பட்டு ஒரு சகாப்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பட்டு ஒரு சகாப்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஜூலை 2017

பட்டு ஒரு சகாப்தம்



குண்டு குழிகள் மலிந்து நிறைந்த அரசியல் நெடுஞ்சாலை. அரசியல் பெரிசுகள் நலிந்து மறைந்த அதிகார விரைவுச்சாலை. அங்கே ஒரு சிம்ம சொப்பனமாய் சீறிப் பாய்ந்தது ஒரு சீர்த்திருத்தச் சாலை.

அரசியலமைப்பில் அத்தனைப் பேருமே சமம் என்றது அந்த அமைதிச்சாலை. அந்தச் சாலையின் பெயர் பட்டுச் சாலை. சுருங்கச் சொன்னால் அது ஓர் அரசியல் கலாசாலை. இன்னும் சொன்னால் மலேசிய வானில் மறைந்து நிற்கும் ஒரு பழம்பெரும் கலாசாலை. மலேசிய மண்ணில் அஞ்சாத சிங்கமாய்க் கர்ஜித்து மறைந்தவர்.  

இன்றைய தினத்தில் அவர் மறைந்து 22 ஆண்டுகள் ஆகின்றன. நினைத்துப் பார்க்கின்றோம்.

முன்பு மலேசிய நாடாளுமன்றத்தில் பட்டு என்பவர் பலருக்குச் சிம்ம சொப்பனமாய் விளங்கியவர். ஈப்போ சீனிவாசகம் சகோதரர்களுக்குப் பின்னர் மக்களவையில் சொல்லின் வில்லாய் வலம் வந்தவர். 




1970-களில் கோப்பேங் புலி. 1980-களில் ஈப்போ சிறுத்தை. 1990-களில் மெங்லெம்பு மீசைக்காரர். இப்படி அன்பாகச் செல்லமாக அழைக்கப் பட்டவர்.

அமரர் பி. பட்டு நாடறிந்த மூத்த அரசியல்வாதி. பன்மொழித் திறன் பெற்றவர். தமிழ், சீன, ஆங்கில மொழிகளில் சிறப்பாகப் பேசக் கூடியவர். ஜனநாயகச் செயல் கட்சியில் முக்கியத் தலைவராக வலம் வந்தவர்.

பேராக், மெங்லெம்பு தொகுதியின் மக்களவை உறுப்பினராகச் சேவை செய்தவர். மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்.

அரிதாய்க் கிடைத்த சீன மொழி ஆற்றலைப் பெரிதாய் வளர்த்துக் கொண்டார். கம்பீரத் தொனியில் கராராகப் பேசினார். மலேசியச் சீனர்களைத் தன் பக்கம் சுண்டி இழுத்துக் கொண்டார்.

சிம்மக் குரலோன் பட்டு எனும் சிறப்பையும் பெற்றார். அவருடைய மகள் தான் இப்போதைய மக்களவை உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு. பத்து காவான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.




அரசியலே உலகம் என்று வாழ்ந்தவர் அமரர் பி. பட்டு. ஆனால் அந்த அரசியலையும் தாண்டி ஒருவர் வந்து இருக்கிறார் என்றால் அவர் தான் பட்டுவின் மகள் கஸ்தூரி ராணி.

பட்டுவின் மொத்த ஒட்டு மொத்த சந்தோசத்திற்கும் கஸ்தூரிராணி தான் மூலப் பொருளாக விளங்கி வந்து நிற்கிறார்.

பிறந்த அந்த நாளில் இருந்து வளர்ந்த ஒவ்வொரு நொடியிலும் பட்டுவிற்குச் சந்தோசங்களை அள்ளிக் கொடுத்து இருக்கிறார் கஸ்தூரி ராணி பட்டு. 

பட்டு இப்படிச் சொல்கிறார்; என் மகளுக்குச் சாதாரணமாய்க் கொஞ்சம் சளி பிடித்தால் கூட இரவு முழுவதும் நான் தூங்க மாட்டேன். எனக்குத் தூக்கமே வராது. அவள் கூடவே இருப்பேன். அவள் இல்லாமல் நான் வெளியே செல்வது குறைவு. எனக்கும் அவளுக்கும் இருந்த பாசப் பிணைப்பு என் அரசியலே பொறாமை படும் அளவுக்கு தடுமாறிப் போனது.




பட்டுவே இப்படி ஒருமுறை சொல்லி இருக்கிறார்.  அது ஒரு தகப்பனுக்கும் ஒரு மகளுக்கும் உள்ள பந்த பாசம்.

ஆனால் மலேசிய நாடாளுமன்றத்தில் பலருக்குச் சிம்மச் சொப்பனமாக விளங்கிய பட்டுவின் வாரிசு ஒருநாள் அதே சிகரத்தில் காலடி எடுத்து வைப்பார் என்று பட்டுவே கற்பனை செய்து பார்த்து இருக்க மாட்டார். ஆனால் அதுதான் நடந்து இருக்கிறது.

அரிதிலும் அரிதான அந்த மாதிரியான காலக் கோடுகளைக் காண அவர் இப்போது இல்லை. பொல்லாத காலன் சொல்லாமல் கொள்ளாமல் அவரிடம் கால்ஷீட்டை வாங்கிக் கொண்டான்.

இருந்தாலும் பரவாயில்லை அன்பரே பட்டு; உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். உங்கள் மகள் கஸ்தூரியை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். வாழ்த்துகிறோம். ஆராதிக்கிறோம்.

பட்டுவின் அரசியல் வாழ்க்கை கொஞ்சம் கசப்பானது. கொஞ்சம் காரமானது. அப்படியே ரொம்பவும் கரடுமுரடானது.

அரசியல் அரிச்சுவடிகளை ஆதாரங்களுடன் பார்த்தவர். அரசியல் சட்டச் சிக்கல்களின் முடிச்சுகளுக்கு எதார்த்தமானத் தீர்வுகளைக் கண்டவர். அவர் தான் தோழர் பட்டு. அப்போதைய பழசுகளில் பெரிசு. பட்டு என்கிற பெரிசு.

கொள்கை வாதத்தில் முரட்டுத்தனம். தன்மான வாதத்தில் அதீதப் பிடிவாதம். ஆனால் அருமையான மனசு. அழகான பேச்சு. அர்த்தமான மூச்சு. இப்போது இல்லை. வருந்துகிறோம்.

காட்டுக் கூச்சல்களுக்கு நடுவிலும் அழகான மேடைப் பேச்சுகள். சரியான நேரத்தில் சரியான வாசகங்கள். சமூகச் சிந்தனைகளைக் கிள்ளிப் பார்க்கும் அணுகுமுறைகள். அரசியல் வானில் நல்ல ஒரு பரிமாணம்.

1978-ஆம் ஆண்டு அரச மலேசிய கப்பல்படை ஸ்வீடன் நாட்டில் இருந்து 90 இலட்சம் ரிங்கிட்டிற்கு ஸ்பீக்கா (Missile - Spica - M - 4 ASM) எரிபடை குண்டுகளை வாங்கியது. 




அதில் சில பிரச்னைகள் உள்ளன என்று சொல்லப் போய் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் 1972 (Official Secrets Act 1972); சட்டத்தின் கீழ் பட்டு கைது செய்யப் பட்டார்.

ஈப்போவில் இருக்கும் பேராக் மாநிலப் போலீஸ் தலைமையகத்தில் 18 மாதங்கள் 60 நாட்கள் தனிமைச் சிறை. அடுத்த 16 மாதங்களுக்குத் தைப்பிங் கமுந்திங் தடுப்புக் காவல் முகாமில் சிறைவாசம்
(சான்று: http://www.malaysiakini.com/news/348222)

துன் மகாதீர் மலேசியாவின் பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் நடந்தது. அப்போதைக்கு அனைவரையும் ஈர்த்த செய்தி.
(சான்று: http://www.freemalaysiatoday.com/category/highlight/2015/12/19/p-patto-an-unsung-hero/ - Patto was arrested, charged and convicted under the Official Secrets Act)

அதைப் போலவே 1987-இல் ஓப்பராசி லாலாங் (Operation Lalang) கைது நடவடிக்கை. அதில் பட்டு, கர்பால் சிங், லிம் குவான் எங், லாவ் டாக் கீ, வி.டேவிட் போன்றவர்கள் கைது செய்யப் பட்டனர்.

கமுந்திங் சிறையில் இரண்டு ஆண்டுகளுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டனர். இரண்டாவது முறை கைது செய்யப்பட்டது பட்டுவின் வாழ்க்கையில் கசப்பான வேதனைகள்.   




பட்டுவின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.  கோப்பேங் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1982 லிருந்து 1986 வரையில் ஈப்போ, மெங்லெம்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். 1986 லிருந்து 1990 வரையில் பினாங்கு பாகான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.

1990-இல் சுங்கை சிப்புட் தொகுதியில் அதன் சிங்கமான சாமிவேலுவை எதிர்த்து நின்று 1763 வாக்குகளில் தோல்வி கண்டவர். அவருக்கு 12,664 வாக்குகளும் சாமிவேலுவிற்கு 14,427 வாக்குகளும் கிடைத்தன.

தேர்தல் முடிவின் போது பட்டுவைப் பார்த்து சாமிவேலு சொன்னது சிலரின் நினைவுகளுக்கு இப்போது வரலாம். ‘நீ ஜெயித்தால் நம் இந்தியர்களுக்கு ஒரு நாடாளுமன்ற இடம் மட்டும்தான் கிடைக்கும். ஆனால் நான் தோற்றுப் போனால் ஓர் அமைச்சர் பதவியே பறிபோய்விடும். திரும்பக் கிடைக்குமா. சந்தேகம்.’ சொன்னதில் உண்மை இருக்கிறது.

பட்டுவின் தோல்வியில் பல பிரச்சனைகள் இருந்தன என்றுகூட சொல்லப் படுகிறது.  எது எப்படியோ இப்போதைக்கு அது முக்கியம் இல்லை. ஏன் என்றால் அது ரொம்பவும் லேட்டாகிப் போன நியூஸ்.

1995 ஜூலை 12-ஆம் தேதி ஈப்போ மருத்துவமனையில் மாரடைப்பினால் பட்டு இறந்து போனார். அப்போது கஸ்தூரிராணிக்கு 16 வயது. 




பேராக் வாழ் மக்களுக்கு பட்டு  நிறைய உதவிகளைச் செய்து இருக்கிறார். அங்காடிக்காரர்கள், தொழிலாளர்கள், சாப்பாட்டுக் கடைக்காரர்கள், நகராண்மைக் கழக ஊழியர்கள்தான் அவருக்கு நெருங்கிய அன்றாட நண்பர்கள்.

பள்ளிப் பிள்ளைகளுக்கு கைச் செலவுகளுக்கு காசு கொடுக்கும் ஒரு நல்ல பழக்கமும் இவரிடம் இருந்து உள்ளது. இவரிடம் காசு இருக்கிறதோ இல்லையோ முக்கியம் இல்லை. பள்ளிப் பிள்ளைகளுக்கு காசு கொடுப்பதில் இவருக்கு ஓர் அலாதிப் பிரியம். அதற்குத் துணையாக இருந்தவர் கஸ்தூரி ராணி.

ஒரு சின்ன சம்பவம். அப்போது கஸ்தூரிராணிக்கு பதின்ம வயது. கஸ்தூரிராணி வாங்கிச் சாப்பிடுவதற்காக வைத்து இருந்த காசை அவரிடம் நைசாகப் பேசி வாங்கி புந்தோங் பள்ளிப் பிள்ளைகளுக்குச் ‘செண்டோல்’ வாங்கிக் கொடுத்தாராம். அங்குள்ள பெற்றோர்கள் இன்னும் சொல்கிறார்கள்.

அதாவது தன்னிடம் காசு இல்லாத போது மகளிடமே காசைக் கடனுக்கு வாங்கி தானம் செய்த சந்தோஷம் எத்தனை அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும். சொல்லுங்கள்.

காசு என்னவோ பெரிய தொகை இல்லை. இருந்தாலும் மனசு வேண்டுமே. ஒரு முறை இரண்டு முறை இல்லை. பலமுறைகள் அந்த மாதிரி நடந்து இருக்கிறது. கடன் வாங்கிய காசை கஸ்தூரி ராணியிடம் திருப்பிக் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. அதைக் கஸ்தூரியிடம்தான் கேட்க வேண்டும்.

இருந்தாலும் அப்பாவின் ஓய்வூதியப் பணத்தில் தானே கஸ்தூரி ராணி மலாயாப் பல்கலைக்கழகத்திற்குப் போய்ப் படித்து பட்டம் வாங்கினார்.




ஈப்போ நகராட்சி மன்றத்தின் தலைவர்களில் ஒருவராக பட்டு இருக்கும் போது இவர் நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார். அவரிடம் உதவி பெற்றவர்களில் சிலர் பட்டு என்று சொன்னதும் கண்கலங்கிப் போகிறார்கள்.

பல நூறு பேர்களுக்கு குடியுரிமைகளைப் பெற்றுத் தருவதில் பட்டு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார். பட்டுவின் அலுவலகத்தில் யார் எப்பொழுது வேண்டும் என்றாலும் நுழைந்து உதவிகளைக் கேட்கலாம்.

பசி என்று வந்தால் கீழே இருந்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டும் போகலாம். இவர் அடிக்கடி சொல்லும் வசனங்கள். ’மக்களுக்காகச் சேவை செய்யத் தான் அரசியலுக்கு வந்தேன். பணம் சம்பாதிக்க இல்லை.’

அவருடைய கனவுகள் இன்னும் உலர்ந்து போகவில்லை. உற்சாகங்களும் உறைந்து போகவில்லை. அவருக்குப் பதிலாக அவருடைய மகள் இப்போது வந்து இருக்கிறார்.

அரசியல் சுதந்திரத்திற்காக, மனித உரிமைகளுக்காக, சமயம், இனம், மொழி கடந்த சம உரிமைப் போராட்டவாதியாக, பண்பாளனாக, தோழனாக, மக்களின் தொண்டனாகப் பற்பல நிலைகளில் போராடியவர் பி.பட்டு. ஜ.செ.க.வின் அதிரடிப் பீரங்கி என்றும் புகழப் பட்டவர்.

பேராக் பாகான் செராயில் 10.12.1946-இல் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பட்டுவிற்குப் பத்து வயதாக இருக்கும் போது தந்தையார் காலமானார். அவருடைய தாத்தாவின் பார்வையில் வளர்ந்தார். ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு 1971-ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். இவருக்கு ஒரு மனைவி. பெயர் மேரி.

பண பலமோ, அதிகார பலமோ, ஆட்சி பலமோ பட்டுவை அசர வைக்கவில்லை. சிறைவாசம் கூட அவரை அடிபணிய வைக்கவில்லை.

அமரர் பட்டு ஆற்றிய அரிய சேவைகளுக்காக ஈப்போ சிலிபின் சாலைக்கு அவருடைய பெயரையே வைக்க வேண்டும் என்று பேராக் மாநிலத்தின் முன்னால் முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் நிஜார் கருத்து தெரிவித்தார்.

நல்ல மனதில் நல்ல எண்ணங்கள். ஆனால் முடிவுகள் வேறு மாதிரியாக விஸ்வரூபங்கள் எடுத்தன. அவற்றை இங்கே எழுத முடியாது. மன்னிக்கவும்.

ஆனால் இப்படி வேண்டும் என்றால் கொஞ்சம் எழுதலாம். சகிப்புத் தன்மைகள் கரைந்து போய் கரை தட்டிய கடும் எதிர்ப்புகள். கடைசியில் பட்டுவின் குடும்பத்தினரே ’எதுவும் வேண்டாம். பட்டுவை நிம்மதியாகத் தூங்க விடுங்கள்’ என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகிப் போனது. 



இருந்தாலும் காலத்தால் செய்த உதவி ஞாலத்திலும் பெரிது என்று சொல்லி பினாங்கில் பட்டுவின் பெயரில் ஒரு சாலைக்குப் பெயர் வைக்கப் பட்டது. பட்டவர்த்தில் ராஜா ஊடா எனும் சாலைக்கு ஜாலான் பி. பட்டு என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. முதலமைச்சர் லிம் குவான் இங்கிற்கு நன்றிகள்.

சமயங்களில் கோப்பெங் நகரின் லாவான் கூடா பகுதியில் உள்ள கோப்பிக் கடைகளுக்குச் செல்வார். திடீரென்று மேஜைகள் மீது ஏறி நின்று கொண்டு உணர்ச்சிப் பூர்வமாக உரையாற்றுவார்.

மனித உரிமை அத்துமீறல்கள் பற்றி ஆவேசமாகச் சாடுவார். அப்போது பொது மக்கள் சுற்றி நின்று ஆரவாரம் செய்வார்கள். அந்தக் காட்சிகளை நம்மால் மறக்க முடியாது.

ஜ.செ.க. கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும், ‘ராக்கெட்’ இதழின் ஆசிரியராகவும் இருந்தார். அதன் பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். அந்த இழப்பு அவருடைய குடும்பத்திற்கு அல்ல. நாட்டிற்கே பெரிய இழப்பாகும். இந்தியச் சமுதாயத்திற்கு மாபெரும் இழப்பாகும்.

அவருடைய ஈமச்சடங்கு செலவுகளில் பெரும் பகுதியை டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலு கவனித்துக் கொண்டார். அதை நாம் இங்கே நினைவுகூர வேண்டும்.

அவர்கள் இருவரும் அரசியல் எதிரிகளாக இருந்து இருக்கலாம். ஆனால், உணர்வுகள் என்று வரும்போது இந்தியர்களாக இருக்கும் பட்சத்தில் இந்திய உணர்வுகளுக்கு அடிமையாகிப் போகின்றார்கள். அந்த வகையில் டத்தோ ஸ்ரீயைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.



பரந்து விரிந்து கிடக்கும் வரலாற்றுச் சுவடுகளில் வையகம் போற்றும் மனுக்குல மைந்தர்கள் வாழ்ந்து மறைகின்றார்கள். இறந்தும் இறவாமல் இறவாப் புகழுடன் உயிர்ப்பு பெற்ற ஆன்ம ஜீவநாடிகளாக உறைகின்றார்கள்.

அவர்களில் சிலர் வரலாற்றுச் சப்த சுவரங்களின் சொர்ண சகாப்தங்களாக மாறுகின்றார்கள். அந்தச் சகாப்த வேதங்களையும் தாண்டி நம்முடன் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள். அன்றும் இன்றும் மனித மனச் சங்கமங்களில் மந்திரப் புன்னகைகளை அள்ளித் தெளித்து ஆலாபனையும் செய்கின்றார்கள். 

பி. பட்டு. உண்மையிலேயே ஒரு மலேசிய மண்ணின் மைந்தன்! மலேசிய வரலாற்றில் ஓர் அவதாரப் புருஷன்! அவர் மறைந்து விட்டாலும் மனிதச் சுவடிகளில் இருந்து மறைக்க முடியாத மறுமலர்ச்சிக் களஞ்சியமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். இன்றும் இனி என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார். அவர் ஒரு சகாப்தம்!