இராஜேந்திர சோழன் படையெடுப்பு - கடாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராஜேந்திர சோழன் படையெடுப்பு - கடாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 செப்டம்பர் 2019

இராஜேந்திர சோழன் படையெடுப்பு - கடாரம்

(இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுப்பு - வரலாற்று ஆய்வு நூல் - பக்: 9 - 14)

10-ஆம் நூற்றாண்டுகளில்  உலகத்திலேயே மாபெரும் கடல் படையைக் கொண்ட வல்லரசு நாடாகச் சோழப் பேரரசு விளங்கியது. உண்மை. பல நாடுகளைத் தங்களின் வலிமை மிக்க கடல் படையினால் இறுக்கிப் பிடித்து தன்னகப் படுத்தியது. உண்மை. அப்போதைக்கு சோழர்களுக்கு இணையாக எவரும் இல்லை என்று வரலாறு பேசியது. அதுவும் உண்மை.

ஆனால் தென்கிழக்காசிய நாடுகள் மீது அந்தப் படையெடுப்பு நிகழாமல் இருந்து இருக்குமானால் வரலாறு வேறு மாதிரியாகப் பயணித்து இருக்கலாம். கடாரத்தில் ஒருக்கால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம்.

மீண்டும் சொல்கிறேன். இந்தியர்களின் ஆளுமையைச் சற்றே நீண்ட காலத்திற்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கலாம். அல்லது அந்த ஆளுமையில் இந்தியர்களுக்குச் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம்.

மலேசியாவில் பேராக் மாநிலத்தில் புருவாஸ் கங்கா நகரம் என்பது ஒரு பெரிய வரலாற்றைக் கொண்டது. இந்த அரசு இன்னும் சில பல காலத்திற்கு நீடித்து இருக்கலாம்.

மற்றோர் அரசு ஜொகூர் மாநிலத்தில் இருக்கும் கோத்தா கெலாங்கி எனும் மாயிருண்டகம் பேரரசு. இந்த அரசும் இன்னும் நீண்ட காலத்திற்கு நிலைத்து நீடித்து இருக்கலாம்.

அந்தப் பக்கம் இந்தோனேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு அந்த அளவிற்கு மிக மோசமாக உருக்குலைந்து போய் இருக்காது. பல ஆண்டுகள் எழுந்து நிற்க முடியாத அளவிற்கு பலம் குன்றிப் போய் இருக்காது. அந்த அரசும் மேலும் சற்று நீண்ட காலம் பேர் போட்டு இருக்கலாம்.

தென்கிழக்காசியாவில் இந்தியர்களின் ஆளுமை சில நூற்றாண்டுகளுக்கு மேலும் நீடித்து இருக்கலாம் எனும் ஒரு வியூகத்திலும் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இத்தனை அரசுகள் சிதைந்து போனதற்கு இராஜேந்திர சோழன் என்பவர் மட்டும் காரணம் என்று சொல்ல இயலாது. அவர் மீது ஒட்டு மொத்தப் பழியைச் சுமத்த முடியாது. அது மிகவும் தப்பு.

அந்தப் படையெடுப்பு நடந்ததற்கு மூல காரணமாக இருந்ததே ஸ்ரீ விஜய பேரரசு தான்.

சோழப் பேரரசிற்கும் சீனப் பேரரசிற்கும் நீண்ட காலமாக நல்ல மாதிரியாக  நட்புறவு இருந்து வந்தது. அதற்குத் தடைக் கல்லாக அமைந்தது ஸ்ரீ விஜய பேரரசு. அதனால் தான் சோழப் பேரரசு சினம் அடைந்தது. சில பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்து ஸ்ரீ விஜய பேரரசின் மீது தாக்குதல் நடத்தியது. அதன் தொடர் விளைவாகப் பற்பல பேரரசுகளும் பற்பல சிற்றரசுகளும் சிதைந்து போயின.

அந்த அரசுகள் அழிந்து போயின என்று சொல்ல முடியாது. சிதைந்து போயின என்றுதான் சொல்ல முடியும். அந்த அரசுகள் அழிக்கப்படவில்லை. அடித்து நொறுக்கப் பட்டதால் சிதைந்து போயின. மீண்டும் எழுந்து வருவதற்கு நீண்ட காலம் பிடித்தது.

சோழப் படைகள் தாயகத்திற்குத் திரும்பிச் சென்ற பின்னர் பாதிப்புற்ற அந்த அரசுகள் மீட்சி பெற்றன. சில அரசுகள் சில ஆண்டுகளிலேயே பழைய வழக்க நிலைக்குத் திரும்பின. சில அரசுகளுக்கு நீண்ட காலம் பிடித்தது. ஒரு சில அரசுகள் மறுபடியும் எழுந்து நிற்கவே முடியாமல் அப்படியே கரைந்து போய் விட்டன.

தென்கிழக்கு ஆசியாவிற்குப் படை எடுத்து வந்த சோழர்கள் எந்த நாட்டையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை. அதாவது ஆட்சி செய்யவில்லை. வந்தார்கள்; வென்றார்கள்; சென்றார்கள்.

நாடுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் சோழர்கள் வரவில்லை. தங்களின் வாணிகத்திற்கு இடையூறாக இருந்தவர்களுக்குப் புத்தி புகட்டுவதே அவர்களின் தலையாய நோக்கமாக இருந்து இருக்கிறது. சோழர்களின் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் அந்த உண்மை தெரிய வரும்.

இராஜேந்திர சோழனின் படையெடுப்பை நாம் பெருமையாக நினைத்துக் கொள்ளலாம். தப்பு இல்லை. ஆனால் அதே சமயத்தில் மலாயாவில் சில பல இந்தியர்களின் அரசுகள் அழிந்து போனதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அழிக்கப்பட்ட இந்தியர்கள் அரசுகள் பெரிதாகத் தெரிகிறனவா அல்லது இராஜேந்திர சோழனின் படையெடுப்பு மட்டும் நமக்குப் பெருமையாகத் தெரிகின்றதா. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியப் பேரரசுகளில் மிகவும் புகழ் பெற்றது சைலேந்திரா பேரரசு. ஜாவா தீவில் கோலோச்சிய அந்தப் பேரரசை தரநீந்தரன் எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார்.

அவருடைய காலத்தில் ஒரு பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இது கி.பி. 775-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி.

அந்தக் கட்டத்தில் சுமத்திராவில் ஸ்ரீ விஜய பேரரசு. ஜாவாவில் சைலேந்திரா பேரரசு. இந்த இரண்டு பேரரசுகளும் ஒன்றாக இணைந்தன. ஒரே பேரரசாக மாறி ஒன்றாக ஆட்சி செய்தன. ஸ்ரீ விஜய பேரரசு எனும் பெயரில் அந்த ஆட்சி நடைபெற்றது.

அப்படி கூட்டாக இணைந்த ஸ்ரீ விஜய பேரரசின் கீழ் தான் கடாரம் எனும் பூஜாங் சமவெளியின் ஆட்சியும் நடைபெற்றது.

கடாரத்தைக் ஆகக் கடைசியாக ஆட்சி செய்தவர் ராஜா லிங்கயோகன். இவருக்கு ராஜா லிங்கி ஷா ஜோகான் எனும் மற்றொரு பெயரும் உண்டு. செஜாரா மெலாயு எனும் மலாய் வரலாற்று இலக்கியத்தில் ராஜா லிங்கி ஷா ஜோகான் எனும் பெயரே முன்னிலைப் படுத்தப்படுகிறது.

ஸ்ரீ விஜய பேரரசை ஆட்சி செய்த சங்கராமா விஜயதுங்கவர்மன் என்பவரின் பிரதிநிதி தான் ராஜா லிங்கயோகன். இவர் இந்தோனேசியாவில் இருந்து கடாரத்திற்கு வந்தவர்.

ராஜா லிங்கயோகன் கடாரத்தை மட்டும் ஆட்சி செய்யவில்லை. சம காலத்தில் கங்கா நகரத்தையும் ஆட்சி செய்து இருக்கிறார். கங்கா நகரத்தின் தலைநகரம் ஒரு குன்றின் உச்சியில் இருந்து இருக்கிறது. அந்த நகரின் தற்காப்புக்காக ஒரு பெரிய கோட்டை கம்பீரமாய் நின்றது.

அந்தக் கோட்டை ஒரு குட்டி மலை போல காட்சி அளித்தது. அந்தக் கோட்டை பேராக் ஆற்று ஓரத்தில் இருந்தது. (அந்த இடம் இப்போது டிண்டிங்ஸ் என்று அழைக்கப் படுகிறது)

ராஜா லிங்கயோகன் ஒரு ஸ்ரீ விஜய அரசர். இவர்தான் கடார மண்ணில் கடைசி கடைசியாகக் கால் பதித்து ஆட்சி செய்தவர். சுங்கை மெர்போக் ஆற்றில் கப்பல் ஓட்டியவர். மலாக்கா நீரிணையில் நீந்தி விளையாடியவர்.

சுங்கை மெர்போக் ஆறு என்பதைச் சின்ன ஆறாக நினைத்துவிட வேண்டாம். மலாக்கா நீரிணையில் மெர்போக் ஆறு இணையும் இடத்தில் அந்த ஆற்றின் அகலம் நான்கு கிலோ மீட்டர்கள். அவ்வளவு பெரிய ஆறு. தொடுவானத்தில் கடலும் ஆறும் ஒன்றாகக் கலந்து நிற்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி.

மெர்போக் ஆற்றில் மூன்று முறை படகு பயணம் செய்த அனுபவம் உள்ளது. பயணம் செய்யும் போது கடாரத்து அரசர்களும் இராஜேந்திர சோழனும் நினைவில் வருவார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் பயணம் செய்த அதே ஆற்றில் நாமும் பயணம் செய்கிறோம் எனும் பெருமையும் ஏற்படும்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுப்பை நடத்தியது இராஜாராஜ சோழன் அல்ல. அவருடைய மகன் இராஜேந்திர சோழன். அந்தப் படையெடுப்பிற்குக் கட்டளை போட்டது இராஜாராஜ சோழன். படையெடுப்பை நடத்திக் காட்டியது அவருடைய மகன் இராஜேந்திர சோழன்.

தென்கிழக்கு ஆசியாவில் சோழப் பரம்பரைக்குப் போட்டியாக இருந்த அத்தனை அரசுகளையும்; அந்த அரசுகளுக்குக் கீழ் இருந்த சிற்றரசுகளையும் அடித்துத் துவைத்துக் காயப் போட்டு விட்டுப் போய் விட்டார்கள். அந்தப் படையெடுப்பு ஓராண்டு காலமாக நடந்து இருக்கிறது. காயங்கள் இன்னும் ஆறவில்லை.

அந்த அவலத்தின் கோலங்களில் பல பேரரசுகள் சின்னா பின்னமாகிப் போயின. பல சிற்றரசுகள் நார் நாராய்க் கிழிந்து சின்னா பின்னமாகிப் போயின. இந்தியர்களின் அரசுகள் மட்டும் மாட்டிக் கொள்ளவில்லை. ஜாவானியப் பூர்வீக அரசுகளும்; போர்னியோ பூர்வீக அரசுகளும் மாட்டிக் கொண்டன.

தாய்லாந்திலும் பர்மாவிலும் சில அரசுகள் மாட்டிக் கொண்டன. அதைப் பற்றி பின்னர் விரிவாகச் சொல்கிறேன்.

சைலேந்திரா பரம்பரையினரின் வழி வந்தது ஸ்ரீவிஜய பேரரசு. அந்த அரசு இழந்து போன தன் முகவரியை இன்று வரையிலும் தேடிக் கொண்டு இருக்கிறது. மீண்டும் சொல்ல வேண்டி வருகிறது.

ஆசிய வரலாற்றில் அந்தப் படையெடுப்பு ஒரு பெரிய கரும்புள்ளி என்றே சொல்ல வேண்டும். ஏன் என்றால் அந்தப் படையெடுப்பினால் பல இலட்சம் பேர் பலியானார்கள். கடார மண்ணில் மட்டும் பல்லாயிரம் பேர் இறந்து போய் இருக்கிறார்கள்.

சண்டை போட்டு மறைந்து போன வீரர்களின் பட்டியல் ஒரு புறம் இருக்கட்டும். அமைதியாய் ஆனந்தமாய் அப்பாவித் தனமாய் வாழ்ந்த ஆயிரம் ஆயிரம் பொதுமக்கள் அநியாயமாக இறந்து போய் இருக்கிறார்களே. அந்தப் பட்டியலை எதில் கொண்டு போய் சேர்ப்பதாம். சொல்லுங்கள்.

சோழ வரலாற்றை முழுமையாகப் படித்துப் பாருங்கள். ஒரு புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு ராஜா ராஜ சோழன் வரலாற்றையே படித்து விட்டதாக நினைக்கக் கூடாது.

பூஜாங் பள்ளத்தாக்கில் ஸ்ரீ விஜய பேரரசின் அரசர் ராஜா லிங்கயோகன் நடை பயின்ற இடங்கள் எல்லாம் இப்போது காடு மேடுகளாய்க் காட்சி அளிக்கின்றன. ஓர் ஆயிரம் ஆண்டுகளாகப் புழுதிப் படலங்கள் நிறைந்து உயர்ந்து மலை போல் நிற்கின்றன.

கடாரத்தின் வரலாற்றில் உச்சம் பார்த்த மலைகளில் வானுயர்ந்து நிற்கும் வானகத்து நெடு மரங்கள் தெரிகின்றன. நெடும் காலமாய்க் கதிரொளியைக் காணாமல் கலங்கி நிற்கும் சின்னச் சின்னச் செடி கொடிகள் தெரிகின்றன. அந்தப் பச்சைத் தாவரங்களுக்கு அடியில் ஓராயிரம் கடாரத்து மர்மங்கள் விசும்புவதும் கேட்கின்றன.

அந்த மர்மக் குவியல்களைப் பற்றி முறையான ஆய்வுகள் செய்யப் படுவதற்கு தடங்கலாகப் பல வரலாற்றுச் சித்தர்களும் இங்கேயும் இருக்கிறார்கள். எங்கேயும் இருக்கிறார்கள்.

இதற்கு இடையில் கடாரத்து வரலாற்றை மீட்டு எடுப்போம் என்று கங்கணம் கட்டும் இந்தியப் பெருமக்களும் இருக்கவே செய்கிறார்கள்.

கோத்தா கெலாங்கி வரலாற்றை மீட்டு எடுப்பதற்கு அரிய முயற்சிகள் மேற்கொண்டு வரும் ஜொகூர் வரலாற்று ஆய்வாளர் கணேசன் அவர்களை மலேசிய இந்தியர்கள் நினைத்துப் போற்ற வேண்டும். சரி.

கடாரத்துக் காட்டு விரிப்புகளில் கறை படிந்த ஒரு வரலாறு நன்றாகவே ஒப்பாரி வைத்து அழுது கொண்டு இருக்கிறது. அந்த அழுகுரலை நிறுத்துவதற்கு போதுமான முயற்சிகள் செய்யப் படவில்லை.

அந்த அழுகுரல் கேட்கா விட்டாலும் பரவாயில்லை. இருக்கிற கடாரத்து உண்மைகளைத் திரித்துக் கூறாமல், அழித்துப் போடாமல் இருந்தால் அதுவே மனசிற்கு ரொம்பவும் நிம்மதி.

ஒரு முறை அல்ல. பல முறை ஆய்வுப் பணிகளுக்கு செமிலிங் காட்டிற்குள் போய் இருக்கிறேன். லெம்பா பூஜாங் தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு அருகாமையில் ஒரு பெரிய நீர்வீழ்ச்சி. காய்ந்து போய் கற்பாறையாய் ஓங்கி நின்றது.

நீர்வீழ்ச்சியின் உச்சியில் நான்கைந்து கரும் பாறைகள். பக்கத்தில் பாழடைந்து போன ஒரு பலகை வீடு.

அதைப் பேய்வீடு என்று சொல்ல மனசு வரவில்லை. அந்த வீட்டைச் சுற்றிலும் மீனாச் செடிப் புதர்கள். அசைந்தாடும் லாலான் புற்கள். காற்று வாடை இல்லாமலேயே ஆடிப் பாடும் செடி கொடிகள்

கற்பாறைகளில் கண் அயர்ந்து கற்பனை செய்து பார்த்தால் கண்கள் கலங்கும். கண்களைத் திறந்து பார்த்தால் காட்டு மரங்களின் பட்டைகளில் நீர்க் கசிவுகள் தெரியும். காட்டுச் செடிகளின் கவின்தகு மலர்களில் இரத்தச் சுவடுகள் மறைந்து இருப்பதும் தெரியும்.

கடாரம் கொண்ட மாவீரர்களினால் எத்தனை எத்தனை ஆயிரம் உயிர்கள் இங்கே பலியாகி இருக்கலாம். கடார மண் சொல்லும் சோகக் கதைகளைக் கேட்க நமக்கும் தெம்பு இல்லை.

அந்த உயிர்களின் ஆவிகள் நிச்சயம் இன்னும் அங்கு நடமாடிக் கொண்டு தான் இருக்கும். சமயங்களில் தனிமையில் அமர்ந்து அந்தக் கானகத்துக் காற்றைச் சுவாசிக்கும் போது ஒருவிதமான அச்சம் ஏற்படுகிறது. சத்தியமாகச் சொல்கிறேன்.

ஓர் உண்மை நிகழ்ச்சி. ஒரு நாள் மதிய நேரம். மணி பன்னிரண்டு இருக்கும். நீர்வீழ்ச்சியின் உச்சத்தில் இருந்த பாறையில் அமர்ந்து இருந்தேன். அப்போது யாரோ எனக்குப் பின்னால் வந்து மூச்சு விடுவது போல இருந்தது.

ஒரு மாதிரியான வெப்பக் காற்று. திரும்பிப் பார்த்தால் யாரும் இல்லை. ஒரு தடவை அல்ல. இரண்டு மூன்று தடவைகள். பயம் வந்துவிட்டது.

அது ஒரு மாதிரியான மர்மச் சாயல்களின் மாய உணர்வுகள். அப்புறம் என்ன. திரும்பிப் பார்க்காமல் கீழே வந்து சேர்ந்தேன். லெம்பா பூஜாங் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் இருந்த அதிகாரிகளிடம் நடந்ததைச் சொன்னேன்.

கெட்ட ஆவிகள் உலவுகின்ற நேரத்தில் நீங்கள் போய் இருக்கிறீர்கள் என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்கள். அந்த நிகழ்ச்சி இன்று வரை என் நெஞ்சத்தை உரசிப் பார்த்து உதறலைக் கொடுக்கும்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுப்பு வரலாற்று நூல் இரு மொழிகளில் வெளியிடப் படுகிறது. விரைவில்....