பரதத்தில் அசத்தும் பல்கேரிய பெண்மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரதத்தில் அசத்தும் பல்கேரிய பெண்மணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 ஏப்ரல் 2019

பரதத்தில் அசத்தும் பல்கேரிய பெண்மணி

கணினி வேலை. கை நிறைய சம்பளம். காலப் போக்கில் கணினி வாழ்க்கையில் சலிப்பு. மன அமைதி இல்லா சலசலப்பு. மாற்றுவழி தேடினார். யோகா பயிற்சி அழைத்தது. இந்தியாவிற்கு வந்தார். 


கடல் தாண்டி வந்தவரை இந்தியப் பாரம்பரிய நடனங்கள் அணைத்துக் கொண்டன. அப்படியே அவரின் வாழ்க்கையும் மாறியும் போனது.

இப்போது பல்கேரியா நாட்டில் இரு பரதநாட்டியப் பள்ளிகளை நடத்தும் அளவிற்கு உலகப் புகழ்பெற்று விளங்குகிறார். அவர் தான் காத்யா தோஷிவா (Katya Tosheva).

ஓர் இந்தியப் பெண்ணாகவே மாறிப் போன அந்த  அழகிய ஐரோப்பியப் பெண்மணியைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஐரோப்பா கண்டத்தில் மிகப் பழைமையான வரலாறு படைத்த நாடு பல்கேரியா. கலை கலாசார நடனங்களுக்குப் புகழ்பெற்றது. பல்கேரியாவின் வடக்கே ரோமானியா. மேற்கே செர்பியா. தெற்கே கிரீஸ், துருக்கி. கிழக்கே கருங்கடல். பரப்பளவு 110,993 சதுர கி.மீ.  மலேசியாவின் பரப்பளவில் மூன்றில் ஒரு பாகம். அதன் தலைநகரம் சோபியா.



தலைநகர் சோபியாவில் பதினான்கு ஆண்டுகள் பொறியாளராக பணியாற்றியவர் காத்யா தோஷிவா. காலப்போக்கில் அந்த வேலை அவருக்குச் சலிப்பை ஏற்படுத்தியது.

காத்யாவிற்கு மன மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் யோகா கலையை அவருடைய கணவர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சிதான் காத்யாவின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

யோகா பயில வந்த காத்யா, இப்போது பரதநாட்டியம், ஒடிசி, கதக் போன்ற இந்தியப் பாரம்பரிய நடனங்களை கற்று வருகிறார். அது மட்டும் அல்ல. பல்கேரியாவில் நடனப் பள்ளிகளையும் தொடங்கி இருக்கிறார். இந்தியக் கலைகளைப் பல்கேரியா நாட்டு மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.

அண்மையில் அவரைப் பி.பி.சி. வானொலி நிலையத்தின் ஐஸ்வர்யா ரவிசங்கர் பேட்டி கண்டார். அந்தப் பேட்டியின் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 



2005-ஆம் ஆண்டில் பல்கேரியாவில் ஒரு யோகா ஆசிரியரிடம் பயிற்சி பெறத் தொடங்கினார். யோகா கலையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள 2013-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவின் கலை, கலாசாரம், உணவு முறை, பழக்க வழக்கங்கள், பாரம்பரிய நடனங்கள் போன்றவை அவருக்கு மிகவும் பிடித்துப் போயின.

பரதக் கலை தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. பரதக் கலையை பற்றி கேள்விப் பட்டதும் அதைக் கற்றுக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் உண்மையில் பரதத்தின் நடன அசைவுகள் அவர் நினைத்ததைவிட மிகவும் கடினமாக இருந்தன.

பரதத்தைக் கற்க ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். முழுக் கவனத்தையும் நடனத்தின் மீது செலுத்த வேண்டும். கடினமாகப் பயிற்சிகள் செய்ய வேண்டும். பரதத்தைக் கற்கத் தொடங்கிய பின்னர்தான் அது எவ்வளவு கஷ்டமானது என்பதை அவர் உணர்ந்து இருக்கிறார்.



பரதக் கலையைக் கற்பதற்காகத் தன் வேலையை விட்டார். முதலில் பரதத்தை ஒரு பொழுபோக்காகத் தான் கற்கத் தொடங்கினார். இந்தியாவில் மூன்று மாதங்கள் பயிற்சி பெற்றார்.

பயிற்சிக்குப் பின்னர் பல்கேரியா திரும்பியதும் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டிய ஒரு கட்டாய நிலை. இருந்தாலும் அவரால் வேலையில் பழையபடி கவனம் செலுத்த இயலவில்லை.

பரதத்தின் அசைவுகள்; இசையோடு ஒன்றித்து நடனம் ஆடுவது; அவற்றில்தான் அவருடைய எண்ணங்கள் எல்லாம் சுற்றிச் சுற்றி வலம் வந்தன. அதனால் தன்னுடைய கணினிப் பணியை விட்டு விலகினார்..

வேலையை விட்டு விலகினால் செலவுக்கு என்ன செய்வது என்று தடுமாறிக்  கொண்டு இருந்த போது அவருடைய குடும்பத்தினர் ஆதரவாக இருந்தனர். அவருடைய கணவரும் பக்கபலமாக இருந்தார்.



'உன் மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம். நடனம் ஆடும்போது உன் முகத்தில் தெரியும் அளவில்லா மகிழ்ச்சியை நான் எப்போதும் பார்க்க வேண்டும். அதுவே எனக்கு மகிழ்ச்சி. கவலைப் படாதே காத்யா...  நாம் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம். பரதத்தைத் தொடர்ந்து கற்றுக் கொள். நான் உனக்குத் துணையாக இருக்கிறேன் என்று மனைவியைத் தட்டிக் கொடுத்தார் காத்யாவின் கணவர் ரோசன் கென்கோவ். அப்படி உணர்ச்சி ததும்ப கூறுகிறார் காத்யா தோஷிவா.

பல்கேரியாவின் பாரம்பரிய நடனத்தையும் இவர் கற்று இருக்கிறார். இருந்தாலும் பரதநாட்டியம் கற்ற பிறகு, இந்தியாவின் மற்ற மற்ற பாரம்பரிய நடனங்களையும் கற்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது.

வாரணாசியைச் சேர்ந்த ரவிசங்கர் மிஷ்ரா என்பவரிடம் கதக் நடனத்தைக் கற்றுக் கொண்டார். புனேவைச் சேர்ந்த நிவேதிதா பாத்வே என்பவரிடம் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்டார். ஒடிசி நடனத்தை பெங்களூருவில் வசிக்கும் ஷர்மிளா முகர்ஜி என்பவரிடம் கற்று வருகிறார்.



தன் கணவர்தான் தனக்கு மிகப் பெரிய தூண்டுதலைக் கொடுத்ததாகச் சொல்கிறார். தென் இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களையும் சுற்றிப் பார்த்து விட்டார். இவருடைய கணவர் இந்தியாவிற்கு வந்து தபேலா வாசிக்கவும் கற்றுக் கொண்டார். மனைவி ஆட கணவர் வாத்தியம் வாசிக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாகத் தலைநகர் சோபியாவில் இருக்கும் இந்திரா காந்தி உயர்நிலைப் பள்ளியில் பரதநாட்டியம் சொல்லித் தருகிறார். அதே சமயத்தில் காயா எனும் நடனப் பள்ளியையும் நடத்துகிறார். செர்பியா நாட்டு அரசாங்கமும் இவரை அழைத்து நடன வகுப்புகள் நடத்தச் சொல்லிக் கேட்டுக் கொண்டு உள்ளது. பல்கேரியா, செர்பியா நாடுகளில் காத்யாவின் பரதனாட்டியப் புகழ் பரவி வருகிறது.

பரதனாட்டியம் மட்டும் அல்லாமல் மேற்கத்திய நடனங்களையும் தற்போது பயின்று வருகிறார். தனது படைப்பாற்றல் மூலமாகப் பல வகை நடனங்களை ஒருங்கிணைத்து மேடைகளில் அரங்கேற்றி வருகிறார்.

காத்யாவிற்கு யோகாவை அறிமுகம் செய்து வைத்த இவரின் கணவருக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவரே தபேலாவை அறிமுகம் செய்து வைத்தார். 



2018-ஆம் ஆண்டில் பல்கேரியாவிற்கு இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தந்து இருந்தார். அப்போது அவர்  முன்னிலையில் கணவர் ரோசன் தபேலா வாசிக்க, தான் நடனம் ஆடியதாக காத்யா பெருமையுடன் கூறுகிறார்.

ஐரோப்பிய நாடுகளான செர்பியா, கிரீஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் இந்திய பாரம்பரிய நடனங்களை அரங்கேற்றி வருகிறார். பல்கேரிய மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நாட்டுப்புற நடனங்களைக் குழுவாகச் சென்று அரங்கேற்றம் செய்து வருகிறார்.

இவருடைய நடனப் பள்ளியில் பல்கேரியப் பெண்கள் மட்டும் அல்ல; பல்கேரிய இளைஞர்களும் ஆர்வத்துடன் பரதநாட்டியம் பயின்று வருகின்றனர்.

இவர் சொல்லும் அடுத்த வார்த்தையைக் கேளுங்கள். இந்த உலகில் இந்தியப் பாரம்பரிய நடனங்கள் அற்புதமானவை. ஆகவே அவற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும். மேலும் இதனை எனது குழுவினருடன் இணைந்து பெரிய மேடைகளில் அரங்கேற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. எனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பல்கேரியாவின் கலை ஆர்வலர்கள் ஆதரவுடன் அந்தக் கனவு நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் என்று நம்புகிறேன் என்கிறார்.



பல்கேரியா நாட்டு மக்கள் மத்தியில் பரதநாட்டியத்திற்கு மிகுந்த வரவேற்பு இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார். பல்கேரியாவில் பல மேடைகளில் இந்திய நடனங்களை ஆடி இருக்கிறார்.

உண்மையில் பல்கேரியா நாட்டு மக்கள் இந்திய நடனங்களை ஆர்வத்துடன் பார்க்க வருகிறார்கள். குறிப்பாக விதம் விதமான நடன அசைவுகள், பாடல் வரிகள், இந்தியக் கலாசார அடையாளங்களான மருதாணி, கால் சலங்கை போன்றவற்றை வியப்புடன் பார்க்கிறார்கள் என்று கூறுகிறார்.

காத்யா தொடங்கியுள்ள நடன பள்ளியைப் பற்றி கேட்டபோது "நடனம் ஆடுவது எனக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது. நான் கற்றுக் கொண்ட இந்த பழம்பெரும் பாரம்பரியம் கொண்ட கலைகளை ஆர்வமுள்ள பிறருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன்.

பல்கேரியாவில் என் வீட்டிற்கு அருகே அமைந்து உள்ள இந்திரா காந்தி எனும் பள்ளியில் மாணவர்களுக்கு நடன பயிற்சி அளித்து வருகிறேன். என் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நடனத்தையும், இந்தியப் பாரம்பரியம்;  இந்தியத் தெய்வங்கள் குறித்தும் தெரிந்து வருகிறார்கள். என்னுடன் சேர்ந்து மந்திரங்கள் சொல்வதிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்கள் என்கிறார்.

கடின உழைப்பும் ஈடுபாடும் இல்லாமல் உங்கள் இலக்கை அடைய முடியாது. ஒருவருக்கு ஒருவர் அன்பைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். நாம் கற்றதைத் தயங்காமல் மற்றவர்களுக்கும் சொல்லித் தர வேண்டும்; ஒற்றுமையே வாழ்வில் பலம் சேர்க்கும் என்கிறார் காத்யா.

பழம்பெரும் பாரம்பரியமும் கலாச்சாரமும் வரலாற்று சிறப்பும் கொண்ட இந்தியப் புனிதப் பூமியில் பாரம்பரிய கலைகளுக்கு வரவேற்பு, அண்மைய காலங்களில் குறைந்து கொண்டே வருகிறது.  நாம் அறிவோம்.

இருப்பினும் இதற்கு மத்தியில் இந்தியப் பாரம்பரிய நடனங்களால் ஈர்க்கப் பட்டவர் காத்யா. அந்த நடனங்களை முறையாகப் பயின்று உலக மேடைகளில் அரங்கேற்றி வருகிறார். காத்யா எனும் அந்தப் பல்கேரியப் பெண்மணியைக் கையெடுத்துக் கும்பிட்டு வாழ்த்துவோம்.

சான்றுகள்
1.https://www.deccanchronicle.com/lifestyle/books-and-art/240119/a-yogic-start-to-classical-dance.html

2.https://www.youtube.com/watch?v=0YZwwEZjFbg

3.https://www.thehindu.com/news/cities/Kochi/finding-her-rhythm-beyond-borders-through-dance/article26073298.ece