கல்வியின்மையால் அறிவை இழந்தோம்;
அறிவின்மையால் வளர்ச்சியை இழந்தோம்;
வளர்ச்சியின்மையால் சொத்தை இழந்தோம்; சொத்து இல்லாததால் சூத்திரர்களாக ஆனோம்!
வளர்ச்சியின்மையால் சொத்தை இழந்தோம்; சொத்து இல்லாததால் சூத்திரர்களாக ஆனோம்!
-ஜோதிராவ் புலே (1890)
மகாராஷ்டிராவில் கொங்கன் மாவட்டத்தின் டபோலி எனும் சிறு கிராமம்.
அதிகாலைப் பனி விலகாத வயல்களுக்கு இடையே பாம்பு போல வளைந்து செல்லும்
ஒற்றையடிப் பாதையில் ஒரு ஜோடிப் பிஞ்சுக் கால்கள் தாவிக் குதித்து
ஓடுகின்றன. பின்னாலேயே அவனது தந்தை. அன்றுதான் அந்தச் சிறுவனுக்குப்
பள்ளியின் முதல் நாள். அதனாலேயே, தந்தை மகன் இருவருக்கும் கரை காணாத
உற்சாகம்.
ஆனால், பள்ளியில் சேர்ந்த அடுத்த நொடியிலேயே அந்தச் சிறுவனின் உற்சாகம்
வடிந்து, வகுப்பறையைவிட்டு வெளியேறியது. காரணம், சக மாணவர்களுடன் சரி சமமாக
உட்கார அவனுக்கு அனுமதி மறுக்கப் பட்டது. அவன் மகார் இனத்தைச் சேர்ந்தவன்
என்பதுதான் காரணம். மீறி அந்தச் சிறுவன் தொடர்ந்து படிக்க விரும்பினால்,
வகுப்புக்கு வரும் போது புத்தகப் பையுடன் ஒரு கோணிச் சாக்கையும்
கொண்டு வரும்படி வேண்டா வெறுப்பாக உத்தரவிட்டார் ஆசிரியர்.
அன்று, அந்தச் சிறுவனின் மனதில் ஆயிரம் கேள்விகள். ‘நாம்
தீண்டத் தகாதவர்கள். நாம் சார்ந்திருக்கும் இந்து மதம் நம்மை அப்படித்தான்
மற்றவர்களிடம் இருந்து பிரித்து ஒதுக்கி இருக்கிறது’ எனத் தன் மகனுக்கு
பிற்பாடு விளக்கினார் அவனது தந்தை. அன்று இரவு, அந்தச் சிறுவனின்
கன்னங்களில் நீர் வழிந்தது.
மறுநாள், ஆசிரியர் மற்றும் இதர மாணவர்களின் பார்வை வாசலை நோக்கித்
திரும்பியது. அங்கே, அந்தச் சிறுவன் கையில் கோணிச்சாக்குடன்
நின்று இருந்தான்.
1947… ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு அந்தச் சிறுவன் கோட்
சூட் அணிந்த மனிதனாக வந்து நின்றான். ஒட்டுமொத்த இந்தியாவே அவனைத் திரும்பிப் பார்த்தது. இப்போது அவன் கையில்
கோணிச்சாக்கு இல்லை… மாறாக, கோப்புகள் இருந்தன. இந்தியாவின் எதிர்காலத்தையே
தீர்மானித்த இந்திய அரசியல் சாசனச் சட்டம் அந்தக் கோப்பில் இருந்தது.
தாழ்த்தப் பட்டவர்களின் மீதான அடிமைத் தளையைக் கல்வி எனும் வெடி வைத்துத்
தகர்த்த வீரன். இந்து மதத்தின் 2,500 வருட மனக் கசடான மனு எனும்
அதர்மத்தை விரட்டி அடித்த அறிவுச் சுரங்கம். இந்தியாவின் விடுதலைக்காகத் தனது காலத்தை விதையாக்கிப் போராடி வெற்றித் திருமகனாக
வாழ்ந்த தியாகி… டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்.
அம்பேத்கரின் வாழ்க்கை தவிர்க்கவே முடியாமல் இந்தியாவின் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்குகிறது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்குள் நாடோடிகளாக
வந்த புதிய இனத்தவரான ஆரியர்கள், பொருளீட்டும் வாழ்வில் மேம்பட்டவர்களாக
இருந்தனர்.
இதனால் இந்தியாவின் பூர்வக் குடிகளை அவர்களால் சுலபமாகச் சமாளிக்க
முடிந்தது. தங்களை எதிர்ப்பிலிருந்து காத்துக் கொள்ளும் பொருட்டாக, சமூகத்தை
நான்காகப் பிரித்தனர்.
பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்பதாக
அதிகாரத்தின் படிகளை அவர்களே அமைத்தனர். அதற்கான காரணங்களை வடிவமைக்க,
கடவுளும் மதமும் உருவானது. அதனை நம்ப வைக்க வேதங்களும், புராணங்களும்,
கதைகளும் உருவாக்கப் பட்டன.
சடங்குகளும் சம்பிரதாயங்களும் இறுக இறுக,
அதிகாரம் சூத்திரர்களை மேலும் மேலும் ஒதுக்கிக் கொண்டே போனது.
உலகில் எந்த நாட்டிலும், ஒருவன் எத்தனை கீழான குடியில் பிறந்தாலும்,
வளர்ந்த பிறகு அவன் தன் நிலையை மேம்படுத்திக் கொள்வது அவனது அறிவையும்
நடத்தையையும் பொறுத்தே அமைகிறது.
ஆனால், இந்தியாவில் மட்டும் கருவில்
பிறக்கும் போதே அது தீர்மானிக்கப் பட்டு, வாழ்வில் எத்தனைதான் உயர்ந்தாலும்
தாழ்ந்தவனாக கருதப்படும் இழிநிலை கட்டமைக்கப் பட்டது.
இதனால், அவர்களின்
உரிமைகள் பிடுங்கப் பட்டன; அறிவு பிடுங்கப் பட்டது; அவர்களுக்கான வாழ்நிலம்
பிடுங்கப் பட்டது; ஆடைகள் பிடுங்கப் பட்டன; சுதந்திரமும் பிடுங்கப் பட்டு
அடிமைகளாக மாற்றப் பட்டனர்.
இந்த இழிநிலையிலிருந்து தன்னையும் தனது சமூகத்தையும் விடுவிக்கத்
தோன்றிய விடிவெள்ளியாக, டாக்டர் அம்பேத்கர், ஏப்ரல் 14, 1891ம் ஆண்டு
மத்திய பிரதேசத்தில் மாஹ¨ எனும் சிற்றூரில் பிறந்தார்.
அவரது தந்தையார்
ராம்ஜி சக்பால். மகாராஷ்டிரத்தில் கொங்கன் மாவட்டத்தைச் சேர்ந்த அம்பவடே
எனும் சிறு கிராமம்தான் அவரது பூர்விகம். ராம்ஜியின் வம்சாவளியினர்
மகாராஷ்டிரத்தின் பூர்வகுடிகளான மகார் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
துவக்க
காலத்தில் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு வசித்த
காரணத்தால்தான் மகா(ர்)ராஷ்டிரம் என்ற பெயர் இந்த நிலப்பரப்புக்கு
உருவானது.
ஓங்குதாங்கான மகார்களை அப்போது இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய
கம்பெனி, தன் படைவீரர்களாகச் சேர்த்துக்கொண்டது. அம்பேத்கரின் தந்தை ராம்ஜி
சக்பாலும் அந்தப் படையில் சுபேதாராகப் பணிபுரிந்துவந்தார்.
இதனாலேயே,
ராம்ஜி சக்பாலுக்கு ஓரளவு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த பீமா என்ற
பெண்ணைத் திருமணம் செய்ய முடிந்தது. ராம்ஜி சக்பாலுக்குத் தனது மனைவியின்
மேல் கொள்ளைப் பிரியம். வரிசையாகப் பிறந்தன பதினாலு குழந்தைகள்.
அதில்,
பதினான்காவதாகப் பிறந்தது ஓர் ஆண் குழந்தை. குழந்தைக்கு என்ன பெயர்
சூட்டுவது என யோசித்த ராம்ஜிக்கு, சட்டெனத் தோன்றியது மகாபாரத பீமனின்
உருவம். அடிப்படையில், தீவிர பக்திமானான அவர், ஒரு குத்துச்சண்டை
பிரியரும்கூட.
அதன் காரணமாக, தனது மகனும் எவருமே அசைக்க முடியாத வீரனாக
வருங்காலத்தில் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் பீம் என அவனுக்குப் பெயர்
சூட்டினார்.
பீமுக்கு இரண்டு வயதானபோது, சுபேதார் ராம்ஜி சக்பாலின் வாழ்வில் ஒரு
திடீர் சோதனை. இனி மகார்களைப் படைப் பிரிவில் சேர்க்கக் கூடாது என
பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய கட்டுப்பாட்டை விதித்ததால், ராம்ஜியின் வேலை
பறிபோனது.
மீண்டும் தனது சொந்த ஊரான மகாராஷ்டிரத்தின் டபோலிக்கே
குடும்பத்துடன் இடம்பெயர்ந்த ராம்ஜிக்கு அந்த இடமும் கசந்தது. காரணம்,
அங்கும் தலைவிரித்தாடிய சாதியக் கொடுமை.
தீண்டாமை எனும் பேய் அந்த ஊரையே
நோய்க்கூறாகப் பற்றியிருந்தது. தனது பிள்ளைகள் பள்ளி சென்று முறையான
கல்வியைப் பெறுவதற்குக்கூட அங்கிருந்த ஆசிரியர்களும் இதர சாதிகளைச் சேர்ந்த
மக்களும் தடையாக இருப்பதைக் கண்டு ராம்ஜி வேதனைகொண்டார்.
தன் பிள்ளைகள்
தினம்தினம் கோணி சுமந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவமானத்தை அவரால்
தாங்கிக்கொள்ள முடியவில்லை.
குழந்தைகளின் பிஞ்சு இதயங்களில் தீண்டாமையின் வேதனை தீண்டிவிடக் கூடாது
என உணர்ந்த ராம்ஜி, சிறிது காலத்திலேயே தனது குடும்பத்தை சதாரா நகரத்துக்கு
மாற்றிக்கொண்டார்.
சதாராவுக்கு அவர்கள் குடி பெயர்ந்ததுமே, குடும்பத்தில்
இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. ஒன்று, ராம்ஜி சக்பாலின் மனைவி
பீமாபாயின் திடீர் மறைவு. ராம்ஜியால் அந்தத் துக்கத்திலிருந்து அத்தனை
சுலபமாக வெளிவர முடியவில்லை.
இன்னொன்று, அதற்கு ஆறுதலான விஷயம். அது,
ராம்ஜிக்குக் கிடைத்த ஸ்டோர் கீப்பர் வேலை. இனி, தனது குழந்தைகளுக்குக்
கௌரவமான படிப்பைத் தர முடியும் எனும் நம்பிக்கை வந்தது.
அங்கிருந்த பள்ளி ஒன்றில் ஆங்கில வகுப்பில் தனது மகனைச் சேர்த்தார்
ராம்ஜி.
என்னதான் இடம் மாறினாலும் சாதி துவேஷம் அங்கும் அதிகம் இருந்தது.
தனது பிள்ளைகளுக்கு இங்கும் அந்த வேதனையின் நிழல் படிந்துவிடக் கூடாது என
நினைத்தார் ராம்ஜி. அவரது எண்ணத்தை தலைகீழாக மாற்றுவதற்கென்றே அன்று வந்தது
ஒரு மழை!