எழில் கொஞ்சும் கேமரன் மலை - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழில் கொஞ்சும் கேமரன் மலை - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 நவம்பர் 2019

எழில் கொஞ்சும் கேமரன் மலை - 2

தமிழ் மலர் - 22.11.2019

சர் வில்லியம் கார்டன் கேமரன் (Sir William Cameron). இவர் பிறந்த ஆண்டு: 1883. மறைந்த தேதி: 20 நவம்பர் 1886. இவர் மறைந்த இடம் சிங்கப்பூர். இருப்பினும் இவர் அதிகமாகத் தொங்காட் அலி எனும் வலி நிவாரணியைச் சாப்பிட்டதால் இறந்து விட்டதாக நேற்றைய கட்டுரையில் சொல்லி இருந்தேன். 



இவருடைய வேறொரு வரலாற்றையும் படித்துப் பார்த்தேன். இவருக்கு மறதி நோய் ஏற்பட்டது உண்மை. ஆனால் அவர் இங்கிலாந்திற்குப் போய் அங்கே இறந்து விட்டதாக அதில் சொல்லப்பட்டு இருக்கிறது. சற்றே குழப்பம். எனினும் இவர் கேமரன் மலையை 1885-ஆம் ஆண்டில் கண்டுபிடித்து இருக்கிறார். அதுதான் முக்கியமான காலக் குறிப்பு.

வில்லியம் கேமரன் கண்டுபிடிப்பிற்கும் அவரின் இறப்பிற்கும் இருபத்தெட்டு ஆண்டுகள் இடைவெளி இருப்பதையும் கவனியுங்கள். அந்த வகையில் இவர் மலாயாவில் இறக்கவில்லை. இங்கிலாந்தில் இறந்து இருக்கிறார் என்பது உறுதியாகிறது. பிரச்சினை இல்லை.

கேமரன் மலை எனும் ஒரு பச்சை அதிசயத்தைக் கண்டுபிடித்து நமக்கு எல்லாம் கொடுத்து விட்டுச் சென்று இருக்கிறாரே. அது வரையில் அவருக்கு நன்றி சொல்வோம்.



உலக மக்கள் இவரை மறந்தாலும் மலேசிய மக்கள் மட்டும் இவரை என்றைக்கும் மறக்க மாட்டார்கள். ஏன் தெரியுங்களா.

கேமரன் மலை எனும் ஓர் அழகு ஓவியத்தை அவரின் அன்புச் சீதனமாய்க் கொடுத்துச் சென்ற ஓர் அழகிய மைந்தர்.

1886-ஆம் ஆண்டில் பேராக் மாநிலத்தின் சுல்தானாகப் பதவி வகித்த சுல்தான் யூசோப் ஷரிபுடின் அவர்களே (Sultan Yusuf Sharifuddin Mudzaffar Shah) தன் வாழ்க்கைக் குறிப்புகளில் வில்லியம் கேமரனைப் பற்றி பதிவு செய்து இருக்கிறார்.

வில்லியம் கேமரன் ஓர் அற்புதமான கலா ரசிகர். ஓர் அழகான சகல கலா கள்வர். வில்லியம் கேமரனின் கலா ரசிப்புத் தன்மைக்கு பேராக் சுல்தானின் அந்த வார்த்தைகள் போதும். 


சர் வில்லியம் கார்டன் கேமரன்

ஆக அப்படிப்பட்ட ஒரு கலா ரசிகரை எப்படி நம்மால் மறக்க முடியும். ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று சொல்வார்கள். ஆனாலும் அறுபத்து ஐந்தாவது கலை என்கிற ஒரு கலை இருக்கிறது. அதுதான் கேமரன் மலை என்கிற அழகுக் கலை.

கேமரன் மலையில் வில்லியம் கேமரன் இப்படி சிருங்காரம் பாடி இருக்கலாம்.

என்ன விலை அழகே...
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்...
விலை உயிர் என்றாலும் தருவேன்...
இந்த அழகைக் கண்டு வியந்து போகிறேன்...
ஒரு மொழி இல்லாமல் மௌனமாகிறேன்...

என்று கேமரன்மலைச் சிகரத்தில் காதல் கீதம் பாடி இருக்கலாம்.

என்ன இருந்தாலும் கேமரன்மலை பச்சை பசும் மகிமைகளை மனதாரப் போற்றிப் புகழ்ந்தவர். கேமரன்மலையின் கவின்மிகு கலா ஓவியங்களை அணு அணுவாய் ரசித்தவர். அதன் அழகு பிம்பங்களை நுனி முதல் அடி வரை நுகர்ந்து பார்த்தவர். நல்ல ஒரு கலா ரசிகர்.


1930-ஆம் ஆண்டுகளில் போ தேயிலை தோட்டம்

என்னைக் கேட்டால் கேமரன் மலை என்பது ஒரு மலைக்காடு அல்ல. அது பல்லாயிரம் பச்சை ஜீவன்கள் உயிர் வாழும் அழகிய மழைக்காடு. குறிப்பாக மலேசிய இந்தியர்களுக்குக் கிடைத்த மதிப்பில்லா சீதனக்காடு. ஒட்டு மொத்த மலேசியர்களுக்குக் கிடைத்த ஒரு முத்து. ரொம்பவும் புகழ்வதாக நினைக்க வேண்டாம்.  புகழாமல் இருக்கவும் முடியவில்லையே.

மலாயாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் பல நல்ல காரியங்களைச் செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அதில் உலகமே திரும்பிப் பார்க்கிற மாதிரி கேமரன் மலையின் கலா அழகிற்கு மெருகேற்றி விட்டுப் போய் இருக்கிறார்கள். நன்றி சொல்வோம்.

ஆங்கிலேயர்கள் குளிர்ப் பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள். இங்கிலாந்து ஒரு குளிர்நாடு. கோடை காலங்களில் ஓய்வு எடுத்துப் பழக்கப் பட்டவர்கள். மலாயா ஒரு வெப்ப மண்டல நாடு. ஆக அவர்கள் ஓய்வு எடுக்க குளிரான மலைப் பகுதிகளில் தேவைப் பட்டன.

அந்த வகையில் 1788-இல் பினாங்கு மலையில் ஒர் இடம் கிடைத்தது. சர் பிரான்சிஸ் லைட் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே. 



அவர்தான் பினாங்கு மலையில் ஒரு குழுவுடன் முதன்முதலாக ஏறியவர். உச்சியில் ஒரு கொடிக் கம்பத்தை நட்டுவிட்டு வந்தவர். அப்புறம் வந்த ஆங்கிலேயர்கள் உச்சி மலைக்கு ஒரு கம்பிச் சடக்கைப் போட்டார்கள். அப்படியே உச்சியிக்குப் போய் குடிசைகளைப் போட்டுக் குளிர் காய்ந்தார்கள்.

அதன் பின்னர் தைப்பிங் மாக்ஸ்வல் ஓய்வுத்தளம் 1884-இல் உருவாக்கப் பட்டது.  அடுத்து பிரேசர் மலை. மலாயா ரப்பரின் தந்தை என்று பெருமையாக அழைக்கப்படும் எச். என். ரிட்லி அவர்களால் பிரேசர் மலையில் 1897-இல் ஓய்வுத் தளம் அமைக்கப் பட்டது.

இங்கே ஒரு சின்னச் செருகல். கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும். பிரேசர் மலையைக் கண்டுபிடித்தது என்னவோ லூயி ஜேம்ஸ் பிரேசர் (Louis James Fraser) என்பவர்தான். அவருடைய பெயர்தான் வைக்கப்பட்டும் இருக்கிறது.

இருந்தாலும் எச்.என். ரிட்லிதான் அந்த மலைக்குப் பெருமை சேர்த்தவர். அதை நாம் மறந்துவிடக் கூடாது.

எச்.என். ரிட்லி மட்டும் இந்த நாட்டிற்கு வராமல் இருந்து இருந்தால் தமிழர்களும் இந்த நாட்டிற்கு பெரும் அள்வில் வந்து இருக்க முடியாது. தென்னிந்தியாவில் இருந்து தமிழர்களை மலாயாவுக்கு கொண்டு வர பிள்ளையார் சுழி போட்டவரும் இதே இந்த எச்.என். ரிட்லி தான்.  



மலேசியத் தமிழர்கள் போற்ற வேண்டிய மனிதர். எச்.என்.ரிட்லி ரப்பரின் மூலமாக மலேசியாவை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர். சரி.

அடுத்து பிரேசர் மலை. இந்த மலையில் ஒரு பெரிய வரலாறே புதைந்து கிடக்கிறது. இப்போதைக்கு ஒரு சின்னத் தகவல். 1951 அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி மலாயாவில் அவசரகாலம் நடைமுறையில் இருந்த போது நடந்த நிகழ்ச்சி.

அப்போது மலாயாவின் உயர் ஆணையராக இருந்த சர் ஹென்றி கர்னி. பிரேசர் மலைக்குப் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது மலாயாக் கம்யூனிஸ்டுகளால் சுடப் பட்டார்.

மலாயாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்களில் மிக மிக மரியாதைக்கு உரியவர் ஒருவர் இருந்தார் என்றால் அவர்தான் இந்த சர் ஹென்றி கர்னி. அவருடைய பெயரில் மலேசியாவில் பல சாலைகள்; பல இடங்கள் உள்ளன.

அவருடைய கல்லறைகூட கோலாலம்பூர், ஜாலான் செராஸ் கிறிஸ்துவ மயானத்தில் தான் இருக்கிறது. ஓய்வு கிடைத்தால் போய்ப் பார்த்து மரியாதை செய்து விட்டு வாருங்கள். கேமரன் மலையின் வரலாறு என்று எழுதப் போய் எங்கு எங்கோ போய்விட்டேன்.



ஒரு காலக் கட்டத்தில் அதாவது 1930-களில் பினாங்கு கொடிமலை, பிரேசர் மலை, மேக்ஸ்வல் மலை போன்ற ஓய்வுத் தளங்களில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகரித்தது.

அதனால் இடப் பற்றாக்குறையும் ஏற்படத் தொடங்கியது. இந்தக் கட்டத்தில் பிரேசர் மலைக்குப் பதிலாக வேறு ஒரு மலைப் பிரதேசத்தை ஆங்கிலேயர்கள் தேடிக் கொண்டு இருந்தார்கள்.

பிரேசர் மலை மலாயா வாழ் ஆங்கிலேயர்களுக்குத் தலையாய ஓய்வுத் தளமாக விளங்கியது. இருந்தாலும் அங்கே மனித மனங்களைப் பெரிதாக ஈர்க்கும் வகையில் அப்படி ஒன்றும் சிறப்பாக எதுவும் இல்லை.

கொஞ்சம் குளிர். கொஞ்சம் பங்களாக்கள். சுற்றிச் சுற்றி கொஞ்சம் பறவைகள். கொஞ்சம் குரங்குகள் கூட்டம். நாலைந்து சாப்பாட்டுக் கடைகள். நாலைந்து மதுபானக் கடைகள். சமயங்களில் புலிகளின் நடமாட்டமும் இருந்து இருக்கிறது.

ஆக பிரேசர் மலைக்கு மாற்று இடமாகத் தேடிக் கொண்டு இருந்தார்கள். அதில் சிக்கியது தான் கேமரன் மலை.

நாற்பது ஆண்டுகள் கழித்து சர் ஜார்ஜ் மேக்ஸ்வல் என்பவர் கேமரன் மலைப் பகுதிக்குச் சென்றார். இது 1925-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி.

இந்த ஜார்ஜ் மேக்ஸ்வல்தான் தைப்பிங் நகரில் மேக்ஸ்வல் மலையைக் கண்டுபிடித்தவர் ஆகும்.

கேமரன் மலையில் ஜார்ஜ் மேக்ஸ்வல் கண்ட இயற்கையின் அழகைப் பற்றி ஆங்கிலேய அரசு நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அந்தக் காலக் கட்டத்தில் பேராக் மாநிலத்தின் ஆங்கிலேய ஆளுநராக சர் ஹியூ லோ என்பவர் இருந்தார்.

கேமரன் மலையைப் பற்றி கேள்விப்பட்ட ஹியூ லோ, எதிர்காலத்தில் அது ஒரு சிறந்த ஓய்வுத் தளமாக அமையும் என்பதை யூகித்து விட்டார். ஆக அதை விரிவுபடுத்த ஆசைப் பட்டார்.

அதற்கு முன்னர் 1896-ஆம் ஆண்டில் ஒரு குறுகிய பாதை இருந்தது. தாப்பாவில் இருந்து தானா ராத்தாவிற்குப் போகும் பாதை. ரொம்பவும் குறுகலான பாதை. குதிரைகளையும் மாடுகளையும் பயன்படுத்தினார்கள். இந்தப் பாதையை 1902-ஆம் ஆண்டில் சற்றே பெரிதாக்கினார்கள். 1925-ஆம் ஆண்டில் இந்தப் பாதையைப் பயன்படுத்தித் தான் ஜார்ஜ் மேக்ஸ்வல் கேமரன் மலை உச்சிக்குப் போனார். நில ஆய்வுகள் செய்தார். பிரிஞ்சாங் பகுதியில் ஓய்வுச் சாவடி கட்டுவதற்கு ஐடியா கொடுத்ததும் இவர் தான்.

இப்போது தாப்பாவில் இருந்து பிரிஞ்சாங்கிற்கு 60 கி.மீ. தெரிந்த விசயம். 1960 – 1970-ஆம் ஆண்டுகளில் இவ்வளவு தூரத்திற்கும் ஆயிரம் வளைவுகளாவது இருக்கும். போய்ச் சேர்வதற்குள் மண்டை கிறுகிறுத்துப் போகும். ஆக இப்போது இதற்கே இப்படி அலட்டிக் கொள்கிறோமே 1930-களில் எருமை மாட்டு வண்டிகளில் பயணம் போய் இருக்கிறார்களே. என்ன சொல்லப் போகிறீர்கள். எத்தனை நாட்கள் பிடித்து இருக்கும். குறைந்தது ஒரு வாரமாவது பிடித்து இருக்கும். இல்லீங்களா. மகிழ்ச்சி அடையுங்கள்.

1926-ஆம் ஆண்டில் தாப்பாவில் இருந்து கேமரன் மலைக்கு ஒரு சாலையை அமைக்கத் திட்டம் வகுத்தார்கள்.

அப்போதே பத்து மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப் பட்டது. இப்போதைய கணக்குப்படி முன்னூறு மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டி நிற்கும். நான் சொல்வது 1920-ஆம் ஆண்டுகளில் நடந்த கதை.

தாப்பா  - கேமரன் மலை சாலையை அமைக்க ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த போக்டென் பிரிஸ்பர்ன் கம்பெனி (Messrs. Fogden, Brisbane and Company) தேர்வு செய்யப்பட்டது. அந்த நிறுவனத்திற்கு 250,000 டாலர்கள் முன்பணம் வழங்கப் பட்டது. 1928 ஜனவரி முதல் தேதி சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின.

அது ஒரு சவால்மிக்க நிர்மாணிப்புப் பணி ஆகும். குதிரை அல்லது மாட்டு வண்டிகளில், தளவாடப் பொருட்கள் கேமரன் மலைக்குக் கொண்டு செல்லப் பட்டன. பின்னர் நீராவி இயந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன.

ஒவ்வொரு நாளும் 500 லிருந்து 3000 பேர் வேலை செய்தனர். ஏறக்குறைய 375 பேர் மலேரியா காய்ச்சலினால் இறந்து போனார்கள். ஒரு சிலர் பூர்வீகப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு காட்டுக்குள் காணாமல் போயினர். முக்கால்வாசி பேர் நம்முடைய இந்திய மன்மத ராசாக்கள்.

எது எப்படியோ காட்டுக்குள் போன நம்ப ராசாக்கள் அங்கே ஒரு புதிய சமுதாயத்தையே உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களின் வாரிசுகள் சிலரை ரிங்லெட் நகரில் இன்றும் பார்க்கலாம். முகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும். இந்திய லாவண்யம் ’பளிச்’ சென்று தெரியும்.

அதற்கு அப்புறம் மூன்று ஆண்டுகளில் கேமரன் மலைக்குச் சாலை அமைக்கப்பட்டது. அடுத்து ரிங்லெட்டில் இருந்து தானா ராத்தாவிற்கு சாலை அமைத்தார்கள்.

அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் பிரிஞ்சாங் வரை சாலை அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர்களும் சீனர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு சின்ன வீடுகளையும் பெரிய பெரிய பங்களாக்களையும் கட்டிக் கொண்டார்கள். தானா ராத்தா அந்த மாதிரியான இங்கிலாந்து ’ஸ்க்காட்டிஸ்’ பங்களாக்களை நிறைய பார்க்கலாம்.

1929-ஆம் ஆண்டில் போ தேயிலைத் தோட்டம் உருவானது. போ தேயிலைத் தோட்டத்தைப் பற்றி நாளைய கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

அதன் பின்னர் கேமரன் மலை படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்றைக்கு உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. 2006-இல் சிம்பாங் பூலாய் பகுதியில் இருந்து கம்போங் ராஜாவிற்குப் போக ஒரு நவீன விரைவு சாலையையும் அமைத்து விட்டார்கள்.

(தொடரும்)

சான்றுகள்:


1. Yanne, Andrew; Heller, Gillis (2009). Signs of a Colonial Era. Hong Kong University Press. pp. 56–57.

2. www.cameronhighlandsinfo.com/history/

3. http://www.cameron-highland-destination.com/cameron-highlands-history.html