சரி. இன்னும் ஒரு விசயம்.

பெண்களைப் புகழ்ந்தால் தான் ஆண்கள் காரியத்தைச் சாதிக்க முடியும். ஆண்களே அதை நினைவில் கொள்ளுங்கள். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. சரிங்களா.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.09.2019