நரிக்குறவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நரிக்குறவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 செப்டம்பர் 2012

நரிக்குறவர்களின் நவரசங்கள்

[இந்தக் கட்டுரை 17.09.2012 மலேசியா தினக்குரல் நாளிதழில் பிரசுரமானது.]

தயவு செய்து உங்களுடைய படைப்புகளாக, எடுத்து எழுதி உரிமை கொண்டாடினால் அதைவிட வேதனையான விசயம் உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நூல் வெளியீடு கிடைக்கும்.


முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் இருந்து நரிக்குறவர்கள் கப்பலேறி மலேசியாவுக்கு வருவார்கள். கோலாலம்பூர்தான் அவர்களின் தலைவாசல். ஜாலான் மஸ்ஜீத் இந்தியா, பிரிக்பீட்ஸ், பத்துமலைப் பகுதிகளில் அவர்களைப் பார்க்கலாம். பாசிமணி, ஊசிகளை விற்பார்கள். பச்சைக் குத்துவார்கள். நாடி பார்த்து நோய்க் குறிகளைச் சொல்வார்கள்.

பின்னர் பேராக், மலாக்கா, கெடா பகுதிகளுக்குப் போவார்கள். மலேசியத் தோட்டப்புறங்களில் அவர்களின் நடமாட்டங்கள் அதிகமாகத் தெரிந்தன. மிஞ்சி மிஞ்சி போனால் இரண்டு மூன்று மாதங்கள், மலேசியாவில் தங்கி இருப்பார்கள். நாலு காசு பார்த்ததும் நாகரிகமாக, நாடு கடந்து தாயகம் போய்விடுவார்கள். இப்போது எல்லாம் அந்த அப்பழுக்கற்ற ஜீவன்களைப் பார்க்க முடிவது இல்லை. அவர்களும் அரசியல் அரிச்சுவடிகளில் சகாப்தமாகி விட்டார்கள்.

நரிக்குறவர்கள் என்று சொன்னதும் அவர்கள் விற்கும் நரிக்கொம்பு ஞாபகத்திற்கு வருகிறது. உண்மையிலேயே நரிக்கொம்பு என்ற ஒன்று இருக்கிறதா. தெரியவில்லை. மலேசியாவில் நரிகள் இருக்கின்றன. அவை மலைப் பிரதேசங்களில் வாழ்கின்றன. அங்கு வாழும் நரிகளுக்கு கொம்புகள் இருக்கின்றன என்று நண்பர்கள் சொன்னார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை. அதைப் பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்ய வேண்டி இருக்கும்.

நரிகளில் ராஜநரி என்று ஒரு வகை உண்டு. அவற்றுக்கு கொம்புகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனால், அவை உண்மையிலேயே கொம்புகள் இல்லை. தலையில் கொஞ்சமாகத் தசை வளர்ந்து இருக்கும். அதுதான் நரிக்கொம்பு. நடுநிசி அல்லது விடியல்காலையில் புடைத்துக் கொள்ளுமாம். காண்டாமிருகத்திற்கு கொம்பு இருப்பதைப் பார்த்து இருக்கலாம். உண்மையில் அது கொம்பு இல்லை. அது இறுகிப் போன தசை.

நரிக்கொம்பின் மூலமாக சிலருடைய வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுகிறது. நல்லது நடக்கும் என்கிற பிடிப்பும் உண்டாகிறது. நடக்கிறதோ இல்லையோ அது முக்கியம் இல்லை. நடக்கும் எனும் நம்பிக்கை இருக்கிறதே அதுதான் முக்கியம். அது ஒரு நேர்மறைத் தாக்கம். அதுவே நல்லதைச் செய்கின்றது.

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சிரிங்கேரி, தர்மசாலா புனித ஆலயங்களுக்கு போகின்ற வழியில் பெரிய பெரிய காடுகள் இருக்கும். சும்மா சொல்லக்கூடாது. நக்கசல்பாரிகள் உலாவுகின்ற மலைப் பிரதேசம். காட்டுப் பாதைகளின் ஓரங்களில்  நரிக்குறவர்கள் பரண்கள் அமைத்து இருப்பார்கள். வருகிறவர்கள் போகிறவர்களிடம், அற்புதமான வேலைப்பாடுகள் நிறைந்த பாசி மணிகளை விற்பார்கள். 2006, 2010ஆம் ஆண்டுகளில் நானும் என் மனைவியும் அங்கு போய் இருக்கிறோம். அவர்களைப் பார்த்துப் பேசியும் இருக்கிறோம். 

சரி. நரிக்குறவர்கள் யார்? தமிழ்மொழியைப் பேசும் அவர்கள் தமிழர்களா? அவர்கள் எங்கு இருந்து வந்தார்கள்? இவர்களைப் பற்றி "நரிக்குறவர் இனவரைவியல்" எனும் நூலை கரசூர் பத்மபாரதி என்பவர் எழுதி இருக்கிறார். 2004ஆம் ஆண்டு வெளிவந்தது. மரக்காணம் பாலா என்பவரும் ஓர் ஆவண நூலை எழுதி இருக்கிறார்.

இணையவசதி உள்ளவர்கள் http://ta.wikipedia.org/wiki/நரிக்குறவர் எனும் முகவரியில், மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இலக்கியங்கள், கதைகள், பாடல்கள், சினிமாக்கள் என்று எல்லா வகையான ஊடகங்களிலும் நரிக்குறவர்களைப் பற்றித் தவறாகவே சொல்லி இருப்பார்கள். நரிக்குறவர்கள் என்னவோ வேற்று உலகத்தில் இருந்து வந்த மாதிரியும், அவர்கள் என்னவோ நம்ப வீட்டு ஐஸ்பெட்டியில் இருந்த அல்வாவைத் திருடித் தின்ற மாதிரியும் கதை கட்டி காவியம் பேசுவார்கள்.

அவர்களைத் திருடர்களாகவும், சபலபுத்தி உள்ளவர்களாகவும் சித்தரிப்பது மிகவும் தவறு. அவர்களும் நம்மைப் போல மனிதர்கள். அவர்களுக்கும் நம்மைப் போல ஆசாபாசங்கள் இருக்கும். அவர்களைப் பற்றிய சில நடைமுறை உண்மைகளைச் சொல்கிறேன்.

நரிக்குறவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். நரிக்குறவர்களின் சமுக அமைப்பும், சமூகக் கட்டுபாடும் மற்றச் சமூகங்களில் இருந்து அவர்களைத் தனியாகப் பிரித்து வைத்து இருக்கின்றன. அவ்வளவுதான். அவர்களும் தனித்துப் போய்விட்டனர். மற்ற சமூகங்களுடன் அவர்கள் இணைவது இல்லை. ஒதுக்கி வைக்கப்பட்டனர் என்று சொன்னால்தான் சரியாக இருக்கும்.

தேர்தல் சமயத்தில் மட்டும் அரசியல்வாதிகள் இவர்களைத் தேடி வருவார்கள். இடுப்பில் தூக்கி வைத்து ஆடுவார்கள். மதிப்பும் மரியாதையும் மூட்டை மூட்டையாக வரும். சில நாட்களுக்கு ராஜ உபசரணைகள். வடிவேலு கணக்கில் குவார்ட்டர் வரும். புல்லு வரும். அவிச்ச முட்டை, அவிக்காத முட்டை எல்லாம் வரும். ஓட்டுப் போட்டதும் அவர்கள் மறக்கப்பட்ட மனிதர்கள். மாட்டு வண்டியில் விரட்டப்பட்ட நாடோடிகள்.

இங்கே மட்டும் என்னவாம். தேர்தல் வந்ததும் அரிசி, மாவு, சீனி, ரொட்டி, கிடைக்கிறதே என்று வரிசை பிடிக்கும் கலாசாரம் இருக்கத்தானே செய்கிறது. அந்த மாதிரிதான். அதில் அந்த 500 வெள்ளி பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நானும் வரிசையில் நின்று வாங்கி இருக்கிறேன். சும்மா ஒன்றும் இல்லை. பிள்ளையாய்ப் பிறந்து எத்தனையோ இலட்சம் வரியாய்க் கட்டி இருக்கிறேன். அதில் கொஞ்சம் திரும்பி வருகிறது. நாங்களும் வாங்குவோம் இல்ல. கதை எங்கேயோ போய்விட்டது. மன்னிக்கவும்.

நரிக்குறவர்களின் பூர்வீகம் வட இந்தியாவின் குஜாராத் மாநிலம். மராட்டிய மாவீரன் சிவாஜியின் படைப்பிரிவில் நரிக்குறவர்கள் முன்னணி வீரர்களாக இருந்தவர்கள். மொகலாயர்களின் படையெடுப்புகளினால் சிவாஜிக்குப் பல பின்னடைவுகள் ஏற்பட்டன. அதனால், சிவாஜியின் படையில் இருந்த அத்தனை வீரர்களும் மொகலாயர்களின் அடிமைகளாக்கப்பட்டனர். கடும் கொடுமைகள் தொடர்ந்தன.

மொகலாய மன்னன் அவுரங்கசிப், அவனுக்குப் பின் வந்த சிற்றசர்கள் மராட்டிய அடிமைகளுக்கு கடும் தண்டனைகளைக் கொடுத்தனர். அதில் இருந்து தப்பிக்க நரிக்குறவர்கள் காடுகளில் தஞ்சம் அடைந்தனர். அதற்கு முன் அவர்கள் நரிக்குறவர்கள் அல்ல. நல்ல போர்வீரர்கள். வெளியே நடமாடும் போது, எப்போதும் அடிமைகளுக்கான உடைகளை அணிந்து இருக்க வேண்டும். ஆக, அவர்கள் அணிந்து இருந்த உடைகள் அவர்களை அடிமைகளாக அடையாளம் காட்டின.

அதனால், அந்த உடைகளை அணியாமல் இலைத் தழைகளை உடுத்திக் கொண்டனர். காடுகளிலேயே வாழ்ந்தனர். இதில் ஒரு வேதனையான விஷயம் என்ன தெரியுமா. மொகலாய சாம்ராஜ்யம் மறைந்து போனதுகூட தெரியாமல், அந்த இலைத்தழை அடிமைகள் காடுகளிலேயே வாழ்ந்து வந்தனர். ஒரு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் தமிழ்நாட்டில் வந்து குடியேறினார்கள். இப்போது மராத்தி கலந்த தமிழ் மொழியில் பேசுகிறார்கள்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது, அவர்கள் காடுகளுக்கு வேட்டையாடச் செல்வது வழக்கம். அது அவர்களின் மேல்மட்ட பொழுதுபோக்கு. ஆங்கிலேயர்களுக்கு நரிக்குறவர்கள் உதவியாக இருந்து இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் நரிக்குறவர்களின் வேட்டையாடும் திறமையைப் பார்த்து, ஆங்கிலேயத் துரைமார்கள் வியந்து போனார்கள்.

அவர்களுக்குத் துப்பாக்கிகளைக் கொடுத்து வேட்டையாடிப் பிழைக்கும் வழிகளையும் சொல்லித் தந்தார்கள். அதனால்தான் இன்றுவரை நரிக்குறவர்கள் துப்பாக்கியும் கையுமாக அலைவதைப் பார்க்க முடிகிறது. ஒரு சின்னச் செருகல். அந்தத் துப்பாக்கிகளும் இப்போது அரிசி பருப்புக்கு அரசியல்வாதிகளிடம் அடைக்கலம் போய் விட்டன. அது மட்டும் இல்லை. துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதிலும் அரசாங்கம் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துவிட்டது. இவ்வளவு காலமும் நரிகளை வேட்டையாடிப் பிழைத்து வந்த நரிக்குறவர்கள் இப்போது அரிசிக்கும் பருப்புக்கும் ஆலாய்ப் பறக்கின்றார்கள்.

தமிழகத்தில் வாழும் நரிக்குறவர்கள் நரியின் மாமிசத்தை விரும்பிச் சாப்பிடுவார்கள். அது அவர்களுக்குப் பிடித்தமான உணவு. நாட்டுக் கோழியைவிட நரி மாமிசம் எவ்வளவோ பரவாயில்லையாம். சண்டைக்கு வரவேண்டாம். நரிக்குறவர்கள் சொல்கிறார்கள். இரண்டுமே சுத்தமான அசைவங்கள். இதில் எது சுத்தமான அசைவம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நரியின் இறைச்சியை அவர்கள் விரும்பியதாலும், நரிக்கொம்புகளை விற்று வந்ததாலும் அவர்களுக்கு நரிக்குறவர் எனும் பெயர் நன்றாகவே ஒட்டிக் கொண்டது.

நரிக்குறவர்கள் பழமையான வாழ்க்கை முறையையும் மரபுகளையும் இன்றுவரை கடைபிடித்து வருகின்றார்கள். இவர்களின் திருமண முறை சற்றே வித்தியாசமானது. இவர்களின் திருமணத்தின் போது, சாராயம் தண்ணீராக ஓடும். அதனால் சண்டைகள், சச்சரவுகள் வரும். அதில் ஏகப்பட்ட அமர்க்களங்கள். அப்போதுதான் அது ஒரு முழுமையான திருமணமாகக் கருதப்படுகிறது. நரிக்குறவர்களின் சமூகத்தில் திருமணம் என்று வந்தால் மாப்பிள்ளைதான் பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டும். பெண்ணின் உறவுக்காரர்கள் அனைவருக்கும் துணிமணிகள் வாங்கித்தர வேண்டும். கல்யாணச் செலவுகளை மொத்தமாக  மணமகன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் அதை ஓர் அதிர்ஷ்டமாகக் கொண்டாடுகிறார்கள். பெண் குழந்தையைக் குலத்தைக் காக்க வந்த குலக் கொழுந்தாகப் போற்றுகிறார்கள்.

அவர்களைப் பொருத்தவரை உபரியாகச் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை பெரும்பாலும் கிடையாது. நன்றாக உழைக்க வேண்டும். நன்றாக மது அருந்த வேண்டும். இதில் ஆண் பெண் பாரபட்சம் இல்லை. முடிந்தவரை உல்லாசம் நிறைந்த கொண்டாட்டமான வாழ்க்கை நடத்த வேண்டும். உணவிற்கும் உறைவிடத்திற்குமான கவலைகள் அவர்களிடம் இல்லை. அவர்களுக்கான மாபெரும் கேளிக்கை தமிழ்ச்சினிமா. மூன்று காட்சிகளையும் படம் பார்க்கச் சொன்னால் சந்தோஷமாகப் பார்ப்பார்கள். அதிலும் எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.

நரிக்குறவர்களிடம் சாதி என்பதே இல்லை. ஆனால், இரண்டே  இரண்டு பிரிவுகள் மட்டும் இருக்கின்றன. ஒன்று ஆடு சாப்பிடுகிறவர்கள் பிரிவு. இன்னொன்று மாடு சாப்பிடுகிறவர்கள் பிரிவு.

ஆடு சாப்பிடுகிற பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு, ஆடு சாப்பிடும் அதே பிரிவைச் சேர்ந்தவர் சகோதரர் முறை வரும். அதேபோல மாடு சாப்பிடுகிற பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு மாடு சாப்பிடும் அதே பிரிவைச் சேர்ந்த ஒருவர் சகோதரர் முறை வரும்.

ஆகவே, ஒரே பிரிவிற்குள் இருப்பவர்கள் பெண் எடுப்பதும் இல்லை. பெண் கொடுப்பதும் இல்லை. எதிர் எதிர்ப் பிரிவுகளில்தான் மண உறவுமுறைகள். இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லலாம். ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஒரு பெண், மாடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஓர் ஆணைத்தான் திருமணம் செய்ய வேண்டும். அதே போல, மாடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஒரு பெண், ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஓர் ஆணைத்தான் திருமணம் செய்ய வேண்டும்.  ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஆண், இன்னோர் ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த பெண்ணோடு பாலியல் உறவு வைத்துக் கொள்வது இல்லை. அதை அண்ணன் தங்கை உறவாக நினைக்கிறார்கள்.

இவர்களிடம் திருமண உறவுகளைத் தாண்டிய சுதந்திரமான பாலுறவுகள் பரவலாக உள்ளன. ஒருவருடைய மனைவியை மற்ற ஆண்கள் பகிர்ந்து கொள்ள முடியும். அதை அந்தப் பெண்ணின் கணவன் தவறாக எடுத்துக் கொள்வது இல்லை. ஏன் என்றால் அதே கணவன் வேறு திருமணமான பெண்களையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அதனால், இங்கே விட்டுக் கொடுத்து ஏற்றுக் கொள்ளும் சகிப்புத் தன்மை இருக்கிறது.

இந்த மாதிரியான பழக்கவழக்கத்தை நாம் ஏற்றுக்கொள்வது இல்லை. ஆனால், அது அவர்களுக்கு சமூக வழக்கமாகிவிட்டது. இன்னும் ஒரு விசயம். மாலை ஆறுமணிக்கு மேல் வீட்டிற்குத் திரும்பி வரும் பெண்ணை, சமூகத்தில் இருந்து விலக்கி வைத்துவிடுவார்கள். மற்ற பழங்குடிச் சமூகங்களைப் போல நரிக்குறவர்களும் இனத் தூய்மையைக் கட்டிக் காக்கின்றனர்.

குறவர் பெண்களுக்கு 13 அல்லது 14 வயதிலேயே திருமணம் ஆகிவிடுகிறது. ஆண்களுக்கு அதிகபட்ச வயது 16 அல்லது 18. பெரும்பாலும் பெரியவர்கள் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். காதலித்து திருமணம் செய்வதும் உண்டு. சரியான உறவுக்குள் காதலித்து இருந்தால் சமூகத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். அதைத் தாண்டி ஒரே பிரிவுக்குள் திருமணம் செய்து கொண்டால் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள்.

முன்பு எல்லாம் குழந்தைகள் பிறக்கும் போதே திருமணத்தை நிச்சயித்துவிடுவது வழக்கம். பெண்ணுக்கு மூன்று வயதானதும் திருமணத்தை முடித்து, அந்தப் பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். உறவு விட்டுப்போகக் கூடாது என்பதற்காக நடந்த அது போன்ற பால்யத் திருமணங்கள் இப்போது இல்லை. குறைந்து விட்டது.

பெண் பார்க்கப் போகும் போது ’வெற்றிலைப் பாக்கு இருக்கா இல்லையா’ என்று கேட்க மாட்டார்கள். ’பிராந்தி இருக்கா’ என்றுதான் கேட்பார்கள். பிராந்தி அல்லது விஸ்கி கண்டிப்பாக இருக்க வேண்டும். பேச்சு வார்த்தை தொடங்குவதற்கு முன் எல்லாரும் நன்றாக சாப்பிட வேண்டும். அப்புறம்தான் கல்யாணப் பேச்சு.  மது அருந்துவதில் ஆண் பெண் பாரபட்சம் இல்லை. அவர்களைப் பொருத்த வரையில் நல்ல ஒரு கலாசாரம். இந்த இடத்தில் சமத்துவம் சம்மட்டியால் அடித்து தத்துவம் பேசுகின்றது.

பெண்ணுக்கு அழகு இருக்க வேண்டும். பாசிமணி கோர்க்கும் திறமை இருக்க வேண்டும். அதை விற்றுப் பணம் சேர்க்கும் அறிவும் இருக்க வேண்டும். அதேமாதிரி மாப்பிள்ளைக்கு வெள்ளி வெண்கலச் சாமான்கள் இருக்க வேண்டும். நன்றாக வேட்டையாடத் தெரிய வேண்டும். குறிப்பாக ஆண்கள் குடுமி வைத்து இருக்க வேண்டும். குடுமி இல்லாத ஆண்களுக்கு மவுசு இல்லை. என்ன செய்வது. இதை எல்லாம் பார்க்கும் போது நாமும் குடுமி வைத்துக் கொண்டு, கொஞ்சம் வெண்கலச் சாமான்களை இடுப்பில் கட்டிக் கொண்டு அந்தப் பக்கம் போகலாமே என்கிற ஆசை வருகிறது. ஆனால், முடியாது சாமி. பேரன் பேத்திகள் சும்மா விடுவார்களா?

பொதுவாக நரிக்குறவர்களிடம் பாலியல் பிரச்னைகள் இல்லை. அதற்குக் காரணம், போதுமான பாலுறவு இணக்கங்கள் அவர்களுக்குள் கிடைத்து விடுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பது எல்லாம் காலாவதியான அத்தியாயங்கள். அதே போல அவர்கள் இடத்தில் விவாகரத்தும் குறைவு.

நரிக்குறவர் பெண்கள் நல்ல அழகிகளாக இருப்பார்கள். அவர்கள் மட்டும் கொஞ்சம் நல்ல நாகரீகமாக ஆடைகளை அணிந்து வெளியே நடமாடினால் போதும். சினிமா சீரியல் நாயகிகளுக்கும் பிரச்னை. குடும்பப் பெண்களுக்கும் பிரச்னை. மூன்றாம் உலகப்போர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆக, சிலப்பதிகாரத்தைத் திருத்தி எழுத வேண்டியும் வரலாம்.

இன்னும் ஒரு விசயம். எந்த ஒரு குறவர் பெண்ணையும் அத்தனைச் சுலபத்தில் பாலியல் பலாத்காரம் செய்துவிட முடியாது, ஏன் என்றால் ஓர் ஆணுக்கு உள்ள பலம் ஒரு பெண்ணுக்கும் இருக்கிறது. ஒரு குறவர் பெண்ணையும் ஒரு குறவர் ஆணையும் சண்டை போட வைத்தால், ஒரு பெண் தான் ஜெயிப்பாள். அந்த அளவுக்கு பெண்களுக்கு பலம் இருக்கிறது. ஆக, கொஞ்சம் யோசித்துத்தான் அந்தப் பக்கம் தலையைக் காட்ட வேண்டும்.

அந்த அழகிகளைக் கல்யாணம் செய்து கொள்ள குறவர் அல்லாத ஆண்களுக்கும் ஆசைதான். வெளி ஆண்கள் குறத்திகளைக் கல்யாணம் செய்து கொள்ளவதில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. அந்தப் பெண்கள் வெளியே நகர்ப்புறங்களுக்கு வருவது இல்லை. கல்யாணமான பெண்கள்தான் வெளியே வருவார்கள். அதுவும் ஆறுமணிக்குள் வீட்டிற்குத் திரும்பிப் போய்விட வேண்டும்.

நரிக்குறவர் பெண்ணைப் பிற சமூகத்தவர் திருமணம் செய்ய முடியும். அதில் தடை எதுவும் இல்லை. ஆனால் திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அவர்களுடைய சமூகத்திற்குள் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.

இவர்களைப் பற்றிய ஒரு சுவராசியமான செய்தி. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் (1981-1983) பிற்பட்டவர்கள் பட்டியலில் இருந்து தங்களைப் பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்று ஊர்வலம் நடத்தி கோட்டைக்குச் சென்றார்கள். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களான இவர்கள், அவரைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியில், தங்கள் கோரிக்கைகளை மறந்துவிட்டு, அப்படியே ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். குறவர்களின் விசுவாசத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன எம்.ஜி.ஆர். குறவர் சமுதாயத்திற்கு நிறைய பொருள் உதவிகளைச் செய்தார். நிறைய பேர்களுக்கு கல்வி வசதிகளைச் செய்து கொடுத்தார். இன்றுவரை எம்.ஜி.ஆர். சின்னத்திற்குத்தான் நரிக்குறவர்களின் வாக்குகள் என்பது எழுதப்படாத சாசனமாக இருந்து வருகிறது.